Monday, 18 May 2026

கூடுகை 94 . இராச.மணிமேகலை உரையின் எழுத்து வடிவம்

                           


                                   ‘கடந்ததில்லை சிவம்’  


இப் பூரட்டாதி பகுதி கன்னிகளின் ஆடல்களால் ஆனது. இம்மாதத்திற்குரிய ராசி கன்னிராசி. இதில் வரும் இரட்டையர்களாக விஸ்வாமித்திரர், பீஷ்மரைக் காண்கிறேன். நான் இதனை மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன். 1. மகா நிர்வாணம்,  2. காமம் கடத்தல் (தன்னைக் கடத்தல்) 3. மெய்ம்மை. 

மகா நிர்வாணம்

எது நிர்வாணம்? மற்றவர்கள் முன் ஆடையின்றி இருப்பதை நிர்வாணம் என்கிறோம். அதை அவமானமாகக் கருதுகிறோம். கொல்வதைவிட வஸ்திராபகரணம் என்பது வாழ்நாள் தண்டனையாகி, இறப்புக்குச் சமானம் ஆகிறது. பாஞ்சாலிக்கு நிகழ்ந்ததும் இதுவே.  ‘உடை நீப்பின் வாழார் கவரிமான் அன்னார்’ என்பது சமுதாய ஒழுக்கமாகி விட்டது. எப்படியாக இருந்தாலும் உடலை மூடும் ஆடைகளை நம்மால் துறக்க முடியாது. ஆனால்  புத்தமரபிலும், சமணத்திலும் மகாநிர்வாணம் என்பது மனதில் உள்ள பேராசை, அறியாமை, வெறுப்பு இவற்றை நீக்கி, பிறவி விடுதலை, ஞானநிலை அடைவதையும், அகத்திலும் புறத்திலும் துறத்தலே உண்மையான துறவு என்பதையும், புத்தரின் சிரவணபெலகுலா சிலையும், திகம்பரர்களின் நிர்வாணமும் இதற்குச் சான்றாவதையும் காணலாம். காந்தியின் அரையாடை வெளிநாட்டினருக்கு ஆபாசம். அதுவே அவர்க்கான பெருமைகளில் ஒன்று. கோவணம் அணிந்த ரமணரின் கோலமும், கோவணாண்டி முருகப் பெருமானின் கோலமும் துறத்தல்தான். Emerald forest என்ற திரைப்படம் அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்களுக்கும் கார்பரேட்களுக்கும் நடக்கிற போராட்டம். பழங்குடிப் பெண்களை அங்கிருந்து கொண்டுபோய் Brothel houseல் விட்டுவிடுவார்கள். ஆனால் அங்கே போனதும் ஆடை, அணிகளெல்லாம் கழற்றிப் போட்டுவிடுவார்கள். அவர்களுக்கு ஒப்பவே ஒப்பாது. கடைசியில் பழங்குடியினப் பையன் போய் காப்பாற்றிக் கூட்டிவருவான். வந்தவுடன் அந்தப் பெண்கள் செய்த முதல் வேலை ஆடைகளையெல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு ஆராவாரமாக, கொண்டாட்டமாக சிரித்து மகிழ்வதுதான். இதைத்தான் இந்த 100 காட்டு மகளிரும் செய்கிறார்கள். ஆறுவகை   மந்திரங்களால் கட்டி வைத்து (பொற்பு, பொறை, குலம், நெறி, அணி, ஆடை), நான்கு வகை குணங்கள் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) என்ற குணங்களைக் கற்பித்து, அப்படி நில், இப்படி நில், தலையைக் குனி, தோளைக் குறுக்கு என்று சொல்லிச் சொல்லியே கூன் விழுந்து விட்டது. பிரம்மதத்தன் முதன்முறை காட்டிலிருந்து நாட்டிற்கு வரும்போது ஏன் இவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்கள்? என்று கேட்க பெண்மை எனும் நோய் பீடித்திருக்கிறது என்று ஒருவன் சொல்வான். பெண்களுக்கு பூட்டப்பட்டிருக்கும் அரையணி, கணையாழி, மூக்குத்தி, குழை, ஐம்படைத்தாலி, மங்கலத்தாலி, மெட்டி இவைகளால் ஆன அலங்காரங்கள் எல்லாம் யாருடைய பார்வைக்காக? ஆண் என்பவனுக்காகத் தானே? இந்தத் தளைகளில் இருந்து விடுதலையான அந்த காட்டுமகளிர் நுாற்றுவரும் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத தன்மை மிக்கவர்களாக பச்சைவெளிக்குள் சிறகடித்துப் பறந்து செல்கிறார்கள்.  அந்த இடம் தான் கன்யாவனம் எனும் கன்யாகுப்ஜம். அடுத்து இங்கே சித்ரதேவன், ஊர்மிளை கதை சொல்லப்படுகிறது. தன்னை மட்டுமே தன் அழகை மட்டுமே ஆராதித்த பெண்ணை, எவ்வித கட்டுகளுமின்றி   இருந்தவளை தனக்கு அடங்கவில்லை என்பதற்காக,  “எங்கே ஆடை அணிகளற்று பெண்கள் திரிகிறார்களோ,  எங்கே எவனொருவன் பெண்ணை தனக்கு நிகரானவனாக நினைக்கிறானோ, எவன் காதல் உன்னைக் கட்டுப்படுத்தாதோ அங்கே பிறக்கக் கடவது”, என சாபமிடப்படுகிறாள். (சூளி-ஊர்மிளை மகன் தான் பிரம்மதத்தன்). இவனே அந்த காட்டு மகளிரை மணந்து விடுதலை செய்பவன்.

2. காமம் கடத்தல் ( தன்னைக் கடத்தல்)

ஏன் காமத்தை, விழைவைக் கடத்தல் வேண்டும்? சமூகத்தின் விழுமியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இதில் பொருள் ஈட்டினால் தான் அறம் செய்ய முடியும், இன்பம் துய்க்க முடியும். ஆனால்  பொருள் ஏன் அறத்திற்குப் பின் வைக்கப்பட்டதெனில் அது தனக்கு இருபக்கங்களிலும் இருக்கும் அறத்தையும், இன்பத்தையும் நடுநிலையோடு அணுகுகிறது. ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. அதைச் செய்ய பொருள் வேண்டும். பொருள் இருந்தால் இன்பம் வரும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் வீடுபேறு எனும் மெய்ம்மை. மெய்ம்மையை ஒருவன் அடையவேண்டுமென்றால்  அவன் காமத்தைக் கடக்க வேண்டும். இங்கே  நான்கு பேர் பார்வையில் காமம் கடத்தல் சொல்லப்படுகிறது.  சூதன், பூசகர், விஸ்வாமித்திரர், பீஷ்மர். “நுாறு கோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலியென விரிந்து கிடப்பவளை கடந்ததில்லை சிவம்” என்ற கூற்றை ‘பெண்ணை ஆணால் கடக்கவே இயலாது’ என்பதற்கான சான்றாகக் கொள்ளலாம் வலிமை மிகுந்த ஆணால் ஏன் பெண்ணை வெல்லமுடியவில்லை? மனிதகுல தோற்றத்தின் வரலாறுகளின்படி முதலில் தாய்த்தலைமை சமூகம் தோன்றியது. படிப்படியாக ஆண் மையச் சமூகமாக மாறியது. தாய்த்தலைமை சமூகமாக இருந்தபோது அவளுடைய உடை என்னவாக இருந்தது? இப்போது ஆண் மையச் சமூகத்தின் உடை   என்னவாக இருக்கிறது? பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர் எவர்?  அப்படியென்றால் தலைமை எதுவோ அதைக்கொண்டு சமூகத்தின் சட்டதிட்டங்கள் அமைவதைக் காணமுடியும். அவளைத்  தாய்மண், தாய்மொழி, தாய்நாடு என்று போற்றித் திருவகவல் பாடி வைத்திருக்கிறோம். நமக்கு அண்டை மாநிலத்தில் 1950 வரையிலும் தாய்த் தலைமைச் சமூகம்தான். இதுவரை நமக்கு எல்லாமாக இருந்த அவளை இப்போது கடக்கவேண்டும்.

முதலாவதாக, சூதன் பார்வையில் ‘நான் பெண்களைக் கடக்கவேயில்லை. அவர்கள்தான் என்னைக் கடந்தார்கள் என்று   சொல்லிவிட்டான். பெண்கொள்ளா நோன்பு என்பது நடவாத ஒன்று. கன்யாவனம் என்ற காட்டில் நைஷ்டிக பிரம்மச்சாரிகள் மட்டுமே செல்லமுடியும், கொஞ்சம் ஏமாந்தாலும் கொன்று சிதறடிக்கும் சினம் கொண்டவர்கள்’ என்கிறான்.

இரண்டாவதாக, பூசகர் ‘ஆண்மகன் எனத் தன்னை உணரும் எவரும் அக்காட்டுக்குள் செல்லமாட்டார்கள். அக்காடு பெண்களின் பேருருவும், பேரெழிலும் பெருவஞ்சமும் கொண்டது’ என்கிறான்.  ‘எதன் பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து, துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?’ என்ற கேள்வியோடு அவர் நிற்கிறார். ஐம்பது  ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் கடக்க எண்ணி வந்து வந்து செல்பவர் இவர்.

விஸ்வாமித்திரர். புல், (குசை) வம்சத்தவர் பிரம்மரிஷியான கதை. கௌசிகனாக அறம்,, பொருள், இன்பம் என அனைத்தையும் அடைந்தாகிவிட்டது. அதற்கும் அப்பால் உள்ளதை அடையவேண்டும். அது எது? வீடுபேறு. அதை அடைய தவம் செய்யவேண்டும். காமம், குரோதம், மோகத்தைக் கடந்தவர்களே தவத்தின் முதல் படியிலேயே கால் வைக்க முடியும். ‘நான் இதுவரை பொருந்தா இடத்தில் இருந்து விட்டேன். இனி தவம் ஒன்றே என் குறிக்கோள்’, என்று வசிஷ்டரிடம் கேட்க ‘எது உன்னுள் ஓங்கியுள்ளதோ அதைப் பற்றுக! தவம் செய்க!’ எனச் சொல்ல அவரும் இமயயலை சென்று தவம் செய்து பிரம்மன் முன்னாடி போய் நிற்கிறார்.‘ நீ யார்? ஒரு சிறு புல்! உன்னை ஈடு செய்து விண்ணும் மண்ணும் கொண்ட முழுதுலகைப் படைப்பேன்’. மறுபடியும் வசிஷ்டரிடம் போய் நிற்க, ‘பெருந்தவத்தோரும் அஞ்சும்  கன்யாவனம் செல்.  கன்னியரின் காடு சான்றளித்தால் மட்டுமே நீ விரும்பும் இந்திரனுக்கு மேலான வெற்றியைப் பெறமுடியம். சுட்டுவிரலில் புல்வளையம் அணிந்தவனாக அவன் முன் நிற்கமுடியும்’ என்கிறார். அந்த கன்யாவனத்தின் அணங்குகள் பார்ப்பவரின் விழைவுகளினுாடாக மட்டுமே உருவம் கொள்பவை. கன்னியரின் ஆடல்கள் தொடங்குகிறது. இந்த இடத்தில் ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை கங்கையைக் கடந்து அக்கரை செல்ல நின்றுகொண்டிருக்கிறார் வியாசர். அப்போது கிருஷ்ணன் வந்து ‘நித்ய இந்திரிய நிக்ரகி (புலன் ஒறுப்பாளன்) வந்திருக்கிறேன், வழிவிடு’ என்று சொல்ல கங்கை வழிவிட்டதாம். வியாசர் ‘அடப்பாவி, இப்போதானே கோபிகைகளிடம் ஆடிவிட்டு வந்தாய். நீ எப்படி புலன் ஒறுப்பாளன் ஆனாய்’ என்றாராம். அதற்கு கிருஷ்ணன், ‘ஆத்மா ஈடுபடாதபோது புலன்கள் எதையும் அறிவதில்லை. புலன்கள் என்பவை ஆத்மாவின் வாசல்கள் மட்டும்தான்’ என்றாராம். இந்தப் பின்புலத்தில் வைத்து இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். ‘இந்திய சுதந்திரம்’ என்னும் மாபெரும் வேள்விக் களத்தில் நிற்கிறார் காந்தி. தன்னுடைய புலன் ஒறுப்புக்காக, மனுபென் காந்தி, சுசீலா நய்யார், மற்றும் பல ஆசிரமத்துப் பெண்களுடன் ‘நிர்வாணமாகப் படுத்தல்’ என்ற பரிசோதனையில் இறங்கினார். கிருஷ்ணன் சொன்ன அதே பதில் தான். ‘ஆத்மா ஈடுபடாதபோது புலன்கள் அறிவதில்லை. புலன்கள் என்பவை ஆத்மாவின் வாசல்கள்’. இதற்கு சகசயனம் என்று பெயர். பத்து வருடங்களாக காந்தி இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தாந்ரீக முறையில் தனியாக செய்து பார்க்கவேண்டியதை வெளிப்படையாகச் செய்ததும், குருமரபு என்ற ஒன்று இல்லாததும் இதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. மேலும், ‘கேரளத்தில் தலைச்சேரியில் சர்வதேச அளவில் மானுட பரிசோதனை நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கே முற்றும் துறந்த ஆண், பெண் இருபாலாரும் வாழ்வதாகவும் 1995 வாக்கில் இது கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என மக்களால் எதிர்க்கப்பட்டது’ என்பதான செய்திகளை ஜெ. எழுத்தில் படித்திருக்கிறேன். இருண்மையும் ஆழமும் நிறைந்த  காமத்தின் குறியீடான கன்யாவனத்திற்கு கௌசிகர் வருகிறார். ஏழு பருவ மகளிரின் ஆடல்களை உணர்கிறார். அன்னை, செவிலி, களித்தோழி, காதலிகள், துணைவிகள், முதுமகள், சிறுமகள் என அனைத்துப் பருவப் பெண்களை துளித்துளி அனுபவமாக ஒரு ஆண் எப்படியெல்லாம் திரட்டி வைத்திருப்பானோ அதையெல்லாம் விஸ்வாமித்திரர் அந்தக் கானகத்திற்குள் காண்கிறார். ஒரு ஆண் பெண்ணை முதன்முதலாக எங்கே உணர்கிறான்? தன் தாயின் முலைப்பால் வழியாக என்பதிலிருந்து தொடங்கி மகளிரின் பருவ நிலைகளை நுாறாகப் பட்டியலிட்டிருக்கிறார் ஜெ. கடைசியாக மேனகை வருவதும், அவர்களுக்கு சகுந்தலை என்ற பெண் பிறப்பதும் சொல்லப்படுகிறது. மறுபடியும்  “நுாறு கோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்து கிடப்பவளை கடந்ததில்லை சிவம்” என்ற  ஆண்களை நெஞ்சடைக்கச் செய்யும் வரியை நினைத்துப் பார்க்கிறேன்.

பீஷ்மர் – பெண்கொள்ளாமை நோன்புக்குரியவர். ஆழமும் இருண்மையும் கொண்ட காட்டில் சுனைகள் நிறைந்த சௌபர்ணிகத்தின் கரையில்  அமர்ந்து நீரள்ளியபோது பார்க்கும் முகம்  அவரது அன்னை கங்காதேவியின் முகமாக உணர்ந்தேன். கண்களை மூடி அகம் நோக்கியபோது உள்ளுக்குள் தனிப்பறவை ஒன்று கேவுவதும், நீர்த்துளி சொட்டுச்சொட்டாக விழுவதும் அவரது அன்னையை நினைத்தே எனலாம். சந்தனுவுக்கும் அவருக்குமான உரையாடலில்,  ‘இங்குதான் இருக்கிறீர்களா எனக்  கேட்கும் போது யயாதி, பிரதீபர், சம்வரணன் என குருகுல மூதாதையர் எவரும் இதைக் கடக்கவில்லை. காமத்தைக்  கடத்தல் அவ்வளவு சுலபமி்ல்லை மகனே! ஒருவேளை நீ கடக்கக்கூடும் ஏனென்றால் புரு தன் இளமையைத் தன்  தந்தைக்கு தானமளித்தவர்’ என்கிறார். இதிலிருக்கும் உரையாடல் ஒவ்வொன்றும் நமக்கு திறப்பை அளிப்பன. ‘காமத்தை அடைந்தவர்கள் அனைவரும் ஏதோ இழந்ததான ஆடலை ஏன் அமைத்தாள்?’ அதற்கு பீஷ்மர், ‘காமத்தை இழந்தவர்களும் அடைந்ததில்லை’ என்று கழிவிரக்கத்துடன் பதில் சொல்வதும்,  அதற்கு சந்தனு, ‘இழந்தவர்கள்  செல்லும் தொலைவு குறைவு அல்லவா?’ என்று  மறுமொழி சொல்வார். இந்த உரையாடலை யசுனாரி கவபட்டா என்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘உறங்கும் அழகிகளின் இல்லம் (தமிழில் அரிசங்கர்) கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். டோக்கியோவில் வயதானவர்களுக்கு  உறங்கும் நிர்வாண அழகிகளுடன் துயில் கொள்ளும் ஏற்பாடு இருக்கிறது. வயதானவர்கள் மட்டுமே இதன் வாடிக்கையாளர்கள். எகுச்சி என்ற 67 வயதுடையவர் அந்த இல்லத்திற்குச் செல்கிறார். அவர் ஐந்து இரவுகள் வெவ்வேறு அழகிகளுடன் இரவைக் கழிக்கிறார். ஒவ்வொரு இரவும் அவர் வாழ்வின் பெண்களான மனைவியை, காதலியை, மகளை, பழைய நினைவுகளினுாடாக மீட்டுக் கொண்டு வருகிறது. அப்பெண்கள் அவருக்குள் ஒளிந்திருக்கும் கசப்புகளை, பாலியல் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள்.  இதில் சிறப்பு என்னவென்றால் அது விலைமாதர் இல்லம் அல்ல. அந்தப் பெண்கள்  கன்னிகள். துாக்கமருந்து கொடுத்துத் துாங்க வைக்கப்பட்டவர்கள்.  எகுச்சிக்கு முதல் அழகியிடம் துாங்கும் போது பால் வாசனை வருகிறது. இரண்டாவது கன்னியிடம் துாங்கும்போது தன் காதலி நினைவுக்கு வருகிறாள். இப்படி ஒவ்வொருத்தியிடம் துாங்கும்போதும் ஒவ்வொரு நினைவு வருகிறது,  கன்யாவனத்தில்  விஸ்வாமித்மிரருக்கு வரும் நினைவுகள் போல. இங்கே இதை எடுத்து வந்து பீஷ்மருக்குப் பொருத்தினாலும் பொருந்தும். வயோதிகம் எப்போதும் கனிவினால் மட்டும் நிறைந்தது அல்ல. காமத்தை அடைந்தவர்களும் ஏதோ இழந்ததான உணர்வை அடைவதும், இழந்தவர்களும் அடையாததான உணர்வை அடைவதும் இங்கே தொடர்பு படுத்தி பார்க்கத் தோன்றியது. அடுத்து அந்த இடத்திற்கு குந்தி வருகிறாள். கன்யாவனம் பெண்களை அனுமதிக்காது. ராஜசூயத்திற்கு அனுமதி வாங்கியே ஆகவேண்டும். கால் எடுத்து வைத்தவுடன் தான் கன்னியானதாக உணர்கிறாள். அவள் கன்னிதான். தன் கணவனிடம் இணை சேர்ந்து தாயானவள் இல்லை. அணங்குகள் ஆண்களை விடுவதில்லை என்பதால்  கன்னியானவுடன் அவளுடைய மனப்பான்மையே மாறிவிடுவதைக் காண்கிறோம். பூச்சூடிக்கொள்கிறாள். இப்போது அவள் ஒரு அணங்கு. பீஷ்மர் வந்து பின்னால் நிற்கிறார். எச்சரிக்கையாக திரும்பி நின்றுகொள்கிறார். தன்னை சலனப்படுத்துவதற்கோ, அவள் அப்படிச் சலனமடைவதற்கோ இடம் கொடுக்காத பீஷ்மரைக் காண்கிறோம். எந்த அஸ்திரத்தை (தங்களின் பெண் கொள்ளா நோன்பை குடியின் அனைத்துப் பெண்டிரும் போற்றிக்கொண்டிருக்கிறோம்)  எய்தால் சம்மதம் கிடைக்குமோ அதைப் பயன்படுத்தி சம்மதம் வாங்கிவிடுகிறாள்.

மெய்மை

ஏன் மெய்மை பயிலப்பட வேண்டும்? அறம்பொருள் இன்பம் என்ற  விழுமியங்களிலிருந்து மனிதன் தவம்செய்து  வீடுபேறடைதலை  நோக்கிச் செல்கிறான்.  இத்தவம் யாருக்கானது? நாடுவிட்டு, காடேகி தவம் செய்தல் மட்டும்தான் தவமா?   கௌசிகன் அரசனாக இருந்து அனைத்தையும் அனுபவித்த பின்பு என்னவோஒன்று  எஞ்சியுள்ளது  அது  எதுஎன  அவன்  அகம் தவித்துக் கொண்டிருக்கிறது. காட்டை நோக்கிச் செல்கிறான். ஏன் காடு தவத்திற்குரியதாகிறது?  ‘கையளவு புல்லில் மறையும் புலியும், முழங்காலளவு நீரில் மறையும் முதலையும், இன்மையில் இருந்து எழுந்து வரும் களிறும்’ தவத்திற்கான உந்துசக்தியாகக் காட்டில் ஒளிந்துள்ளது.  அத்தேடலின் தொடர்ச்சியாக கனவிலே வெண்ணிறப் பசு வருதலும்அதைத்தேடிச்செல்லும்போது வசிஷ்டரைச் சந்தித்தலும் நிகழ்கிறதுவிஸ்வாமித்ரர்சூளி இருவருக்கும்விண்ணேகுவதற்கான அடிப்படைத் தகுதியாக ‘இல்லறம்’ காட்டப்பட்டுள்ளதாக கருத இடமுள்ளது.  சூளி அரசு. குடி, படை, செல்வம் அனைத்தையும் துறந்து விண்ணேகும் சமயத்தில் தடுக்கப்பட்டு இல்லறத்திற்குத் திருப்பப் படுகிறான். சூளியை மணந்து பிரம்மதத்தனைப் பெறுகிறான். கௌசிகன் இமயமலை சென்று தவம் செய்து கன்யாவனத்தில் கன்னிகளால் அலைகழிந்து மேனகையை மணந்து சகுந்தலையைப் பெறுகிறான். அதன்பிறகே இருவரும் விண்ணேகுகிறார்கள். காமத்தைக் கடந்த நிலையே மெய்ம்மையை அடைவதற்கான தகுதியாக சொல்லப்பட்டுள்ளதோ எனக் கருத இடமேற்படுகிறது. கௌசிகன், தன் உடலிலிருந்து ஐந்து பஞ்சேந்திரியங்கள் நச்சு நாகங்களாக இறங்கி மறைய, தோல்போர்த்த என்புக்குவை தவத்தில் நின்றெரிய, புகைவடிவாகி, வெண்பசு உருக்கொண்டு விண்ணேகி வெண்ணிறப்பசுவிடம் பால் குடித்து விஸ்வாமித்திர்ஆனார் என ஜெ. விவரித்த இடம் மயிர்க்கூச்செரியும் இடம்.   பீஷ்மர் தன் பிரம்மச்சரியத்தை பரிசோதனை செய்யவே கன்யாவனம் செல்கிறார். தன்னைக் கடந்து கரைசேர்ந்தாரா இல்லையா என்பது காட்டப்படவில்லை.

இல்லறத்தானுக்கும் தவம் உண்டு. ‘வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்’, என்ற திருக்குறளில் ‘ஈண்டு’ என்ற சொல் இங்கு ‘இல்வாழ்க்கையைக்’ குறிப்பதாகக் கொள்கிறேன். மேலும் ‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து’ என்ற திருக்குறளின் வாயிலாக துறவியரின் தவத்தினும் மேலானதாக, அறவழியில் செல்லும் இல்லறத்தானுடைய செயல்  நோன்மை மிக்கதாக கருதப்படுகிறது.

நான்கே நான்கு பகுதிகளை உடைய இப்பூரட்டாதி  பகுதி துறத்தலினுாடக, காமத்தைக் கடந்து, மெய்ம்மையை அடைவதற்கான வழிகளை நமக்குக் காட்டுகிறது. நன்றி, வணக்கம்.


No comments:

Post a Comment