Tuesday 22 August 2017

புதுவை கூடுகை - 06

ஆறாவது புதுவைக்கூடுகை-மணிச்சங்கம்.

பகுதி ஒன்று.

     ஆசானின் வாசகர்களுக்கு வணக்கம்.புதுச்சேரி வெண்முரசு ஆறாவது கூடுகை,பொன்மாலைப்பொழுதில் அறிஞர் ஹரிஜி அவர்களின் கலை சொட்டும் மனையில் இனிதே நிகழ்ந்து முடிந்தது.நிகழ்விலிருந்து சில துளிகள்....

திரு.நாகராஜன் அவர்களின் பார்வையில் மணிச்சங்கம்....
           காசிநாட்டு  இளவரசிகள் இருவர் மட்டும்,தேவவிரதரால் சிறை எடுக்கப்பட்டு அஸ்தினபுரி வரும் செய்தி விசித்திரவீர்யனுக்கு அளிக்கப்படுகிறது. அவன் நோய்கொண்டவனாக உள்ள போதும்,மற்றொரு இளவரசி எங்கே என்று கேட்பதைக் குறிப்பிட்டு,அவனின் ஆளுமையை இழிவாகஎண்ணியதையும்,பின்னர் அம்பையின் பாதம் பணியும் நிலை,சற்று அவன்மேல் சாஃப்ட் கார்னர் ஏற்பட்டதையும் அவருக்கே உரிய எள்ளல் தொனியுடன் விளக்கினார்.
பின்னர் மணிச்சங்கம் பகுதியில் உள்ள விசித்திர வீர்யன்-ஸ்தானிகர் உறவு,மணி மஞ்சத்தில் அம்பிகையுடன் நடத்தும் உரையாடல்,சத்யவதியுடன் நடத்தும் விவாதம் இவற்றால் அவன் விஸ்வரூபம் எடுத்து வருவதைக் கண்டு,அந்த சிறு பாத்திரத்தின் வீச்சை வடிவமைத்த ஜெவின் திறனை வியந்தோதினார்.
   விசித்திர வீர்யன்,ஸ்தானிகரிடம் வாழ்வின் தீரா இன்பத்தைக் கூறும் வரிகளைச் சொல்லி “வாழ்தலின் இனிமை”யை உணர்வது
மனிதர்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை வளியுறுத்தினார்.
// நான்குவருட வாழ்க்கையை அள்ளி நினைவாக்கிக்கொள்ள முயன்றேன். ஒருவருடத்தைபின்பு ஒருமாதத்தைஒருநாளை. ஸ்தானகரேஒருநாழிகையை வாழ்ந்து முடிக்க இப்புலன்களும் இதை ஏந்திநிற்கும் சிறுபிரக்ஞையும் போதவில்லை. ஸ்தானகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார். அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை.//
        மேலும் ஆசானின் கைவண்ணத்தில் புதிய தமிழ் வார்த்தைகள்,காவியம் முழுதும் சிறப்பாக பயின்று வருவதை,அவை ஏற்படுத்தும்  பரவசத்தை எடுத்துக்காட்டினார்.(அமாவாசை-கருநிலவுநாள்)
   அதேபோல் குறிப்பை உணர்ந்து பணிவிடை செய்யும் சேடி சிவையின் குண இயல்பை சிலாகித்தார்.(காண்டீபத்தில் வரும் சேடி மாலினி மற்றும் மாமலரில் வரும் சேடி சாயை போல்)
அவள்தான் வில்லுக்கொரு விதுரனின் தாயாக மலரப்போகிறவள் என்பதை பண்ருட்டி நண்பர் குறிப்பிட்டார்.எந்தவொரு சிறு பாத்திரத்தையும் வலிமையுடன் உருவாக்கும் ஜெவின் மேதைமையை விவாதிக்க அதுவொரு காரணமாக விளங்கியது.

நண்பர் மணிமாறன் பார்வையில்...

    அம்பிகை விசித்திரவீரயனுடன் உரையாடும்போது கூறும் சத்தியவான்-சாவித்திரி கதை விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்பது நண்பர் மணியின் கூற்று.குறிப்பாக மூன்று நதிகளை சாவித்திரி கடந்து போகும்போது,காலன்,யமன்,தருமன் இவர்களிடம் ஏற்படும்
உரையாடல் ஆழ்ந்த பொருள் கொண்டது என்றார்.
   முக்கியமாக நியோகம் என்னும் அசாதாரணமான சடங்கை,அம்பிகை ஏற்பதற்கான சில சமிக்ஞைகள்,அவள் கூறும் கதையின் போக்கிலேயே அவளின் எண்ணமாக மிளிர்கின்றது என்பது சிறப்பாக எடுத்துக்காட்டினார்.(மூச்சுவாங்கும் குரலில் விசித்திரவீரியன் அவள் காதுக்குள் கேட்டான் தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்ரிநோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?” அவள் எண்ணிக்கொண்டது தன் குழந்தையைப் பற்றிதான். ஒருபோதும் தன்னால் பிரக்ஞாவதியை தாண்டமுடியாதென்று அறிந்தாள்.)

நண்பர் சிவாத்மாவின் பார்வையில்....

   அமாவாசையை ஆங்கிலத்தில் நோ மூன் டே(நிலவு இல்லாத நாள்)என்பதைவிட ஜெவின் கருநிலவுநாள் என்ற வார்த்தை கவித்தன்மை கொண்டதாக உள்ளது என்று கூறினார்.  
நான்குவயதில் விசித்திரவீர்யனின் உயிர் இரவு வரை மட்டுமே தரிக்கும் என்று மருத்துவர்கள் கெடு வைத்துவிடுகின்றனர்.அப்போது அவன் கண்களை மூடி உள்ளத்தில் ஆழும்போது ஏற்படும் எண்ணங்கள் மற்றும் காட்சிகளாக விரிபவை மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என ஐம்புலன்களில் உணர்வதே என்று,சிறந்த அவதானிப்பை முன்வைத்தார்.( என் அன்னையை எண்ணிக் கொண்டேன். அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால் கண்டேன். என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணுவணுவாகப் பார்த்தேன். நான் உண்ட இனிய உணவுகளைபார்த்த அழகிய மலர்களைகேட்ட இனிய இசையை என)

  மேலும் மணிமஞ்சத்தில் அம்பிகைக்கும் மற்றும்
விசித்திரவீர்யனுக்கும் நிகழும் உரையாடலின் முக்கியத்துவத்தைத் தொட்டுக்காட்டினார்.

திரு.ஹரிஜி அவர்களின் பார்வையில்....
    மணிச்சங்கம் என்பதற்கு,சங்கம் எனில் கூடுதல்
என்பதால் அவ்வாறு பொருள் கொள்ளலாம் என்ற சிறப்பான பார்வைக்கோணத்தை முன்வைத்து ஆரம்பித்தார்.
  பேரரசி சத்யவதியின் ஆளுமையை செலுத்துவது,தாய்மை
என்ற வலுவான உணர்ச்சியே என்பதை,விசித்திரவீர்யனுடன் நடக்கும் டிபேட்டை முன்வைத்து தொட்டுக்காட்டினார்.
    பிரதீபரின் மனைவியும்,விசித்திரவீர்யனின் பாட்டியும்,சிபிநாட்டு
இளவரசியும்(பாகிஸ்தான்)தேவாபி,சந்தனு மற்றும் பால்கிஹனின்
தாயாருமான சுனந்தையின் வாழ்க்கை,எவ்வாறு அவனை பாதித்தது
குறித்தும் சொன்னார்.

   நீர்ச்சுனையில், தன் மூத்த தமையனான சித்ராங்கதனுடன் ஏற்படும் சந்திப்பில்,பிம்பமாற்றத்தின் விளங்கமுடியாத தன்மையை
//மூத்தவரே,நான் உங்களை பாழ்படுத்திவிட்டேனா,இல்லை பிடித்தமான முறையில் பாழ்படுத்திக்கொள்ளத்தானே வாழ்வே அளிக்கப்பட்டிருக்கிறது//என்ற ஜெவின் வரிகளைக்கொண்டு,தான் எண்ணுவதை விளக்கி முடித்தார்.

திரு.வளவதுரையன் அவர்கள் பார்வையில்....
     ஐயா அவர்கள் வந்தவுடனேயே தன்னுடைய “சங்கு” என்னும் பெயர் கொண்ட சிறுசஞ்சிகையை,தனிச்சுற்றுக்கான இதழின் பிரதிகளை   அனைவர்க்கும் அளித்தது மிகவும் உவகையாக இருந்தது.அதில் முதல்பக்கத்தைப் புரட்டியபோது கண்ணில் பட்டது “சில்லறை”என்ற தலைப்பில் திரு.நாஞ்சிலின் ஆக்கம்.அது கட்டுரையா,சிறுகதையா என்று கேள்வி எழுப்பியபோது,இதேதான் அவரிடம் வினவினேன்,ஏதேனும் ஒரு கேட்டகிரியில் போட்டுகொள்ளுங்கள் என்று நாஞ்சில் பதில்உரைத்ததாகவும் ஐயா சொல்லியபோது சிரிப்பலைகள் எழுந்து ஓய்ந்தது.(கலாப்ரியாவின் “உருள்பெருந்தேர்”கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன்.சமீபத்தில் சீனு குறிப்பிட்டிருந்தாரோ?)
    முதலில் தனக்கும்,ஜெவுக்குமான பல ஆண்டு கால உறவின் நெருக்கத்தையும்,கடித தொடர்புகளையும் சொல்லியது நெகிழ்ச்சி.
(தான் ஜெவுக்கு எழுதிய நான்கு பக்க கடிதமும்,பதிலாக ஜெவின் முப்பத்தைந்து பக்க கடிதம் வந்ததும் இப்படி-))))
    ஊழின் வலிமை வெண்முரசில் பயின்று வருவதை அழுத்தமாகவே,பல உதாரணங்களுடன் விளக்கினார்.(பல்லியின் திறந்த வாய்க்குள்,ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப நுழையும் சிறு பூச்சிபோல)
   ஜெவின் புதியவார்த்தைகள் உருவாக்கத்திற்கு நாஞ்சில்நாடன் அருகில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தன் எண்ணத்தை வெளியிட்டார்.(பெருமுரசம் இமிழத்தொடங்கியது)
   அஸ்தினபுரியின் அவையில் அமர்ந்திருக்கும் தொல்குடிகளின் வரிசை,குறிஞ்சி.முல்லை,மருதம்,நெய்தல் நிலத்தைக்குறிக்கும் வகையில் ஜெ சித்தரித்துக்காட்டுவதை,நுண்ணிய முறையில் அவதானித்தார். (ஸ்தானகர் உரக்க பூமிதாரர்களேகடல்சேர்ப்பர்களேவேடர்தலைவர்களேஆயர்குடிமூத்தாரே!)
       விசித்திரவீர்யனை மணக்கமறுத்து,எதிர்ப்பை தெரிவிக்கும் அம்பிகையை,தன் சாதுர்யமான நாத்திறத்தால் எதிர்கொள்ளும்
சத்யவதியின் தீரத்தை வியந்து கூறினார். (உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.)
    மேலும் விஜய் டி.வியில் தினமும் காலை,திருமதி.இளம்பிறை மணிமாறன் நிகழ்த்தும் பாரதசொற்பொழிவு தரமாக உள்ளதாகப்பகிர்ந்துகொண்டது பயனுள்ள,புதிய தகவலாக இருந்தது.

 ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது திறப்புகளுக்கு இடமளிக்கும் வகையில்,வெண்முரசின் இந்தச்சிறிய பகுதியே இத்தனை செறிவுடன் உள்ளதை வியப்புடன் நினைந்தவாறே நிறைந்தது இம்மாதக்கூடுகை.

இந்த மாதம் மூத்த சகோதரர் துரைவேல் அவர்கள் மற்றும் இளைய சகோ சீனுவை மிஸ் செய்தது ஆதங்கம்.
நன்றி.(தொடரும்)


வெண்முரசு புதுவை கூடுகை -06
27-07-2017அன்று நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில்  சிறப்பு அழைப்பாளரும் , அமைப்பிற்கு ஆழ்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டவரும்  இலக்கிய உலகில் மிக செறிவானஅனுபவம் உள்ளவரும் திரு.ஜெயமோகன் அவர்களின் நீண்டகால நண்பருமான திரு.வளவதுரையன் அவர்கள் கலந்து கொண்டது குழுமத்தை வேரோர் தளத்திற்கு நகர்த்த வல்லது . அவர் அன்று ஆற்றிய உரையின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
மணிச்சங்கம்
மூல பாரதங்களில் அம்பை பேசப்பட்ட அளவுக்கு அம்பிகை அம்பாலிகை பற்றிப் பேசப்படவில்லை; வெண்முரசில் அவர்களுக்குச் சரியான அளவிற்குப் பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையும், அம்பாலிகையும் தேரில் அஸ்தினாபுரம் நுழைவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது.
அம்பையைப் பொருத்தமட்டில் சினத்தின் முழு உரு; பழிவாங்கும் எண்ணம் கொண்டவள்; எளிதில் உணர்ச்சிவயப்படுபவள்; அம்பாலிகையைப் பொருத்தமட்டில் அவள் ஒரு விளையாட்டுப் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். ‘பாண்டு’ என்னும் பொம்மையை வைத்து விட்டு வந்ததற்காக வருந்துகிறாள். பின்னால் பாண்டு அவள் வழி பிறக்கப்போவதும், அவன் பொம்மையாக இருக்கப் போவதும் இங்கு மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
     அத்துடன் சிறுபிள்ளைகள் கோள் சொல்வதுபோல், அவள் அம்பாலிகையிடம், “மறுபடி கிள்ளினால் பீஷ்மரிடம் சொல்லி விடுவேன்” என்கிறாள். பாதி அம்பை, மறுபாதி அம்பாலிகை இதுதாம் அம்பிகையாவாள். அம்பை தன் வாழ்வைச் சரியாக முன்கூட்டியே தீர்மானித்து விட்டாள். யாரை மணக்க வேண்டும் என முடிவெடுத்து விடுகிறாள். அம்பாலிகையோ தன் வாழ்வில் எது வரினும் ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள். பீஷ்மருடன் வந்தாயிற்று எதுவந்தாலும் சரி என அவள் எண்ணுவது ஆற்றுவழிப்படும் தெப்பம்போல அவள் செல்லத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
ஆனால் அம்பிகை இறங்கும்போதே கண்களை மூடிக்கொண்டு தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை கண் பார்வை இல்லாதவன்தான் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். தவிர இப்படி சிறையெடுக்கப்பட்ட்தே அவளுக்குப் பிடிக்கவில்லை. “நாளை நம் படைகள் இந்நகரை வென்றுவிடும்; செல்வச் செருக்கையும் பெருந்தோற்ற விரிவையும் பார்க்கக்கூடாது” எனக் கூறுகிறாள். ஆனால் விதியின்வழி வேறுவிதமாய் இருக்கிறது.
தொன்மங்களில் விதி ஒரு தவிர்க்க முடியாத அம்சம். ”விதி பிடர் பிடித்து உந்துகிறது” என்பான் கும்பகர்ணன். ”நதியின் பிழையன்று; பதியின் பிழையன்று; இது விதியின் பிழை” என்பான் இராமன்; மேலும் இழைக்கின்ற விதி முன்செல்லக் கானகம் கிளம்புவான் இராமன். அம்பிகையின் வாழ்விலும் விதி அவளை மாற்றுகிறது. அதை ஜெயமோகன் தொடங்கும்போதே ஒரு உவமை மூலம் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.
”பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோவிதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறு பூச்சி போல அவள் சென்று கொண்டிருந்தாள்” என்பது அவள் வாழ்வு அவள் எண்ணப்படி அமையவில்லை என்பதை உணர்த்துகிறது. முதலில் அவ்வளவு தீவிரமாக சிறையெடுத்ததை எதிர்க்கிறாள். “நாம் என்ன பிழை செய்தோம்” என்க்கேள்வி கேட்கிறாள். “நாம் மிருகங்களா” என்று சினத்துடன் பேசுகிறாள். சத்தியவதியிடம் மணமுறைகள் பற்றி விவாதம் செய்து வாய்ச்சொல்லிடுகிறாள். சத்தியவதியின் வாதம் இந்த இடத்தில் மிக நன்றாகக் காட்டப்படுகிறது. “கவர்ந்து வந்தபோதே பிற மணமுறைகள் இல்லாமல் போய்விட்டது. என்கிறாள் சத்தியவதி. அம்பிகையோ “என் வயிற்றில் உன் ,மைந்தனின் கரு உண்டாக விடமாட்டேன்” என்கிறாள். மேலும், ”அப்படிப்பட்ட்ட சூழல் வருமாயின் நான் உயிர் துறப்பேன் என்கிறாள். இந்த இடத்தில் வாதத்தை நிறைவு செய்யும் விதம் ஜெ. வின் கைவண்ணத்தில்  மிளிர்கிறது. இறந்த பிறகு அந்த உடலின் ஆன்மா இவ்வுலகை விட்டு நற்கதி அடைய வேண்டுமானால் அதற்குக் கருமகாரியங்கள் நடைபெற வேண்டும் அன்றோ? அதைத்தான் ஜெ. புதுச் சொல்லாக உதகச் செயல்கள் எனக்குறிப்பிடுகிறார். இவ்வளவு மன எண்ணங்களுடன் அழுத்தமான கொள்கையுடன் இருந்தவள் மாறுவது விதியின் விளையாட்டுதானே? ஜெ. இதைப் பீஷ்மர் மூலம் நிறைவேற்றுகிறார்.
யாருக்கும் வணங்காத பிதாமகர் அவளிடம், “இது என்பிழை” என்றும் ””என்னைத் தீச்சொல்லிடுங்கள்” என்றும், ஏழு பிறவிகள் நரகத்தில் உழலுகிறேன்” என்றும் கூறும் போது அம்பிகையின் மனம் திடீரென மாறுகிறது. “கற்கோபுரம் வளையலமா? என்க்று அவரிடம் கேட்டு சத்தியவதியின் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறாள்.
முதலிரவு முடிந்த பின் ”இன்று கருநிலவு; கரு உண்டாக வேண்டிய நாள்; வீணாக்கி விட்டாயே” என்றெல்லாம் பேசும் சத்தியவதியிடம் விசித்திர வீரியன் சொல்லும் சொற்கள் முதல் இரவில் ஓர் ஆண்மகன் நடக்கவேண்டிய விதத்தையே காட்டுகிறது. அவன், “வயலைப் பண்படுத்த வேண்டாமா?” என்று கேட்கிறான். மனைவியுடன் கலந்து பேசி மனத்தளவில் அவளைத் தயார் செய்ய வேண்டும் என்பது இங்குக் கம்பி மேல் நடப்பது போல் உணர்த்தப்படுகிறது.
அவையில் ஸ்தானிகர் எல்லாரையும் விளிக்கும்போது அனைத்துக் குடிகளையும் கூறுகிறார். அதாவது, ‘பூமிதரார், கடல் சேர்ப்பர், வேடர்தலைவர், ஆயர்குடி என்று அவர் அழைப்பது நால்வகை நிலக்குடிகளும் அங்கு வந்திருப்பது மட்டுமன்றி அவர்கள் எல்லாரும் மன்ன்ன் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. பூமிதரார் என்பது மருதத்தையும், கடல்சேர்ப்பர் என்பது நெய்தலையும், வேடர்தலைவர் என்பது குறிஞ்சியையும், ஆயர்குடி என்பது முல்லை நிலத்தையும் காட்டுகிறது எனலாம்.
இன்னும் இப்பகுதியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நேரமின்மையால் நிறைவு செய்கிறேன்.
- வளவதுரையன் .









புதுவை கூடுகை - 05

புதுவை கூடுகை - 05


அன்புள்ள நண்பர்களுக்கு.. வணக்கம். 

நிகழ்காவியமான "வெண்முரசு கலந்துரையாடல் "  புதுவையில் சென்ற பிப்ரவரி 2017  முதல் மாதந்தோறும் தொடர்ந்து  நடைபெற்றுவருகிறது.புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு.பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.


26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது . இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்பிற்குரிய நண்பரும் , வெண்முரசின் தொடர் வாசகருமாகிய மதிப்பிற்கினிய திரு.பாவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெண்முரசின் சொல்மடிபில் கரந்துள்ள அர்த்தவிசேஷங்களை விரித்தெடுக்க இருப்பது , அதன் பிற பரிமாணங்களில் ஒளிரும் தருணங்களை நம்முள் நிகழ்த்தலாம்.

திரு. பாவண்ணன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல், கவிதை ,குழந்தைப்பாடல்கள் என பலத்தளங்களில் முப்பதாண்டுகள் மேலாக இயங்கிவரும் தமிழின் முக்கிய  எழுத்தாளரும், மகாபாரததத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகி புனையப்பட்ட கன்னட எழுத்தாளர் திரு எஸ் எல் பைரப்பாவின்  பர்வா நாவலை தமிழ்ப்படுத்தியவரும் கன்னடத்தின் முக்கிய இலக்கிய நூல்களின் ஆகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் என்பதை நாம் அனைவரும்  அறிவோம். இந்தக் கூடுகை அனைத்து விதத்திலும் மிக முக்கியமானதாக நிகழவிருக்கிறது.

அதில் பங்குகொள்ள நம் கூடுகை உறுப்பினர்கள், வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன்அழைக்கிறோம்..

நாள்:-

திங்கட்கிழமை  (26-06-2017) காலை 10:30  மணிக்கு தொடங்குகிறது.

இடம்:-

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,
" ஶ்ரீநாராயணபரம்",
முதல்மாடி,
27, வெள்ளாழர் வீதி ,
புதுவை-605001

புதுவை வெண்முரசுக்கூடுகை  5 (நாள்: 26.06.2017 / திங்கள்)


அனைவருக்கும் வணக்கம்

துவக்கப்பட்டு சில மாதங்களே ஆன எமது புதுவை வெண்முரசுக் கூடுகைக்கு  அதன் முளைவிடு பருவத்திலேயே வந்து பங்கேற்று வெண்முரசின் இன்றைய காலத்தேவையையும் அதன் பிரம்மாண்டத்தின் மீதான தனது அவதானிப்பையும் திரு பாவண்ணன் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது எங்களுக்கான வாழ்த்துநீர் பொழிதலாகவே கொள்கின்றோம்.  மேலும் பழந்தமிழிலக்கியத்தில் தேர்ச்சிபெற்ற நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவரான திரு வளவ. துரையன் அவர்கள் கடலூரிலிருந்து வந்து கலந்துகொண்டது அளப்பரிய மகிழ்வளித்ததோடு பெருமிதத்தையும் அளித்துச்  சென்றது.  இனிவரும் கூடுகைகளை முன்னிருந்து நடத்தி தருமாறு அவரிடம் ஒரு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.  அது நிகழும் பட்சத்தில் வெண்முரசின்  நுண்ணிய வாசிப்பு புதுவை நண்பர்களிடையே விஸ்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர நமது அஜியின் திடீர் விஜயம் கண்டு பூரிப்பில் திக்குமுக்காடிப் போனோம்.               

மதிப்பிற்கினிய பாவண்ணன் அவர்கள் பேசியதிலிருந்து என் நினைவில் தங்கியவை..

சமகாலத்திற்கேற்ப இதிகாசங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருவதென்பது கடந்த நூறாண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. துவக்கமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரத மாதாவை நினைவுறுத்தும் விதம். பின்னர் பீமனை பாரதப் புதல்வர்களின் பிரதிநிதியாக உருவகித்து எடுக்கப்பட்ட கீசகவதம் நாடகம்.  காந்தியை கிருஷ்ணனாக பாவித்து இந்திய பாகிஸ்தான் போரை குருஷேத்திர யுத்தத்தோடு ஒப்பிட்டு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட குருஷேத்திரம் எனும் நாடகம்.  இவ்வாறாக ஒரு தேசிய அளவிலான தலையாயப் பிரச்சனையை உரக்க ஒலிக்கவைக்கும் பொருட்டு புராணங்களும் இதிகாசங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன.  ஏனெனில் அந்த இதிகாச கதாபாத்திரத்தின் குரல் ஒவ்வொரு இந்திய மனதின் குரலும் கூட.  அந்த வரிசையில் வெண்முரசு இந்து மதத்தின் பண்பாட்டின் மீதும் அதன் தத்துவச் சிந்தனை மரபின் மீதும் புத்தொளிப்பாய்ச்சி நவீன எழுத்துமுறையின் அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கி மறுகட்டுமானம் செய்து வருவது இன்றைய காலத்திற்கும் இனி வருங்காலத்திற்குமான ஓர் அத்தியாவசியத் தேவை என்றே கொள்ளலாம்.  புராணங்களின் மீதான வழமையான கற்பிதங்களை போட்டுடைத்து அதன் புதிய பரிமாணத்தை காணச் செய்யும் ஜெவின் மகத்தான இந்த எழுத்துப்பணி மாதுளையை உடைத்து அதன் முத்துக்களின் சுவையறியச் செய்தல் போல. 

எஸ் எல் பைரப்பாவின் பர்வா நாவல் ஆண்களின் ஆணவங்கள் மோதிக்கொள்ளும் குருஷேத்திர யுத்தத்தை பெண்களின் பார்வையில் முன்வைக்கும் விதத்தில் ஒற்றை இலக்கோடு மட்டுமே எழுதப்பட்டது.  ஆனால் வெண்முரசின் பரந்துபட்ட களம் உலகில்  இதுவரை எந்த இலக்கிய முன்னோடியும் முன்னெடுக்காதது.

மேலும் இடதுசாரிகளின் முதற்பாடநூலான ஏங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூலை வாசித்த எந்தவொரு இடதுசாரியும் வெண்முரசை கொண்டாடவே செய்வார்.  துரதிஷ்டவசமாக அவர்களிடையே ஏங்கல்ஸின் நூல் அடுத்தவர்க்கான சிபாரிசுநூல் மட்டுமே என்பதைத்தாண்டி பரவலான வாசிப்பிற்கு உள்ளாகவேயில்லை.

வெண்முரசு இந்தியிலோ ஆங்கிலத்திலோ மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய அளவில் கொண்டுசெல்லப்படவேண்டிய ஓர் அளப்பரிய சாதனை என்பதில் துளி ஐயமில்லை.  அதற்கான ஒருவன் வரும் வரை பொறுத்திருந்து காத்திருப்பதைத் தவிர நமக்கும் வேறு வழியில்லை.  ஏனெனில் கேரளத்திலோ கர்நாடகத்திலோ இலக்கியத்தின் நிலை வேறு.  இந்நேரம் வெண்முரசு சில நூறு ஆங்கில மொழிபெயர்ப்புகளை கண்டிருக்கும்.  யக்ஷகானத்திற்கும் கதகளிக்கும் உள்ள அவர்களின் ரசனையும் வரவேற்பும் நமது  தெருக்கூத்திற்கோ தோல்பாவைக்கூத்திற்கோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

வெண்முரசின் கதாபாத்திரங்களிலேயே பாவண்ணன் தனிச்சிறப்பாக விதந்தோதியது அணுக்கச்சேடி கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தையும்  வடிவமைப்பையும் தான்.

பாவண்ணன் சிறப்புரையைத் தாண்டி அமர்வை கொண்டு செல்வதில் எவ்வித முன்திட்டமிடலுமின்றிய நிலையில் நிகழ்வு நீர் வழிப்படூஉம் புணை போல தன்னொழுக்கில் முறைவழிப்பட்டு நிறைவடைந்ததில் பேரானந்தம்..

மிக்க அன்புடன்
மணிமாறன்.
















புதுவை கூடுகை - 04




திரு மணிமாறன் அவர்களின் பதிவு 

புதுவை வெண்முரசுக்கூடுகை  4 ( நாள்: 25.05.2017 / வியாழன் )

அனைவருக்குமென் வணக்கம்.

புதுவை வெண்முரசுக்கூடுகை பற்றிய அறிவிப்பு ஆசான் ஜெவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததின் விளைவாக இம்மாத அமர்விற்கு வெண்முரசின் தொடர் வாசகர்கள் மூவரை (பேராசிரியர் ஆனந்தன், மருத்துவர் சித்தார்த் பாரி, பொறியாளர் ராதாகிருஷ்ணன்) புதிதாக கண்டுகொண்டதில் மனநிறைவானந்தம். அவர்கள் வெண்முரசின் நுண்ணிய வாசிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

இம்மாத அமர்வின் தலைப்புப் பகுதியான அணையாச்சிதை பற்றி நானே துவக்கிப் பேசி எனது வாசிப்பை பகிர்ந்து கொண்டேன்.  அது கிட்டத்தட்ட திரும்பச் சொல்லுதல் போலாகிவிட்டது.  எனவே அதைத் தனிப்பதிவென இடுதலில் பொருளில்லை. ஆனால் கூறப்பட்ட அந்த கதாக்கிரமப்படி, நிகழ்வுகள் ஒவ்வொன்றாக தொட்டெடுக்கப்பட்டு நண்பர்களால் விரித்துரைக்கப்பட்டதில் எனது பேச்சும் பொருள் கொண்டுவிட்டதாக ஓர் அற்ப சந்தோஷம்.  தவிர வேறில்லை.

மிக குறிப்பாக சீனுவால் எடுத்துச் சொல்லப்பட்ட கோணம்.  அனைவரும் அணையாச்சிதை - உடலே சிதையாக ஆன்மா எரிவதையே பேசுவதாக எண்ணியபோது, தொன்றுதொட்டு இன்றளவும் ஓயாது எரிந்து கொண்டிருக்கும் காசி மாநகரை அதனுடன் இணைத்து பேசியது மிகச்சிறப்பாய் அமைந்தது.  தவிர பால்ஹிகன் தன் மூத்தச்சகோதரன் தேவாபி மீது கொண்ட பேரன்பினாலும் இளையச்சகோதரன் சந்தனு மீதான வெறுப்பினாலும்தான் சந்தனுவின் வழித்தோன்றல்கள் அனைவருக்கும் நோய்க்குறைபாடு என்றென்றைக்கும் இருப்பதாக தீச்சொல்லிடுகிறான் என்பதைத்தாண்டி பால்ஹிகன் தன் அண்ணன் தேவாபிக்கு அவன் நோய்குறைபாட்டால் கிடைக்கப்பெறாத அரசப்பதவி, அதில் அமரவிருக்கும் எவனொருவனுக்கும் அந்நோய்குறைபாடும் அதுவுள்ள மைந்தரும் அமைவதாகவே வாசிப்பது  பொருத்தமாகத் தோன்றியது, கங்கை சாட்சியான தன் அண்ணன் மீதான பேரன்பிற்கும் அதுவே பொருள் தருவதாயுள்ளது.  எனவேதான் பால்ஹிகன் - சந்தனு துவேஷம் எவ்விடத்திலும் சொல்லப்படவில்லை.  அதேப்போல்  காசி அரசி புராவதி துறவு மேற்கொள்வது உலகியலை துறக்கும் பொருட்டல்ல மகள் அம்பை திக்கற்று பிறந்தகம் திரும்பியபோது தனது கணவன் பீமதேவனால் ஏற்றுக்கொள்ளாது போகவே அவனை முனிந்தே காடேகுகிறாள் எனவும் சீனு எடுத்துச்சொல்லி நிறைவு செய்ததோடு இம்மாத அமர்வு எதிர்பாராத அளவிற்கு களைகட்டி மிகச்சிறப்பானதாய் அமைந்து முடிவுற்றது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.


வெண்முரசு கலந்துரையாடல் 
புதுவை கூடுகை :- 4
தேதி :- 25 மே 2017
நண்பர்களே வணக்கம்.
வழமைபோல வெண்முரசு கலந்துரையாடலின் நான்காவது கூடுகை ,புதுவையில் மகிழவென நடந்தேறியது . இந்த கூடுகை பற்றிய தகவலை வெளிட்டு உதவிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு புதுவை கூடுகையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கூடுகைக்கு புதிய நண்பர்கள் மூவர் இணைந்து உறுப்பினர் எண்ணிக்கை பதிமூன்றிலிருந்து பதினாறாக உயர்ந்து,  கூடுகை வளர்முகம் கண்டது ஊக்கப்படுத்துவதாக இருப்பது,  மிக மிக மகிழ்வான தருணம் .
நான்காம் கூடுகை சிறிது தாமதமாக 6:30 க்கு தொடங்கி 8:45 நிறைவடைந்தது இன்றைய கலந்துரையாடலின் தலைப்பு " அணையாச் சிதை" . திரு. மணிமாறன் கலந்துரையாடலை துவக்கி வைத்து பேசினார் . அவரைத்தொடர்ந்து . திரு.துரைவேல் அவர்கள் . பீஷ்மர் தன்னுடைய விரதத்தில் கட்டுண்டுதால் ஏற்பட்ட உளவியல் சிக்கலாலும் , விசித்திரவீரியன் தனது இயலாமையால், புராவதி தன்கையறு நிலையால், என வெண்முரசின் கதாபாத்திரங்களின்  அணையாச்சிதையாக எரிந்து கொண்டிருப்பது அவரவர் ஆன்மா, என சிறப்பாக தன் வாசிப்பை பகிர்ந்து கொண்டார் . திரு.நாகராஜ் அவர்கள் தனது வழக்கமான பகடியாலும் அணையாச்சிதை தலைப்பின் இலக்கனத்தைப் பற்றியும், பேசி நிகழ்விற்கு புதிய பார்வையை தந்தார்.
திரு.சித்தார்த் பாரிவள்ளல் புதிய நண்பராக திரு.கடலூர் சீணுவால் அறிமுகப்படுத்ப்பட்டார் , அவர் பேசும் போது புராவதி நிலையை விரித்துப் பேசினார் .
திரு.இராதாகிருஷ்ணன் , ஜெயமோகனின் தளத்தில் வந்த தகவலை பார்த்து பண்ருட்டியிலிருந்த வந்து கலந்து கொண்டது மிக நிறைவாக இருந்தது. அவர் மிக சுருக்கமாக பேசினார் .திரு.கடலூர் சீணு அணையாச்சிதையை பல கோணங்களில் செறிவாக பேசி கலந்துரையாடலை முடித்து வைத்தார்.
அடுத்த கூடுகை ஜூன் மூன்றாம் வியாழக்கிழமை என்றும் தலைப்பு "மணிச்சங்கம் " .திரு.திருமாவளவன் துவக்கிவைக்கிறார் , திரு.விசாகன் அதை ஒட்டி தன்னுடைய வாசிப்பை பகிர்ந்து கொள்வார் என்றும் முடிவானது.
நன்றி
கிருபாநிதி அரிகிருஷ்ணன் 
புதுவை.
25-05-2017





" வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – அணையாச்சிதை " -
பதிவு 17 -21 ,நாள் 25-05-2107.                                                
வெண்முரசு கலந்துரையாடல் 
புதுவைக் கூடுகை - 4 :அக்னி
"வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே? தீயிற்கும் உணவு. இதுவே பாரதத்தின் சாரம் என்கிறது வெண்முரசு"
அணையாச்சிதையாக நிகழ்வுகளும் , விளைவுகளும் இதில் வருகின்ற அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமின்றி விண்ணக தெய்வங்களுக்கும் அதுவே அனுபவமாகிறது . அக்னி இந்நூல் முழுக்க ஊடுபாவாக குறுக்கும் நெடுக்குமாக பயணப்படுகிறான் அதனாலேயே இது முதற்கனலாயிற்று . அக்னி முக்கிய வர்ணங்களாக இருமைகளை பேசுகிறான் , கருமையும் வெண்மையுமாக ஒவ்வொருவரையும் தகிக்கிறான் .
ரம்பனும் கரம்பனும் தவமியற்ற அக்னி எழுந்து வந்து வரம் அருளுகிறான் அத்தால் அவனும் பீடிக்கப்பட்டு வெம்மையிழந்து தாமரைபொலாகிறான்
பிரதீபருடைய  அரசுசூழ்தலாக வெண்முரசு விரிவடைகிறது , மாமன்னர்களும் அஞ்சும் கங்கர்குலத்தவரின் மலைகளுக்கு கீழிருந்து எவருமே செல்வதில்லை.
பாரதவர்ஷம் கங்கர்களை அஞ்சுகிறது . அவர்களின் அம்புகளில் காளகூட விஷத்தின் துளிகளுண்டு என்று வீரர்கள் சொல்லிக்கொண்டனர். என்றோ ஒருநாள் கங்கர்கள் கங்கைவழியாக மலையிறங்கி வந்து நாடுகளையும் ஜனபதங்களையும் வெல்லக்கூடுமென நிமித்திகர்களின் நூல்கள் சொல்லின. அரசர்கள் அவர்களை கனவுகண்டு குளிர்ந்த வியர்வையுடன் விழித்துக்கொண்டார்கள் .
நிழலை பருவடிவாக அறியத்துடிக்கும் மானுட உள்ளம், நிமித்தகரிடம் அதன் பொருளை பெறுகிறது . அவர் சொல்லுவது குறியீடாக . அவர்கள் அஞ்சியது நடந்தது . ஆனால் ஒரு போராக எழாதே தனியொருவராக பீஷ்மர் அனைத்து ஜகபதங்களுக்கு வியரவைக் கனவுகளை தந்தபடியே இருந்தார்.
பிரதீபன் பட்டத்து இளவரசர் சந்தனுவை மட்டும் அருகழைத்து சொன்னார். “அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் நடுவிலிருக்கிறது மகனே. ஆகவே இது பாரதவர்ஷத்தின் தலைமை நகரமாக இருக்கவில்லை என்றால் அத்தனை ஷத்ரியர்களின் ரதசக்கரங்களும் துவைத்துச் சிதைத்தோடும் பெருவழியாக மட்டுமே எஞ்சவேண்டியிருக்கும். பாரதவர்ஷத்தின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எல்லையற்ற நிலவிரிவு கொண்ட புதிய தேசங்கள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஆநிரைகள் பெருகுகின்றன. அவர்களின் வயல்வெளிகள் விரிகின்றன. ஆநிரையும் கதிர்மணியும் ஆயுதங்களே என்று அறிக. அஸ்தினபுரியோ வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு. நாமடைவது மனிதர்கள் அளிக்கும் பொன். அந்நாடுகள் பெறுவதோ மண் அளிக்கும் பொன். அது குறைவதேயில்லை. தந்தையின் சொல்லை மெய்யாக்கினார் சந்தனு.
அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்” என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான். என்கிறார்
நூறு பாம்புக்குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரவம்சத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன் . வம்ச பரமரபரை மானுடற்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிக்கும் பொருந்துகிறது நாமகரனத்தோடு . அது பாரதத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. அது இதிகாச கதாபாத்திரத்தின் இன்றியமையாத பங்களிப்பை வெளிப்படுத்துகிறது . யாரும் எவரும் தேவையற்று பிறப்பெடுப்பதில்லை இப்பூவுலகில்
எத்தையும் உண்ணும் அக்னி உசகனைவிட்டுவைக்காத பொது . அவன் அக்னியே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல” என்றான். அக்னிதேவன் “என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ சந்திர வம்சத்தில் மனிதர்களின் அரசனாக பிறப்பாய்” என்றான். குரு வம்சத்து அனைத்து பாகங்களும் விண்ணகத்து ஆடல் நிரம்பியதாக இருக்கிறது.
மற்றொரு அக்னி .பால்ஹிக்னின் அந்த தீச்சொல் என்றும் சந்தனுவின் உள்ளத்தில் இருந்தது. உசகன் அந்நெருப்பை அறியாதிருந்த காலமே இல்லை.
தன் குருதியில் பிறக்கும் நோயுற்ற குழந்தைகளை கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்ந்தான். மலைகளைத் தாண்டி கங்கர்குலத்தில் அவன் பெண்கொள்ளச் சென்றமைக்குக் காரணம் அதுவே. கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான்.
கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தர்க்க ரீதியான நிரவல்களாக முழுக்க பேசப்படுகிறது. அஷ்டவசுக்களை கங்கையில் இட்டதை அக்கரையுடன் வெண்முரசு  நியாயப்படுத்துகிறது. காலமென்றம் , மேல் கீழ் உலகமென்றும் பல படிப்புக்களை கொண்டதான சிருஷ்டியில் , இதிகாசமும் புராணங்களும் , நடந்தவைகளாக , கேட்டபவரின் சங்கடத்தை புரிந்து கொள்ளாது விவரித்தபடி சென்று கொண்டேயிருப்பவை . ஆனால் வெண்முரசு அதை நாம் நப்பும்விதமாக , புரிந்துகொள்ளக்கூடிய , தர்க்க ரீதியான, உளவியல் ரீதியாக வெளிப்படுகின்றது .
சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில் “அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்” என்றார்.
சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான். அக்னி அவனுக்கு அளித்த வரம் சபலமாகியது.
விசித்திரவீரயன் கேட்டான்  “நீங்கள் அறியாத அறமா? நீங்கள் கற்காத நெறிநூலா? ஏன் மூத்தவரே?”
பீஷ்மர் பார்வையைத் திருப்பி “நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன. இளையோனே, நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத்தெளிவு உன்னில் இருக்கிறது” என்றார். கற்றல் உலகியல் நெறிகளை காயப்படாது மீறல் என்பதை சொல்ல வருகிறதா ? எனில் காயப்பாடாமையின் நுண்பரிமானம் புரியவேண்டியுள்ளது
சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள். வரமாக தானே அங்கு மகனாக நுழைவதாக வெண்முரசு கூறுகிறது .
அதேசமயம் . பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தன’ என்று அவள கருபுகுதலை போல ஒன்றை இலக்கியமாக்கி வியக்க வைக்கிறது.
வாழ்வின் பொருள்பற்றிய தன் கணவனுடைய கூற்றை மறுத்து,   புராவதி பெருமூச்சுடன் “பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள். அம்பையை அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.

குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லை “எரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்” என்றான்.
உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீ” என்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.
உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! என்கிறாரகள்
“உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.
அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்து “நெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்” என்றார். தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.
புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது.
புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.

கிருபாநிதி அரிகிருஷ்ணன்.




















புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...