Monday, 18 May 2026

கூடுகை 94 . இராச.மணிமேகலை உரையின் எழுத்து வடிவம்

                           


                                   ‘கடந்ததில்லை சிவம்’  


இப் பூரட்டாதி பகுதி கன்னிகளின் ஆடல்களால் ஆனது. இம்மாதத்திற்குரிய ராசி கன்னிராசி. இதில் வரும் இரட்டையர்களாக விஸ்வாமித்திரர், பீஷ்மரைக் காண்கிறேன். நான் இதனை மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன். 1. மகா நிர்வாணம்,  2. காமம் கடத்தல் (தன்னைக் கடத்தல்) 3. மெய்ம்மை. 

மகா நிர்வாணம்

எது நிர்வாணம்? மற்றவர்கள் முன் ஆடையின்றி இருப்பதை நிர்வாணம் என்கிறோம். அதை அவமானமாகக் கருதுகிறோம். கொல்வதைவிட வஸ்திராபகரணம் என்பது வாழ்நாள் தண்டனையாகி, இறப்புக்குச் சமானம் ஆகிறது. பாஞ்சாலிக்கு நிகழ்ந்ததும் இதுவே.  ‘உடை நீப்பின் வாழார் கவரிமான் அன்னார்’ என்பது சமுதாய ஒழுக்கமாகி விட்டது. எப்படியாக இருந்தாலும் உடலை மூடும் ஆடைகளை நம்மால் துறக்க முடியாது. ஆனால்  புத்தமரபிலும், சமணத்திலும் மகாநிர்வாணம் என்பது மனதில் உள்ள பேராசை, அறியாமை, வெறுப்பு இவற்றை நீக்கி, பிறவி விடுதலை, ஞானநிலை அடைவதையும், அகத்திலும் புறத்திலும் துறத்தலே உண்மையான துறவு என்பதையும், புத்தரின் சிரவணபெலகுலா சிலையும், திகம்பரர்களின் நிர்வாணமும் இதற்குச் சான்றாவதையும் காணலாம். காந்தியின் அரையாடை வெளிநாட்டினருக்கு ஆபாசம். அதுவே அவர்க்கான பெருமைகளில் ஒன்று. கோவணம் அணிந்த ரமணரின் கோலமும், கோவணாண்டி முருகப் பெருமானின் கோலமும் துறத்தல்தான். Emerald forest என்ற திரைப்படம் அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்களுக்கும் கார்பரேட்களுக்கும் நடக்கிற போராட்டம். பழங்குடிப் பெண்களை அங்கிருந்து கொண்டுபோய் Brothel houseல் விட்டுவிடுவார்கள். ஆனால் அங்கே போனதும் ஆடை, அணிகளெல்லாம் கழற்றிப் போட்டுவிடுவார்கள். அவர்களுக்கு ஒப்பவே ஒப்பாது. கடைசியில் பழங்குடியினப் பையன் போய் காப்பாற்றிக் கூட்டிவருவான். வந்தவுடன் அந்தப் பெண்கள் செய்த முதல் வேலை ஆடைகளையெல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு ஆராவாரமாக, கொண்டாட்டமாக சிரித்து மகிழ்வதுதான். இதைத்தான் இந்த 100 காட்டு மகளிரும் செய்கிறார்கள். ஆறுவகை   மந்திரங்களால் கட்டி வைத்து (பொற்பு, பொறை, குலம், நெறி, அணி, ஆடை), நான்கு வகை குணங்கள் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) என்ற குணங்களைக் கற்பித்து, அப்படி நில், இப்படி நில், தலையைக் குனி, தோளைக் குறுக்கு என்று சொல்லிச் சொல்லியே கூன் விழுந்து விட்டது. பிரம்மதத்தன் முதன்முறை காட்டிலிருந்து நாட்டிற்கு வரும்போது ஏன் இவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்கள்? என்று கேட்க பெண்மை எனும் நோய் பீடித்திருக்கிறது என்று ஒருவன் சொல்வான். பெண்களுக்கு பூட்டப்பட்டிருக்கும் அரையணி, கணையாழி, மூக்குத்தி, குழை, ஐம்படைத்தாலி, மங்கலத்தாலி, மெட்டி இவைகளால் ஆன அலங்காரங்கள் எல்லாம் யாருடைய பார்வைக்காக? ஆண் என்பவனுக்காகத் தானே? இந்தத் தளைகளில் இருந்து விடுதலையான அந்த காட்டுமகளிர் நுாற்றுவரும் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத தன்மை மிக்கவர்களாக பச்சைவெளிக்குள் சிறகடித்துப் பறந்து செல்கிறார்கள்.  அந்த இடம் தான் கன்யாவனம் எனும் கன்யாகுப்ஜம். அடுத்து இங்கே சித்ரதேவன், ஊர்மிளை கதை சொல்லப்படுகிறது. தன்னை மட்டுமே தன் அழகை மட்டுமே ஆராதித்த பெண்ணை, எவ்வித கட்டுகளுமின்றி   இருந்தவளை தனக்கு அடங்கவில்லை என்பதற்காக,  “எங்கே ஆடை அணிகளற்று பெண்கள் திரிகிறார்களோ,  எங்கே எவனொருவன் பெண்ணை தனக்கு நிகரானவனாக நினைக்கிறானோ, எவன் காதல் உன்னைக் கட்டுப்படுத்தாதோ அங்கே பிறக்கக் கடவது”, என சாபமிடப்படுகிறாள். (சூளி-ஊர்மிளை மகன் தான் பிரம்மதத்தன்). இவனே அந்த காட்டு மகளிரை மணந்து விடுதலை செய்பவன்.

2. காமம் கடத்தல் ( தன்னைக் கடத்தல்)

ஏன் காமத்தை, விழைவைக் கடத்தல் வேண்டும்? சமூகத்தின் விழுமியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இதில் பொருள் ஈட்டினால் தான் அறம் செய்ய முடியும், இன்பம் துய்க்க முடியும். ஆனால்  பொருள் ஏன் அறத்திற்குப் பின் வைக்கப்பட்டதெனில் அது தனக்கு இருபக்கங்களிலும் இருக்கும் அறத்தையும், இன்பத்தையும் நடுநிலையோடு அணுகுகிறது. ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. அதைச் செய்ய பொருள் வேண்டும். பொருள் இருந்தால் இன்பம் வரும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் வீடுபேறு எனும் மெய்ம்மை. மெய்ம்மையை ஒருவன் அடையவேண்டுமென்றால்  அவன் காமத்தைக் கடக்க வேண்டும். இங்கே  நான்கு பேர் பார்வையில் காமம் கடத்தல் சொல்லப்படுகிறது.  சூதன், பூசகர், விஸ்வாமித்திரர், பீஷ்மர். “நுாறு கோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலியென விரிந்து கிடப்பவளை கடந்ததில்லை சிவம்” என்ற கூற்றை ‘பெண்ணை ஆணால் கடக்கவே இயலாது’ என்பதற்கான சான்றாகக் கொள்ளலாம் வலிமை மிகுந்த ஆணால் ஏன் பெண்ணை வெல்லமுடியவில்லை? மனிதகுல தோற்றத்தின் வரலாறுகளின்படி முதலில் தாய்த்தலைமை சமூகம் தோன்றியது. படிப்படியாக ஆண் மையச் சமூகமாக மாறியது. தாய்த்தலைமை சமூகமாக இருந்தபோது அவளுடைய உடை என்னவாக இருந்தது? இப்போது ஆண் மையச் சமூகத்தின் உடை   என்னவாக இருக்கிறது? பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர் எவர்?  அப்படியென்றால் தலைமை எதுவோ அதைக்கொண்டு சமூகத்தின் சட்டதிட்டங்கள் அமைவதைக் காணமுடியும். அவளைத்  தாய்மண், தாய்மொழி, தாய்நாடு என்று போற்றித் திருவகவல் பாடி வைத்திருக்கிறோம். நமக்கு அண்டை மாநிலத்தில் 1950 வரையிலும் தாய்த் தலைமைச் சமூகம்தான். இதுவரை நமக்கு எல்லாமாக இருந்த அவளை இப்போது கடக்கவேண்டும்.

முதலாவதாக, சூதன் பார்வையில் ‘நான் பெண்களைக் கடக்கவேயில்லை. அவர்கள்தான் என்னைக் கடந்தார்கள் என்று   சொல்லிவிட்டான். பெண்கொள்ளா நோன்பு என்பது நடவாத ஒன்று. கன்யாவனம் என்ற காட்டில் நைஷ்டிக பிரம்மச்சாரிகள் மட்டுமே செல்லமுடியும், கொஞ்சம் ஏமாந்தாலும் கொன்று சிதறடிக்கும் சினம் கொண்டவர்கள்’ என்கிறான்.

இரண்டாவதாக, பூசகர் ‘ஆண்மகன் எனத் தன்னை உணரும் எவரும் அக்காட்டுக்குள் செல்லமாட்டார்கள். அக்காடு பெண்களின் பேருருவும், பேரெழிலும் பெருவஞ்சமும் கொண்டது’ என்கிறான்.  ‘எதன் பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து, துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?’ என்ற கேள்வியோடு அவர் நிற்கிறார். ஐம்பது  ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் கடக்க எண்ணி வந்து வந்து செல்பவர் இவர்.

விஸ்வாமித்திரர். புல், (குசை) வம்சத்தவர் பிரம்மரிஷியான கதை. கௌசிகனாக அறம்,, பொருள், இன்பம் என அனைத்தையும் அடைந்தாகிவிட்டது. அதற்கும் அப்பால் உள்ளதை அடையவேண்டும். அது எது? வீடுபேறு. அதை அடைய தவம் செய்யவேண்டும். காமம், குரோதம், மோகத்தைக் கடந்தவர்களே தவத்தின் முதல் படியிலேயே கால் வைக்க முடியும். ‘நான் இதுவரை பொருந்தா இடத்தில் இருந்து விட்டேன். இனி தவம் ஒன்றே என் குறிக்கோள்’, என்று வசிஷ்டரிடம் கேட்க ‘எது உன்னுள் ஓங்கியுள்ளதோ அதைப் பற்றுக! தவம் செய்க!’ எனச் சொல்ல அவரும் இமயயலை சென்று தவம் செய்து பிரம்மன் முன்னாடி போய் நிற்கிறார்.‘ நீ யார்? ஒரு சிறு புல்! உன்னை ஈடு செய்து விண்ணும் மண்ணும் கொண்ட முழுதுலகைப் படைப்பேன்’. மறுபடியும் வசிஷ்டரிடம் போய் நிற்க, ‘பெருந்தவத்தோரும் அஞ்சும்  கன்யாவனம் செல்.  கன்னியரின் காடு சான்றளித்தால் மட்டுமே நீ விரும்பும் இந்திரனுக்கு மேலான வெற்றியைப் பெறமுடியம். சுட்டுவிரலில் புல்வளையம் அணிந்தவனாக அவன் முன் நிற்கமுடியும்’ என்கிறார். அந்த கன்யாவனத்தின் அணங்குகள் பார்ப்பவரின் விழைவுகளினுாடாக மட்டுமே உருவம் கொள்பவை. கன்னியரின் ஆடல்கள் தொடங்குகிறது. இந்த இடத்தில் ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை கங்கையைக் கடந்து அக்கரை செல்ல நின்றுகொண்டிருக்கிறார் வியாசர். அப்போது கிருஷ்ணன் வந்து ‘நித்ய இந்திரிய நிக்ரகி (புலன் ஒறுப்பாளன்) வந்திருக்கிறேன், வழிவிடு’ என்று சொல்ல கங்கை வழிவிட்டதாம். வியாசர் ‘அடப்பாவி, இப்போதானே கோபிகைகளிடம் ஆடிவிட்டு வந்தாய். நீ எப்படி புலன் ஒறுப்பாளன் ஆனாய்’ என்றாராம். அதற்கு கிருஷ்ணன், ‘ஆத்மா ஈடுபடாதபோது புலன்கள் எதையும் அறிவதில்லை. புலன்கள் என்பவை ஆத்மாவின் வாசல்கள் மட்டும்தான்’ என்றாராம். இந்தப் பின்புலத்தில் வைத்து இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். ‘இந்திய சுதந்திரம்’ என்னும் மாபெரும் வேள்விக் களத்தில் நிற்கிறார் காந்தி. தன்னுடைய புலன் ஒறுப்புக்காக, மனுபென் காந்தி, சுசீலா நய்யார், மற்றும் பல ஆசிரமத்துப் பெண்களுடன் ‘நிர்வாணமாகப் படுத்தல்’ என்ற பரிசோதனையில் இறங்கினார். கிருஷ்ணன் சொன்ன அதே பதில் தான். ‘ஆத்மா ஈடுபடாதபோது புலன்கள் அறிவதில்லை. புலன்கள் என்பவை ஆத்மாவின் வாசல்கள்’. இதற்கு சகசயனம் என்று பெயர். பத்து வருடங்களாக காந்தி இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தாந்ரீக முறையில் தனியாக செய்து பார்க்கவேண்டியதை வெளிப்படையாகச் செய்ததும், குருமரபு என்ற ஒன்று இல்லாததும் இதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. மேலும், ‘கேரளத்தில் தலைச்சேரியில் சர்வதேச அளவில் மானுட பரிசோதனை நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கே முற்றும் துறந்த ஆண், பெண் இருபாலாரும் வாழ்வதாகவும் 1995 வாக்கில் இது கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என மக்களால் எதிர்க்கப்பட்டது’ என்பதான செய்திகளை ஜெ. எழுத்தில் படித்திருக்கிறேன். இருண்மையும் ஆழமும் நிறைந்த  காமத்தின் குறியீடான கன்யாவனத்திற்கு கௌசிகர் வருகிறார். ஏழு பருவ மகளிரின் ஆடல்களை உணர்கிறார். அன்னை, செவிலி, களித்தோழி, காதலிகள், துணைவிகள், முதுமகள், சிறுமகள் என அனைத்துப் பருவப் பெண்களை துளித்துளி அனுபவமாக ஒரு ஆண் எப்படியெல்லாம் திரட்டி வைத்திருப்பானோ அதையெல்லாம் விஸ்வாமித்திரர் அந்தக் கானகத்திற்குள் காண்கிறார். ஒரு ஆண் பெண்ணை முதன்முதலாக எங்கே உணர்கிறான்? தன் தாயின் முலைப்பால் வழியாக என்பதிலிருந்து தொடங்கி மகளிரின் பருவ நிலைகளை நுாறாகப் பட்டியலிட்டிருக்கிறார் ஜெ. கடைசியாக மேனகை வருவதும், அவர்களுக்கு சகுந்தலை என்ற பெண் பிறப்பதும் சொல்லப்படுகிறது. மறுபடியும்  “நுாறு கோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்து கிடப்பவளை கடந்ததில்லை சிவம்” என்ற  ஆண்களை நெஞ்சடைக்கச் செய்யும் வரியை நினைத்துப் பார்க்கிறேன்.

பீஷ்மர் – பெண்கொள்ளாமை நோன்புக்குரியவர். ஆழமும் இருண்மையும் கொண்ட காட்டில் சுனைகள் நிறைந்த சௌபர்ணிகத்தின் கரையில்  அமர்ந்து நீரள்ளியபோது பார்க்கும் முகம்  அவரது அன்னை கங்காதேவியின் முகமாக உணர்ந்தேன். கண்களை மூடி அகம் நோக்கியபோது உள்ளுக்குள் தனிப்பறவை ஒன்று கேவுவதும், நீர்த்துளி சொட்டுச்சொட்டாக விழுவதும் அவரது அன்னையை நினைத்தே எனலாம். சந்தனுவுக்கும் அவருக்குமான உரையாடலில்,  ‘இங்குதான் இருக்கிறீர்களா எனக்  கேட்கும் போது யயாதி, பிரதீபர், சம்வரணன் என குருகுல மூதாதையர் எவரும் இதைக் கடக்கவில்லை. காமத்தைக்  கடத்தல் அவ்வளவு சுலபமி்ல்லை மகனே! ஒருவேளை நீ கடக்கக்கூடும் ஏனென்றால் புரு தன் இளமையைத் தன்  தந்தைக்கு தானமளித்தவர்’ என்கிறார். இதிலிருக்கும் உரையாடல் ஒவ்வொன்றும் நமக்கு திறப்பை அளிப்பன. ‘காமத்தை அடைந்தவர்கள் அனைவரும் ஏதோ இழந்ததான ஆடலை ஏன் அமைத்தாள்?’ அதற்கு பீஷ்மர், ‘காமத்தை இழந்தவர்களும் அடைந்ததில்லை’ என்று கழிவிரக்கத்துடன் பதில் சொல்வதும்,  அதற்கு சந்தனு, ‘இழந்தவர்கள்  செல்லும் தொலைவு குறைவு அல்லவா?’ என்று  மறுமொழி சொல்வார். இந்த உரையாடலை யசுனாரி கவபட்டா என்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘உறங்கும் அழகிகளின் இல்லம் (தமிழில் அரிசங்கர்) கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். டோக்கியோவில் வயதானவர்களுக்கு  உறங்கும் நிர்வாண அழகிகளுடன் துயில் கொள்ளும் ஏற்பாடு இருக்கிறது. வயதானவர்கள் மட்டுமே இதன் வாடிக்கையாளர்கள். எகுச்சி என்ற 67 வயதுடையவர் அந்த இல்லத்திற்குச் செல்கிறார். அவர் ஐந்து இரவுகள் வெவ்வேறு அழகிகளுடன் இரவைக் கழிக்கிறார். ஒவ்வொரு இரவும் அவர் வாழ்வின் பெண்களான மனைவியை, காதலியை, மகளை, பழைய நினைவுகளினுாடாக மீட்டுக் கொண்டு வருகிறது. அப்பெண்கள் அவருக்குள் ஒளிந்திருக்கும் கசப்புகளை, பாலியல் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள்.  இதில் சிறப்பு என்னவென்றால் அது விலைமாதர் இல்லம் அல்ல. அந்தப் பெண்கள்  கன்னிகள். துாக்கமருந்து கொடுத்துத் துாங்க வைக்கப்பட்டவர்கள்.  எகுச்சிக்கு முதல் அழகியிடம் துாங்கும் போது பால் வாசனை வருகிறது. இரண்டாவது கன்னியிடம் துாங்கும்போது தன் காதலி நினைவுக்கு வருகிறாள். இப்படி ஒவ்வொருத்தியிடம் துாங்கும்போதும் ஒவ்வொரு நினைவு வருகிறது,  கன்யாவனத்தில்  விஸ்வாமித்மிரருக்கு வரும் நினைவுகள் போல. இங்கே இதை எடுத்து வந்து பீஷ்மருக்குப் பொருத்தினாலும் பொருந்தும். வயோதிகம் எப்போதும் கனிவினால் மட்டும் நிறைந்தது அல்ல. காமத்தை அடைந்தவர்களும் ஏதோ இழந்ததான உணர்வை அடைவதும், இழந்தவர்களும் அடையாததான உணர்வை அடைவதும் இங்கே தொடர்பு படுத்தி பார்க்கத் தோன்றியது. அடுத்து அந்த இடத்திற்கு குந்தி வருகிறாள். கன்யாவனம் பெண்களை அனுமதிக்காது. ராஜசூயத்திற்கு அனுமதி வாங்கியே ஆகவேண்டும். கால் எடுத்து வைத்தவுடன் தான் கன்னியானதாக உணர்கிறாள். அவள் கன்னிதான். தன் கணவனிடம் இணை சேர்ந்து தாயானவள் இல்லை. அணங்குகள் ஆண்களை விடுவதில்லை என்பதால்  கன்னியானவுடன் அவளுடைய மனப்பான்மையே மாறிவிடுவதைக் காண்கிறோம். பூச்சூடிக்கொள்கிறாள். இப்போது அவள் ஒரு அணங்கு. பீஷ்மர் வந்து பின்னால் நிற்கிறார். எச்சரிக்கையாக திரும்பி நின்றுகொள்கிறார். தன்னை சலனப்படுத்துவதற்கோ, அவள் அப்படிச் சலனமடைவதற்கோ இடம் கொடுக்காத பீஷ்மரைக் காண்கிறோம். எந்த அஸ்திரத்தை (தங்களின் பெண் கொள்ளா நோன்பை குடியின் அனைத்துப் பெண்டிரும் போற்றிக்கொண்டிருக்கிறோம்)  எய்தால் சம்மதம் கிடைக்குமோ அதைப் பயன்படுத்தி சம்மதம் வாங்கிவிடுகிறாள்.

மெய்மை

ஏன் மெய்மை பயிலப்பட வேண்டும்? அறம்பொருள் இன்பம் என்ற  விழுமியங்களிலிருந்து மனிதன் தவம்செய்து  வீடுபேறடைதலை  நோக்கிச் செல்கிறான்.  இத்தவம் யாருக்கானது? நாடுவிட்டு, காடேகி தவம் செய்தல் மட்டும்தான் தவமா?   கௌசிகன் அரசனாக இருந்து அனைத்தையும் அனுபவித்த பின்பு என்னவோஒன்று  எஞ்சியுள்ளது  அது  எதுஎன  அவன்  அகம் தவித்துக் கொண்டிருக்கிறது. காட்டை நோக்கிச் செல்கிறான். ஏன் காடு தவத்திற்குரியதாகிறது?  ‘கையளவு புல்லில் மறையும் புலியும், முழங்காலளவு நீரில் மறையும் முதலையும், இன்மையில் இருந்து எழுந்து வரும் களிறும்’ தவத்திற்கான உந்துசக்தியாகக் காட்டில் ஒளிந்துள்ளது.  அத்தேடலின் தொடர்ச்சியாக கனவிலே வெண்ணிறப் பசு வருதலும்அதைத்தேடிச்செல்லும்போது வசிஷ்டரைச் சந்தித்தலும் நிகழ்கிறதுவிஸ்வாமித்ரர்சூளி இருவருக்கும்விண்ணேகுவதற்கான அடிப்படைத் தகுதியாக ‘இல்லறம்’ காட்டப்பட்டுள்ளதாக கருத இடமுள்ளது.  சூளி அரசு. குடி, படை, செல்வம் அனைத்தையும் துறந்து விண்ணேகும் சமயத்தில் தடுக்கப்பட்டு இல்லறத்திற்குத் திருப்பப் படுகிறான். சூளியை மணந்து பிரம்மதத்தனைப் பெறுகிறான். கௌசிகன் இமயமலை சென்று தவம் செய்து கன்யாவனத்தில் கன்னிகளால் அலைகழிந்து மேனகையை மணந்து சகுந்தலையைப் பெறுகிறான். அதன்பிறகே இருவரும் விண்ணேகுகிறார்கள். காமத்தைக் கடந்த நிலையே மெய்ம்மையை அடைவதற்கான தகுதியாக சொல்லப்பட்டுள்ளதோ எனக் கருத இடமேற்படுகிறது. கௌசிகன், தன் உடலிலிருந்து ஐந்து பஞ்சேந்திரியங்கள் நச்சு நாகங்களாக இறங்கி மறைய, தோல்போர்த்த என்புக்குவை தவத்தில் நின்றெரிய, புகைவடிவாகி, வெண்பசு உருக்கொண்டு விண்ணேகி வெண்ணிறப்பசுவிடம் பால் குடித்து விஸ்வாமித்திர்ஆனார் என ஜெ. விவரித்த இடம் மயிர்க்கூச்செரியும் இடம்.   பீஷ்மர் தன் பிரம்மச்சரியத்தை பரிசோதனை செய்யவே கன்யாவனம் செல்கிறார். தன்னைக் கடந்து கரைசேர்ந்தாரா இல்லையா என்பது காட்டப்படவில்லை.

இல்லறத்தானுக்கும் தவம் உண்டு. ‘வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்’, என்ற திருக்குறளில் ‘ஈண்டு’ என்ற சொல் இங்கு ‘இல்வாழ்க்கையைக்’ குறிப்பதாகக் கொள்கிறேன். மேலும் ‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து’ என்ற திருக்குறளின் வாயிலாக துறவியரின் தவத்தினும் மேலானதாக, அறவழியில் செல்லும் இல்லறத்தானுடைய செயல்  நோன்மை மிக்கதாக கருதப்படுகிறது.

நான்கே நான்கு பகுதிகளை உடைய இப்பூரட்டாதி  பகுதி துறத்தலினுாடக, காமத்தைக் கடந்து, மெய்ம்மையை அடைவதற்கான வழிகளை நமக்குக் காட்டுகிறது. நன்றி, வணக்கம்.


Monday, 27 April 2026

புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.

 

புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.



இனிய ஜெயம்

கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான இந்த வருட வெண்முரசு வாசகர் வட்ட விருது விழா இனிதே நிகழ்ந்து நிறைந்தது

இந்த வருடம் செய்ய வேண்டுவன குறித்த கலந்தாலோசனை கூடுகையின் போது நானும் நண்பர் அரி கிருஷ்ணனும் ஒரே நேரத்தில் இப்படி ஒன்றை செய்யலாம் என்று பேச துவங்கினோம்ஆகவே அதையே முகூர்தமாகக் கொண்டு அடுத்த வருடம் என்று தள்ளிப்போடாமல் உடனடியாக அந்த பணியை துவங்கினோம்.

ஒரு வார இடைவெளி மட்டுமே இருந்ததால் இம்முறைமட்டும் நாங்களே கூடி இந்த எளிய விழா சார்ந்த அனைத்தும் செய்தோம்.  எங்கும் உள்ள வெண்முரசு வாசகர்கள் கூடி புதுச்சேரியில் இதை செய்கிறோம் இதுவே செயல்திட்டம்அடுத்த வருடம் பணிகள் முன்கூட்டியே துவங்கும்எல்லா வெண்முரசு வாசகர்களும் பொருள் உதவி முதல் பிற உதவிகள் வரை அனைத்திலும் இணைந்து செயல்படலாம்.

Screenshot

இம்முறை விழா விஷ்ணுபுரம் கூடுகைகளின் வழக்கம் போல சரியான நேரத்தில் துவங்கியதுவாசகக  நண்பர்களின் பிள்ளைகள் தாளம் இசைக்க குரல் சேர்க்க மங்கல இசையுடன் விழா துவங்கியது.

அரங்கத்தில் ஜெயகாந்தன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிறிய அளவிலான உருவப்படம் திறக்கப்பட்டுநிகழ்வு அரங்குக்கு ஜெயகாந்தன் அரங்கம் என்று பெயர் சூட்டப்பெற்றது

வாசகி சித்ரா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவாசகர் சரவணன் நோக்க உரை வழங்கவாசகி பாரதி செந்தூர் அவரது ஐபோனில் ஒளி ஒலி அமைத்து நிகழ்வுகளை படம்பிடிக்க நிகழ்வு துவங்கியது.

சென்னை மயிலாடுதுறை என வெவ்வேறு பகுதியில் இருந்து 35 நண்பர்கள் வாசகர்கள் வரை வந்திருந்தார்கள்வெளியே திடீர் அரசியல் கூட்டம் ஒன்றின் பேரணி மறியல்எங்கும்சாலை பணிகள்விழாவுக்கு வந்த சில நண்பர்கள் இறுதி வரை வெளியே அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றிருந்ததாக அறிந்தேன்.

Screenshot

முனைவர் மு இளங்கோவன் அவர்கள் விருதினை கையளிக்ககவிஞர் வி.சங்கர் விருதினை பெற்றுக்கொண்டு சிறப்பு செய்தார்.

சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் குறித்து அதன் அவந் கார்ட் தன்மை எவ்விதம் மூளையால் வலிந்து செய்யப்படாத இயல்பான படைப்பூக்கம் கொண்டதாக இருக்கிறதுஅது இந்த தொகுப்பின் மொழியில்உணர்வு நிலையில்வெளிப்பாட்டு நிலையில்சாராம்ச நிலையில் என்னவாக இருக்கிறதுஇந்த தொகுப்பின் காண்டம்ப்ரரி தன்மை எத்தகையதுநவீன கவிதை மரபில் இந்த தொகுப்பு சேர்க்கும் தனித்தன்மை என்ன என்பதன் மீது நான் 45 நிமிட மதிப்புரை நிகழ்தினேன்.

Screenshot

வி.சங்கர் அவர்கள் ஏற்புரையில் இந்த தொகுப்புக்கு பின்புலமாக இருந்த விஷயங்களைநன்றி கூறப்பட வேண்டிய கவிஞர்கள் வரிசையை நினைவு கூர்ந்தார்.

கவிதைகள் எவ்விதம் பூமியில் இருந்து வான் நோக்கி விரியும் மலராக இருக்கிறதுஅவை எவ்விதம் வானின் அம்சத்தை பூமிக்கு கொண்டு வருகிறதுகவிஞனாக தான் ஒரே சமயம் வைரங்களை துளைக்கும் வலிமையும் கூர்மையும் கொண்ட நூலாகஅதே சமயம் காம்புகளுக்கு வலிக்காமல் மலர்களை தொடுக்கும் நூலாக உணர்வதை குறித்து பகிர்ந்து கொண்டார்.

Screenshot

விருது தொகையினை மது மஞ்சரி செய்யும் சமூக பணிகளுக்கு கொடையாக அளிப்பதாக ஏற்புரையில் கவிஞர் குறிப்பிட்ட கணம் எனக்கு உள எழுச்சி அளிக்கும் தருணமாக அமைந்ததுஎல்லாவற்றையும் சரிதான் எனும்படிக்கு ஜெயகாந்தன் பார்த்துக்கொண்டிருக்க அவர் முன்னிலையில் இந்த எளிய விழா குறித்த நேரத்தில் சிறப்பாக நிகழ்ந்து நிறைவுற்றது.

கடலூர் சீனு

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.

வி.சங்கர் பற்றி மதார்.

வி.சங்கர் பேட்டி.

வி.சங்கர்

Saturday, 25 April 2026

கூடுகை 93 இரண்டு அமர்வுகளாக நிகழ்ந்த “விருது மற்றம் மாதாந்திர கூடுகை” குறித்து இராச . மணிமேகலை

 





புதுவை வெண்முரசு வாசகர் வட்டம்  (24.04.26) அன்று நிகழ்த்திய கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும், மாதாந்திர கூடுகை நிகழ்வும் இரு அமர்வுகளாக நண்பர் அரிகிருஷ்ணன் இல்லத்தில் ‘ஜெயகாந்தன் அரங்கில்’ நடைபெற்றது. இதற்கு ‘மண்குழித்து கண்வளர்த்து மஞ்சஞ் சேர்த்த’ பெருமைக்குரியோர் அரிகிருஷ்ணனும், கடலுார் சீனு அவர்களும். .புதுவை வெண்முரசுக் கூடுகை வாசகர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு இது. இரா.விஜயன் வரவேற்புரை நல்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான சித்ரா விருந்தினர்களை மேடைக்கு அழைத்ததும் சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது.   முதல் அமர்வில் இசைப்பள்ளி மாணவர்கள் சூர்யா ஸ்ரீ (வாய்ப்பாட்டு), வாசகர் முத்துக்குமரனின் புதல்வர் மு.விவேகானந்தன் (மிருதங்கம்) பண்ணிசையுடன் நிகழ்வு தொடங்கியது


சரவணன் அவர்கள் தன் நோக்கவுரையில் புதுவை வெண்முரசுக் கூடுகையின் பத்தாண்டு


கால வளர்ச்சியையும் 2024ல் திரு.அரிசங்கர் 2025ல் திரு.வளவ.துரையன் ஆகியோர்க்கு கூடுகை சிறப்பு செய்ததையும் நினைவுகூர்ந்தார். விருதாளர் வி. சங்கரையும், அவரது  ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்’ நுாலையும்  வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர், இனி வருங்காலங்களில் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் மூத்த ஆளுமைகளையும், வளர்ந்து வரும் இளம் ஆளுமைகளையும் சிறப்பு செய்யும் பொருட்டு பாராட்டுப் பத்திரம் மற்றும் இருபத்தைந்தாயிரம் ரொக்க விருது என்று அறிவித்து கூடுகை இன்னும் கொஞ்சம் முன்னேறியுள்ளது’ என்றார். நிதிநல்கிய அமுர்தவல்லி, விஜயன், உள்ளிட்ட  புதுவைக் கூடுகையின்  வாசகர்கள் அனைவருக்கும் கூடுகையின் சார்பாக அன்பையும், நன்றியையும் கூறினார் .மேலும்  ‘படைப்பாளன் வாசகனுக்குத் தரும் படைப்பிற்கும், வாசிப்பின்பத்திற்கும் தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தி  சிறப்பு செய்வதே இந்நிகழ்வின் நோக்கம். மேலும் இது படைப்பாளனும் வாசகனும் ஒன்றிணையும் தருணம்!’ என்றார். இக்கவிதைத் தொகுப்பில், தனக்குப் பிடித்த ‘’அம்ம! பைதல் பசுஞ்சுடர்” என்ற கவிதையை ‘மண் குழித்து கண் வளர்த்து மஞ்சஞ் சேர்த்த கதலிக் கன்று பைதல் பசுஞ்சுடர் ஏற்றி வானோக்கியது’ என்று கொண்டுகூட்டி பொருளுரைத்தார். ‘என் முதுகில் முடியடர்ந்த வால் வேண்டும் ஒருமுறையேனும் நானதை ஆட்டிப்பார்க்க வேண்டும்’ ‘நாயே அதைத் தாயேன்’ என்று செல்லங் கொஞ்சினார். மாணிக்கவாசகர்க்கு அடுத்து நாயை பல பாடல்களில் வைத்தவர் இவராகத்தான் இருப்பார் என்று கூறி அவையை நகைப்பிலாழ்த்தினார். ‘சூது பவளமேனி சுடர்ந்தெரியக் கண்டேன்’ என்ற கவிதையின் பொருளாக, அசோகவனத்துச் சீதை, சொல்லின்செல்வன், சீதையின் மனஊஞ்சலை ஆட்டும் இராகவனாகப் புரிந்துகொண்டேன்’ என்றார்

அடுத்து நுால் மதிப்புரையாற்ற வந்தார் எங்கள் கூடுகையின் உரைகாரர்’ கடலுாா் சீனுதமிழின் கலைஇலக்கியம்பண்பாடு எனும் நெடிய மரபில் இக்கவிதைத் தொகுப்பின் பங்களிப்பு என்ன என்பதை பிரஞ்சுப் புரட்சியின் போர் மரபில் வந்த (AVANT GARDE)   என்ற சொல்லாட்சியின் மூலமாக விளக்கினார். வழமையான மரபுகளைக் கட்டுடைத்து புதிய சோதனை முயற்சியில் கருத்துகளை கலைப்படைப்பில் முன்வைப்பவர் என்றும், தமிழில் மரபைக் கட்டுடைத்து ‘சோதிமிக்க நவகவிதை’யைத் தந்த பாரதியை இதன் முன்னோடி எனவும் குறிப்பிட்டார். எது கவிதை என்ற கேள்வி காலந்தோறும் கேட்கப்டுவதையும் காலந்தோறும் விளக்கங்கள் மாறுவதையும் சுட்டினார். கவிதை மொழிக்கு ஆற்றும் பங்களிப்பு, அதற்கும் நிகழ்வாழ்க்கைக்குமான தொடர்பு, அர்த்த சாத்தியங்கள், கற்பனை சாத்தியங்கள், அவை கொடுக்கும் அழகியல், விழுமியங்கள் என்பதை விளக்கி, இரண்டு நிமிட வாழ்க்கை (shorts) வாழ்கிற மனிதரிடையே நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வதைவிட உன்னிடம் என்ன இல்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இக்கவிதைத் தொகுப்பு. இரண்டு நிமிடகாலத்தில் உன்னிடம் இல்லாத ஒன்றை உனக்கு நினைவுபடுத்துவதே இக்கவிதைத் தொகுப்பின் நோக்கமாக அமைந்துள்ளது’.




புழங்கு மொழியாக, நாட்டார் மொழியாக, உரைநடைமொழியாக இருக்கும் மொழி, செறிவான கவிதைமொழியாக, இருக்கும் மொழி, குழந்தை மொழியாக ஆவதையும், அம்மொழி அக்கணத்தில் நிகழ்வதை உணர்வுத் தருணமாக ஆக்குவதையும் சுட்டிக்காட்டினார்

 

‘சிமிழ்கணம்

ஒளி பூத்த விதையெல்லாம்

ஓடித் தடுத்து விளைப்பன

வானில் கனிந்து தொங்கும் நான்’

 

‘மண்ணில்

நான் நின்றவிடத்திலிருந்து

வானோக்கி

வன்னஞ் சிலம்பின சிறுநதிக்கூட்டம்’

நாம் பார்க்கும் ஓவியத்திலோ, சிற்பத்திலோ உணரும் காட்சி  இக்கவிதைகளில் உள்ள கவிதைமொழியால் எவ்வாறு அகம் உணரும் தன்மையாகிறது என்றும், தென்பெண்ணையாற்றில் கால் வைத்தால் அந்த நதிநீர் சிதம்பரம் பக்கத்திலோ, கர்நாடகா பக்கத்திலோ கடலில் கலப்பதுபோல வாழ்க்கை என்பது அறுபடாத காலம் போன்றது. அதில் இருக்கிற ஒரு துளியை இக்கவிதை  தொட்டு எடுத்தால் கூட ஒட்டுமொத்த மானுட வாழ்க்கை உய்யும்’ என்றும்,  

‘கவிதையின் அருவமான ஒன்று மொழிவழியாக உணர்வில் கலப்பதை ‘சக்கையாக இனித்துக் கிடந்தது ஓர் உடல்‘ என்ற கவிதை எவ்வாறு தனித்துவமாகச் சொல்கிறது, ‘மேலிருந்து ஆன்டனாவைத் திருப்புவது எப்படி’ என்ற கவிதை, வெளிப்பாட்டுத் தன்மையுடன் fine tune செய்யப்பட்டு அது வாழ்வின் மேன்மைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இறுதியாக, கவிதைக்கலையின் உண்மையான சவால் நாம் அனுபவிக்காத எத்தனையோ விஷயங்களை நம் அகம் உணரச் செய்வது. நாம் நம்மை முழுமையாக இழந்து கவிதைக்குள் குதித்தால் மட்டுமே அதனோடு மனம் ஒன்றி பயணிக்கமுடியும்’ என்று உரையை முடித்தார்.

அடுத்து புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கவிஞருக்கு விருதளித்துப் பாராட்டிப் பேசினார். ‘இன்று நெருங்கிய உறவினரின் திருமணத்திற்குச் செல்ல இருந்தேன். ஜெயமோகனா? திருமணமா? என்றபோது இங்கு வந்துவிட்டேன். இலக்கிய உலகிற்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். பலரும் கள்ளமௌனம் சாதித்து கடந்து சென்றபோது என் உழைப்பை, பங்களிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜெயமோகன் அவர்கள். அவரை வணங்கி மகிழ்கிறேன். ‘சூது பவளம்’ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்தவரால்தான் இப்படிப்பட்ட கவிதைகளைத் தரமுடியும். நேரச் சிக்கனம் கருதி எனக்குப்பிடித்த ஒரு கவிதையைச் சொல்கிறேன். 

‘இத்தனை ஆயிரம் நாவுகளால்

நக்கி விடுகிறது மரம்.

துவட்டிக் கொள்ள

மற்றுமொரு மரத்திடம்

ஓடிச் செல்கிறது காற்று’ 

மரபிலும், நவீனத்திலும் ஆழங்காற்பட்டவராலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுத முடியும் என நினைக்கிறேன். இவரை எங்கள் கல்லுாரிக்கு அழைத்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறித் தான் தொகுத்த ‘இசைத்தமிழ் கலைஞர்கள்’ எனும் நுாலைப் பரிசளித்தார்.

முதல் அமர்வின் இறுதியாக கவிஞர் வி. சங்கர் தன் ஏற்புரையை (ஜெ.தளத்தில் காண்க) வழங்கினார். தன் உரையில் நிகமானந்தாவின் கனவை நனவாக்கப் பாடுபடும், ஊர்க்கிணறு புணரமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மதுமஞ்சரிக்கு இவ்விருதுத் தொகையை அளிப்பதாக அறிவித்தார். எங்கள் அனைவருக்கும் உளம் நெகிழ்ந்த, உடல் மெய்ப்புக் கொண்ட தருணம் அது! தேநீர் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது.

 



இரண்டாம் அமர்வில் பன்னிரு படைக்களத்தின் பேசுபகுதி ‘ஆவணி’ முதன்மைப் பேச்சாளர் சிலம்பரசன். அவரை அடுத்து மற்ற நால்வரும் பேசியதும் கவிஞர் தானும் ஒரு வெண்முரசு வாசகனாக பேச விழைந்தார். தன் பேச்சில், ‘வெண்முரசு இந்திய மலைத்தொடருக்கு நிகரானது. வேதாந்த மையம் கொண்டது. என் நண்பர்கள் ‘நீ ஒரு கவிஞன். கவிமனம் கொண்ட ஒருவன் ஏன் எப்பவும் ஜெயமோகன் மாதிரியான காவியகர்த்தனிடம் போக வேண்டும்?’ என்றார்கள். நான் பொன் கீரி கதையைக் கூறி ‘தயைக்காக’ என்றேன். வேதாந்தம் என்று சொல்லக்கூடிய மணிமுடி ஒரு தயை. அதை தரிசிக்க வேண்டுமென்றால் ஒருவன் அந்த காவியகர்த்தன் முன் அமரவேண்டியிருக்கும். நான் வெண்முரசு வழியாகக் கண்டு கொண்டது அதைத்தான். அந்த தயை நம்மைக் காக்கட்டும்!’ என்று உரையை முடித்தார். என்னுடனான தனிப்பேச்சில் “ஆதிகாலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடி நெருப்புமூட்டி தோளோடு தோள் சேர்த்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இன்று வெண்முரசு என்ற காவியத்தின் பொருட்டு அனைவரும் கூடி தோளோடு தோள் நின்று கொண்டாட்டமாக இதை நிகழ்த்தும்போது அது நினைவுக்கு வருகிறது. மையம்தான் மாறியிருக்கிறது, மனநிலை ஒன்றுதானே! இங்கு ஒவ்வொருவரும் ‘நான் துரியோதனன் ஆள், நான் கர்ணன் ஆள்’ என்று பேசுவதைக் கேட்கும்போது கூடுகையில் மட்டுமன்றி வீட்டிலும் அவர்களுடன்தான் வாழ்க்கை போலிருக்கிறது” என்றார்.  இறுதியாக முத்துக்குமரன் நன்றி நவின்றார் 5.30க்கு துவங்கிய விழா 10 மணிக்கு நிறைவுற்றது.

இரவு வீட்டுக்கு வந்தும் மனம் அலையடித்துக் கொண்டிருந்தது. படுத்தால் துாக்கம் வரவில்லை. கவிஞரின் கவிதைத் தொகுப்பைப் புரட்டினேன். 

‘குறுந்தொகையோ! கண்டேன் அல்லேன்!

மாணிக்கவாசகமோ! கண்டேன் அல்லேன்!

பிள்ளைத்தமிழோ! கண்டேன் அல்லேன்!

ஆண்டாள் பாசுரமோ! கண்டேன் அல்லேன்!

பாரதியோ! கண்டேன் அல்லேன்!

நீலமோ! கண்டேன் அல்லேன்!’ 

அதுவா இதுவா?

இதுவா அதுவா?

எதுதான் இது?!

என்று என் மதி மயங்கியது. நேரம் இரவு 1 மணி!

வாசிப்பு ஒரு வேள்வி. அரிகிருஷ்ணன் அவர்கள் அவ்வேள்வியின்  மையவிசையாக நின்று அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டமிட்டு பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தார். செயல்வீரர்களாகிய நாங்கள் தான் அவரது பலம். திட்டமிடலும் நேர மேலாண்மையும் அவரது சிறப்புப் பண்புகள். அனைவரது கூட்டுமுயற்சியாலும் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்தது. 

இளைய யாதவர் திரௌபதியிடம் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி! செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது” என்றார் – வெண்முரசு

 

  இராச. மணிமேகலை

 


Friday, 24 April 2026

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.

 

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.


மேடையிலும் அரங்கிலும் அமர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்இயல்பிலேயே கூட்டத்தின் மத்தியில் பேசுவது எனக்கு  கூச்சமளிக்கக் கூடியதுஆனால் பழகியவர்களுடன் பேசுவதில் எனக்கு தடையேதும் நேர்வதில்லைஇங்கு என்னை பற்றிய அறிமுக உரையையும் என் கவிதைகளைப் பற்றிய தன் வாசிப்பையும் பகிர்ந்து கொண்ட சரவணன் இந்த விருது கூடுகையை எனக்கு அன்னியமல்லாததாக ஆக்கியிருக்கிறார்

இங்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு  கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிகமானந்தா நினைவுக்கு வந்தார்கங்கை கரையை ஒட்டிய சுரங்க நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி கங்கையை தூய்மையாக்குவதற்காக 115 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன் 34 வயதில் உயிர் துறந்தவர்.  விருது அறிவிக்கப் பட்டதும் அதை தாள வலுவில்லாத என் சிறு தோள்களில் அதன் எடையை உணர்ந்தேன்.  நிகமானந்தாவின் நினைவை பணிந்து ஊர் கிணறு புணரமைப்பில் செயல் பட்டுவரும் மது மஞ்சரிக்கு இந்த விருது தொகையை முழுக்க அளிப்பதன் வழியாக என்னிலிருந்த பதட்டம் கழிந்ததுஅவர் அதை ஏற்றுக் கொண்டு என்னை கௌரவமும் நிறைவும் சேரும்படி செய்திருக்கிறார்


 

வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026

இது என் வழியாக நிகழ்ந்த கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட விருது என்பதை உணர்கிறேன்ஆனால் இக்கவிதைகளை எழுதியவனின் உடன் மிக நீண்ட நேரத்தை செலவிட வாய்த்தவன் என்ற தகுதியால் இந்த விருதை ஏற்கும் தகுதி எனக்கு உண்டு என நினைக்கிறேன்வெண்முரசு வாசகர்களால் அளிக்கப்படும் இந்த விருதை நான் உண்மையான நிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன்ஏனெனில் வெண்முரசு வெளியான போது அதை நாளும் ஒரு அத்தியாயம் என வாசித்த நானும் வெண்முரசு வாசகனே

சூது பவளம் கண்டேன் அல்லேன்

சூது பவளம் கண்டேன் அல்லேன் உருவானதில் நான் இருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்வெறும் A4 தாள்களில் அச்செடுக்க பட்டிருந்த வரிகளை கவிதை என அடையாளம் கண்டவர் லக்ஷ்மி மணிவண்ணன்பதிப்பகங்களில் பதிப்பிக்க முயன்று முடியாமலான போது இந்நூலை தானே பதிப்பித்தவர்எனக்கு முன்பே மதார் ஆனந்த குமார் போன்றோரின் நூலை தொகுக்கவும் அந்நூலை சரியாக அடையாளப் படுத்தவும் செய்தவர்அவருக்கு என் வணக்கம்இனி எனக்கு பிறகு வரப்போகும் கவிஞர்களுக்கும் அவர் இதை செய்வார் என்பது உறுதி

தொடர்ந்து தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு வாசித்து ஒரு எழுத்தாளனாக இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணமான ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கம்

நண்பர்கள் ஞானசேகரன்அருண்மொழிவேல் முருகன்சசி ஆகியோரை நினைத்துக்கொள்கிறேன்நண்பர்களான மனைவி சந்திரிகாவையும் மகள் இசை வல்லபியையும் நினைத்துக் கொள்கிறேன்உடன் இருந்த இவர்களுக்கு என் நன்றி

கவிதையை பற்றிய என் நோக்கை சொல்லி உரையை தொடங்கலாம் என நினைக்கிறேன்என்(wordpress) இணையதளத்தில் கவிதைகளை பதிவேற்றம் செய்ய அவர்கள் அமைத்திருக்கும் குறிசின்னம்(icon) என்பது இறகுமேலும் கவிதை சார்ந்த நிறைய இணையதளங்களின் முகப்பு அடையாளமாக இறகு பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.  நவீன எழுத்து கருவிகள் வந்த பின்னும் எதனால் இன்றும் இறகு கவித்துவத்தின் சின்னமாக ஏற்றுக் கொள்ள படுகிறதுஇறகுகளை எழுதப் பயன்படுத்திய அந்த பழந்தன்மையை நினைவு கொள்ளும் பொருட்டாஅப்படியும் இல்லை.  ஏனென்றால் இறகுக்கு முன்பே சிறிய மூங்கில் தண்டுகளை நுனியில் சீவி எழுது கோலாக பயன்படுத்திய பிறகே நாம் இறகுகளை  எழுதக் பயன்படுத்தும் முறையை கண்டு கொண்டோம்

இங்கு கவிஞர் உமா மகேஸ்வரியின் ஒரு கவிதை வரியை நினைவு கூறுகிறேன். ‘தனித்த பேச்சாக தன் வாசனையைப் பரப்பும் மலர்’. தனித்து ஒரு வாசனையை பரப்பும் இந்த மலர் தன்மையை நாம்  கவிதைகளுக்கும் உதாரணமாக சொல்ல முடியும்.

நண்பர்களே இறகு என்பது ஒரு மலர்.  இறகு ஒரு பறவையின் உடம்பிலிருக்கும் வரை மட்டுமே அது பயன்பாடு சார்ந்ததுபறவையின் எடையை சுமந்து மேலேற வேண்டிய நோக்கம் கொண்டதுவானில் உதிர்ந்த கணம் அது மலரென்றாகிறதுஉதிர்ந்த பிறகே பூக்கும் மலர் அது

இறகைப் போலவே கவிதை வானோக்கி தன்னை திறந்து கொண்ட  மலர்பறவை என்பது ஒரு அழகிய மலர்க்கூட்டம்பறவையைப் போல கவிதையை இந்த மொத்த பூமியும் அந்த ஆகாசம் நோக்கி தங்கள் தோள்களிலிருந்து எழ செய்கிறது.  பரந்த வெளியில் தான் பூத்த பிறகு கவிதை உலகிற்காக கனிந்து மீண்டும் மண்ணுக்கு வருகிறது

இமைக்கணத்தில் ஆகாயத்தின் உயரத்தில் சென்று முயன்ற ஆயிரம் பேர்களில் ஒருவருக்கே மெய்மை எட்டுகிறது என்ற வரி உண்டுகவிதை அப்படி அமைந்த ஒரு இறகு போல நமக்காக மண்ணில் இறங்கி வருகிறது

பூத்தொடுத்தல் என்ற உமா மகேஸ்வரி யின் மற்றொரு கவிதையும் நினைவுக்கு வருகிறது

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்

ஒருவேளை,

என் மனமே நூலாகும்

நுண்மையுற்றாலொழிய.

மனமே நூலாகும் நுண்மை கொண்டதே கவித்துவம்வாழ்நாள் முழுக்க பூக்கொய்து மாலை தொடுக்கும் வாழ்க்கையே எனக்கு இப்பிறவில் அமைந்தது.முடிவிலியாக நீண்டு கிடக்கும் காலத்தின் இரு முனைகளும் சரியாக முடிச்சிட்டு யாக்கும் அழகிய மாலைஆனால் பூத்தொடுத்து பூத்தொடுத்து நிறையாமல் அந்த நூலே மலராகும் நுண்மை நிகழ்வதே அருள் என்றால் அது என் தலைமேல் அமைக

மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி யின் கவிதை வரி

வைரங்கள் துளைத்திடும் 

அருமணிகளினூடே கடந்து செல்கிறேன்

என் அதிர்ஷ்டம் 

நான் வெறும் நூல் தான்

வைரங்கள் தேவையிலாது தன் நுனிக் கூர்மையினால் நுண்மையினால் அருமணிகளை கோக்க வல்லது அந்த நூல்ஒரு கணம் பூத்தொடுக்கவும் மறுகணம் அருமணிகளை துளைத்து கோர்க்கவும் முடிந்த நுண்மையான நூலே கவித்துவ மனம்அதை வணங்குகிறேன்அதை அருளிய வாக்தேவிக்குஎன் இறைக்கு நன்றி

இறுதியாக நான் இந்த மேடையில் இருக்கும் மனநிலையை சரியாக சொல்லும் மலையாள கவிஞர் ராமபுரத்து வாரியரின் கவிதை வரியுடன் முடித்துக் கொள்கிறேன்

வறியவனில் வறியவன் என்பதால்

தாழ்ந்தவனில் தாழ்ந்தவன் என்பதால்

ஞானமும் இல்லாததால்

எனக்கு இறைவன் தானே வந்து துணை நிற்கிறான்

அதனால் நான் இந்த பாடலைப் பாடுகிறேன்

நான் இல்லாமல் இது முழுமையுறாது என்பது உறுதி

கொடையாகவே பெற்றீர்கள் கொடையாகவே அளியுங்கள்’ என்பது பைபிள் வரிஇங்கு எதையேனும் நான் அளித்திருந்தால் அதையும் கொடையாகவே பெற்றேன் என்று கொள்கநன்றி