Tuesday 22 August 2017

புதுவை கூடுகை - 04




திரு மணிமாறன் அவர்களின் பதிவு 

புதுவை வெண்முரசுக்கூடுகை  4 ( நாள்: 25.05.2017 / வியாழன் )

அனைவருக்குமென் வணக்கம்.

புதுவை வெண்முரசுக்கூடுகை பற்றிய அறிவிப்பு ஆசான் ஜெவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததின் விளைவாக இம்மாத அமர்விற்கு வெண்முரசின் தொடர் வாசகர்கள் மூவரை (பேராசிரியர் ஆனந்தன், மருத்துவர் சித்தார்த் பாரி, பொறியாளர் ராதாகிருஷ்ணன்) புதிதாக கண்டுகொண்டதில் மனநிறைவானந்தம். அவர்கள் வெண்முரசின் நுண்ணிய வாசிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

இம்மாத அமர்வின் தலைப்புப் பகுதியான அணையாச்சிதை பற்றி நானே துவக்கிப் பேசி எனது வாசிப்பை பகிர்ந்து கொண்டேன்.  அது கிட்டத்தட்ட திரும்பச் சொல்லுதல் போலாகிவிட்டது.  எனவே அதைத் தனிப்பதிவென இடுதலில் பொருளில்லை. ஆனால் கூறப்பட்ட அந்த கதாக்கிரமப்படி, நிகழ்வுகள் ஒவ்வொன்றாக தொட்டெடுக்கப்பட்டு நண்பர்களால் விரித்துரைக்கப்பட்டதில் எனது பேச்சும் பொருள் கொண்டுவிட்டதாக ஓர் அற்ப சந்தோஷம்.  தவிர வேறில்லை.

மிக குறிப்பாக சீனுவால் எடுத்துச் சொல்லப்பட்ட கோணம்.  அனைவரும் அணையாச்சிதை - உடலே சிதையாக ஆன்மா எரிவதையே பேசுவதாக எண்ணியபோது, தொன்றுதொட்டு இன்றளவும் ஓயாது எரிந்து கொண்டிருக்கும் காசி மாநகரை அதனுடன் இணைத்து பேசியது மிகச்சிறப்பாய் அமைந்தது.  தவிர பால்ஹிகன் தன் மூத்தச்சகோதரன் தேவாபி மீது கொண்ட பேரன்பினாலும் இளையச்சகோதரன் சந்தனு மீதான வெறுப்பினாலும்தான் சந்தனுவின் வழித்தோன்றல்கள் அனைவருக்கும் நோய்க்குறைபாடு என்றென்றைக்கும் இருப்பதாக தீச்சொல்லிடுகிறான் என்பதைத்தாண்டி பால்ஹிகன் தன் அண்ணன் தேவாபிக்கு அவன் நோய்குறைபாட்டால் கிடைக்கப்பெறாத அரசப்பதவி, அதில் அமரவிருக்கும் எவனொருவனுக்கும் அந்நோய்குறைபாடும் அதுவுள்ள மைந்தரும் அமைவதாகவே வாசிப்பது  பொருத்தமாகத் தோன்றியது, கங்கை சாட்சியான தன் அண்ணன் மீதான பேரன்பிற்கும் அதுவே பொருள் தருவதாயுள்ளது.  எனவேதான் பால்ஹிகன் - சந்தனு துவேஷம் எவ்விடத்திலும் சொல்லப்படவில்லை.  அதேப்போல்  காசி அரசி புராவதி துறவு மேற்கொள்வது உலகியலை துறக்கும் பொருட்டல்ல மகள் அம்பை திக்கற்று பிறந்தகம் திரும்பியபோது தனது கணவன் பீமதேவனால் ஏற்றுக்கொள்ளாது போகவே அவனை முனிந்தே காடேகுகிறாள் எனவும் சீனு எடுத்துச்சொல்லி நிறைவு செய்ததோடு இம்மாத அமர்வு எதிர்பாராத அளவிற்கு களைகட்டி மிகச்சிறப்பானதாய் அமைந்து முடிவுற்றது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.


வெண்முரசு கலந்துரையாடல் 
புதுவை கூடுகை :- 4
தேதி :- 25 மே 2017
நண்பர்களே வணக்கம்.
வழமைபோல வெண்முரசு கலந்துரையாடலின் நான்காவது கூடுகை ,புதுவையில் மகிழவென நடந்தேறியது . இந்த கூடுகை பற்றிய தகவலை வெளிட்டு உதவிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு புதுவை கூடுகையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கூடுகைக்கு புதிய நண்பர்கள் மூவர் இணைந்து உறுப்பினர் எண்ணிக்கை பதிமூன்றிலிருந்து பதினாறாக உயர்ந்து,  கூடுகை வளர்முகம் கண்டது ஊக்கப்படுத்துவதாக இருப்பது,  மிக மிக மகிழ்வான தருணம் .
நான்காம் கூடுகை சிறிது தாமதமாக 6:30 க்கு தொடங்கி 8:45 நிறைவடைந்தது இன்றைய கலந்துரையாடலின் தலைப்பு " அணையாச் சிதை" . திரு. மணிமாறன் கலந்துரையாடலை துவக்கி வைத்து பேசினார் . அவரைத்தொடர்ந்து . திரு.துரைவேல் அவர்கள் . பீஷ்மர் தன்னுடைய விரதத்தில் கட்டுண்டுதால் ஏற்பட்ட உளவியல் சிக்கலாலும் , விசித்திரவீரியன் தனது இயலாமையால், புராவதி தன்கையறு நிலையால், என வெண்முரசின் கதாபாத்திரங்களின்  அணையாச்சிதையாக எரிந்து கொண்டிருப்பது அவரவர் ஆன்மா, என சிறப்பாக தன் வாசிப்பை பகிர்ந்து கொண்டார் . திரு.நாகராஜ் அவர்கள் தனது வழக்கமான பகடியாலும் அணையாச்சிதை தலைப்பின் இலக்கனத்தைப் பற்றியும், பேசி நிகழ்விற்கு புதிய பார்வையை தந்தார்.
திரு.சித்தார்த் பாரிவள்ளல் புதிய நண்பராக திரு.கடலூர் சீணுவால் அறிமுகப்படுத்ப்பட்டார் , அவர் பேசும் போது புராவதி நிலையை விரித்துப் பேசினார் .
திரு.இராதாகிருஷ்ணன் , ஜெயமோகனின் தளத்தில் வந்த தகவலை பார்த்து பண்ருட்டியிலிருந்த வந்து கலந்து கொண்டது மிக நிறைவாக இருந்தது. அவர் மிக சுருக்கமாக பேசினார் .திரு.கடலூர் சீணு அணையாச்சிதையை பல கோணங்களில் செறிவாக பேசி கலந்துரையாடலை முடித்து வைத்தார்.
அடுத்த கூடுகை ஜூன் மூன்றாம் வியாழக்கிழமை என்றும் தலைப்பு "மணிச்சங்கம் " .திரு.திருமாவளவன் துவக்கிவைக்கிறார் , திரு.விசாகன் அதை ஒட்டி தன்னுடைய வாசிப்பை பகிர்ந்து கொள்வார் என்றும் முடிவானது.
நன்றி
கிருபாநிதி அரிகிருஷ்ணன் 
புதுவை.
25-05-2017





" வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – அணையாச்சிதை " -
பதிவு 17 -21 ,நாள் 25-05-2107.                                                
வெண்முரசு கலந்துரையாடல் 
புதுவைக் கூடுகை - 4 :அக்னி
"வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே? தீயிற்கும் உணவு. இதுவே பாரதத்தின் சாரம் என்கிறது வெண்முரசு"
அணையாச்சிதையாக நிகழ்வுகளும் , விளைவுகளும் இதில் வருகின்ற அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமின்றி விண்ணக தெய்வங்களுக்கும் அதுவே அனுபவமாகிறது . அக்னி இந்நூல் முழுக்க ஊடுபாவாக குறுக்கும் நெடுக்குமாக பயணப்படுகிறான் அதனாலேயே இது முதற்கனலாயிற்று . அக்னி முக்கிய வர்ணங்களாக இருமைகளை பேசுகிறான் , கருமையும் வெண்மையுமாக ஒவ்வொருவரையும் தகிக்கிறான் .
ரம்பனும் கரம்பனும் தவமியற்ற அக்னி எழுந்து வந்து வரம் அருளுகிறான் அத்தால் அவனும் பீடிக்கப்பட்டு வெம்மையிழந்து தாமரைபொலாகிறான்
பிரதீபருடைய  அரசுசூழ்தலாக வெண்முரசு விரிவடைகிறது , மாமன்னர்களும் அஞ்சும் கங்கர்குலத்தவரின் மலைகளுக்கு கீழிருந்து எவருமே செல்வதில்லை.
பாரதவர்ஷம் கங்கர்களை அஞ்சுகிறது . அவர்களின் அம்புகளில் காளகூட விஷத்தின் துளிகளுண்டு என்று வீரர்கள் சொல்லிக்கொண்டனர். என்றோ ஒருநாள் கங்கர்கள் கங்கைவழியாக மலையிறங்கி வந்து நாடுகளையும் ஜனபதங்களையும் வெல்லக்கூடுமென நிமித்திகர்களின் நூல்கள் சொல்லின. அரசர்கள் அவர்களை கனவுகண்டு குளிர்ந்த வியர்வையுடன் விழித்துக்கொண்டார்கள் .
நிழலை பருவடிவாக அறியத்துடிக்கும் மானுட உள்ளம், நிமித்தகரிடம் அதன் பொருளை பெறுகிறது . அவர் சொல்லுவது குறியீடாக . அவர்கள் அஞ்சியது நடந்தது . ஆனால் ஒரு போராக எழாதே தனியொருவராக பீஷ்மர் அனைத்து ஜகபதங்களுக்கு வியரவைக் கனவுகளை தந்தபடியே இருந்தார்.
பிரதீபன் பட்டத்து இளவரசர் சந்தனுவை மட்டும் அருகழைத்து சொன்னார். “அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் நடுவிலிருக்கிறது மகனே. ஆகவே இது பாரதவர்ஷத்தின் தலைமை நகரமாக இருக்கவில்லை என்றால் அத்தனை ஷத்ரியர்களின் ரதசக்கரங்களும் துவைத்துச் சிதைத்தோடும் பெருவழியாக மட்டுமே எஞ்சவேண்டியிருக்கும். பாரதவர்ஷத்தின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எல்லையற்ற நிலவிரிவு கொண்ட புதிய தேசங்கள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஆநிரைகள் பெருகுகின்றன. அவர்களின் வயல்வெளிகள் விரிகின்றன. ஆநிரையும் கதிர்மணியும் ஆயுதங்களே என்று அறிக. அஸ்தினபுரியோ வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு. நாமடைவது மனிதர்கள் அளிக்கும் பொன். அந்நாடுகள் பெறுவதோ மண் அளிக்கும் பொன். அது குறைவதேயில்லை. தந்தையின் சொல்லை மெய்யாக்கினார் சந்தனு.
அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்” என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான். என்கிறார்
நூறு பாம்புக்குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரவம்சத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன் . வம்ச பரமரபரை மானுடற்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிக்கும் பொருந்துகிறது நாமகரனத்தோடு . அது பாரதத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. அது இதிகாச கதாபாத்திரத்தின் இன்றியமையாத பங்களிப்பை வெளிப்படுத்துகிறது . யாரும் எவரும் தேவையற்று பிறப்பெடுப்பதில்லை இப்பூவுலகில்
எத்தையும் உண்ணும் அக்னி உசகனைவிட்டுவைக்காத பொது . அவன் அக்னியே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல” என்றான். அக்னிதேவன் “என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ சந்திர வம்சத்தில் மனிதர்களின் அரசனாக பிறப்பாய்” என்றான். குரு வம்சத்து அனைத்து பாகங்களும் விண்ணகத்து ஆடல் நிரம்பியதாக இருக்கிறது.
மற்றொரு அக்னி .பால்ஹிக்னின் அந்த தீச்சொல் என்றும் சந்தனுவின் உள்ளத்தில் இருந்தது. உசகன் அந்நெருப்பை அறியாதிருந்த காலமே இல்லை.
தன் குருதியில் பிறக்கும் நோயுற்ற குழந்தைகளை கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்ந்தான். மலைகளைத் தாண்டி கங்கர்குலத்தில் அவன் பெண்கொள்ளச் சென்றமைக்குக் காரணம் அதுவே. கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான்.
கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தர்க்க ரீதியான நிரவல்களாக முழுக்க பேசப்படுகிறது. அஷ்டவசுக்களை கங்கையில் இட்டதை அக்கரையுடன் வெண்முரசு  நியாயப்படுத்துகிறது. காலமென்றம் , மேல் கீழ் உலகமென்றும் பல படிப்புக்களை கொண்டதான சிருஷ்டியில் , இதிகாசமும் புராணங்களும் , நடந்தவைகளாக , கேட்டபவரின் சங்கடத்தை புரிந்து கொள்ளாது விவரித்தபடி சென்று கொண்டேயிருப்பவை . ஆனால் வெண்முரசு அதை நாம் நப்பும்விதமாக , புரிந்துகொள்ளக்கூடிய , தர்க்க ரீதியான, உளவியல் ரீதியாக வெளிப்படுகின்றது .
சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில் “அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்” என்றார்.
சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான். அக்னி அவனுக்கு அளித்த வரம் சபலமாகியது.
விசித்திரவீரயன் கேட்டான்  “நீங்கள் அறியாத அறமா? நீங்கள் கற்காத நெறிநூலா? ஏன் மூத்தவரே?”
பீஷ்மர் பார்வையைத் திருப்பி “நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன. இளையோனே, நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத்தெளிவு உன்னில் இருக்கிறது” என்றார். கற்றல் உலகியல் நெறிகளை காயப்படாது மீறல் என்பதை சொல்ல வருகிறதா ? எனில் காயப்பாடாமையின் நுண்பரிமானம் புரியவேண்டியுள்ளது
சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள். வரமாக தானே அங்கு மகனாக நுழைவதாக வெண்முரசு கூறுகிறது .
அதேசமயம் . பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தன’ என்று அவள கருபுகுதலை போல ஒன்றை இலக்கியமாக்கி வியக்க வைக்கிறது.
வாழ்வின் பொருள்பற்றிய தன் கணவனுடைய கூற்றை மறுத்து,   புராவதி பெருமூச்சுடன் “பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள். அம்பையை அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.

குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லை “எரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்” என்றான்.
உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீ” என்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.
உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! என்கிறாரகள்
“உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.
அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்து “நெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்” என்றார். தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.
புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது.
புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.

கிருபாநிதி அரிகிருஷ்ணன்.




















No comments:

Post a Comment

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...