புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.
இனிய ஜெயம்
கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான இந்த வருட வெண்முரசு வாசகர் வட்ட விருது விழா இனிதே நிகழ்ந்து நிறைந்தது.
இந்த வருடம் செய்ய வேண்டுவன குறித்த கலந்தாலோசனை கூடுகையின் போது நானும் நண்பர் அரி கிருஷ்ணனும் ஒரே நேரத்தில் இப்படி ஒன்றை செய்யலாம் என்று பேச துவங்கினோம். ஆகவே அதையே முகூர்தமாகக் கொண்டு அடுத்த வருடம் என்று தள்ளிப்போடாமல் உடனடியாக அந்த பணியை துவங்கினோம்.
ஒரு வார இடைவெளி மட்டுமே இருந்ததால் இம்முறைமட்டும் நாங்களே கூடி இந்த எளிய விழா சார்ந்த அனைத்தும் செய்தோம். எங்கும் உள்ள வெண்முரசு வாசகர்கள் கூடி புதுச்சேரியில் இதை செய்கிறோம் இதுவே செயல்திட்டம். அடுத்த வருடம் பணிகள் முன்கூட்டியே துவங்கும். எல்லா வெண்முரசு வாசகர்களும் பொருள் உதவி முதல் பிற உதவிகள் வரை அனைத்திலும் இணைந்து செயல்படலாம்.

இம்முறை விழா விஷ்ணுபுரம் கூடுகைகளின் வழக்கம் போல சரியான நேரத்தில் துவங்கியது. வாசகக நண்பர்களின் பிள்ளைகள் தாளம் இசைக்க குரல் சேர்க்க மங்கல இசையுடன் விழா துவங்கியது.
அரங்கத்தில் ஜெயகாந்தன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிறிய அளவிலான உருவப்படம் திறக்கப்பட்டு, நிகழ்வு அரங்குக்கு ஜெயகாந்தன் அரங்கம் என்று பெயர் சூட்டப்பெற்றது.
வாசகி சித்ரா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வாசகர் சரவணன் நோக்க உரை வழங்க, வாசகி பாரதி செந்தூர் அவரது ஐபோனில் ஒளி ஒலி அமைத்து நிகழ்வுகளை படம்பிடிக்க நிகழ்வு துவங்கியது.
சென்னை மயிலாடுதுறை என வெவ்வேறு பகுதியில் இருந்து 35 நண்பர்கள் வாசகர்கள் வரை வந்திருந்தார்கள். வெளியே திடீர் அரசியல் கூட்டம் ஒன்றின் பேரணி மறியல். எங்கும்சாலை பணிகள். விழாவுக்கு வந்த சில நண்பர்கள் இறுதி வரை வெளியே அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றிருந்ததாக அறிந்தேன்.

முனைவர் மு இளங்கோவன் அவர்கள் விருதினை கையளிக்க, கவிஞர் வி.சங்கர் விருதினை பெற்றுக்கொண்டு சிறப்பு செய்தார்.
சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் குறித்து அதன் அவந் கார்ட் தன்மை எவ்விதம் மூளையால் வலிந்து செய்யப்படாத இயல்பான படைப்பூக்கம் கொண்டதாக இருக்கிறது, அது இந்த தொகுப்பின் மொழியில், உணர்வு நிலையில், வெளிப்பாட்டு நிலையில், சாராம்ச நிலையில் என்னவாக இருக்கிறது, இந்த தொகுப்பின் காண்டம்ப்ரரி தன்மை எத்தகையது, நவீன கவிதை மரபில் இந்த தொகுப்பு சேர்க்கும் தனித்தன்மை என்ன என்பதன் மீது நான் 45 நிமிட மதிப்புரை நிகழ்தினேன்.

வி.சங்கர் அவர்கள் ஏற்புரையில் இந்த தொகுப்புக்கு பின்புலமாக இருந்த விஷயங்களை, நன்றி கூறப்பட வேண்டிய கவிஞர்கள் வரிசையை நினைவு கூர்ந்தார்.
கவிதைகள் எவ்விதம் பூமியில் இருந்து வான் நோக்கி விரியும் மலராக இருக்கிறது, அவை எவ்விதம் வானின் அம்சத்தை பூமிக்கு கொண்டு வருகிறது, கவிஞனாக தான் ஒரே சமயம் வைரங்களை துளைக்கும் வலிமையும் கூர்மையும் கொண்ட நூலாக, அதே சமயம் காம்புகளுக்கு வலிக்காமல் மலர்களை தொடுக்கும் நூலாக உணர்வதை குறித்து பகிர்ந்து கொண்டார்.

விருது தொகையினை மது மஞ்சரி செய்யும் சமூக பணிகளுக்கு கொடையாக அளிப்பதாக ஏற்புரையில் கவிஞர் குறிப்பிட்ட கணம் எனக்கு உள எழுச்சி அளிக்கும் தருணமாக அமைந்தது. எல்லாவற்றையும் சரிதான் எனும்படிக்கு ஜெயகாந்தன் பார்த்துக்கொண்டிருக்க அவர் முன்னிலையில் இந்த எளிய விழா குறித்த நேரத்தில் சிறப்பாக நிகழ்ந்து நிறைவுற்றது.
கடலூர் சீனு
No comments:
Post a Comment