Tuesday, 22 August 2017

புதுவை கூடுகை - 06

ஆறாவது புதுவைக்கூடுகை-மணிச்சங்கம்.

பகுதி ஒன்று.

     ஆசானின் வாசகர்களுக்கு வணக்கம்.புதுச்சேரி வெண்முரசு ஆறாவது கூடுகை,பொன்மாலைப்பொழுதில் அறிஞர் ஹரிஜி அவர்களின் கலை சொட்டும் மனையில் இனிதே நிகழ்ந்து முடிந்தது.நிகழ்விலிருந்து சில துளிகள்....

திரு.நாகராஜன் அவர்களின் பார்வையில் மணிச்சங்கம்....
           காசிநாட்டு  இளவரசிகள் இருவர் மட்டும்,தேவவிரதரால் சிறை எடுக்கப்பட்டு அஸ்தினபுரி வரும் செய்தி விசித்திரவீர்யனுக்கு அளிக்கப்படுகிறது. அவன் நோய்கொண்டவனாக உள்ள போதும்,மற்றொரு இளவரசி எங்கே என்று கேட்பதைக் குறிப்பிட்டு,அவனின் ஆளுமையை இழிவாகஎண்ணியதையும்,பின்னர் அம்பையின் பாதம் பணியும் நிலை,சற்று அவன்மேல் சாஃப்ட் கார்னர் ஏற்பட்டதையும் அவருக்கே உரிய எள்ளல் தொனியுடன் விளக்கினார்.
பின்னர் மணிச்சங்கம் பகுதியில் உள்ள விசித்திர வீர்யன்-ஸ்தானிகர் உறவு,மணி மஞ்சத்தில் அம்பிகையுடன் நடத்தும் உரையாடல்,சத்யவதியுடன் நடத்தும் விவாதம் இவற்றால் அவன் விஸ்வரூபம் எடுத்து வருவதைக் கண்டு,அந்த சிறு பாத்திரத்தின் வீச்சை வடிவமைத்த ஜெவின் திறனை வியந்தோதினார்.
   விசித்திர வீர்யன்,ஸ்தானிகரிடம் வாழ்வின் தீரா இன்பத்தைக் கூறும் வரிகளைச் சொல்லி “வாழ்தலின் இனிமை”யை உணர்வது
மனிதர்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை வளியுறுத்தினார்.
// நான்குவருட வாழ்க்கையை அள்ளி நினைவாக்கிக்கொள்ள முயன்றேன். ஒருவருடத்தைபின்பு ஒருமாதத்தைஒருநாளை. ஸ்தானகரேஒருநாழிகையை வாழ்ந்து முடிக்க இப்புலன்களும் இதை ஏந்திநிற்கும் சிறுபிரக்ஞையும் போதவில்லை. ஸ்தானகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார். அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை.//
        மேலும் ஆசானின் கைவண்ணத்தில் புதிய தமிழ் வார்த்தைகள்,காவியம் முழுதும் சிறப்பாக பயின்று வருவதை,அவை ஏற்படுத்தும்  பரவசத்தை எடுத்துக்காட்டினார்.(அமாவாசை-கருநிலவுநாள்)
   அதேபோல் குறிப்பை உணர்ந்து பணிவிடை செய்யும் சேடி சிவையின் குண இயல்பை சிலாகித்தார்.(காண்டீபத்தில் வரும் சேடி மாலினி மற்றும் மாமலரில் வரும் சேடி சாயை போல்)
அவள்தான் வில்லுக்கொரு விதுரனின் தாயாக மலரப்போகிறவள் என்பதை பண்ருட்டி நண்பர் குறிப்பிட்டார்.எந்தவொரு சிறு பாத்திரத்தையும் வலிமையுடன் உருவாக்கும் ஜெவின் மேதைமையை விவாதிக்க அதுவொரு காரணமாக விளங்கியது.

நண்பர் மணிமாறன் பார்வையில்...

    அம்பிகை விசித்திரவீரயனுடன் உரையாடும்போது கூறும் சத்தியவான்-சாவித்திரி கதை விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்பது நண்பர் மணியின் கூற்று.குறிப்பாக மூன்று நதிகளை சாவித்திரி கடந்து போகும்போது,காலன்,யமன்,தருமன் இவர்களிடம் ஏற்படும்
உரையாடல் ஆழ்ந்த பொருள் கொண்டது என்றார்.
   முக்கியமாக நியோகம் என்னும் அசாதாரணமான சடங்கை,அம்பிகை ஏற்பதற்கான சில சமிக்ஞைகள்,அவள் கூறும் கதையின் போக்கிலேயே அவளின் எண்ணமாக மிளிர்கின்றது என்பது சிறப்பாக எடுத்துக்காட்டினார்.(மூச்சுவாங்கும் குரலில் விசித்திரவீரியன் அவள் காதுக்குள் கேட்டான் தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்ரிநோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?” அவள் எண்ணிக்கொண்டது தன் குழந்தையைப் பற்றிதான். ஒருபோதும் தன்னால் பிரக்ஞாவதியை தாண்டமுடியாதென்று அறிந்தாள்.)

நண்பர் சிவாத்மாவின் பார்வையில்....

   அமாவாசையை ஆங்கிலத்தில் நோ மூன் டே(நிலவு இல்லாத நாள்)என்பதைவிட ஜெவின் கருநிலவுநாள் என்ற வார்த்தை கவித்தன்மை கொண்டதாக உள்ளது என்று கூறினார்.  
நான்குவயதில் விசித்திரவீர்யனின் உயிர் இரவு வரை மட்டுமே தரிக்கும் என்று மருத்துவர்கள் கெடு வைத்துவிடுகின்றனர்.அப்போது அவன் கண்களை மூடி உள்ளத்தில் ஆழும்போது ஏற்படும் எண்ணங்கள் மற்றும் காட்சிகளாக விரிபவை மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என ஐம்புலன்களில் உணர்வதே என்று,சிறந்த அவதானிப்பை முன்வைத்தார்.( என் அன்னையை எண்ணிக் கொண்டேன். அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால் கண்டேன். என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணுவணுவாகப் பார்த்தேன். நான் உண்ட இனிய உணவுகளைபார்த்த அழகிய மலர்களைகேட்ட இனிய இசையை என)

  மேலும் மணிமஞ்சத்தில் அம்பிகைக்கும் மற்றும்
விசித்திரவீர்யனுக்கும் நிகழும் உரையாடலின் முக்கியத்துவத்தைத் தொட்டுக்காட்டினார்.

திரு.ஹரிஜி அவர்களின் பார்வையில்....
    மணிச்சங்கம் என்பதற்கு,சங்கம் எனில் கூடுதல்
என்பதால் அவ்வாறு பொருள் கொள்ளலாம் என்ற சிறப்பான பார்வைக்கோணத்தை முன்வைத்து ஆரம்பித்தார்.
  பேரரசி சத்யவதியின் ஆளுமையை செலுத்துவது,தாய்மை
என்ற வலுவான உணர்ச்சியே என்பதை,விசித்திரவீர்யனுடன் நடக்கும் டிபேட்டை முன்வைத்து தொட்டுக்காட்டினார்.
    பிரதீபரின் மனைவியும்,விசித்திரவீர்யனின் பாட்டியும்,சிபிநாட்டு
இளவரசியும்(பாகிஸ்தான்)தேவாபி,சந்தனு மற்றும் பால்கிஹனின்
தாயாருமான சுனந்தையின் வாழ்க்கை,எவ்வாறு அவனை பாதித்தது
குறித்தும் சொன்னார்.

   நீர்ச்சுனையில், தன் மூத்த தமையனான சித்ராங்கதனுடன் ஏற்படும் சந்திப்பில்,பிம்பமாற்றத்தின் விளங்கமுடியாத தன்மையை
//மூத்தவரே,நான் உங்களை பாழ்படுத்திவிட்டேனா,இல்லை பிடித்தமான முறையில் பாழ்படுத்திக்கொள்ளத்தானே வாழ்வே அளிக்கப்பட்டிருக்கிறது//என்ற ஜெவின் வரிகளைக்கொண்டு,தான் எண்ணுவதை விளக்கி முடித்தார்.

திரு.வளவதுரையன் அவர்கள் பார்வையில்....
     ஐயா அவர்கள் வந்தவுடனேயே தன்னுடைய “சங்கு” என்னும் பெயர் கொண்ட சிறுசஞ்சிகையை,தனிச்சுற்றுக்கான இதழின் பிரதிகளை   அனைவர்க்கும் அளித்தது மிகவும் உவகையாக இருந்தது.அதில் முதல்பக்கத்தைப் புரட்டியபோது கண்ணில் பட்டது “சில்லறை”என்ற தலைப்பில் திரு.நாஞ்சிலின் ஆக்கம்.அது கட்டுரையா,சிறுகதையா என்று கேள்வி எழுப்பியபோது,இதேதான் அவரிடம் வினவினேன்,ஏதேனும் ஒரு கேட்டகிரியில் போட்டுகொள்ளுங்கள் என்று நாஞ்சில் பதில்உரைத்ததாகவும் ஐயா சொல்லியபோது சிரிப்பலைகள் எழுந்து ஓய்ந்தது.(கலாப்ரியாவின் “உருள்பெருந்தேர்”கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன்.சமீபத்தில் சீனு குறிப்பிட்டிருந்தாரோ?)
    முதலில் தனக்கும்,ஜெவுக்குமான பல ஆண்டு கால உறவின் நெருக்கத்தையும்,கடித தொடர்புகளையும் சொல்லியது நெகிழ்ச்சி.
(தான் ஜெவுக்கு எழுதிய நான்கு பக்க கடிதமும்,பதிலாக ஜெவின் முப்பத்தைந்து பக்க கடிதம் வந்ததும் இப்படி-))))
    ஊழின் வலிமை வெண்முரசில் பயின்று வருவதை அழுத்தமாகவே,பல உதாரணங்களுடன் விளக்கினார்.(பல்லியின் திறந்த வாய்க்குள்,ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப நுழையும் சிறு பூச்சிபோல)
   ஜெவின் புதியவார்த்தைகள் உருவாக்கத்திற்கு நாஞ்சில்நாடன் அருகில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தன் எண்ணத்தை வெளியிட்டார்.(பெருமுரசம் இமிழத்தொடங்கியது)
   அஸ்தினபுரியின் அவையில் அமர்ந்திருக்கும் தொல்குடிகளின் வரிசை,குறிஞ்சி.முல்லை,மருதம்,நெய்தல் நிலத்தைக்குறிக்கும் வகையில் ஜெ சித்தரித்துக்காட்டுவதை,நுண்ணிய முறையில் அவதானித்தார். (ஸ்தானகர் உரக்க பூமிதாரர்களேகடல்சேர்ப்பர்களேவேடர்தலைவர்களேஆயர்குடிமூத்தாரே!)
       விசித்திரவீர்யனை மணக்கமறுத்து,எதிர்ப்பை தெரிவிக்கும் அம்பிகையை,தன் சாதுர்யமான நாத்திறத்தால் எதிர்கொள்ளும்
சத்யவதியின் தீரத்தை வியந்து கூறினார். (உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.)
    மேலும் விஜய் டி.வியில் தினமும் காலை,திருமதி.இளம்பிறை மணிமாறன் நிகழ்த்தும் பாரதசொற்பொழிவு தரமாக உள்ளதாகப்பகிர்ந்துகொண்டது பயனுள்ள,புதிய தகவலாக இருந்தது.

 ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது திறப்புகளுக்கு இடமளிக்கும் வகையில்,வெண்முரசின் இந்தச்சிறிய பகுதியே இத்தனை செறிவுடன் உள்ளதை வியப்புடன் நினைந்தவாறே நிறைந்தது இம்மாதக்கூடுகை.

இந்த மாதம் மூத்த சகோதரர் துரைவேல் அவர்கள் மற்றும் இளைய சகோ சீனுவை மிஸ் செய்தது ஆதங்கம்.
நன்றி.(தொடரும்)


வெண்முரசு புதுவை கூடுகை -06
27-07-2017அன்று நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில்  சிறப்பு அழைப்பாளரும் , அமைப்பிற்கு ஆழ்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டவரும்  இலக்கிய உலகில் மிக செறிவானஅனுபவம் உள்ளவரும் திரு.ஜெயமோகன் அவர்களின் நீண்டகால நண்பருமான திரு.வளவதுரையன் அவர்கள் கலந்து கொண்டது குழுமத்தை வேரோர் தளத்திற்கு நகர்த்த வல்லது . அவர் அன்று ஆற்றிய உரையின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
மணிச்சங்கம்
மூல பாரதங்களில் அம்பை பேசப்பட்ட அளவுக்கு அம்பிகை அம்பாலிகை பற்றிப் பேசப்படவில்லை; வெண்முரசில் அவர்களுக்குச் சரியான அளவிற்குப் பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையும், அம்பாலிகையும் தேரில் அஸ்தினாபுரம் நுழைவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது.
அம்பையைப் பொருத்தமட்டில் சினத்தின் முழு உரு; பழிவாங்கும் எண்ணம் கொண்டவள்; எளிதில் உணர்ச்சிவயப்படுபவள்; அம்பாலிகையைப் பொருத்தமட்டில் அவள் ஒரு விளையாட்டுப் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். ‘பாண்டு’ என்னும் பொம்மையை வைத்து விட்டு வந்ததற்காக வருந்துகிறாள். பின்னால் பாண்டு அவள் வழி பிறக்கப்போவதும், அவன் பொம்மையாக இருக்கப் போவதும் இங்கு மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
     அத்துடன் சிறுபிள்ளைகள் கோள் சொல்வதுபோல், அவள் அம்பாலிகையிடம், “மறுபடி கிள்ளினால் பீஷ்மரிடம் சொல்லி விடுவேன்” என்கிறாள். பாதி அம்பை, மறுபாதி அம்பாலிகை இதுதாம் அம்பிகையாவாள். அம்பை தன் வாழ்வைச் சரியாக முன்கூட்டியே தீர்மானித்து விட்டாள். யாரை மணக்க வேண்டும் என முடிவெடுத்து விடுகிறாள். அம்பாலிகையோ தன் வாழ்வில் எது வரினும் ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள். பீஷ்மருடன் வந்தாயிற்று எதுவந்தாலும் சரி என அவள் எண்ணுவது ஆற்றுவழிப்படும் தெப்பம்போல அவள் செல்லத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
ஆனால் அம்பிகை இறங்கும்போதே கண்களை மூடிக்கொண்டு தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை கண் பார்வை இல்லாதவன்தான் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். தவிர இப்படி சிறையெடுக்கப்பட்ட்தே அவளுக்குப் பிடிக்கவில்லை. “நாளை நம் படைகள் இந்நகரை வென்றுவிடும்; செல்வச் செருக்கையும் பெருந்தோற்ற விரிவையும் பார்க்கக்கூடாது” எனக் கூறுகிறாள். ஆனால் விதியின்வழி வேறுவிதமாய் இருக்கிறது.
தொன்மங்களில் விதி ஒரு தவிர்க்க முடியாத அம்சம். ”விதி பிடர் பிடித்து உந்துகிறது” என்பான் கும்பகர்ணன். ”நதியின் பிழையன்று; பதியின் பிழையன்று; இது விதியின் பிழை” என்பான் இராமன்; மேலும் இழைக்கின்ற விதி முன்செல்லக் கானகம் கிளம்புவான் இராமன். அம்பிகையின் வாழ்விலும் விதி அவளை மாற்றுகிறது. அதை ஜெயமோகன் தொடங்கும்போதே ஒரு உவமை மூலம் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.
”பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோவிதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறு பூச்சி போல அவள் சென்று கொண்டிருந்தாள்” என்பது அவள் வாழ்வு அவள் எண்ணப்படி அமையவில்லை என்பதை உணர்த்துகிறது. முதலில் அவ்வளவு தீவிரமாக சிறையெடுத்ததை எதிர்க்கிறாள். “நாம் என்ன பிழை செய்தோம்” என்க்கேள்வி கேட்கிறாள். “நாம் மிருகங்களா” என்று சினத்துடன் பேசுகிறாள். சத்தியவதியிடம் மணமுறைகள் பற்றி விவாதம் செய்து வாய்ச்சொல்லிடுகிறாள். சத்தியவதியின் வாதம் இந்த இடத்தில் மிக நன்றாகக் காட்டப்படுகிறது. “கவர்ந்து வந்தபோதே பிற மணமுறைகள் இல்லாமல் போய்விட்டது. என்கிறாள் சத்தியவதி. அம்பிகையோ “என் வயிற்றில் உன் ,மைந்தனின் கரு உண்டாக விடமாட்டேன்” என்கிறாள். மேலும், ”அப்படிப்பட்ட்ட சூழல் வருமாயின் நான் உயிர் துறப்பேன் என்கிறாள். இந்த இடத்தில் வாதத்தை நிறைவு செய்யும் விதம் ஜெ. வின் கைவண்ணத்தில்  மிளிர்கிறது. இறந்த பிறகு அந்த உடலின் ஆன்மா இவ்வுலகை விட்டு நற்கதி அடைய வேண்டுமானால் அதற்குக் கருமகாரியங்கள் நடைபெற வேண்டும் அன்றோ? அதைத்தான் ஜெ. புதுச் சொல்லாக உதகச் செயல்கள் எனக்குறிப்பிடுகிறார். இவ்வளவு மன எண்ணங்களுடன் அழுத்தமான கொள்கையுடன் இருந்தவள் மாறுவது விதியின் விளையாட்டுதானே? ஜெ. இதைப் பீஷ்மர் மூலம் நிறைவேற்றுகிறார்.
யாருக்கும் வணங்காத பிதாமகர் அவளிடம், “இது என்பிழை” என்றும் ””என்னைத் தீச்சொல்லிடுங்கள்” என்றும், ஏழு பிறவிகள் நரகத்தில் உழலுகிறேன்” என்றும் கூறும் போது அம்பிகையின் மனம் திடீரென மாறுகிறது. “கற்கோபுரம் வளையலமா? என்க்று அவரிடம் கேட்டு சத்தியவதியின் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறாள்.
முதலிரவு முடிந்த பின் ”இன்று கருநிலவு; கரு உண்டாக வேண்டிய நாள்; வீணாக்கி விட்டாயே” என்றெல்லாம் பேசும் சத்தியவதியிடம் விசித்திர வீரியன் சொல்லும் சொற்கள் முதல் இரவில் ஓர் ஆண்மகன் நடக்கவேண்டிய விதத்தையே காட்டுகிறது. அவன், “வயலைப் பண்படுத்த வேண்டாமா?” என்று கேட்கிறான். மனைவியுடன் கலந்து பேசி மனத்தளவில் அவளைத் தயார் செய்ய வேண்டும் என்பது இங்குக் கம்பி மேல் நடப்பது போல் உணர்த்தப்படுகிறது.
அவையில் ஸ்தானிகர் எல்லாரையும் விளிக்கும்போது அனைத்துக் குடிகளையும் கூறுகிறார். அதாவது, ‘பூமிதரார், கடல் சேர்ப்பர், வேடர்தலைவர், ஆயர்குடி என்று அவர் அழைப்பது நால்வகை நிலக்குடிகளும் அங்கு வந்திருப்பது மட்டுமன்றி அவர்கள் எல்லாரும் மன்ன்ன் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. பூமிதரார் என்பது மருதத்தையும், கடல்சேர்ப்பர் என்பது நெய்தலையும், வேடர்தலைவர் என்பது குறிஞ்சியையும், ஆயர்குடி என்பது முல்லை நிலத்தையும் காட்டுகிறது எனலாம்.
இன்னும் இப்பகுதியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நேரமின்மையால் நிறைவு செய்கிறேன்.
- வளவதுரையன் .









No comments:

Post a Comment

புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வு

  காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் குறித்து நண்பர்  இராச. மணிமேகலை அவர்கள் புதுவை வெண்முரசு 75 வது கூடுகையின் சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையின் எழு...