Tuesday, 22 August 2017

புதுவை கூடுகை - 02

புதுவை கூடுகை - 02


புதுவை வெண்முசு இரண்டாவது கூடுகை இன்று (22-03-2017) வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்குத் துவங்கியது . உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர் திரு.தண்டபானி துரைவேல் அவர்கள் வெண்முரசு - முதற் கனல் - பொற்கதவத்திலிருந்த , "அறத்தை அறிவது " 
என்கிற தலைப்பில் விரிவாக பேசினார் அதனை ஒட்டி திரு.கடலூர்சீனு,திரு.நாகராஜ் திரு.சிவாத்மா,  திருமதி.சுதா மேடம் ,திரு.திருமாவளவன் மற்றும் நானும் எங்கள் கோணம் என்று பதிவு செய்தோம் . கூடுகை 8:45 மணிக்கு நிறைவுற்றது.




புதுவை கூடுகை பதிவு.
வெண்முரசு . முதற் கனல் . பொற்கதவம்

தர்மம் , தன்னறம் ,அறம் மூன்றும் ஒன்றையே சொல்லவந்தவை , ஆனால் நுட்பாமான மாறுபாடுடையது. தர்மம்- ஒன்றின் இயல்பினாலானது , தன்னறம் - இயல்பை அகவயமாக நோக்குவது , அறம் - நோக்கியதை பிறிதொன்றில் பொருத்தி ஒழுகுவது .வேள்விமுகம் தொடக்கமாக அமைந்ததற்கு காரணம் , அது ஒரு சுழி ,முழு வெண்முரசின் முடிவின் தொடக்கமும் - தொடக்கத்தின் முடிவுமானது. ஆகவே தொடர்ந்து நிகழ்ந்த படியேயிருப்பது.

வேள்விக்குளத்தில் ஆஸ்தீகர் சொன்னதே அறத்தைப்பற்றிய கலியுக விவரிப்பு. ஜீவாத்மாக்களான பிரம்மா முதல் எறும்பு ஈறாக அனைத்திற்கும் முக்குண மயக்கத்தால் கோபதாபங்கள் இருக்கின்றது எனப் புரிகிறது , அதை ஒட்டி கஷ்டமும் நஷ்டமும் வரத்தான் வரும் என்பதும் விளங்கிறது .சத்வ, ரஜோ, தமோ குணங்களுடைய சமன்குலைவே இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதற்கான விழைவின் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால் அனைத்தும் சிதறி மறையும். இச்சை தீமையல்ல! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்.அறம் , அறிந்தோரால் சாமான்யம் , விசேஷம் எனப் பகுக்கப்பட்டே அதற்கு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது .

பீஷ்மரின் மனக்கலகத்தையும் அறத்தைப் பற்றிய அவரின் சிரமம் சொல்லவந்தது பொற்கதவம் . பாரதம் என்கிற உதிரிப்பூக்களை தொடுக்கும் நார் போல அவர் செயல்பட்டால் மட்டுமே அது நகரும் . ஒரு சூழலில் அவர் திகைக்கிறார், பெரும் அறச்சிக்கலில் உழல்கிறார் . தன்னறம் தன்னை நெறிப்படுத்துவது என கைக்கொள்ளும் நிலையில் . அதன் மீது தாக்குதல் தொடங்குகிறது . சாதனை என்றால் பரிட்சை உண்டு , அதிலிருந்து வென்று வெளிவருகிறார் . ஆனால் அவை எல்லாகாலத்திற்குமானதன்று . அதனால் பெறும் விசை அடுத்த நிலை வரையில் நீடிக்கிறது . ஏனெனில் தீர்வு ஒற்றைபடையானதல்ல , பெரும் முரண்களின் தொகையை அது முன்வைக்கிறது . தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே .தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும் என்றும் , காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் என்று சித்ரகர்ணியும் , இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று கந்தினியும் .இவை அனைத்திற்கும் சிகரமென வியாசர் பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்கிறார்  பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார்.
இங்கு பீஷ்மர் தெளிகிறார் என்று சொல்லமுடியுமா இதை ? இல்லை , ஏனெனில் பெற்ற சில மணித்துளிகளில் காலாவதியாகி விரல்சந்தின் இடையே நோக்கி நிற்கும் போதே  சொட்டி வழிந்த மறையும் நீரென்றே    தீர்வை காலம் எப்போதும் வழங்கிவந்துள்ளது . அவை எவரையும் கலமென நிரைத்து வைப்பதில்லை , தான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. என்ற வியாசரின் புரிதலை பேசுகிறது அது ,அறிதலை பற்றி அல்ல .
பொற்கதவம் . உலோக பொற்கதவை சொல்ல வரவில்லை அறக்குழப்பத்திலிருந்து அவர் வெளிபட திறந்த அவரது மனக்கதவே பொற்கதவம் . தன்னை முழுதாக கட்டமைத்துக்கொள்கிறார் . ஒவ்வொரு காலத்திலும் அவை இடபாடுகளாகி மீண்டும் மீண்டும் கட்டியெழுப்படுகிறது. புது சித்தாந்தங்களை அவை கண்டடையப்பட்டு கட்டமைக்கின்றன . பீஷ்மரின் தன்னறம் மிக்க எழுந்து கழிவிரக்கமென நான்கு முகமாக கட்டியெழுப்பப்படுகிறது

1 .சூதர் தீர்க்கசியாமர் மூலமாக
2 .வியாசர் மூலமாக
3 .சித்ரகரணி மூலமாக
4 .கந்தினி என்ற வெண்பசு


//சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. // புராணம் பாரதவர்ஷத்தில் இரண்டு சத்திரிய வம்சத்தைச் சொல்லுகிறது சந்திர சூரியவம்சம் இந்தியாவை ஆண்ட அனைத்து ராஜாக்களையும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் வைத்தது . சூரியரியனும் அதன்  ஒளியை நகல் செய்யும் சந்திரனும்  உலகம் இரவு பகல்களால் ஆக்கி மனிதர்களின் அரசனென்றாகி நெறி வளர்ந்தனர் . சந்திரவம்சம் ஆட்சியேற உதித்த கண்ணன் சொன்ன கீதையின் நாயகன் சூரிய குல ரகுராமன் . ஆக இது ஒளியை பரதிபலிப்பது . எளிய மாநுடர்களுக்கானது பாரதம் இன்று வெண்முரசாகியது.

//யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது// நீர் உயர நிலம் உயர வயல் உயர நெல் உயர கோல் உயர கொடி உயரும் . இந்திரன் தன் மகள் தேவயாணிக்கு அளித்த கொடை

//“அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு 
தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர்// வாழ்வு காலத்தினால் ஆனது , இது முடிவைக்குறித்து எழுகிறது . பின் ஏற்றமென்றும் இறக்கம் என்றும் அது மாயையினால் மயக்கினாலும் . முடிவு இங்கிருந்து துவங்குகிறது காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன .

//“தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” //

பாரதத்தின்  போக்கை மாற்றி அமைப்பது சந்துனுவின் சத்தியவதியின் மேல் உள்ள இச்சையையும் , அது அவனுடைய வீரியத்தை வதைத்து , விதைகளை பலமிழக்கச்செய்கிறது . ஒரு விதையின் உள்ளே உள்ள காட்டை பிளந்து வெளிவரத் துணைக்கும் நீரும் மண்ணும் அறம்பிழைத்து அதை வதைக்கின்றன . வதைப்பதே உருவாக்கும் விசை போலும் . பீஷ்மரை அறம் எனும் நீரும் மண் எனும் அஸ்தினாபுரமும் வதைக்கிறன.

// “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” //

// அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர் //

ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை.
//பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.//அர்த்த சாஸ்திர வரிகள் போல கருணையற்ற உண்மைகளை கொண்டது , உண்மைகளை விழைவை என்கிற பொய்கலவாத தர்கத்தில் வைப்தனாலேயே அது தீர்வை நோக்கி நகர்கிறது .

//இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள்//

அரசர்களின் உலகம் ஆசைக்கானது என்றாலும் நெறியின் வழியில் விலக்குத்தேடியே வாழ்நாள் முழுவதும் சிந்திருக்கிறார்கள் என்கிறது இந்ப்பதிவு.

//அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.//

ஆகவேதான் பெருதெய்வங்கள் கண்கள் நம்மை சிறு தெய்வ்களைப் போல்நேர் கொண்டவெறித்த பார்வையின்றி , தழைந்த நோக்கும் கருணையுமாக கனிகின்றன.

//பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றார். யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.//

பொற்கவம் ஆஸ்தானாபுரத்தின் மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே உள்ள அணிவாயிலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ பீஷமனின் மனக்கதவை குறிக்கும் சொல்.

அது திறப்பதையும் நாட்புறத்திருந்தும் அறம் அவருள்ளே நுழைகின்றது.

// சத்யவதி “தேவவிரதா, நீ கொள்ளவேண்டிய முதல்நெறி ஷத்ரிய நெறிதான். தன்னை நம்பியிருக்கும் நாட்டையும் குடிமக்களையும் காப்பதுதான் அது” என்றாள். “தன் குடிமக்களுக்காக மும்மூர்த்திகளையும் எதிர்க்கத்துணிபவனே உண்மையான ஷத்ரியன் என்று நீ கற்றதில்லையா என்ன? கடமையைத் தவிர்ப்பதற்காகவா நீ நெறிநூல்களைக் கற்றாய்? களம் நெருங்கும்போது பின்திரும்பவா ஆயுதவித்தையை பயின்றாய்?” என்றாள்.//

பீஷ்மர் தன்னறம் என நினைப்பதை சூதரிடம் விவரிக்கிறார்
//சூதரே, அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார். //

வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது. கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்த நாரதர் பராசர ரை தடுத்தாட் கொள்கிறார் . அவர் வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.

யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.

 பராசர ரிஷியின் இரண்டு வித சலனங்களின் வழியாக மாற்றமடைகிறது . அதன் விளைவாக பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என அறிகிறார் மகாவியாசர் அவதரிக்கிறார்பீஷ்மனுக்கு மேற்படி உதாரணங்களுடன் அறப்பிழை அன்று என்கிறார் சூதர் தீர்க்கசியாமர் அதை பராசர ரிஷியின் கதையின்  வழியே வியாசனை காட்டிக்கொடுக்கிறார் .

வியாசரை சந்திக்கும் பீஷ்மர் தன்னை மனோரீதியில் சிந்திக்கும் திராணியில்லதா வெறும் ஆயுதமென்று நினைக்கிறார் 


//“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..”  என்கிறார் பீஷ்மர் . //

அதன் படி துல்லியமான கணக்குகள் வெல்ல அறிவற்ற ஆயுதமாக இருப்பது அறம் என உணர்கிறார் அதற்கு வியாசர். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”நான் தங்களிடம் கேட்கவிழையும் வினா ஒன்றே. ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எதுவாக இருக்கும்? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப்பிழைகளும் மன்னிக்கப்படும்?” என்றார்.
வியாசர் சிபிச்சகரவர்த்தியின் கதையில சித்ரகன் மூலம் தன்னறத்திற்கு வேறு வழி காட்டுகின்றார்

சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது சொல்கிறான்  “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது. ஆக தன்னறம் என்பது ஆனவத்தின் அடையாளமாகி விடுகிறது .
பீஷ்மர் நெடுமூச்சுயிர்த்து “ஆம், ஷத்ரிய தர்மப்படி சொந்த நாட்டின் நன்மைக்காக ஷத்ரியன் ஷத்ரியப்பெண்ணை தூக்கிவருவதில் தவறே இல்லை….பிற குலத்துப்பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் தூக்கிவந்தால்தான் பெரிய பாவம்…” என்று அறம் பற்றி அறிந்து தெளிகிறார்.

ஆனால் கதையின் போக்கு மற்றொரு கோனத்திலும் பிஷமனை குற்றவாளி என்று சொல்லி பெரும்வெளியின் ஆடல் முன் புடவியில் அறங்கள் நுட்பமானவை, அறிதற்கரியவை என்கிறது

நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது.


அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.

இப்போது நமக்கு தெரியாமலேயே நாம் பிழைக்கும் அறம் நம்மை சேர்ந்தது அல்ல என முடிக்கிறார் திரு. ஜெயமோகன்
- கிருபாநிதி அரிகிருஷ்ணன்



திரு . துரைவேல் அவர்களின் பதிவு 
புதுவை கூடுகையில் நான் பேசியதன் எழுத்துவடிவம்.   இதுதான் நான் பொது அரங்கில் பேசும் முதல் உரை.  இந்த உரையை,   என் தமிழ் உச்சரிப்பையெல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையுடன் செவிமடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுகிறது. 

 வெண்முரசு - முதற்கனல் -  பொற்கதவம்.

  அறத்தை அறிவது
      ஒரு  பெரிய அரண்மனையை அல்லது மாளிகையை பார்ப்பது என்றால்   அதனுள் சென்று ஒவ்வொரு இடமாக கவனித்து அதன் நிறைகுறைகளை தெரிந்து  அங்கு வசிப்பவர்களிடம் மேலும் கேட்டறிந்து கொள்வதாகும்.    அப்போதுகூட அந்த மாளிகையை நாம் முழுதறிந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.  ஆனால்  ஒரு மாளிகையின் முகப்புத் தோற்றத்தை வைத்து,  அந்த மாளிகையைப்பற்றி, அதன் செழிப்பு, பழமை, அதன் பொருள் மதிப்பு போன்றவற்றை பற்றி  ஓரளவுக்கு  ஒரு  கருத்தை நாம் கொள்ள முடியும்.  அப்படியே வெண்முரசு நாவலை ஒரு பெரும் மாளிகை எனக் கொண்டால் அதன் முகப்புத்தோற்றம்தான் வேள்விமுகம். அதில் கதையைப்பற்றி, கதை மாந்தர்களைப்பற்றி, கதை நடக்கும் களம், காலம் முதலியவற்றைப் பற்றி  நமக்கு வெகு சிறப்பான முறையில் அறிமுகம் ஒன்றை அளிக்கிறது. அத்துடன் இக்கதை கூறலின் நோக்கத்தை அங்கேயே தெளிவுபடுத்திவிடுகிறது.  மனிதன் பல்வேறு குணங்களாய் பிரிந்து பல்வேறு விழைவுகளைக்கொண்டு அதற்காக பல்வேறு செயல்களை செய்து தன் வாழ்வையும் மற்றவர் வாழ்வையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். அவன்ஒருவருக்கொருவர் இடையூறு இல்லமல்  தன்  விழைவுகளை பூர்த்திச்செய்துகொள்வதற்கான விதிமுறைகளை சமூக அறம் என்று கூறுகிறோம்.  அந்த விதிமுறைகக்கு அடங்கி நடத்தல், மீறுதல், தளர்த்தல், மாற்றுதல், மாற்றுதலை எதிர்த்தல், புதிய விதிகளை கொண்டு வருதல்,   எது சரியான விதி என்ற குழம்புதல் என்பதாக  மனிதர்கள் எவ்வாறெல்லாம்  சிக்குண்டு கிடக்கிறார்கள் என்பதை ஆய்வதாக இந்தக் கதை அமையப்போகிறது   என்பதற்கான  கட்டுமாமன வரைபடம்  வேள்விமுகத்திலேயே வரையப்பட்டுவிடுகிறது.
       ஆனாலும் கதையின் தொடக்கம்  நிகழ்வது பொற்கதவத்தில்தான் என்று கருதுகிறேன். ஒருவர் பொற்கதவத்தில் இருந்து படிக்கத் தொடங்கி  வெண்முரசு  முழுதுமாக படித்துவிட்டு பின்னர் இறுதியாக வேள்விமுகத்தைப்படித்தாலும்  கதை என்ற அளவில் எவ்வித வேறுபாடும் இருக்காது.  இதைப்போன்றே விஷ்ணுபுரத்திலும் வருவதைப் பார்த்திருக்கிறேன். அதன் முதல் அத்தியாயத்தை இறுதியில் படித்தாலும் சரியானதாக அமையும் வண்ணம் அந்நூல் அமைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில்  பொற்கதவத்தை தவிர்த்து நாம் வெண்முரசில் நுழைய முடியாது எனக் கருதுகிறேன்.
       அந்தப் பொன்னொளிவீசும் கதவின் தாழ் திறந்து நாம் வெண்முரசில் நுழைகிறோம். அங்கு முதல் காட்சியாக  விடியல்பொழுது. நம் பண்பாட்டின் மங்கலங்கள் எனக் கருதப்படுபவை முதலில் நமக்குக் காட்டப்படுகிறது. கதை பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழுகிறது. மங்கல வாத்தியக் கருவிகளின் இசைகளின் உச்சத்தில்  யானை வடம் பிடித்து ஒலிக்கவைக்கும்  சுருதகர்ணம் என்ற கண்டாமணியின் ஓசை நம்மை வரவேற்கிறது.  வெண்முரசு தன்  பொற்கதவம் திறந்து வாசகர்களை அனைத்து மங்கலத் தாளங்களுடன் வரவேற்று  பெருமை செய்கிறது.
     கதை உடனே நமக்கு கூறப்பட  ஆரம்பிக்கிறது. கதை நடக்கும் களனாக அஸ்தினாபுரம் எப்போதும் இருக்கப்போகிறது. அதுவே கதைப்பரப்பின் மையமாக இருப்பது. ஒரு கதைப் பாத்திரமாகவும் இருக்கப்போவது.   அந்த நகரை கட்டிய ஹஸ்தியின் புகழ்  சொல்லப்படுகிறது.  அப்புறம் நேரடியாக அப்போதைய அஸ்தினாபுரத்தின் பிரச்சினையை பேச ஆரம்பிக்கிறது.
 வெண்முரசு என்ற  காவியம் ஆரம்பிப்பதற்கான மூல காரணமாக பின்வருவனவற்றை அஜபாலன் வாயிலாக நமக்கு சொல்லப்படுகிறது.
   “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது”.  
 “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” 
    அறம்  என்பது எப்போதும் இருப்பது.   ஆனாலும் அதை நாம் உணர்வதில்லை.  அறம்  பிறழும்போது மட்டுமே அது தான் இது வரை இருந்துவந்ததைக் காட்டுகிறது. அதை மீட்டு மறுபடியும் நிலை நிறுத்துபவர்களை அறவோர் என உலகம் பாராட்டுகிறது. ஆனால் அந்தப் அறப் பிறழ்வு எப்படி நடக்கிறது.  ஒவ்வொருவரிடமும் அறத்தின் கண் ஒன்று எப்போதும் விழித்திருக்கும். அது  அவனை அறம் தவற விடாமல் பார்த்துக்கொள்கிறது. ஆனால் அந்த அறத்தின் கண்ணை  ஆசைகள் மறைக்கின்றன.  ஒரு மரத்தின்மேல் ஒரு  கொடி ஏறி  அந்த மரம் முழுதையும் மூடி அந்த மரத்தின் இருப்பையே மறைத்துவிடுவதைப்போல, இச்சைகள் அறத்தை மூடி மறைத்துவிடுகின்றன. அதன் காரணமாக அறப் மபிறழ்வுகள் ஏற்படுகின்றன. அறத்தை காக்கும் வலுவில்லாத மனிதர்களை உருவாக்குகிறது இச்சை.  அப்படி பலமிழந்த மனிதர்கள் அறம் தவறி வீழ்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக  இந்த வரிகள் உள்ளன.
   சத்தியவதி,  அரசியாக இருக்கும் காலத்திற்கு நேராக வெண்முரசு முதலில்  அழைத்துச்செல்கிறது.  அது ஏன் என்று சிந்திக்கிறேன். சந்தனுவின் ஆரம்பித்திருக்கலாம். அல்லது வம்சத்தின் முதல் மன்னனான  புரூவரஸிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது திருதராஷ்டிரன் காலத்தில் ஆரம்பித்து பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணித்திருக்கலாம். ஆனால் கதை  ஏன் சத்தியவதியின் ஆட்சியிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது என்ற கேள்வி இயல்பாஅகத் தோன்றுகிறது.  அறப் பிரச்சினகளைப்பற்றி பேசவிருக்கும் கதையின் வித்தாக நடந்த முதல் அறப்பிழை அவள் ஆட்சியில் இருக்கும்போதுதான் ஏற்படுகிறது.  மகாபாரதப் போர் என்பது  பரமாத்திக அணுவாக தோன்றும் இடம் இக் காலகட்டம் என்பதால் இங்கு கதை தொடங்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.
    சித்திராங்கதன் பாத்திரம் தன்பாலின விழைவை தொட்டுச்  செல்கிறது.    கதை நடை அது அப்படித்தான் இருந்திருக்கும் என நம்மை உணரவைக்கிறது. தன் நாட்டைக் காக்கும் அறத்தை பிள்ளைகள் பெற்று வாரிசை உருவாக்கி நாட்டின் எதிர்காலத்தை காக்பதற்கான அவன் அறத்தை,   அவனுடைய இந்த   இச்சை  மூடி மறைத்து விடுகிறது.
      அதற்கு முன்னர் சந்தனு சத்தியவதி மேல் கொன்டிருந்த இச்சை  ஒரு உயரிய  அறக்காவலானாகவும், திறன்மிக்க பெரு வீரனாகவும் இருந்த தேவவிரதனிடம்  நாட்டின் தலைமை சென்றுவிடாமல் தடுத்துவிடுகிறது.  தேவவிரதன் தன் தந்தை மேல் வைத்திருந்த பாசம் அவனுடைய பேரறத்தின், பெரும் வல்லமையின் கீழ் நாட்டைப் பாதுகாத்தல்  என்றஇவரசானகிய அவன் அறத்தை மூடி மறைத்து  பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்ள சபதம் ஏற்க வைத்துவிடுகிறது.   அதற்கு மற்றொரு காரணமாக தன் மகள் பேரரசியாகவும் அவள் வயிற்றுப் பிள்ளைகள்தான் நாடாளவேண்டும் என்ற சத்தியவதியின் தந்தை  சத்யவானின்  இச்சை  இருக்கிறது. இப்படி இச்சைகள் ஏறிப் படர்ந்து மூடப்பட்ட நிலையில் அறம் இருக்கிறது.
    இப்படி இச்சைகள் அறத்தின் மேல் படர்ந்திருக்கையில் முதல் அறப் பிறழ்வு நடப்பதற்கு காரணமாக இருப்பது  சத்தியவதி.  தன் குருதிதான்  நாடாள வேண்டும் என்ற அவளின் பேராவல்  அதற்கு காரணமாக அமைகிறது. அவளின் மிக சாதுர்யமான் உரையாடல்  பீஷ்மரை  திகைக்கவைக்கிறது. காசி நாட்டுப் பெண்களை கவர்ந்து வருதல் என்பதுதான் மகாபாரதப் போர் நிகழக் காரணமாக அமைந்த முதல் அறப்பிழை என நான் நினைக்கிறேன்.  பீஷ்மர்,  சத்தியவதி அதை கூறக் கேட்டதும் அவர் சொல்லும் முதல் வார்த்தையே அதுதான்.
பீஷ்மர் திகைத்து எழுந்து பதறும் குரலில் “அன்னையே நீங்கள் சொல்வது அறப்பிழை….ஒருபோதும் செய்யக்கூடாதது அது…” என்றார்.
அப்பணிக்கு பீஷ்மரை சம்மதிக்க வைப்பதில் அவள் அடையும் வெற்றியில் பீஷ்மர் இறந்துவிட்டார் என்றுதான்  சொல்லவேண்டும். தான் மற்றவர் கை ஆயுதம் மட்டுமே என்பதாக அவர் உணர்ந்து அவ்வாறு தன் சுய தர்மத்தை மாய்த்துக்கொள்ளும் இடம் அது. அதற்கப்புரம் அவர் காணும்  அறப்பிழைகளை அவர்  எதிர்ப்பதெல்லாம்,  வெறும் மேலோட்டமான வார்த்தைகள் என  ஆகிப்போகின்றன.  அறப்பிழை நேருபோதெல்லாம அவர் ஆன்மாவில் எழும் மறுப்பு வெளிவராமல் தன்னுள் புதைத்துக்கொள்பவராகவே அவர் இறுதிவரை இருக்கிறார்.     ஷத்திர்ய தர்மம் என்று சொல்லி  இது அறப்பிழை அல்ல என்று சொல்வதை  அவர் மனம் உள்ளூர ஏற்கவில்லை.   அவருக்கு மட்டும்  முழு சுதந்திரம் கிடைத்து தன்னிச்சையாக செயல்படும் நிலை இருந்தால் அவர் இப்படி ஷத்திரிய தர்மத்தின்படி சரியென்று கூறப்படும் செயல்களை  செய்திருப்பாரா? அவர் தன்னை   போர்வீரன் அல்லது மவெறும் போர் ஆயுதம் என ஆக்கிக்கொண்டு அஸ்தினாபுரியின்  ஆள்பவர்  விழைவுகளுக்கேற்ப ஒரு சாதாரண சேவகனைப்போல தன்னை ஒப்புக்கொடுப்பவர் ஆகிறார்.  அவர் மனம் வெறுக்கும் அறப் பிழை நேரும்போதெல்லாம்,  சீறி எழுந்து அதைத் தடுப்பவராகவும், அந்தப் பிழையைச் செய்பவரை தண்டிப்பவராகவும் இல்லாமல்,   வெறும் மன்றாடுபவராகவும்,  அப்படி நடக்காத  போது உளம் வெதும்பி அவ்விடம் விட்டு நீங்குபவராகவும்  இருந்து பல்வேறு செயல்களை செய்து தன் வாழ்வையும் மற்றவர் வாழ்வையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். அவர் மாறிப்போய்விடுகிறார். பீஷ்மர் வியாசரிடம் கூறுகிறார்:
    “நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
   பெண்களைக் கவர்ந்து மணம் புரிதல் அப்போதைய ஷத்திரிய அறத்தின்படி சரிதானே? அதைதானே வியாசரும் சொல்கிறார் எனலாம்.  இது எப்படி பீஷ்மரின் மனதிற்கு ஆறுதலளிக்கவில்லை?  இது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். மனித குலத்திற்கு முதன்மையான அறம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு உயிர்க்கும் சுகமாக இருப்பதே வாழ்வின் நோக்கென இருக்கிறது. சுகத்தை விரும்பாத எந்த உயிரினமும் இல்லை. ஆகையால் ஒரு உயிரின் சுகத்தை கெடுக்கும் செயலை முடிந்தமட்டும் செய்யாதிருப்பதையே நாம் மனிதம் என்கிறோம். அதுவே முதன்மையான அறம். மற்ற உயிர்களின் சுகத்துக்காக தன் சுகத்தை தியாகம் செய்வது பேரறமாகும்.    இந்த முதன்மை அறத்தை அடிப்படையாக வைத்துதான் அனைத்து அறங்களும் கட்டப்பட்டிருகின்றன.  ஆனால் ஒன்றின் இழப்பில் மற்றொன்று பெறுவதாக இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு உயிரின் நலத்திற்கு இன்னொரு உயிர் துன்பமடையவேண்டியதாக   இருப்பதை  ஒவ்வொரு கணமும் பார்க்கிறோம். அப்படியென்றால் எப்படித்தான் அறத்தை பேணுவது?   தனிப்பட்ட ஒருவனுக்கு என்று  தன்னறம்  இருக்கிறது.  அது அவன் பெற்றோரிடமிருந்து அல்லது  வளர்ப்பினால், சூழலினால் தான் வந்தது  என்று சொல்லமுடியாது. அது அவன் ஆன்மா அடைந்திருக்கும் விழிப்பினால் வந்ததாக இருக்கும். அவனுடைய தன்னறம்  அவனுக்கென்று நடத்தைகளை வகுத்துதருகிறது. ஒருவன்  சமூகம் இட்டிருக்கும் பணி அவன் தன்னறத்திற்கு எதிரானதாக ஆகும்போது அவன் அந்தச்  சமூகப் பணியிலிருந்து  தன்னை விடுவித்துக்கொண்டு அதற்காக தான் கொண்டிருந்த சிறப்பு பலன்களை  தவிர்த்துக்கொள்வதே வழி.

  அஸ்தினாபுரியின் அரசு வாரிசில்லாமல் அழிந்துவிடக்கூடாது என்பது சத்தியவதியின் நோக்கமாக இருக்கிறது.  பேரரசி என்ற வகையில் அது தன்னுடைய அறம் என அவள் நினைக்கிறாள்.    ஒரு போர் வீரனின் அறம் அவன் அரசு சொல்வதை எவ்வித தயக்கமும் இல்லாமல் நிறைவேற்றுவதாகும். நாட்டின் காவலனாக பீஷ்மர்,   சத்தியவதி ஆணையிடுவதைச்  செய்வது அவர் கடமை என ஆகிறது.  ஆனால் பெண்களை கவர்ந்து வருதல் என்பது பீஷ்மரின் தன்னறத்திற்கு ஏற்புடையதாக இல்லை.  பீஷ்மரின் தன்னறம் மிக உயர்ந்தது. பிறர் சுகங்களுக்காக  தன்னுடைய சுகங்களை  தியாகம் செய்யும் பேரறத்தை தன்னறமாகக்கொண்டவர்.  இதுவரை அவருடைய தந்தைமேல் கொண்டிருந்த பாசம் போன்றவை அவருடைய தன்னறத்தோடுமுரண்படவில்லை.   அதே நேரத்தில் தன் நாடு அழியாமல் இருக்க வேண்டும் என்ற  விழைவு அவருக்கு  இருக்கிறது.
“…நான் எதற்கும் துணிந்திருக்கிறேன் மூத்தவரே. என் கண்முன் இந்த நாடு அழிவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்றார் பீஷ்மர்.  வியாசர் புன்னகையுடன் “ஆம், அது உன் தர்மம். மண்ணாசையால் மானுடன் ஷத்ரியனாகிறான்” என்றார்.
     
அவரின் இந்த பேராவல் அவரின் தன்னறத்தோடு முரண்படும் சூழல் இப்போது ஏற்படுகிறது. அவருடைய உயரிய தன்னறம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.. 
பீஷ்மர் “ஆனால் ..என் மனம் சஞ்சலமாகவே இருக்கிறது…ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது….” என்றார். “இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது மூத்தவரே. அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர்.
   சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்” என்றார் பீஷ்மர்.
 
இதை அவர் எப்படி எதிர்கொள்ளவேன்டும். ஒரு மனிதனாக தன்னறத்தை கைவிடாமல் இருக்கவேண்டும் என்றால் அவன் சில விழைவுகளை கைவிடவேண்டியதாக இருக்கிறது.  ஒன்று அவர் தன் நாட்டை கைவிட்டு சென்றிருக்க வேண்டும்  அல்லது நாட்டு நலன் முக்கியம் என்று கருதினால்,  தான் செய்திருக்கும் சத்தியத்தை மீறி  சத்தியவதியிடமிருந்து  அரசைக் கைப்பற்றி  அவரே மன்னனாக ஆகி வேண்டும்.  ஆனால் இம்முடிவுகளை எடுக்காமல் தன்னை ஒரு போர்வீரன் எனக்கருதிக்கொண்டு சத்திரிய தர்மத்தை பின்பற்றினால் போதும் என்ற முடிவை அவர் எடுப்பது ஒருவகையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். 
ஷத்திரிய அறம் அவரின் தன்னறத்தை ஒப்பிடுகையில் மிகவும்  குறுகியதாக இருக்கிறது.   ஆனால் அந்த குறுகிய குடிலுக்குள்  தன் உயர்ந்தோங்கிய உடலை வமளைத்து திணித்து  இருந்து  வாழ நினைக்கிறார். அதற்கான வதைகளை அவர்  தன் வாழ்நாளெல்லாம் அடைவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.  
 
  
   மகாபாரதக் கதையே  அறம் பற்றிய ஒரு விவாத மேடையாகப்போகிறது. வெண்முரசின் நுழைவாயிலிலேயே அதற்கான தொடக்கம் நிகழ்கிறது.  அதனால நான் அறம் பற்றிய என் எண்ணத்தை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். இந்தப் பார்வை சரியானதுதானா என்பதை நாம் விவாதிக்கலாம் என நினைக்கிறேன்.
   1. பிறக்கும் எல்லாஉயிர்க்கும் தன் உயிரைப் பேணுதலும் தன் சந்ததியை இனப்பெருக்கம் செய்து காப்பதுமான  இரு அடிப்படைக்கடமைகள் இருக்கின்றன. இந்தக் கடமைகளை நிறைவேற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அனைத்து உயிர்களின் பொது அறமாக இருக்கிறது.  இது விலங்குகளின் இரத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
   2. மனிதன் தன் சிந்திக்கும் ஆற்றலினால் தன் அறத்தை மேலும் உயர்த்திக்கொள்கிறான்.   அவன் சமூகமாக வாழ்கையில் ஒருவருக்கொருவர் உதவி  செய்துகொண்டு மற்றவர் நலனுக்கு இடையூறு இல்லாமல் வாழ்வதற்கான சமூக அறங்களை ஏற்படுத்திக்கொள்கிறான். சமூகத்தின் பல்வேறு  நிலைகளில் இருக்கும் மனித குழுக்கள் தம் குழு இயல்புக்கேற்ப அவைகளுக்கான குழு அறத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன.  ஷத்திரிய அறம், நால் வர்ணத்தினருக்கான தனித் தனியான அறங்கள், குலங்கள், இனங்கள் போன்றவை அவை வாழும் சூழல்களுக்கேற்ப பலவகையாக குல அறங்களை ஏற்படுத்திக்கொள்கின்றன.
   3. ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒவ்வொரு மனிதனும் அவன் அடைந்திருக்கும் ஆன்மவிழிப்புக்கேற்ப தான் வாழ்வதற்கான அறத்தை அடைகிறான்.  தன் நலன் சாராத, பிறர் நலன் பொருட்டு அவன் கொள்ளும் கருணை, அன்பு ஆகிற் தன்மைக்கேற்ப  தனக்கென சில நெறிகளை அவன் தானாகவே அமைத்துக்கொள்கிறான்.  மற்றும் அவன் தன் சுபாவத்திற்கேற்ப அல்லது சமூகம் தன்க்களித்த கடமையை சரியாக நிறைவேற்றுவதற்கான நெறிகளையும் கொள்கிறான். இப்படி அவன் தொகுத்துக்கொள்ளும் நெறிகளை  தன்னறம் என்று நான் வரையறுக்கிறேன்.  அது பிறப்பிலேயே வருவதாகவும், பிறந்த குடி,  அடைந்த ஞானம், சேர்ந்த நட்பு இருக்கும் சூழல்போன்ற கூறூகளால்  வளர்வதாகவும் இருக்கிறது.  இந்த தன்னறம்  அவன் தற்போது இருக்கும் சமூக அறத்திற்கு மேம்பட்டதாகவே இருக்கும். அதனால் பெரும்பாலும் அவனுடைய தன்னறம் சமூக அறத்திற்கு முரண்படாததாக இருக்கும்.  தன்னறமே மனிதனை விலங்கினத்திலிருந்து மேலுயர்த்துகிறது.
  4. ஆனாலும் மனிதர்கள் தன் மனதில் பெருகி எழும் விழைவுகளின் காரணமாக பல செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் சமூக நெறிகளுக்கு உட்பட்டு, தன்னறத்தையும் மீறாமல்  தன் விழைவுகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய விழைவுகள் ஒருவனின் தனிப்பட்ட இன்பங்களுக்கு மட்டுமல்லாமல் சமூக வளத்தைப்பெருக்கவும் துணைபுரிகின்றன. ஆனால் விழைவுகள்  காரணமாக ஒருவன் சமூக நெறியை மீறுகையில் அவன் சமூகத்திற்கு தீங்கு இழைப்பவனாகக் கருதப் படுகிறான். அவனை சமூகம் இடித்துரைத்து திருத்தப் பார்க்கிறது. அதை மீறி அவன் நடக்கையில் அவனைத்  தண்டிக்கிறது.
   5. அதே நேரத்தில் ஒருவன்  தான் இயல்பிலேயே கொண்டிருக்கும் தன்னறத்தை மீறுகையில் அவன் மனம் குற்ற உணர்வு கொண்டு  அவன் மனதை உறுத்துகிறது. தன் விழைவுகளின் காரணமாகவோ அல்லது வெகு அரிதாக சமூக நெறிகளின் காரணமாகவோ ஒருவன் தன்னறத்தை கைவிட நேருதல் அவன் உளவியலை வெகுவாக பாதிக்கிறது. தான் தன்நிலையிலிருந்து  இறங்கி இழிந்துவிட்டதாக அவன் உணர்கிறான்.  அவன் என்னதான் காரணங்களை வெளியில் சொல்லிக்கொண்டாலும் அவன் உள்ளூற அவன் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
  6. சிலசமயம் சமூக அறங்களில் ஒரு அறத்தை இன்னொரு அறத்திடம் முரண்படுவது நடக்கவே செய்கிறது. போர்வீரன் ஒருவனை எடுத்துக்கொள்வோம். அவனுக்கு ஒரு குடும்பத் தலைவனென தன்  குடும்பத்தை சீராகவும் சிறப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவன் அறம். ஆனால் ஒரு போர் என வரும்போது குடும்பத்தை விட்டு போருக்கு சென்று தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டியதும் அவனுக்கு அறமாகிறது. இப்போது அவனுடைய இரண்டு அறங்களும் முரண்படுகின்றன. இதில் அவன் எதைத் தேர்ந்தெடுப்பது என வரும்போது அவனுடைய தன்னறம் என்ன சொல்கிறது என்பதை அவன் கவனிக்க வேண்டியவனாகிறான். அவன் மற்ற வேலைகளை தவிர்த்து ஒரு போர்வீரன் என ஆகியிருப்பது அவனுடைய தன்னறத்தின் காரணமாக என இருப்பதால் அவன் போருக்கு செல்வதே சரியானதாகத்  தோன்றுகிறது.   ஆகவே இரண்டு அறங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படும்போது தன்னறம் என்ன சொல்கிறது என்பதை வைத்தே ஒருவன் இறுதி முடிவெடுக்கவேண்டும்.  விழைவுகள் காரணமாக தன்னறத்தை மீறி நடந்துவிட்டு  அதற்கு ஏதோ ஒரு சமூக அறம் அல்லது குல அறத்தை காரணம் காட்டிவிடலாம் என்பது சரியாகாது. அது அறப்பிழை என்றே கருதப்படும்.
 

திரு . மணிமாறன் பதிவு 
புதுவை வெண்முரசுக்கூடுகை – 2   (நாள்: 23.03.2017,  இடம்:  எண் 27, வெள்ளாளர் வீதி, புதுவை – 605 001).

அன்பு நண்பர்களுக்கு..

வணக்கம்.  புதுவையின் கற்றுக்குட்டி வெண்முரசுக்கூடுகைக்கு நமது வாசக வல்லுநர் கடலூர் சீனுவின் இருப்பு இன்றியமையாதது மட்டுமல்ல ஒருவித வல்லமையைத் தரக்கூடியது என்பதை கருத்திற்கொண்டு அவரது தொடர் பயணத்திட்டங்களுக்கிணங்க இரண்டாவதுக் கூடுகை சற்று பிந்திவிட்டது. 

மாலை ஆறு மணியளவில் துவக்கப்பட்ட கூடுகையின் ஒரெளிய சுருக்கப்பட்டப் பிரதி எனக் கொள்ளவும்.  முதற்கனலின் வேள்விமுகத்திற்கு அடுத்த அத்தியாயமான பொற்கதவம் தான் பேசுபொருள்.  முதற்கூடுகையில் பங்கேற்ற அனைவருமே வந்திருந்ததில் அளப்பரிய மகிழ்ச்சி.  நிகழ்வு நாயகனாக திரு துரைவேல் அவர்கள்தான் அன்றைய நிகழ்வை துவக்கி வைத்து உரையாற்றினார்.  இவ்வத்தியாயத்தில்  தான் பாரதக்காவியத்தின் முதல் அறப்பிழை பீஷ்மரால் நிகழ்த்தப்படப்பட்டதென்று, அதாவது விருப்பில்லாமல் பெண்களை கவர்ந்து வருதல் அதுவும் இன்னொருவற்காக அது நாடாளவிருக்கும் அரசனுக்கேயானாலும், தன்னறம் மீறியது எனும் கருத்தை தன்னுடைய வாசிப்புக்கோணத்தின் தரவுகளின்படி அழுத்தமாகவும் விரிவாகவும் முன்வைத்தார். பின்னர் பேசிய திரு நாகராஜன், அஸ்தினபுரியின் அரண்மனைக் கோட்டை வாயிற்கதவு திறக்கப்பட்டது போல  இறுதியில் வியாசரின் வார்த்தைகளால் பீஷ்மரின் மனக்கதவு திறக்கப்பட்டது... இதை பீஷ்மரின் அறத்தெளிவென்றே கொள்ளலாம் என்றார்.  அடுத்து பேசிய  திரு அரிகிருஷ்ணன் அவர்கள் திரு துரைவேலின் பார்வையை மறுத்தாலும் பின் பீஷ்மரையே குற்றவாளியாக்கி, எனினும் அது அவரைச்சாராது என்றும் பிரபஞ்சப்பெருவெளியின் ஆடல் போல அறிதற்கரியது என்றும் எடுத்துரைத்தார்.  இறுதியில் முத்தாய்ப்பாக சீனு காலந்தோறும் காவியங்களில் உருவாகி வந்த அறங்களின் பரிணாம வளர்ச்சிப் பற்றிய ஓரழகிய சொற்சித்திரத்தை அளித்து இனிதே கூடுகையை நிறைவு செய்தார். 

மற்றுமோரினிய மனநிறைவான மாலைப்பொழுதாகவே அந்நாள் அமைந்தது.                                                                   
திரு துரைவேலும் அரிகிருஷ்ணனும் தத்தமது பேச்சின் நீளெழுத்து வடிவத்தை ஏற்கனவே அளித்திருக்கிறார்கள்.       

மிக்க அன்புடன்
மணிமாறன்.
- show quoted text -

No comments:

Post a Comment

புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வு

  காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் குறித்து நண்பர்  இராச. மணிமேகலை அவர்கள் புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையின் எழு...