Thursday, 12 September 2024

புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வு

 காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் குறித்து நண்பர் இராச. மணிமேகலை அவர்கள் புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்  







மகாபாரதக் கதையின் மறுஆக்கமாக வெண்முரசு நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் படைத்துள்ளார். காவிய மரபின் இலக்கணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற உரைநடைக் காவியமாக வெண்முரசு திகழ்கிறது. இந்நாவல் 26 தொகுதிகளைக் கொண்டது. வெண்முரசு நாவல் வரிசையில், எட்டாவது தொகுதி காண்டீபம் ஆகும். இந்நாவல் அர்ஜுனனின் வீரசாகசங்களையும், பிறரால் அடைய முடியாத அரிய மகளிரைத் தடைகளைத் தகர்த்து, திருமணம் புரியும் விதங்களையும் பேசுகிறது. காண்டீபத்தின் பெண் ஆளுமைகளாக சுபத்திரை, உலூபி, சித்ராங்கதை ,மாலினிதேவி, சுபகை ஆகியோர் திகழ்கின்றனர். இதில் மாலினிதேவியைத் தவிர பிற பெண்கள் அர்ஜுனனின் மனைவியர் ஆவர். மாலினிதேவி அர்ஜுனனின் செவிலித் தாய் ஆவாள்.


முதலாவதாக மாலினிதேவியின் பாத்திரப்படைப்பு. இந்தப் பாத்திரப்படைப்பில் அர்ஜுனனின் வளர்ப்புத் தாயாகக் காட்டப்படும் மாலினிதேவி அகம் புறம் சார்ந்த உணர்வு நிலைகளால் தலைவன், தலைவி மனோபாவங்களுக்கு உரியவளாக ஆசிரியரால் பல இடங்களில் காட்டப்படுகிறாள். அதாவது மாலினிதேவியானவள் பாத்திரப்படைப்பு என்கிற நிலையில் செவிலித்தாயாகவும், மெய்ப்பாட்டு உணர்வுகள் என்கிற நிலையில் அதற்கு முரணாகத் தொல்காப்பியப் பெருந்திணைக்குரியவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாளோ என்னும் ஐயம் எழுகிறது. இத்தகைய அகப்புற உணர்வு நிலைகளை 'மெய்ப்பாடுகள்' என்று தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் வரையறை செய்கிறது. எனவே தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் கோட்பாடுகளை அர்ஜுனனின் செவிலித் தாயாகிய மாலினிதேவியிடம் பொருத்திக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
அதனடிப்படையில் 1. மெய்ப்பாடு வரையறை 2. பெருந்திணை வரையறை 3. மாலினிதேவி-பெருந்திணைக் கூறுகள் ஓர் ஒப்பீடு என்ற மூன்று தலைப்புகளில் இக்கட்டுரை அமைகிறது.


1. மெய்ப்பாடு வரையறை
மெய்ப்பாடு என்பது,
'கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் என்னருங் குரைத்தே'
என்கிறது தொல்காப்பியம்.
'உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
மெய்ப்பாடென்ப மெய்யுணர்ந்தோரே'
என்கிறது செயிற்றியம்.

'குறிப்பறிதல்' என்று பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் பேசுகிறது திருவள்ளுவம்.
ஒன்பான் சுவை, நவரசம் என்ற சொல்லாக்கங்கள் 'மெய்ப்பாடு' என்ற பொருள் தருவனவே. ஒருவன் தன் மனதில் நினைக்கின்ற ஒன்றைத் தன் ஐவகைப் பொறிகளால் பிறர்க்கு வெளிப்படச் செய்வதே மெய்ப்பாடு ஆகும். உடல்மொழியே மெய்ப்பாடு எனலாம். நாடகம், நாட்டியம், சினிமா போன்றவை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் சாதனங்கள் ஆகும். 'பாலுணர்வு சார்ந்த உளவியல் சிந்தனைகளே மெய்ப்பாடாகும்' என்பார் தமிழண்ணல். (தொல். பொருள். தொகுதி-3 தமிழண்ணல் உரை. பக்.8,9).

2. பெருந்திணை வரையறை
தொல்காப்பியர் பெருந்திணையை,
'ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகை,
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.' (அகம். நூற்பா-54)

என்று அகத்திணையியலில் குறிப்பிடுகிறார். ஏறிய மடல்திறம் என்பது மடலூர்தல். இது ஆண்களுக்கானது. 'இளமைத் தீர்திறமாவது: இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும் இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என' என்று இளம்பூரணர் உரை செய்துள்ளார். இவற்றில் தலைமகள் முதியவளாகி தலைமகன் இளையனாதலும் என்கிற உரைப்பகுதி மாலினிதேவிக்குப் பொருத்தப்பாடுடையதாகிறது.
தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் 27 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 'இன்பத்தை வெறுத்தல்' என்னும் நூற்பா பெருந்திணைக்குரியது என்கிறார் இளம்பூரணர். இந்நூற்பா 'இன்பத்தை வெறுத்தல் தொடங்கி..... நலத்தக நாடின் கலக்கமும் அதுவே' ஈறாக 20 உட்கூறுகளைக் கொண்டதாக அமைகிறது.

3. மாலினிதேவி-பெருந்திணைக்கூறுகள் ஓர் ஒப்பீடு
மேற்காட்டிய மெய்ப்பாடு மற்றும் பெருந்திணை வரையறைகளின் அடிப்படையில் அர்ஜுனின் வளர்ப்புத் தாயாகிய மாலினிதேவியின் உணர்வு நிலைகள், அவள் எவ்வகையிலெல்லாம் பெருந்திணைக் கூறுகளுக்குள் பொருந்துகிறாள் என்று இக்கட்டுரை ஆராய்கிறது. அதனால் இந்த ஆய்வு மேலும் அ) காவலனும் சுபகையும் பேசுமிடம் ஆ) மாலினிதேவிக்கும் அர்ஜுனனுக்கும் நிகழும் உரையாடல் இ) மாலினிதேவியின் அகப்புற உணர்வுநிலைகள் என்கின்ற மூன்று தலைப்புகளில் மாலினிதேவியின் மெய்ப்பாடுகளை ஆராய்கின்றது.

அ) காவலனும் சுபகையும் பேசுமிடம் (காண்டீபம்-5)
'மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலம் ஆகிறது' என்றாள் சுபகை.
'இளைய பாண்டவர் வாரணவதத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்குப் பேரரசி ஆணையிட்டதாகவும் அவர் சென்று அரசியை வணங்கி 'பிறிதொரு ஆண்மகன்' தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள்.'

ஆ) அர்ஜுனன் மாலினி உரையாடல் (காண்டீபம் - 13)
'அமருங்கள் என் அரசே, அவளுடைய நோக்கை தன்னுடலில் உணர்ந்தான். பின்பு நீ வேறு எவரையாவது பெரிதென நினைக்கிறாயா என்றான்.' 'என்ன கேட்டீர்கள்' என்றாள் மாலினி. எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு?' என்றான். 'இளவரசே உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள் நான்.' அவன் தலை தூக்கி 'நான் வளர்ந்தால்?' என்றான். அவ்வினாவை அதுவரை அவள் எதிர்கொண்டதில்லை. 'சொல் நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய்? வேறொரு குழந்தையை வளர்ப்பாயா?'
மாலினியின் முகம் மாறியது. 'இல்லை வளர்க்கமாட்டேன்' என்றாள். வேறு எவரையாவது? என்று சொன்னபின் அவன் சொல் சிக்கிக்கொண்டு நிறுத்தினான். 'இல்லை இளவரசே', இருவிழிகளும் தொட்டுக்கொண்டபோது அவன் எண்ணிய அனைத்தையும் அவள் பெற்றுக்கொண்டாள். 'இளவரசே! இப்புவியில் நான் வாழும் காலம்வரை எவ்வடிவிலும் பிறிதொரு ஆண்மகன் எனக்கில்லை' என்றாள்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு காட்சிகளிலும் ஆசிரியரால் எடுத்தாளப்பட்ட 'பிறிதொரு ஆண்மகன்' என்ற சொல்லே மாலினிதேவியைப் பெருந்திணை வரையறைக்குள் நம்மைக் கொண்டு செல்கிறது. இது ஆண்டாளின், 'மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்' என்ற திட்டவட்டமான கூற்றானது மானிடரை நீக்கி இறைவனைக் குறிப்பதுபோல 'பிறிதொரு ஆண்மகன்' என்ற சொல் மற்ற ஆண்களை நீக்கி அர்ஜுனனைத் தெளிவாகக் காட்டுகிறது.

இ) மாலினிதேவியின் அகப்புற உணர்வு நிலைகள் (காண்டீபம்-36)
வாரணவதத்திற்கு அர்ஜுனன் கிளம்பிச் செல்லும்போதும், சென்றபின்பும் அவளிடம் தோன்றுவதாக ஆசிரியர் காட்டும் உணர்வு நிலைகள் காண்டீப வழி இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது.

காட்சி ஒன்று :
அர்ஜுனன் வாரணாவதம் செல்கின்ற நாளில் 'நெஞ்சைப் பற்றி அவன் செல்வதை நோக்கி நின்றாள். இடைநாழி கடந்து அவன் படி இறங்கும் ஓசையைக் கேட்டதும் ஓடிவந்து கைப்பிடிக் குமிழ்களை பற்றியபடி நின்று நோக்கினாள். அவன் மறைந்ததும் ஓடி சாளரக் கதவைத் திறந்து முற்றத்தில் எட்டி அவனைப் பார்த்தாள். அங்கு நின்ற புரவியில் ஏறி காவல் மாடத்தைக் கடந்து அவன் சென்றபோது விழி எட்டி நுனிக்காலில் நின்று அவனை நோக்கினாள்; கண்கள் மூடி நீள்மூச்சு விட்டு ஏங்கினாள்... அன்று முழுக்க அவள் எழவில்லை. தன் சிற்றறையில் மஞ்சத்தில் குளிர் கண்டவள்போல போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்.
இளஞ்செவிலி ஒருத்தி அவள் போர்வையை விலக்கி, 'இன்கூழ் அருந்துங்கள் அன்னையே' என்றபோது 'வாய் கசக்கிறதடி வேண்டாம்' என்றாள். பிறிதொரு முறை அவள் கேட்டபோது, 'வேண்டியதில்லை மகளே செல்' என உறுதிபட மறுத்தாள் .....எதையும் இழக்காமல் நெஞ்சு காலத்தில் படிந்திருக்கவேண்டும்'. இவை காண்டீபம் காட்டும் காட்சிகள். இவற்றில் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், பசலை பாய்தல், பசியிடநிற்றல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல் என்கிற மெய்ப்பாடுகள் மாலினிதேவியின் அகப்புற உணர்வு நிலைகளோடு ஒப்பு நோக்கத்தக்கவை.

'அன்னாய் வாழி! வேண்டு அன்னை
நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி... '(அகம்:48)
என்கிற சங்ககாலப் பாடலோடும்
'தீம்பாலூட்டினும் வேம்பினுங் கைக்கும்
வாராயெனினு மார்வமொடு நோக்கும்'
என்கிற இலக்கண விளக்கப் பாடலோடும் (537)
'பாலும் கசந்ததடி படுக்கை நொந்ததடி
கோலக்குயில் மொழியும் காதில் குத்தலெடுத்ததடி'
என்கிற பாரதியின் பாடலோடும் ஒப்பிட்டுத் தொல்காப்பியப் பெருந்திணை மெய்ப்பாடுகளை இங்கே பொருத்திக் காணலாம்.

காட்சி இரண்டு:
கனவில் அர்ஜுனனுடன் தென்திசைக் காடுகளில் சுற்றி அலைகிறாள் மாலினி. 'உங்களுக்காக குருதியை, அரசை, மண்ணைத் துறந்து வந்திருக்கிறேன் அன்னையே' என அர்ஜுனன் கூற 'நீ வென்றெடுக்கக்கூடிய மண் இங்குள்ளது அரசே' என்கிறாள் மாலினி. 'மண்' என்பது பெண்களுக்கான குறியீடு ஆகும். வென்று எடுக்கக் கூடியவள் காதலிதானே தவிர தாய் அல்லள். இங்குக் கண்துயில் மறுத்தலும், கனவொடு மயங்கலும் ஆகிய மெய்ப்பாடுகளால் மாலினிதேவி அலைக்கழிக்கப்படுகிறாள்.

காட்சி மூன்று :
வாரணாவதம் செல்கிற அன்று காலையில் செவிலியர் மாளிகையில் அர்ஜுனன் மாலினிதேவியிடம் விடைபெற்றுச் செல்ல வரும் நிகழ்வு பெருந்திணை மெய்ப்பாட்டுக் கூறுகளின் உச்சம் என்றே சொல்லலாம்.
'நீராடிய ஈரம் குழலில் சொட்டிக்கொண்டிருந்தது... எப்போதுமென அவள் இருவிழிகள் அவன் இருதோள்களையும் தொட்டுத் தழுவி மீண்டன. இன்று நாங்கள் கிளம்புகிறோம் அன்னையே' நன்று நிகழ்க என்றாள் அவள்.
கைநீட்டி அவன் தோள்களைத் தொட விழைந்தாள். அது முறையா என்று அறியாததால் தன்னை நிறுத்திக் கொண்டாள். அதை உணர்ந்தவன் போல அவள் அருகே வந்து அவளின் வலக்கையைப் பற்றி தன் இரு தோள்களில் வைத்தான்... 'எங்கிருந்தாலும் உன் இக்கைகளை எண்ணிக் கொண்டிருப்பேன்'. அவள் கைகள் அவன் தோளைத் தொட்டதும் உடல் மெல்ல நெகிழ்ந்தது. தோளில் இருந்த பெருநரம்பு புடைத்து இழிந்த இறுகிய புயங்களை வருடி வந்தது அவள் வலக்கை. இன்னொரு கையால் அவன் விரிதோளைத் தொட்டு வருடினாள்.
இந்தக் காட்சிப் புலத்தில் எதிர்பெய்து பரிதல் (தலைவன் உருவம் கண்டு வருந்துதல்), அவன் தன்னைவிட்டுப் பிரிவானோ என ஐயம் செய்தல், கலக்கம் போன்ற மெய்ப்பாடுகள் அவளிடத்தே தோன்றுவதைக் காண்கிறோம்.

காட்சி நான்கு :
'சில தருணங்களில் உன்னை இளமகவென்று எண்ணுவேன், சில தருணங்களில் கைதொட அஞ்சும் காளை என்றே உணர்கிறேன். அவன் முகத்தில் எழுந்த புன்னகையைக் கண்டு அவள் உள்ளத்தில் ஒரு குளிர் பரவியது. 'என்ன எண்ணுகிறீர்கள்?' 'உன் புன்னகை' இப்புவியில் இதற்கு இணையாக அழகிய புன்னகை கொண்ட ஆண்மகன் இருப்பான் என நான் எண்ணவில்லை' இது காண்டீபம்.
இதற்கு இணையாகக் கம்பராமாயணத்தில் இராமனின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு சீதை நினைத்து உருகும் காட்சி.
'இந்திரநீல மொத்து இருண்ட குஞ்சியும்
சந்திரவதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளுமே: அல
முந்தி என்னுயிரை அம்முறுவல் உண்டதே'
உன் கருநிற கூந்தலும், சந்திர முகமும், தொடை வரை நீண்ட கைகளும், மலைபோன்று எழுந்தமைந்த தோள்களும் மட்டுமன்றி இவைகளுக்கெல்லாம் முந்தி என் உயிரை உன் புன்னகை உண்டுவிட்டதே என்று சீதையைப் போலவே மாலினிதேவி உருகும் காட்சி காட்டப்படுகிறது. மேலும் 'கன்றும் உண்ணாது கலத்தினும் படாது' என்ற குறுந்தொகைப் பாடலில் தலைவியின் அகம் அழிந்த, மனம் கலங்கிய நிலை மாலினிதேவியின் நிலைக்கு சற்றும் குறைந்ததன்று. 'ஒப்புவழி உவத்தல் (ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்தல்), எம்மெய்யாயினும் ஒப்புமைக் கோடல் (தலைவன் உறுப்புகளோடு ஒத்தவை எவை கண்டாலும் அதை உணர்ந்து சொல்லல்) என்கிற மெய்ப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டவளாகிறாள் மாலினிதேவி.
மாலினிதேவியைப் பெருந்திணைக் கூறுகளுள் பொருத்தியதுபோலவே சுபகையைக் கைக்கிளைக்கு உரியவளாகவும், சுபத்திரையை அன்பின் ஐந்திணைக்கு உரியவளாகவும் பொருத்திக் காட்டும் ஆய்வுகளுக்கு வெண்முரசு வழி அமைக்கிறது எனலாம்.
இலக்கியம் என்பது வாசிப்பவனின் கருத்து விவரிப்புகளை, சிந்தனைகளைத் தூண்டுவது; படைப்பாளி யோசித்திருக்காத கோணத்தில் அவரவர் வாழ்க்கை முறைகளோடும், ரசனைகளோடும் படைப்பில் பொருத்திப் பார்த்து இன்புற்று மகிழ்வது. ஒரு சிறந்த படைப்பாளனின் இலக்கியத்தை 'திண்ணிதின் உணரும் உணர்வுடைய' வாசகனால் மட்டுமே அனுபவித்து, இன்புற்று, மகிழமுடியும். அந்தக் கோணத்தில் தொல்காப்பியம் மெய்ப்பாடுகளை இன்றைய உரைநடைக் காவியமாம் வெண்முரசில் பொருத்திப்பார்க்க இடமளிக்கிறது. எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் பொதுவான இம்மெய்ப்பாடுகள், காதலாகி, கசிந்து, கற்பாகி வாழ்க்கையை சிறப்புடையதாக்குகிறது.




Saturday, 27 April 2024

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகிறது.  கடந்த 7 ஆண்டுகளாக 'புதுவை வெண்முரசு கூடுகை' என்ற வாசகர் குழுவால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. கலந்துரையாடல் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் சந்திப்பு, நூல் அறிமுகம், புதிய வாசகர்களுக்காக பயிற்சி முதலிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை புதுவை வெண்முரசு கூடுகை ஒருங்கிணைக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் புதுவையை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாத கூடுகையில் (26.4.24) புதுவையை சேர்ந்த எழுத்தாளர் அரிசங்கர் படைப்புகள் குறித்து உரையாடல் நிகழ்ந்தது. 

அரிசங்கர் பாரீஸ். உண்மைகள் பொய்கள் கற்பனைகள், மாகே கஃபே ஆகிய நாவல்களும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் பக்கார்டி என்னும் குறுநாவலும் எழுதியிருக்கிறார்.  இவரது சிறுகதை தொகுப்புகள் உடல், பதிலடி. ஏமாளி, சப்தங்கள் ஆகியவை தற்போது அரிசங்கர் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கிடைக்கின்றன. தொடர்ந்து புதுச்சேரியை தனது எழுத்தில் முன் வைப்பதாகவும்  எளிய மனிதர்களின் உலகத்தை அதன் அனைத்து நிஜங்களுடன் கதைகளில் காட்டும்படியாகவும் இவரது கதையுலகம் அமைந்துள்ளது. அரிசங்கர் நண்பர்களுடன் இணைந்து நவீன இலக்கியத்திற்கான பனை என்ற வாசகர் வட்டம் ஒன்றையும் புதுவையில் நடத்தி வருகிறார்.  

அரிசங்கரது சமீபத்திய நாவலான மாகே கஃபே குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. அரிசங்கருக்கான பரிசை வெண்முரசு கூடுகை  வாசகி திருமதி அமிர்தவல்லி அவர்கள் வழங்கினார், மூத்த வாசகர் திரு விஜயன் பொன் துகில் போர்த்தினார். அரிசங்கர் தனது ஏற்புரையில் புதுவையில் நவீன இலக்கியம் சார்ந்த தேவைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு மாதாந்திர வெண்முரசு கூடுகை துவங்கியது வெண்முரசு காண்டீபம் நாவலின் ஐந்து முகத்தழல் பகுதி குறித்து நண்பர் சிவராமன் பேசினார், அதன்பிறகு கூடுகை நண்பர்கள் அனைவரும் அப்பகுதி மீதான தங்கள் பார்வையை முன்வைத்து உரையாடினர்.  



Friday, 10 February 2023

வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு






 இனிய ஜெயம்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம்.  உண்மையில் இந்த நாவல் திரௌபதி நீராடி, தொய்யில் எழுதி, அணிபூண்டு அன்னையை திரும்பிக் கூட பார்க்காமல் நகர்வலம் சென்று, சுயவரம் காணும் போதே துவங்கி விடுகிறது. அஸ்தினாபுரி அரியணையில் துரியனும் கர்ணனும் வாளேந்தி பக்கம் நிற்க அவள் அமர்வது வரை வந்து முழுமை கொள்ளும் நாவல் இது.

இன்று திருப்பூர் சென்னை என்று இரண்டு இடங்களில் இருந்து உங்கள் வாசகிகள் அழைத்து வெண்முரசு முற்றோதல் இன்றுடன் நிறைவு கண்டதை சொன்னார்கள். இருவருக்குமே இலக்கியம் புதிது. எந்த தயக்கமும் தடையும் இன்றி தினமும் வாசித்து (சந்தேக நிவர்த்திக்கு கடலூர் சீனு) முடித்திருக்கிறார்.

இந்த நாவலின் இறுதி பகுதிகளை பேசிய அமிர்த வல்லி அவர்களுக்கும் இலக்கிய முன் வாசிப்பு என ஏதும் இல்லை. தமிழை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக  கற்ற அளவு மட்டுமே தொடர்பு கொண்டவர். இறுதி அத்யாய உளவியல் நுட்பங்கள் உணர்வுகள் அனைத்தையும் தேர்ந்த ரசனையுடன் தொட்டு விரித்து உரையாடினார்.   (வாசகருக்கான மாலை சிற்றுண்டியும் அவரே கொண்டு வந்து விட்டார்).

அம்பை பித்து கொண்டு திரிந்த நாட்களை விவாதித்தது எங்கோ போன ஜென்ம நினைவு போல இருக்க, இதோ அஸ்தினாபுரி துறைமுகத்தில் நூறு மணப்பெண்கள் நகர் நுழைய காத்து நிற்கின்றனர். நீர்ச் சுடரில் ஒவ்வொருவராக விழுந்து மாயப்போகும் கங்கை.

இந்த நாவல் நேற்று வாசித்து முடித்தாலும், இதோ இக்கணம் வரை திருதா கொண்ட துயரம் உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கிறது. விழியற்றவன் அறியும் உண்மை என்ற ஒன்று உண்டு. பிரத்யட்சமோ அனுமானமோ ஊகமோ வழி என அமைந்த உண்மை அல்ல அது. ‘நான் அறிவேன்’ எனும் நிலையில் உள்ளே அமைத்த முற்ற முழுதான உண்மை. எல்லாவற்றையும் அவன் அந்தக கண் கொண்டு பார்த்து விட்டான். இனி அவன் பார்த்த காட்சி அவன் நிகர் வாழ்வில் வந்து சேரும் வரை அவன் காத்திருக்க வேண்டும். வெறுமனே காத்திருக்க மட்டுமே அவனால் முடியும். எதையுமே அவனால் மாற்ற முடியாது. எத்தனை பெரிய துயர்.

நாங்கள் இங்கே இப்போது இந்த உணர்வில் கிடக்கிறோம். உங்களைக் கேட்டால் இது எல்லாம் நான் என்றோ கண்டு முடித்து கடந்த கனவு என்று பதில் சொல்வீர்கள். இன்னும் நெடுந்தொலைவு உள்ளது நாங்கள் முதலாவிண் காண. இடையே உள்ளது யுகம் யுகம் என்று நீளும் நூறு நூறு வாழ்வு.

கடலூர் சீனு


Sunday, 5 February 2023

புதுவை வெண்முரசு கூடுகை. இலக்கியக்கலை ஒரு நாள் முகாம் ….சில தருணங்கள்

 













இலக்கிய கலை ஒருநாள் முகாம்….தாமரைக்கண்ணன் காஞ்சிபுரம் , சூர்யப்ரகாஷ் பிச்சுமணி மதுரை

 

, https://www.jeyamohan.in/179630/


வணக்கம்


தங்கள் இணையதளத்தின் மூலம் அறியப்பெற்று புதுவையில் ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கான இலக்கியப்பயிற்சி முகாமில் பங்குப்பெற்றேன். வாய்ப்புக்கு  தங்களுக்கும் புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

நண்பர்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திரு. கடலூர் சீனு அவர்கள்

  1. தமிழ் இலக்கிய வரலாறு
  2. தங்கள் இலக்கிய மரபு
  3. வாசிப்பில் செய்யக்கூடாதவை
  4. வாசிப்பின் வழிமுறை
  5. இலக்கியத்தின் பயன்

ஆகியவற்றை எளிமையாகவும் செறிவாகவும் விளக்கினார். மேலும் ஐந்து சிறுகதைகள் மற்றும் ஐந்து கவிதைகளை எடுத்துக்காட்டாக கொண்டு இலக்கிய வகைமைகள் மற்றும் அவற்றை பொருள்கொள்ளும் முறையை விளக்கினார்.

மொத்தத்தில் என்னை போன்ற ஆரம்பக்கட்ட வாசகருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

பிகு:

திரு.கமலஹாசன் மூலமாக தங்களின் அறம் சிறுகதை தொகுப்பின் அறிமுகம் பெற்றேன். பின் தங்களின் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கெழும் ஐயங்களும் குழப்பங்களும் தீர்த்து தங்கள் எழுத்து வழிகாட்டியாக இருக்கிறது. நன்றிகள் பல.

– தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம்


அன்புள்ள ஜெ,

ஈரோடு புதியவாசகர் சந்திப்பில் கலந்துகொண்டபிறகே எனது வாசிப்பிலும் இலக்கியத்தை அணுகும் முறையிலும் நிறைய மாற்றம் உண்டானது, இடைப்பட்ட வருடங்களில் செவ்வியல் நாவல்களை குறிவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் டால்ஸ்டாய் தஸ்தவெய்ஸ்கியில் துவங்கி தற்போது ஆரோக்கிய நிகேதனம் வரை வந்திருக்கிறேன். இலக்கியத்தனிமையில் வாடும் புதியவாசகனுக்கு தாங்கள் முன்னெடுக்கும் வாசகர் சந்திப்புகள் வாசிப்பில் உள்ள சிக்கல்களை களையவும் புதிய வாசகநண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் உதவியாக இருப்பதை அனுபவத்திருக்கிறேன், மேலும் தொடர்ச்சியாக இலக்கிய விழாக்களில் சந்திப்புகளில் கலந்துகொள்வது நான் வாசிப்பில் நிகழ்த்தும் பிழைகளை சரிசெய்துகொள்ளவும், அடிப்படைகளை மீளமீள நினைவுறுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது.


பாண்டிச்சேரியில் கடலூர் சீனு அவர்களின் முன்னெடுப்பில்  தாமரைக்கண்ணன் மற்றும் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் இலக்கிய அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன், புதிய வாசகனுக்கு நீங்கள் அளித்த இரண்டு நாள் வகுப்பின் பாடத்திட்டத்தை செறிவுடனும் கூர்மையாகவும் கடலூர் சீனு அவர்கள் நிகழ்த்தினார். (நானும் கார்த்திக்கும் முன்னரே தங்களது வகுப்பில் கலந்து கொண்டிருப்பதை அறிந்து பாடத்தை பிற புதிய வாசகர்களிடம் ”லீக்” செய்துவிடவேண்டாம் என புன்னகையுடன் கேட்டுக்கொண்டார்). வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் வாசகபர்வத்தின் துவக்கநிலையில் இருப்பவர்கள், இவன் தான் பாலா புத்தகத்தை வாசித்துவிட்டு ஜெயகாந்தனை தெரிந்து கொண்டு வாசிக்க முனைந்த வாசகர், பொழுது போகாமல் நூலகத்தில் நுழைந்து வாசிக்க முயன்றவர், தூக்கம் வரவில்லை அதனால் வாசிக்கத்துவங்கினேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வாசகர் என வெவ்வேறு வழியில் தமக்குள் இருக்கும் இலக்கிய உணர்கொம்பில் தடுக்கி விழுந்தவர்களாக இருந்தனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை அணுகுமுறைகளை இலக்கியத்தின் தோற்றத்தை அதன் பணியை, கலையில் அதன் இடத்தை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் வகுப்பை கடலூர் சீனு அவர்களின் வகுப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வுக்காக பதிவு செய்த அனைவருக்கும் முன்னரே ஐந்து சிறுகதைகளும் கவிதைகளும் அனுப்பப்பட்டிருந்தது, சிறுகதைகளை வாசித்துவிட்டு கட்டாயமாக அனைவரும் அதைக் குறித்த தங்களது எண்ணங்களை மதிப்பீடுகளை எழுதியனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். புதிய வாசகர் சந்திப்பில் கடைபிடிக்கப்படும் அதே கறார்விதிகள் இங்கும் கடைபிடிக்கப்பட்டது, வீணாக ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை வாசகர்களும் தொடர்ந்து சீனு அவர்களிடம் தங்களது சந்தேகங்களை எழுப்பியபடியே இருந்தனர்.

நிகழ்வின் துவக்கத்தில் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பெரும் கோட்டுச்சித்திரமாக சங்ககாலம் முதல் தற்போதைய புதுவரலாற்றுவாதம் வரை கற்பிக்கப்பட்டது, பின்னர் இலக்கியத்தின் அடிப்படை அலகுகளான மொழி மற்றும் அதன் இயங்கு தளமான “Langue, Parol and Symbol” இவற்றை கடல் அதன் அலை என உவமைகளுடனும் குறியீடுகளால் அது வெளிப்படும் விதமும் எளியவாசகனுக்கான முறையில் விளக்கப்பட்டது, மேலும் உவமை, படிமங்கள், த்வனி என மொழியின் தளங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவதாக செய்யுளுக்கும் உரைநடைக்கும் இடையிலான வேறுபாடுகள் அதன் காலம்தோறும் மாறிவந்த உரைநடையின் முன்னோடிகள் அவர்களின் இலக்கியப் பங்கு, மீமொழி (metalanguage) என்றால் என்ன, புறவயமான எழுத்தைக்கொண்டு வேறொன்றை தொடும் subtext என்றால் என்ன, ஒரு படைப்பு அளிக்கும் தரிசனம் அதன் வழி அடையும் மீட்பு என இலக்கியத்தின் தளங்கள் விவரிக்கப்பட்டது.

இரண்டாம் பகுதியாக அழகியல் சார்ந்த அடிப்படைகளான எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தம், இயல்புவாதம், கற்பனாவாதம், இருத்தலியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் மற்றும் Neoclasscism வரை சிறுகதைகளை உதாரணமாகக்கொண்டு விளக்கினார், இதன்மூலம் புதிய வாசகன் கவனிக்கத்தவறும் படைப்பின் அழகியல், தனித்தன்மை, வடிவம், உள்ளடக்கம் மற்றும் படைப்பின் தரிசனம் ஆகியவை மீதான பிரக்ஞை உருவாக்கப்படுகிறது. கவிதைகளில் அதிக பரிச்சயத்தை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளாத எனக்கு ஒரு காலதீதமாக நிற்கும் கவிதைக்கான் இலக்கணமாக உண்மையின் தீவிரம், மொழிக்கு அது ஆற்றும் பங்கு, காலத்தை உதறி நிற்கும் பண்பு, தனித்தன்மை மற்றும் அதன் மீமொழியை குறித்தான அறிமுகமானது மேற்கொண்டு என் கவிதை வாசிப்பில் அடுத்தகட்ட நகர்வை நிச்சயம் உருவாக்கும் என நம்புகிறேன்.


Neoclassicsm என்ற வார்த்தையையே அன்று தான் முதன்முதலில் கேட்கிறேன், வெண்முரசு விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் நாவலில் உள்ள நவீன இலக்கியத்தின் அனைத்து அழகியல் அம்சங்களையும் கடலூர் சீனு அவர்களின் உரையில் கோடிட்டு காட்டியபொழுதே  படைப்பின் வீரியத்தை எண்ணி பிரமிப்படைந்தேன், எங்கு துவங்கினாலும் விஷ்ணுபுரத்தில் வந்து முடிவடையும் அவருடைய பேச்சு, வாசிப்பில் அவருக்குள் இருக்கும் தீவிரம் என்னை மிகவும் வசீகரித்துவிட்டது (ஏனென்றால் இன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள இயலாத படைப்பாக விஷ்ணுபுரம் நீடிக்கிறது) ஞானத்தை கட்டுப்படுத்தும் சடங்காக கலையை அவர் முன்வைத்த விதத்தை இக்கணம் வரை மீள மீள எண்ணியபடியே உள்ளேன்.

நிகழ்வின் இறுதியாக கலந்துரையாடலில் வாசகர்கள் எழுப்பிய அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து இலக்கியத்தில் கட்டாயமாகக் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் அறிவுறுத்தியவாறு நிறைவு செய்யபட்டது.

வெண்முரசு கூடுகைகளை மாதம் ஒருமுறை நிகழ்த்தும் நண்பர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வகையான வாசகர் சந்திப்புகளை ஒருங்கிணைக்க உள்ளதாக தாமரைக்கண்ணன் தெரிவித்தார். இளம் வாசகர்களுக்கும், வாசிப்பில் தொடர்ச்சியாக தனது பிழையை திருத்தும் கைகளை எதிர்நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கடலூர் சீனு மாதிரியான ஒரு தீவிர வாசகரின் அணுக்கம் மிக அத்தியாவசியமான ஒன்று.

இன்று புத்துணர்ச்சியுடன் மேலும் பிரக்ஞையுடன் இலக்கியத்தை சாதகம் செய்ய துவங்குவேன்.

இப்படிக்கு,

சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை

புதுவை வெண்முரசு கூடுகை. இலக்கிய கலை பற்றிய ஒருநாள் முகாம் அனுபவம் …..மலர்வானன்

 


புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வு

  காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் குறித்து நண்பர்  இராச. மணிமேகலை அவர்கள் புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையின் எழு...