Saturday, 14 September 2024

புதுவை வெண்முரசு கூடுகை 75 சிறப்பமர்வில் நண்பர் இரா.விஜயன் அவர்கள் உரையின் எழுத்து வடிவம்

 


விஜயன் அவர்களின் உரை

ஆசிரியர் உள்ளிட்ட அவைக்கு வணக்கம்

பொதுவாகவே புதுவை வெண்முரசு கூடுகையின் இலக்கண வரம்புக்குள்  நின்று பேசுவது அதிக கவனம் கோருவதான ஒரு காரியம். அதிலும் ஆசிரியரையும் பார்வையாளர் மாடத்தில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேசுவதென்பது இன்னும் ஆகச் சிறந்த கவனம் தேவைப்படும் ஒன்றாக ஆகிப்போகிறது.

இந்த 75ஆவது கூடுகையின் பேசுபகுதியை எனக்கு முன்னாலும் பின்னாலும் பேசுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்  நான் சென்ற கூடுகையின் பேசுபகுதியில் நான் பெற்ற ஒரு திறப்பைப் பற்றி இங்கு கூற விழைகிறேன்.இது எங்கள் கூடுகையில் நாங்கள் எப்படி கருத்துக்களை கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறோம் என்பதையும், கூட்டு வாசிப்பின் மூலம் வெண்முரசை நாங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதையும் விளக்குவதாக அமையும். வாசக இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளுதலில் வாசகர்களுக்குள்ளேயே இடைவெளிகள் இருக்கலாம்.ஆனால் இடைவெளிகள் நிரப்பப்படும்போதுதான் வாசிப்பு முழுமையடைகிறது.

சென்ற பகுதியில் நேமிநாதராகப் போகிற அரிஷ்டநேமி  சுப்ரதீபம் என்ற வெள்ளை யானை மீது அமர்ந்ததும் அது செல்லும் திசையை  தீர்மானித்தது போல் விரைவு நடை போடுகிறது. மக்கள் வெள்ளம் இன்னதென்று புரியாமல் அதைப் பின் தொடர்வதும் முன்னால் ஓடுவதுமாக இருக்கிறார்கள். சாலைமுனையை அடைந்ததும் சுப்ரதீபம் அதற்குமேல் முன்னகராமல்  நின்றுவிட்டது. முன்னும் பின்னும் என உடலை அசைத்தபடி வலது காலை துக்கி மண்ணில் வைப்பதும் எடுப்பதுமாக ஆடியது. அர்ச்சுனனும் அதன் அணுக்கனும் எவ்வளவோ முயன்றும் அதன் தயக்கத்துக்கான காரணத்தை அறிய முடியவில்லை. யானையின் அணுக்கன் அதன் விலாவை பலமுறை தட்டி முன்னால் செல்லும்படி கோரினான். யானை துதிக்கையை வீசியபடி ஊசலாடி நின்றது. எங்கிருந்தோ வரும் ஓசையை செவி கூர்வதென அதன் செவிகள் முன்னால் மடிந்து அசைவிழந்தன. பின்பு உயிர் கொண்டு பின்னால் வந்து விசிறிக்கொண்டன.அதற்குள் அர்ச்சுனனின் புரவி ஒருமுறை தும்மி தலைகுனிந்து பிடரி உலைத்தது. அது ஏன் அவ்வாறு செய்கிறது என்று  அவன் எண்ணுவதற்குள் மேலைவானில் இடியோசை எழுந்தது. சுப்ரதீபத்தின் உடல் சிலிர்த்தது. செவிகள் அசைவிழக்க அது மத்தகத்தை மேலே தூக்கியது. மின்னல் அதிர்ந்து சூழ்ந்திருந்த சுவர்களனைத்தும் ஒளிப்பரப்பாக மாறி அணைந்ததுமே வானம் பிளப்பதுபோல பேரிடி ஒன்று எழுந்து பல   நூறாக உடைந்து சரிவுகளில் உருண்டு சென்றது.அதைக் கேட்டதும் சுப்ரதீபம் வலதுகாலை தூக்கி வைத்து நடக்கத்தொடங்கியது. இந்த அளவோடு இப்பகுதியை நிறுத்திக்கொண்டு அடுத்த அத்தியாயத்திற்கு சென்று விடுகிறார் ஆசிரியர். அதன் பிறகுதான் சுப்ரதீபம் அவரை ஆடுகளின் கொலைக் களத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கு அந்த காட்சிகளைக் கண்டு அவர் விதிர்ப்பதுவும், சன்னதம் கொண்டவராக ஆபரணங்களையும், உடைகளையும், முடிக்கற்றைகளையும் கலைந்து நிர்வாணக் கோலமாய் யானை மீதே பயணத்தைத் தொடர்வதாக அந்தப் பகுதி முடிவடைகிறது.

இந்த இடத்தில் ஓர் இடைவெளியை ஆசிரியர் விட்டுவைக்கிறார். சுப்ரதீபம் ஏன் தயங்கியது? அது எந்த ஒலியை செவிகூர்ந்தது? பின்னர் அது எதைக் கேட்டபின்னர் தன் தயக்கத்தை உடைத்து முன் நகர்ந்தது? போன்ற வினாக்களை எழுப்பாமல் கடந்து போய்விட முடியாது. ஆனால் நாங்கள் கடந்துதான் போய்விட்டோம். ஆனால் தாமரைக்கண்ணன் பேசும்போது இந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ளும் ஒரு தகவலைக் கூறினார். அதாவது இப்படி ஒரு தீர்த்தங்கரரின் விண்ணேற்பு தருணத்தில் வானுலகத்திலிருந்து  மணியோசை போன்ற ஒரு சமிக்ஞை எழும் என்ற தகவலை கோடிட்டுக் காட்டினார். அந்தத் தகவல் ஒரு திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள சமவசரணம் குறித்த சில இணைப்புகளை எனக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒரு ஓவியத்தில் விண்ணேற்பு சமயத்தில் தீர்த்தங்கரர் மேல் வானுலகத்திலிருந்து வானுறை தெய்வங்கள் மலர்க் கணை தொடுப்பதும், துந்துபி இசைப்பதும், முரசொலி எழுப்புவதுமான சித்திரங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல அவருக்கு அங்கே ஒர் அரியணை ஒருக்கப்படுகிறது, அவர் விண்ணேறி வர பொற்படிகள் அமைக்கப்பட்டு அவரை அழைத்துவர தேவதூதர்களையும் பூவுலகிற்கு அனுப்பிவைக்கிறார்கள். தேவர்கள் அனைவரும் கை கூப்பி அவரை எதிர்கொண்டு அழைக்கிறார்கள். இப்படி ஒரு சித்தரிப்பை அந்த ஒவியத்தில் காணமுடிகிறது.

சுப்ரதீபம் ஏன் தயங்கியது, எதைச் செவி கூர்ந்தது, அர்ச்சுனன் குதிரை ஏன் தும்மியது என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது. அங்கு கூடியிருக்கும் மானுடருக்குக் கேட்காத அந்த ஒலிகளை சுப்ரதீபமும் அர்ச்சுனனின் குதிரையும் மட்டுமே கேட்டன. விலங்குகளுக்கு அந்தத் திறன் இயற்கயாகவே உண்டு என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். தரையில் விரவிக் கிடந்த பூக்கள்கூட விண்ணிலிருந்து விழுந்தவைதானோ என்ற எண்ணம் கூட எனக்கு  எழுந்தது. இப்படியாக ஆசிரியர் விட்ட இடைவெளியை என் வாசிப்பில் நான் புரிந்துகொண்டேன்.

இதுதான் எங்கள் கூடுகையின் பலம். இப்படி ஒருவருக்கொருவர் நிரப்பிக் கொள்வதால் வெண்முரசு வாசிப்பு மேலும் மேலுமென எங்கள் உயிரையும் உள்ளத்தையும் நிரப்புகிறது.


புதுவை வெண்முரசு கூடுகை 75 சிறப்பமர்வில் நண்பர் சரவணன் உரையின் எழுத்து வடிவம்

 



சரவணன் உரை


இன்றைக்கு நாம் நமது 75வது வெண்முரசு கூடுகையில் பேசவிருப்பது வெண்முரசின் 8ம் நூலான காண்டீபத்தில் இருந்து தேரோட்டி பகுதியின் சில அத்தியாயங்கள். இந்த பகுதியில் நம் அர்ஜுனன் சிவயோகி வேடம் களைந்து அர்ஜுனனாய் சுபத்திரையை திருமணம் செய்கிறான். ஒரு சிறு இடைச்சொருகல். இரண்டாயிரங்களில் அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்ட போது, ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.. அதில் இந்தியர்கள் தங்கள் மகன்களுக்கு அதிகமாக வைத்த பெயர் அர்ஜுன்.

அர்ஜுனனின் இயல்பு அவன் எங்கேயும் நிலை கொள்ளாமல் வென்று சென்று கொண்டே இருப்பது. அச்சமற்றவன், தேடும் வேட்கை உடையவன். ஒவ்வொரு கணத்தையும் கடந்து போய்க் கொண்டே இருப்பவன். ஒரு நிரந்தர பயணி. அவன் இப்பயணங்களில் வீரனாக, வில்லாளியாக, மனிதனாக தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். இந்த பயணங்கள் எல்லாமே பாண்டஸி (fantasy) தன்மையுடன் இருக்கிறது. பயணங்களில் அவன் பார்க்கும் நிலங்களின் விவரணைகள், நாகர்களின் நகரம், மணிப்பூரகத்தின் மிதக்கும் தீவுகள், அர்ஜுனனே பார்க்காத துவாரகையின் பகுதிகள் எல்லாமே மிக விரிவாக சொல்லப்பட்டு அந்த பாண்டஸியை உயர்த்திக்காட்டுகிறது.

இந்தப் பயணங்களில் அவன் பல வெற்றிகள் பெறுகிறான். சில பெண்களை வென்றெடுக்கிறான். அவன் அகத்துள் நிறைய கண்டடைகிறான். உதாரணமாக  நாகர்குலப் பெண் உலூபியை அடைவதற்கு முன் நாகர்களின் ஏழுலகங்களை வெல்கிறான். இந்த ஏழுலகம் மனித இயல்புகளை குறிக்கிறது. குரோதம், காமம், லோபம் என்னும்  கீழ்நிலை இயல்புகளில் இருந்து அவன் ஞானம், மெய்மை என்னும் மேல்நிலைகளை அடைந்து உலூபியை கைப்பிடிக்கிறான். இந்த ஏழுலகத்தையும் அவன் வெல்வது அவன் அகத்தில். சித்ராங்கதையில் தன்னுடைய பாதியை அறிகிறான்.

இப்படிப் பல அறிதல்களில் ஒன்று, அவன் இன்னும் ஒரு களத்தை வெல்ல வேண்டும். அக்களம் சுபத்திரை.

சுபத்திரையை நாம் இந்திரநீலத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவந்திக்கு நாட்டுக்கு சென்று ஒரு சிறுப்போர் செய்து  அவந்தி இளவரசி மித்ரவிந்தை இளைய யாதவனை திருமண செய்ய உதவுகிறாள். அர்ஜுனன் அனைத்து பெண்களையும் கடந்து சென்று கொண்டே இருப்பவன். அவன் கடந்து செல்ல முடியாத ஒரே பெண் சுபத்திரை. அவளுக்கு தன் தமையன் இளைய யாதவன் தான் ஆதர்சம். அவனுக்காக தன் வாழ்வை அர்பணித்தவள். அவனுடைய பாதி என்றே சொல்லலாம். அதனால் கூட அவனால் சுபத்திரையை கடந்து செல்ல முடியாமல் இருக்கிறான்.

சுபத்திரைக்கு மணத்தன்னேற்பு முடிவாகியிருக்கிறது. பலராமர் அவளை துரியோதனனுக்கு match fix  செய்திருக்கிறார். பீமன் வந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று அவனை வரவிடாமல் match  fixing -உம் செய்திருக்கிறார். இந்த சமயத்தில் தான் இளைய யாதவர் தன் வேலையைக் காட்டுகிறார். தனது பகடை உருட்டலை ஆரம்பிக்கிறார்.

ரைவத மலையில் ரைவதர் விண்ணேகிய விழாவிற்கு சுபத்திரையையும் அர்ஜுனனையும் வரவழைக்கிறார். அங்கு வந்த அர்ஜுனனை தாடியுடன் சிவயோகியாய் இருக்கச் சொல்கிறார்.

முதலில் அர்ஜுனனுக்கு சுபத்திரை மேல் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆர்வம் இருக்கிறது.. இளைய யாதவரை சந்திக்கும் போது அவர் சுபத்திரையை பற்றி பேசாதது அவன் ஆர்வத்தை தூண்டுகிறதுவிழாவில் நேஏரில் பார்க்கையில் அவன் அவளால் ஈர்க்கப்படுகிறான்

கிருஷ்ணனது ஆடல் தொடர்கிறது. சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். சுபத்திரை யாதவர்களின் ஒழுங்கின்மையை பற்றிப் பேசும் போது  அர்ஜுனனுக்கு குறிப்பால் உரையாடலுக்குள் வரச் சொல்கிறார். அர்ஜுனனும் குறிப்பறிந்து யாதவர்கள் ஒரு தலைமையின் கீழ் அமையமாட்டார்கள் என்று சொல்ல சுபத்திரைக்கு கோவம் வருகிறது. அவளின் உரையாடலுக்கிடையில் ஷத்ரியர்கள் தங்கள் எதிரிகளை அறிந்த அளவுக்கு தங்களை அறியமாட்டார்கள் என்று பதிலடி கொடுக்கிறாள். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு குறிப்பால், தன தங்கை அர்ஜுனன் கண்ட மற்ற பெண்கள் போல் இல்லை என்று உணர்த்துகிறார.. உரையாடலின் மூலம் அர்ஜுனன் சுபத்திரைக்கு எந்த ஆணின் மீதும் காதல் இல்லை என்று தெரிய வருகிறது. இது அவன் ஆணவத்தை காயப்படுத்துகிறது. இந்திரன் மகனான தன்னை ஒரு பெண் விரும்பவில்லை என்பது அவனுக்கு புதிது.

ரைவத மலையில் இருந்து அரிஷ்டநேமியை துவாரகைக்கு அழைத்துச் செல்ல அர்ஜுனனையும் சுபத்திரையையும் இளைய யாதவர் பணிக்கிறார். அர்ஜுனன் பாடு சற்று திண்டாட்டம் தான். ஒருபுறம் ஊழ்க படிவர் மறுபுறம் காதலிளம் கன்னி. இருவருக்கும் இடையில் ஒருவாறு சமாளித்துச் செல்கிறான். சுபத்திரையுடன் காதல் மொழியும் பேசுகிறான். குருதி கலந்த தண்ணீரை குடிக்க மறுக்கவும் செய்கிறான். இந்த பயணத்தில் சுபத்திரைக்கு சிவயோகியான அர்ஜுனன் மேல் காதல் மலர்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் அர்ஜுனனை சுபத்திரைக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை அவள் சொல்லவும் சொல்கிறாள் அது அவனது ஆணவத்தை காயப்படுத்துகிறது.

அரிஷ்டநேமி துவாரகையில் இருந்து நீங்கியப் பின் அர்ஜுனனுக்கு மனதில் சஞ்சலம். சுபத்திரையின் காதலை மறந்து கிளம்பலாம் என்று எண்ணுகிறான். அவையில் நகர் நீங்குவதாக அறிவித்துவிட்டு அறைக்கு வருகிறான். சுபத்திரை அவனிடம் வந்து கேட்கும் போது அரிஷ்டநேமி செய்த பெருஞ்செயலுக்கு முன் இந்த காதல் பொருளற்றது என்று சொல்கிறான். சுபத்திரை தாய்மையின் துணை கொண்டு அவனுக்கு அந்தக் காதலும் பெருஞ்செயல்தான் என்று புரியவைக்கிறாள். அரிஜுனன் காதலை ஏற்று அங்கே இருக்க சம்மதிக்கிறான். அப்போது தான் சுபத்திரையின் ஆளுமை வெளிவருகிறது. அவள் சொல்கிறாள் "நீங்கள் நகர் நீங்கமாட்டீர்கள் என்று அவையில் அறிவித்துவிட்டே வந்தேன்". அதற்கு அர்ஜுனன் "என்னை அறிந்திருக்கிறாய்" என்று சொல்ல, அவள் "இல்லை என்னை அறிந்திருக்கிறேன்" என்று பதில் சொல்கிறாள். நீ யாராயிருந்தாலும் சரி, என்னால் உன்னை இங்கே இருக்க வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் அவள் கைகள் மேல் இருக்கும் உறுதியும் வெளிப்படுகிறது. இதுவும் அவள் மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள்  என்று காட்டுகிறது.

இருவரும் படைக்கலப்பயிற்சிக்கு செல்கிறார்க்ள. அர்ஜுனன் நரம்பு முடிச்சுகளில் அம்பை எய்தி எப்படி செயலிழக்கச் செய்வது என்று செய்து காண்பிக்கும் போது அவன் வேடம் கலைகிறது. அவன் அர்ஜுனன் என்று தெரிந்த பின் சுபத்திரை கோபம் கொள்கிறாள். தான் வெறுத்த ஒருவனையே காதலிக்க நேர்த்தது அவளுக்கு அளவில்லா கோபத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இம்முறை அர்ஜுனன் அவளை சமாதானப்படுத்தி காதலை புரிய வைக்கிறான். இப்போது நடக்கும் உரையாடலில் சுபத்திரைக்கு அர்ஜுனனை ஏன் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. துருபதனுக்கு கீழ்மையை இழைத்த பின் அர்ஜுனனின் புகழ் பரவுகிறது. அது சுபத்திரைக்கு பெரும் கசப்பை தருகிறது. அவளும் போர் புரிந்திருக்கிறாள். கொலை செய்திருக்கிறாள் ஆனால் ஒரு கட்டத்தில் அதையெல்லாம் தவறென உணர்ந்து படைக்கலத்தை துறக்கிறாள். இதன் பின் அந்த கசப்பு அதிகரிக்கிறது.

இந்த இடத்தில் அர்ஜுனன் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றை சொல்கிறான் அவன் படைக்கலம் அறத்தையோ தெய்வங்களையோ நிலை நாட்டுவதல்ல. அது ஒரு கொலைக்கருவி. இது அவன் முன்பு சொன்னதில் இருந்து முற்றிலும் முரண்படுகிறது. இதற்கு முந்தைய பயணத்தில் ஒரு சத்திரத்தில் ஒரு வணிகனிடமும் நாடோடியிடமும் பேசும்  போது அவன் வில் யாருமற்ற அந்த நாடோடியின் அறம் காக்க எழும் என்று சொல்லி இருந்தான். இங்கு அப்படியே மாற்றிச்சொல்லுகிறான். என் அனுமானம் என்னவெனில், அவன் தன்னை சுபத்திரையின் முன் முற்றும் திறந்து வைக்கிறான். அதாவது, என் படைக்கலம் அறத்திற்காக மட்டும் எழாது சில சமயம் தவறும் இழைக்கும், ஏனெனில் நான் எளிய மானுடன் தான், தவறுகள் செய்வேன் தான். இருந்தும் என்னை ஏற்றுக்கொள். அவளிடம் தன்னை ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு மன்றாட்டாக தான் பார்க்கிறேன்.

 

அவளுக்கு சிவயோகியைத்  தான் பிடித்திருக்கிறது. அர்ஜுனனை பிடிக்கவில்லை. அர்ஜுனன் அவளுக்கு அர்ஜுனன் இல்லாமல் சிவயோகி இல்லை என்பதை ஒரு உவமை மூலம் புரிய வைக்கிறான். வாள் இல்லாமல் வாளின் உறைக்கு என்ன மதிப்பிற்கும் என்று சிவயோகி மாற்றுருவை வாளின் உறையாகவும் அதில் இருக்கும் வாளினை அர்ஜுனனாகவும் உருவகப்படுத்துகிறான். சுபத்திரையும் காதலை ஏற்று அவனுடன் இணைகிறாள்.

இங்கு பார்க்க வேண்டிய ஒன்று, அர்ஜுனன் இதுவரை  எந்த பெண்ணிடமும் பணிந்தது இல்லை.. எந்த பெண்ணாக இருந்தாலும் கதவை உடைத்து உள்ளே புகக்கூடியவன். அவன் இங்கு சுபத்திரையிடம் நீ சொன்னால் என் தலையை வெட்டி உன் காலடியில் வைக்கிறேன் என்கிறான். அவள் அறையில் ஓரமாக ஒரு கோளாம்பியாக வைக்கச் சொல்லுகிறான். அவன் திரௌபதியை என்ன செய்தானோ அதை சுபத்திரை அவனுக்கு செய்கிறாள். அவன் ஆணவத்தை காயப்படுத்தி அவனை ஏங்க வைக்கிறாள். இது அர்ஜுனனுக்கு முற்றிலும் புதிதான ஒரு விஷயம்.

இங்கு காதல் அரங்கேற, அங்கே பலராமர் பெரும் படையுடன் துவாரகைக்கு வருகிறார். அவரை அவையில் தைரியமாக எதிர்கொண்டு சத்யபாமாயின் ஆசியுடன் சுபத்திரையுடன் அவை நீங்குகிறான். பலராமர் அவர்களை கொல்லுமாறு படைகளை அனுப்புகிறார். தேரோட்டி என்னும் தலைப்புக்கான காரணம் நமக்கும் புரிய வருகிறது. சுபத்திரை திறமையாக தேரோட்ட, அர்ஜுனன் அம்புகளால் யாதவர்களை தடுக்கிறான். அவர்கள் வெற்றிகரமாக துவாரகையின் தோரண வாயிலை கடக்கிறார்கள். அர்ஜுனன் எந்த யாதவனையும் கொல்லவில்லை. அவர்களை செயலிழக்க மட்டுமே செய்கிறான். அதற்கு என்ன கரணம் இருக்க முடியும்? ஒன்று அரிஷ்டநேமியின் பாதிப்பாக இருக்கலாம். அல்லது சுபத்திரையிடம் நல்ல பிள்ளையாக "பார் நான் கொலை செய்யவே இல்லை.. என்று சொல்வதாகவும் இருக்கலாம்". இரண்டாவது காரணம் அழகாக இருப்பதால் அதையே எடுத்துக்கொள்வோம்.

கடைசியாக சுபத்திரை அர்ஜுனனிடம், தனக்கு பிறக்கப் போகும் மகனும் தன்  இளைய தமையனைப்போல் வெளியேறத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று கேட்கிறாள். ஆம் எல்லாரும் ஆசைப்படலாம். அனால் ஊழ் சொல்வது தானே நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.


புதுவை வெண்முரசு கூடுகை 75 சிறப்பமர்வில் திருமதி சித்ரா அவர்கள் உரையின் எழுத்து வடிவம்

 



காண்டீபம் என்றாலே முதலில் நினைவில் வருவது பாரதியின் பாஞ்சாலி சபதம் தான். மஹாபாரதத்தில் முதலில் பரிட்சயமான கதாபாத்திரம் அர்ஜுனன் தான். அதனால் வெகு விரைவாக இந்த 

கதையோடு ஒன்றிவிட முடிந்தது என்றே கூற வேண்டும். சின்னஞ்சிறு கூழாங்கற்களை மலை என எண்ணி ஏறும் எறும்பு போல என்னுடைய  இக்கதையின் அவதானிப்புகளையும் அனுபவங்களையும் பகிர்கிறேன்.

அர்ஜுனனின் முதல் திறப்பு தொடங்குமிடம் உலூபியின் காதல் வழியே அவன் சென்றடையும் "பிறிதொன்றிலாமை". "பிறிதொன்று, பிறிது, பிறன்  என்பதைப் போல் நச்சுநிறைந்த கோப்பை உண்டா என்ன? பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது?" என்ற வரிகளை படிக்கும் போது திரு.ஜெயமோகன் அவர்களின் சங்கச்  சித்திரத்தின் "யாதும் ஊரே யாவரும் கேளீரின்" இலக்கிய அனுபவம் நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அந்த அனுபவத்தில் குரு.நித்யா அவர்கள் "பிறன் " என்பதும் "பிறிது " என்பதும் சுருங்கி வருவதே மேம்பட்ட சமூகம் என்று கூறுகிறார்.

அர்ஜுனன், போரும் ஆயுதமும் குருதியும் என்றும் வாழ்ந்திருந்தவன், இந்த பயணத்தில் இறுதியில் குருதி விழுந்த நீரை அருந்த கூசியபோது, அந்த ஒரு நொடி அவனுடைய "பிறன்" சுருங்கியதை உணர முடிந்தது.

காதல் என்றாலே கண்களின் வழியே என்ற பொது கருத்து ஒன்று உண்டு.அனால் புன்னகையை பற்றி யாரும் பெரிதாக பேசியதில்லை. "எயினி" என்று  சுபகையை  அழைத்த  அர்ஜுனன்  அவளின்  புன்னகையாலே ஈர்க்கப்பட்டிருக்கிறான். நெருங்கியவர்கள் நம்மை பார்த்து புன்னகைக்கும் விதத்தில் தான் எத்தனை எத்தனை அழகுகள். "எயினி" யிலிருந்து விநாயகர் மந்திரத்தின் "இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" என்பதை புரிந்து கொண்டேன்.

சித்ராங்கதையின் பயணத்தில் அர்ஜுனனின் ஆடல் கலையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவனின் மாற்றுரு என்பது ஆடை மாற்றமும் ஒப்பனையும் அல்ல. மாற்றுரு என்பது அசைவுகளில் நிகழும் மாற்றம். பரதநாட்டியம் ஆடுகையில், ஒருவர் நேர்த்தியாக ஆடினால் அவர்களின் உருவம் விலகி அந்த ஆடலின்  அழகு முழுமை கொண்டு விடுவது போல.

அர்ஜுனன் அது நாள் வரையில் குந்தியிடமும், திரௌபதியிடமும் அருவருத்த ஒன்று முற்றிலும் இல்லாதவளாகிய  சுபத்திரையை சந்திக்கிறான். கனிதல் என்பது மட்டுமே தன முழுமை. முழுமையல்லாத எதுவும் வெற்றி அல்ல என்று கூறும் சுபத்திரையை ஒரு நொடியும் ரசிக்காமல் இருக்க முடியவில்லைதனக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதில் தான் அவளுக்கு எத்தனை தெளிவு. அத்தெளிவு அவள் கனிவிலிருந்து உருவாகி இருக்கலாம் என்பதே எண்ணம்.

 

அத்தனை பெண்களும் கனவு காணும் அர்ஜுனனை, ஆரம்பத்திலிருந்தே கசந்தவள் அவள். அதற்கான கசப்பு தொடங்கிய புள்ளியை தொட்டு எடுத்து, அர்ஜுனனை உளம் குன்ற செய்பவள். அவன் தவறை சுட்டிகாட்டுபவள். அவன் கீழ்மையை உணர செய்பவள். வேறு எந்த பெண்டிரும் அவன் வாழ்வில் அதை செய்யவில்லை. "குருதித் துளி வீழ்ந்த நீரை அருந்தக் கூசிநின்றிருந்த சிவயோகியைத்தான் நான் உளம் ஏற்றேன்" என்று கூறுகையில் அவளின் உறுதியும் கனிவும் மேலும் வெளிப்படுகின்றது.

"விரும்பாத ஆண்மகனை விழைவை காட்டி உடன் நிறுத்துவது எனக்கு இழிவு", என்று அவள் கூறுபோதும் "கரந்து  வந்தது நீங்கள்,அதில் எனக்கு பொறுப்பில்லை" என்று கூறும்போது சுபத்திரையின் தனித்துவம் மின்னுகிறது என்றே கூற வேண்டும்.

ஐந்தில் ஒரு பங்கல்ல, முழுவதுமாக எனக்கே வேண்டும் என்று மாலினியிடமும், உலூபியிடமும் விண்ணப்பம் வைத்த அர்ஜுனன் என்னும் குழந்தை, நேமிநாதரின் மேன்மையை கண்டு அது தனக்கில்லை என்பதை தெளிந்து,  "நான் அஞ்சுவது என் விழைவையே" என்ற அறிதலில் மூலம்  தன் பயணத்தை முதிர்ச்சியுடன் தொடங்குகிறான்













நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...