[புதுவை வெண்முரசின் 50-ஆம் கூடுகையில் ஜெயமோகன் முன்னிலையில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்]
ஒரு படைப்பாளர் கூறவந்த கருத்தை வலிமையாக உணர்த்த உவமைகளைப் பயன்படுத்துவார். உவமைகள் கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீபங்கள் போன்றவை. வெண்முரசின் வெண்முகில் நகரம் பகுதியில் உள்ள சில உவமைகள் இங்கு காட்டப்ப்டுகின்றன
அர்ஜுனனும் சகதேவனும் சந்திக்கிறார்கள். அர்ஜுனன் அன்னை குந்தி எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கிறான். அதற்கு சகதேவன் ““அவர்களுக்கு கங்கைக்கரையிலேயே ஓர் அரண்மனையை அளித்திருக்கிறார் பாஞ்சாலர். அதன் மாடம் மீது மார்த்திகாவதியின் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். நேற்றுதான் நானே அதை கண்டேன். அன்னையிடம் சொன்னேன், இது நம் அரசல்ல, நாம் இங்கு அரசமுறைப்படி வரவும் இல்லை என்று. விடையாக, ”பதுங்கியிருக்கும் வேங்கைதான் மேலும் வேங்கையாகிறது என்றார்கள்” என்று விடை கூறுகிறான்.
குந்தி கூறும் சொற்களில் உள்ள இந்த உவமை முக்கியமானது. இங்கே இருப்பதால் நம் வலிமை பெருகிறது என்னும் நோக்கத்துடன் அந்தச் சொற்களை அவர் கூறுகிறார். சில நாள்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைப் பார்த்திருக்கலாம். காட்டின் நடுவில் ஒரு சாலை செல்கிறது. அச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இரு புறமும் நின்றுவிட்டன. ஏனெனில் ஒரு வேங்கை சாலையைக் கடந்து குறுக்காகச் செல்கிறது.
அது நடந்து செல்லும் போக்கைப் பார்த்தால் ஓர் ஆடு போல மெதுவாகச் செல்வது போலத் தோன்றுகிறது. அந்த வேங்கையே தன் இரையாகிய மானையோ எருமையையோ பிடிக்கப் பதுங்கி இருக்கும்போது பார்த்தால் அதன் விழிகளில் ஒரு சீற்றமும் உடலசைவிலே ஓர் எதிர்பார்ப்பையும் காணலாம்.. பதுங்கப் பதுங்கப் பதுங்கத்தான் வேங்கைக்கு வலிமை கூடும்போல இருக்கிறது.
”அன்னை மூத்தவரிடம் அஸ்வத்தாமனின் சத்ராவதி மேல் படையெடுக்கும்படி திரௌபதியிடம் போய்ச் சொல் என்றார்கள்” என்கிறான் சகாதேவன். ஆனால் அவர் சொல்லியிருக்கமாட்டார் என்று சொல்லிய அர்ஜுனன், மேலும், பீமன் செல்வதைப் பற்றி, “கங்கை எற்றி எற்றி எறிந்து கொண்டு செல்லும் நெற்று போலச் சென்றிருப்பார் மூத்தவர்” என்கிறான்.
நெற்று என்பது மிகவும் லேசானது. ஆனால் முதிர்ந்தது. அது கங்கை நீரில் விழுந்தால் அந்நீர் செலுத்துவதற்கேற்ப நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கும். பீமன் முதிர்ந்த மூத்தவன்தான். ஆனால் அவனுக்குத் திரௌபதியிடம், அன்னை சொன்னதைப் போய்க் கூற எண்ணமில்லை. ஆனால் குந்தி சொல்லிவிட்டார், எனவே மனத்தின் குழப்பம் செலுத்தச் செலுத்த யோசிப்புடன் நடந்து கொண்டிருக்கிறான், அவன் செல்வது நீர் எப்படி ஒரு நெற்றைச் செலுத்துமோ அதுபோல அவன் மனக்குழப்பம் அவனைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதைக்காட்டும் காட்டும் உவமை இது.
பெண்ணின் பருவத்தைப் பேதை, பெதும்பை, மங்கை மடந்தை அரிவை, தெரிவை பேரிளம்பெண் எனப் பிரித்து வைத்துள்ளனர். இவற்றில் ”பேதைக்கு யாண்டே ஐந்து முதல் எட்டே” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எட்டுவயதுக்குட்பட்ட அச்சிறு பெண் மனத்தில் ஒரு தத்தளிப்பு இருக்கும். எதிலும் நிலைகொள்ளாமை குடிகொண்டிருக்கும். கவலை அச்சம் எல்லாம் இருக்கும். அர்ஜுனன் ஒரு கட்டத்தில் இந்நிலையில் இருக்கிறான். ”பெண், மண், புகழ் எல்லாமே ஒரு பொருட்டில்லை” என்கிறான். அப்பொழுது சகதேவன், “மூத்தவரே! தன் காதலுக்காகக் காத்திருக்கும் பேதைப் பருவப் பெண்ணின் நிலை கொள்ளாமை தங்களுடையது” என்கிறான். பேதைப் பெண்ணின் மனநிலை இங்கு சிறப்பான உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது.
அர்ச்சுனன் துருபதனிடம் அஸ்வத்தாமன் மீது படையெடுப்பது பற்றிப் பேசுகிறான். அர்ச்சுனன் பெருமூச்சுடன் எழுந்து “நான் இதை இளவரசியிடம் சொல்லவேண்டும் என அன்னை கோரினாள். பெண்ணிடம் அரசு சூழ்தலைப் பேச என் அகம் ஒப்பாது. எனவே அரசரிடமே பேசிவிடலாமென்று வந்தேன்” என்றான்.
“அது நன்று. நேராகச் செல்லும் அம்புதான் விசைமிக்கது” என்றான் தருமன்.
சாதாரண உவமை இது என்றாலும் நேராகச் செல்லும் அம்பில்தான் வேகம், கூர்மை, இலக்கைச் சென்று அடையும் தன்மை ஆகியன இருக்கும், வளைந்து அல்லது சாய்வாகச் செல்லும் அம்பில் இவை இருக்க வாய்ப்பில்லை. எனவே திரௌபதியிடம் சொல்லிப் பேசித் திட்டமிடுவதை விட அர்ஜுனன் நேராக துருபதனிடம் பேசியதைப் பற்றி தருமன் இப்படிக் கூறுகிறான்.
அர்ஜுனன் கேட்க சூதர்கள் ஹிரண்யாக்ஷன் கதையைப் பாடுகிறார்கள். ஹிரண்யாக்ஷனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். ஆனால் அவன் அந்தகனாக இருக்கிறான். பின் அந்த அந்தகன் தனக்குக் கண்களைப் பொருத்திக் கொள்கிறான்.அதை ஜெ. இப்படி எழுதுகிறார். “. அந்தகன் மழையில் கரைந்தழிந்த சிற்பமெனத் தோன்றிய தன் விழியற்ற முகத்தில் கண்களிருக்கும் இடத்தில் இரண்டு நீலவைரங்களை கருவிழிகளாகப் பதித்துச் செய்யப்பட்ட பொய்க்கண்களை பொருத்திக்கொண்டான்”
விழியில்லாத முகம் அழகு குறைந்துதான் தோன்றும். அது அழகான சிற்பம் மழை நீரில் கரைந்தழிந்ததைப் போல இருந்ததாம். அதாவது பாதி உரு இருக்கும். மீதி அழிந்திருக்கும். பொருத்திக் கொள்ளூம் பொய்க்கண்களுக்கு உவமைகள் வைரங்கள். அதுவும் நீல வண்ணம் உடையவை. இக்காலத்தில் பொருத்திக் கொள்ளும் லென்ஸ் போன்றவை. அவை மின்னக்கூடியவை அதனால்தான் வைரங்களுக்கு நிகர் எனக் கூறப்படுகின்றன போலும்.
மீன் கூட்டம் நீருக்கு மேல் வந்து மேய்ந்து கொண்டிருக்கும். ஏதாவது நிழல் தண்ணீரில் பட்டாலே போதும் அவை உடனே நீருள் மறைந்து போகும். இதுவும் உவமையாக ஓரிடத்தில் வருகிறது. மாயை அர்ஜுனனிடம் ஒரு கதை சொல்லிவிட்டுச் சிலைபோல இருக்கிறாள். அப்பொழுது அங்கே திரௌபதி வருகிறாள்.
இப்போது அர்ஜுனன் மாயையைப் பார்க்கிறான். ”அவன் விழியசைவே அவளை கலைக்கப் போதுமானதாக இருந்தது. நிழல்பட்டு நீருள் மறையும் மீன்குலம் என அவளில் எழுந்தவை எல்லாம் உள்ளடங்கின” என்பதுதான் இங்கு சொல்லப்படும் உவமையாகும். மாயை இன்னும் என்னென்ன சொல்லலாம் என எண்ணியிருந்தாளோ அவை எல்லாம் மீன்கூட்டம் நீருள் மூழ்கி மறைவதைப் போல அவளுள் அமிழ்ந்து போயினவாம்.
திரௌபதி அர்ஜுனனிடம் வருகிறாள். இருவர் பார்வைகளும் கலந்தன. திரௌபதி தன் பார்வையை விலக்கிக் கொள்கிறாள். ”அப்படி விலக்கியமைக்காக சினம்கொண்டு மீண்டும் அவனை நோக்கி “சீ” என்றாள். நஞ்சு உமிழ்ந்த பின் நாகம் என அவள் உடல் நெளிந்தது” அந்தச் ‘சீ” என்னும் சொல்லில் அவள் தன் மனக்குமுறல், சினம், நாணம், காமம், எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடுகிறாள் நாகத்தின் பெருமையே நஞ்சுதானே? அது போன பின் இருக்கும் நிலைக்குத் திரௌபதி தள்ளப்பட்டிருக்கிறாள்.
திரௌபதிக்குக் கூறப்படும் இந்த நாகத்தின் உவமையானது பலவரிகள் சென்றபின்னும் அவள் அழும்போதும் கூறப்படுகிறது. திரௌபதி இப்பொழுது அழுது கொண்டிருக்கிறாள். அவள் அழுவதால் கழுத்து சுருங்கி விரிகிறது. இரை விழுந்த நாகம் போல அவள் கரிய மென்கழுத்து சுருங்கி விரிந்து அதிர்ந்தது என்பது இங்கு சொல்லப்படும் உவமையாகும். உவமை மாறாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்பராமாயணத்தில் வரங்கள் பெற வேண்டி கைகேயி தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து கிடப்பாள். அப்பொழுது அவளைக் காண தயரதன் வருவான். வந்த தயரதன் கைகேயியைத் தூக்குவான். அதற்குக் கம்பர் ஒரு யானை மாலையைத் தூக்கியது போலத் தூக்கினான் என்று உவமை கூறுவார், சிறிது நேரம் கழித்துக் கைகேயி வரங்கள் கேட்கத் தயரதன் கீழே விழுவான். நாகத்தால் தீண்டப்பட்ட யானை போல விழுவானாம். கைகேயிக்கு மாலை என்று கூறியதை மாற்றி நாகம் என்று கூறிய கம்பர் தயரதனுக்கு யானையை மாற்றாமல் கூறியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.
காமம் பற்றி அர்ஜுனன் சொல்லும் சொற்கள் முக்கியமானவை ஆகும். அவனுக்கு மிகவும் ஏற்றவை அவை. காட்டுவிலங்கைக் காமத்துக்கு உவமையாகக் கூறுகிறான், ஒரு விலங்கு வீட்டில் வளர்க்கப்பட்டால் அதைப் பழக்கிவிடலாம். தன் குணங்களை மாற்றிக் கொண்டு மிக அமைதியாகிவிடும். ஆனால் காட்டுவிலங்கு எவ்வகைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது. மனம் போனபடி ஓடும். அவ்வளவு எளிதில் யாருக்கும் கட்டுப்படாது. அதனால்தான் அர்ஜுனன் திரௌபதியிடம் இப்படிக் கூறுகிறான். “என் காமம் தனித்த காட்டுவிலங்கு. அது ஒருபோதும் ஒருவருக்குக் கட்டுப்படாது”
அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்கிறான். “நீ ஒரு உளச்சித்திரம் கொண்டிருக்கலாம். நான் இங்கே உன்னை எண்ணி ஏங்கி காத்திருப்பேன் என்று. காமத்தால் கொதிக்கும் என் மேல் ஒரு குளிர்மழைத்துளியாக விழலாம் என்று” . இந்தச் சொற்றொடர்களில் காலம் காலமாகக் கூறிவரும் உவமை மாற்றம் பெறுகிறது. பெரும்பாலும் பெண்ணை நிலமாகவும் ஆணை மழைத்துளியாகவும்தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. ஆனால் திரௌபதிக்காகக் காத்திருப்பதால் தான் கொதித்திருப்பேன் என்றும் தன்னைக் குளிர்விக்க அவள் ஒரு மழைத்துளியாகத் தன்னை நினைத்துக் கொள்வாள் என்றும் அர்ஜுனன் சொல்வது புதுமைதான்.
சினம் கொண்டுள்ள திரௌபதியை அர்ஜுனன் அணைக்கிறான். முதலில் அவள் எதிர்ப்பு காட்ட்டுகிறாள். திமிறுகிறாள், ஆனால் அவன் அணைக்க அணைக்க அவள் அடங்கிப் போகிறாள். இந்த இடத்தில் திரௌபதி அடங்குவதை, ஜெ, “உயிரிழக்கும் விலங்கு என அவள் உடலின் திமிறல் மெல்ல மெல்லத் தளர்ந்தது” என்று எழுதுகிறார்.
புலி மானைத் துரத்திக் கழுத்தைக் கவ்விப்பிடிக்கும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். புலி கழுத்தைப் பிடித்ததும் மான் கால்களை உடலை அசைத்துத் திமிறிப் பார்க்கும். ஆனால் புலி விடாது. அது கழுத்தை இறுகக் கவ்வக் கவ்வக் மானின் உடல் மெல்ல மெல்ல அடங்கிப் போகும். நேர்த்தியான உவமை இது.
ஒரே வாக்கியத்தில் ஒரே பொருளுக்கு இரண்டு உவமைகள் கூறப்படுவதையும் பார்க்க முடிகிறது. நகுலனும் விதுரரும் தேரில் சென்றுகொண்டிருக்கின்றனர். குறுக்கே யானைக் கூட்டம் செல்வதால் தேர் சற்று நிற்கிறது. யானைக் கூட்டம் கடந்து செல்வது, ”கையில் சங்கிலியுடன் கங்கையில் நீராடி வந்த பன்னிரு யானைகள் கரிய மதில் சுவரெனத் தெரிந்து இருள் அசைவது போலக் கடந்து சென்றன” என்று காட்டப்பட்டுள்ளது. யானைகளுக்கு முதலில் கரிய மதிலும், பின்னர் இருளும் என இரண்டு உவமைகள் வருவதை அனுபவிக்கலாம்..
நகுலனை அலங்கரிக்கிறார்கள். மிருஷை அதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். நகுலனின் சிகையை அலங்கரிப்பது இப்படிக் கூறப்படுகிறது. “அவரது மெல்லிய விரல்கள் அவன் தலையில் சிட்டுகள் கூட்டில் எழுந்தமர்ந்து விளையாடியது போல் இயங்கின.”
சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் சும்மா ஓரிடத்தில் அமர்ந்திருக்காது. அதுவும் கூட்டில் உட்காருவது போல் போய் அமரும். ஆனால் அடுத்த வினாடியே விர்ரென்று எழுந்து பறக்கும். அது போல மிருஷை தன் விரல்களை நகுலன் தலையில் வைப்பதும் எடுப்பதுமாக இருந்தாராம்.
. திரௌபதியின் கண்கள் கருங்கரடியின் நகங்கள் போல் இருப்பதாக ஓரிடத்தில் புதியதோர் உவமை சொல்லப்படுகிறது. அவள் கண்கள் இரு பக்கங்களிலும் மை யிடப்பட்டுக் கூர்மையாக்கப்பட்டுள்ளனவாம். ஜெயமோகனின் ”தீற்றல்” சிறுகதை இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. அக்கதையின் மையமே கண்ணுக்கு மையிட்டு அதன் நுனியில் வால் போலக் கூர்மையாக்கபடுவதுதான். கரடி பிடித்த பிடியை விடாது என்பார்கள். திரௌபதியிடம் நகுலன் செல்கையில் விதுரர் அவனிடம், “நீ அவளிடம் உன்னை ஒப்படைத்து விடு” என்பார். அவள் உன்னைக் கையாளுவாள் என்பதுதான் விதுரரின் கூற்றின் மறைபொருளாகும்.
திரௌபதியின் கண்களுக்கு, “அவற்றின் இரு பக்கங்களிலும் கூர்முனைகள் மையிடப்பட்டு கருங்கரடியின் நகங்கள் போலிருப்[பதாக நகுலன் எண்ணினான்” என்பது புதிய உவமையைக் கொண்டுள்ளது.
கன்னி ஒருத்திக்குத் திருமணமான உடன் அவள் உள்ளத்திலும், உடலிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எந்த நாளில், எப்பொழுதில் ஏற்படுகின்றன என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாது. மாற்றம் நிகழ்ந்த பின்னரே உணர முடியும். ஒரு மலர் தானாகக் கனியாகிறது. அதுவும் எப்பொழுது காயாக மாறுகிறது என்பதை யாரும் அறியமாட்டார். இதனை உவமையாக்கிக் “கன்னி குலமகளாகும் விந்தைக்கு நிகரானது மலர் கனியாவது” எனக் கூறப்படுகிறது. சுகன்யை சியவனரை மணந்தபின் கொள்ளும் மாற்றத்தைக் குறிக்க இந்த உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அஸ்வினி தேவர்கள் மணமான சுகன்யையிடம் வந்து அவளை விரும்புவதாகச் சொல்ல சுகன்யை அவர்களைச் சபித்துவிடுவேன் என எச்சரித்து அனுப்பி விடுகிறாள். ஆனால் பின்னர் உன் கணவருக்கு நாங்கள் விழி தருவோம் என்று சொல்ல சுகன்யை மணம் கணவருக்கு விழி வருகிறதே என்று சஞ்சலப்படுகிறது. அதேவர்கள், நாங்களிருவருடன் உன் கணவரும் நீரில் முழ்கி எழுவோம். அப்பொழுது உன் கணவர் பார்வையை மீண்டும் பெறுவார். ஆனால் நாங்கள் மூவரும் ஒரே உருவத்தில் இருப்போம். நீ உன் கணவர் யாரென்று கண்டறிந்து அடைய வேண்டும்” என்கிறார்கள்.
சுகன்யை இவ்விவரத்தைத் தன்கணவரிடம் சொல்லி என்ன செய்வது என்று கேட்கிறாள். அதற்கு. சியவனர், “என்ன செய்வது என நீ என்னிடம் கேட்டபோதே உன் உள்ளத்தின் விரிசலைக் காட்டியது” என்கிறார். இத்தனை முறை அவர்கள் வேண்டியபோத்தெல்லாம் மறுத்த சுகன்யை இம்முறை தன்னைக் கேளாமலேயே மறுத்திருக்க வேண்டும். ஆனால் தன்னைடமே வந்து என்ன செய்வது என்று கேட்டால் அவள் உள்ளம் ஓரளவிற்கு இதை ஒப்புக்கொள்ளத் தயாராகிவிட்டது என்றுதானே பொருள். அதைத்தான் உன் உள்ளம் விரிசல் பட்டுவிட்டது என்று ஓர் உவமை மூலம் சியவனர் கூறுகிறார்.
இப்படி வெண்முகில் நகரத்தில் தன்கருத்தை வலியுறுத்த, வாசிக்கும் வாசகரின் உள்ளத்தில் வாசிப்பின் கருத்து போய்ப் படியப் பல உவமைகள் மொழியப்பட்டுள்ளன’
===============================================================================
No comments:
Post a Comment