Saturday, 24 December 2022

புதுவை வெண்முரசு கூடுகை 55 நாள் 23.12.2022

 






புதுவை வெண்முரசு வாசிப்பரங்கத்தின் 55 வது கூடுகை 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. வெண்முகில் நகரம் நாவலின் இறுதிப்பகுதிகளான தொலைமுரசுமற்றும் வண்ணப்பெருவாயில் பகுதிகளை நண்பர் திருமதி செ.அமிர்தவல்லி பேசித் துவங்கினார்.  

அமிர்தவல்லி தனது உரையாடலை கதைமாந்தர்கள் மீதான பார்வையாக முன்வைத்தார். சாத்யகி எங்கெல்லாம் கூருணர்வோடு வெளிப்படுகிறான் என்று, பலந்தரையோடு  உரையாடும் இடம், குந்திக்கு கர்ணன் மீதான உரிமையை கண்டுகொள்ளும் இடம் இவற்றைக்கொண்டு ஒரு சித்திரத்தை வரைந்தளித்தார், 

அடுத்ததாக குந்தி , குந்தி தன் முதல் மூன்று மகன்களின் மீது கொண்டுள்ள எண்ணம், அதிலிருந்து நகுல சகதேவர்களிடம் கொண்டுள்ள அணுக்கம். நகுலன் தன்னிடமிருந்து விலகிச்செல்கிறான் என்னும் தவிப்பு. ஒரு அரசியல் ஆளுமையாக இருப்பவளின் ஒரே பலவீனமாக கர்ணன் இருப்பதை சொன்னார். பல  இடங்களில் பாண்டவர்களுக்கு கர்ணனின் மீதான பார்வை சொல்லப்படுகிற இடங்கள், 

ஒட்டு மொத்த கதை பகுதிகளிலும் பானுமதி பாத்திரத்தின் மீதான தனது பெரு விருப்பை தெரிவித்தார். அவளுடைய பாத்திரப்படைப்பு அவ்வளவு அழகாக இருப்பதாகவும் அவள் ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளும் விதத்தையும் பற்றி சிலாகித்தார். குந்தியை தானே அழைத்து வருவதற்கு அவள் தயாரான விதத்தையும்   பூரிசிரவஸ் பற்றி பேசும்பொழுது அவரை  தேற்றும்படியாகவும் பானுமதி சூழலை நேர்த்தியாக கையாள்வதை கூறினார். 

பூரிஸ்ரவஸ்  முதன்மையாக ஒரு போர் வீரன் அந்த ஒரு விஷயத்தில் அவன் தவிர்க்க முடியாத நபர் ஆகிறான். ஆனால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவனாகவும் தெரிகிறான். அவன் வாரணாவதம்  பற்றி தெரிந்தும் கூட துரியோதனனை சார்ந்து நிற்பது அவனுடைய தன்மையை காட்டுகிறது. கவனம் குவியாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் காற்றில் ஒரு இறகு போல தவழ்ந்து கொண்டே இருக்கும் அவனுடைய பாத்திரப்படைப்பை பேசி விரிவாக்கினார், 

மேலும் இளைய யாதவன் அனைவருக்கும் தேவையான ஒவ்வொன்றையும் செய்து அவர்களை இணைக்கும் தருணங்களை பற்றியும் திரௌபதியினுடைய மிக பிரம்மாண்டமான நகர் நுழைவை பற்றியும் கூறினார்.தொலைமுரசு என்னும் பகுதி போரின் அறிவிப்பாகவும், வண்ணக் கடல் பகுதி அனைத்து உணர்வுகளும் திருமணங்களும், சங்கமிக்கும் இடமாகவும் உள்ளது சொன்னார். முதல்முறை பேசினார் என்றாலும்  சிறப்பாக பேசிமுடித்தார் அமிர்தவல்லி. 

அடுத்ததாக நண்பர் திருமாவளவன், சாத்யகி மற்றும் பூரிசிரவஸ் இருவரும் தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்து பின் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வது வரை நிகழ்ந்தவற்றை தொகுத்து சுவைபட விவரித்தார்.  அடுத்து வரப்போகும் நாவலான இந்திரநீலத்தில் நிகழும் ருக்மணி திருமணத்தை  இந்த இடத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வதாக  நகுலன் கூறுவதை சுட்டிக்காட்டினார்.  யானையின் தந்தத்தில் அமரும் சிறிய பறவையாக கண்ணனும் அதைக்காணா யானையாக திருத்திராஷ்டிரரும் காந்தாரியும் இருப்பதாக தான் உணர்ந்ததாக கூறினார். 

முக்கியமாக காந்தாரியின் கட்டிலில் இருந்து கண்ணன் குழலிசைப்பதை அழகாக விவரித்தார். அந்தப்பகுதி ஜெ- வால் மட்டுமே எழுதக்கூடியது. இங்கு இசைக்கப்படும் காம்போஜி அல்லது தக்கேசி ராகம் ஆரோகணம் மற்றும் அவரோகணம் இவற்றில் ஒரு ஸ்வரம் மற்றும் மாறுபடக்கூடியது எனவே மீள மீள அவன் ஒன்றையே இசைப்பதுபோல தோன்றும் மயக்கம், இந்தப்பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கும்போது பித்தாகிவிடுவோமோ என்ற பயம்வந்து பூரிசிரவஸ் போலவே திடுக்கிட்டு வெளிவந்ததாக சொன்னார். ஐம்புலன்களால் உணரக்கூடிய பிரத்யட்சம், உய்த்துணரக்கூடிய அனுமானம், தொல் கூற்றால் உணரக்கூடிய சுருதி இவை மூன்றையும் தாண்டிய ஒன்றாக தர்க்கமற்ற ஒன்றாக அந்த இசை இருப்பதை சொல்லி முடித்தார்.    

நண்பர் சித்ராவும் இந்த வேங்குழலோசையை பற்றியும், பூரிசிரவஸின் இலக்கற்ற தன்மை குறித்தும் பேசினார். திருமா பேசும்போது சொன்ன பெண்ணின் கருவறை தேடல் பற்றிய கருதுகோளில் தனக்குள்ள வேறுபட்ட கருத்தை சொன்னார். இந்நாவலில் தனக்குள்ள சில ஐயங்களையும் கேட்டார். 

நண்பர் விஷ்ணு தொலைமுரசு பகுதியில் உள்ள உளவியல் குறித்து பேசினார்.  அமைப்பு, மக்கள் திரள்  இவை இரண்டினுக்குமான முரண்பாடு முக்கியமாக ஒரு சாமானியனுக்கு போரின் மீதான விருப்பம், தனது வாழ்வாதாரங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்றாலும் கூட அவனுக்கு எது அந்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது என்பது ஆராய்வதற்குரியது என்றார் . ஒரு குடிமகனுக்கு பெரிய விஷயங்களில் பங்கேற்கும் ஆர்வம் அதற்குக் காரணமாக  இருக்கலாம்.   மாறாக அத்தகையவர்களுக்கு வரலாற்று நுண் பார்வை இல்லாததே அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் என  நாவலில் வரும் அமைச்சர் சொல்வது இவையிரண்டும் பிரதியிலுள்ள எதிரெதிர் பார்வைகள் என்றார் . மேலும் இப்பகுதியில் குந்தி தெளிவாக தனது இடத்தை உணர்ந்துகொள்வதை, சாத்யகியும் குந்தியும் திரௌபதைக்கு அமைந்து பிறரை கட்டுப்படுத்தும் இடங்களை சொன்னார். நகுலனுக்கு குந்தி மீது தோன்றும் விலகலை சுட்டிக்காட்டினார். 

நண்பர் மணிமாறன்,  திருமா பேசியதின் நகரவாசியின் குளிர் குறித்த பார்வை மீதான தனது மாற்றுக்கருத்தை முன்வைத்து துவங்கினார். இளைய யாதவனின் குழலோசை பாலையின் ஓசையாகி ஒரு ஓநாயின் ஓசை என மாறிச்செல்லும் கணங்களை பேசினார். திரௌபதி பானுமதிக்கு அனுப்பிய செய்தி, மூதன்னையாகி கனியும் ஒன்றை மட்டுமல்லாது, துயரில்ஆழ்ந்து செல்லும் ஒருத்தி தன் கையில் பிடித்துக்கொள்ளும் புணையாகவும் மாறிவருவதை குறிப்பிட்டு சொன்னார். 

நண்பர் அரிகிருஷ்ணன் , கண்ணன் குழலிசைக்கும் பகுதியை  M வெங்கட் ராமனின் காதுகள் நாவலோடு  ஒப்பிட்டார். நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டபோது பெரிய வெண்ணிற ஒளியை தான் அனைவரும் கண்டனர், மீயொலியை மக்கள் கேட்கவில்லை. மகாபாரதம் ரிக்வேதம் சொல்லும் ஒன்றை திரும்பச்சொல்கிறது, அது 'அனைத்தையும் இயற்றும் பிரம்மத்தை பார்க்க முடியாது' என்னும் சொற்கள். பூரிஸ்ரவஸின் அனுபவத்தை இரு கட்டமாக பிரித்தால், முதல் கட்டத்தில் இதிலிருந்து எப்படி வெளிவருவது என்னும் கேள்வியும் இரண்டாம் கட்டத்தில் இது அனைத்தும் தன்னுடைய கற்பனையோ என்னும் எண்ணம் வருவதையும் சொன்னார்.  பாய்மரத்தின் மீதுள்ள வடங்கள் விற்களாக தோன்றுவதுபோல, தொலைமுரசு என்பது விண்ணிலிருந்து கிடைக்கும் செய்தியின் ஒலியாக தனக்கு தோன்றுவதாக சொன்னார்.   

ஒரு மூதன்னையின் கனிவுள்ள பாஞ்சாலியின் செய்தியை, மோதிரத்தை கழற்ற வேண்டாம் என பானுமதிக்கு தீர்க்க ஷ்யாமர் சொல்லும் அறிவுரையை, கண்ணன் எண்ணெய்க்கறை செய்த காவலனை அழைத்து பரிசில் அளிப்பதை, பீஷ்மரை எட்டுறுப்பும் நிலம்தொடப் பணிந்து வணங்குவதை, விப்ரர் துரியனும், தருமனும் இணைந்துவருவதை பார்த்து அதிர்வதை இணைத்துப் பேசினார்.  ஆனால் திருதிராஷ்ட்ரர் அந்த இணைவுக்குப் பின்னிருக்கும் நிரந்தரமான பிளவை உணர்ந்து இதற்கும் தனக்கும் பொறுப்பில்லை என நடந்துகொள்ளும் இடத்தையும் அதேபோல இந்நிகழ்வை பேசிக்கொள்ளும் பாத்திரங்களான சாத்யகியும் பூரிசிரவஸும் பின்னாளில் தீராப்பகையோடு போர் செய்வதையும் சொல்லி முடித்தார்.

நான் ஒரு நவீன நாவலில் பூரிசிரவஸ் போன்ற ஒரு பாத்திரம் புனையப்பட்டுள்ள விதம் குறித்தும், வழிபாட்டில் உள்ள திரௌபதைக்கும் வெண்முரசில் உள்ள திரௌபதைக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டியும் பேசினேன். 

கடலூர் சீனு அவர்களின் உரையை முழுக்கப்பதிவு செய்வது அரிது. அவர் பேசியதன் சுருக்கம் மட்டும். 

ஒரு நவீன நாவலாக வெண்முரசு உருவானதன் பின்னணி கீதையை முன்வைத்து துவங்குவது. நாராயண குருகுல மரபில் ஒவ்வொருவரும் கீதைக்கு விளக்கவுரை எழுதியதை, ஜெயமோகன் மாதிரியான ஒருவர்  பெரும்புனைவொன்றின் பின்னணியில் இதை உருவாக்கி அளித்ததை, ஒவ்வொரு யுகசந்தி காலகட்டத்திலும் கீதை  நெறிப்படுத்தும் நூலாக திகழ்ந்ததை விளக்கினார். உண்மையில் ஒரு நாவலாக திரௌபதை தனது சுயம்வரத்துக்கு கிளம்பும் பகுதியில் இருந்து அஸ்தினாபுரிமண்ணில் காலடி வைப்பது வரையிலான ஒரு பயணமாகவும் இதை வாசிக்கலாம் என்று கூறி நிறைவு செய்தார். 

வெண்முகில் நகரம் நாவல் முழுவதும் திரௌபதையின் கனவை ஒட்டி நிகழ்வது. உண்மையில் இந்திரப்பிரஸ்தம் எழவில்லை, ஆனால் அதற்கான அனைத்து திட்டங்களும் பேருருக்கொள்ளும் இடம். இந்நாவல் துவங்கும்போது  முதல்பகுதியை பெண்வாசகர்கள் பேசித் துவங்கினால்  நன்றாக இருக்கும் என நினைத்தோம், அப்போது அது நிகழவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பெண்கள் கலந்துகொள்ள துவங்கினர்.  நண்பர் அமிர்தவல்லி இதன் நிறைவுப்பகுதியை பேச முன்வந்தது ஒரு நன்னிமித்தமாக தோன்றியது. அடுத்த கூடுகையில் இந்திரநீலம் நாவலை துவங்க இருக்கிறோம், மற்றுமோர் வெண்முரசு வாசகிதான் துவங்கவிருக்கிறார் 

நிகழ்வில் சிவாத்மா, கரசூர் பத்மபாரதி, முத்துக்குமரன், சிவராமன்,லாவண்யா இளங்கோவன் கலந்து கொண்டனர்



புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வு

  காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் குறித்து நண்பர்  இராச. மணிமேகலை அவர்கள் புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையின் எழு...