நானொரு தேனீ -7
திரைப்படப் பாடல்களில் அணி நயம் உண்டா? என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுவதே. அப்படியே இருந்தாலும் உவமையணி மட்டும் தானே இருக்கிறது என நினைப்பவர்களுக்கான பதிவு இது.
"திரைப்படத்திற்கு பாடலெழுத ஒரு கவிஞனை அழைப்பது ஒரு சிற்பியை அம்மி கொத்தச் சொல்வது போன்றது" என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒருமுறை சொன்னாராம்.
அணி என்பது அழகு. அணியில்லையேல் ஒரு பாட்டு சிறவாது. உவமையணி தான் எல்லா அணிகளுக்கும் தாய் அணி. அடித்தளமே இந்த அணிதான். இதிலிருந்து பிறந்ததுதான் மற்ற அணிகளெல்லாம். திரைப்படத்திற்கு பாட்டெழுத வருபவர்களெல்லாம் தமிழிலக்கியம் கற்றவர்கள்தான். பாடல் வரிகளும், இசை அமைப்பும் ஒரு பறவையின் இரு சிறகுகள் போன்றன. அதனாலேயே காலத்தால் அழியா சாகாவரம் பெற்றனவாக பலபாடல்கள்
நிலைத்திருக்கின்றன.
இங்கே நான் ரசித்த பல பாடல்களை அணியிலக்கணப் பார்வையில் (தண்டியலங்காரம்) அணுகி இருக்கிறேன்.
1) முன்ன விலக்கணி
"முன்னத்தின் மறுப்பினது முன்ன விலக்கே" - குறிப்பால் ஒன்றை மறுத்து மேன்மை தோன்றச் சொல்வது முன்ன விலக்கணியாம்." 'வண்மையில்லை ஓர் வறுமையின்மையால்,
திண்மையில்லை ஓர்
செறுநர் இன்மையால்,
உண்மையில்லை பொய் உரையிலாமையால்,
வெண்மையில்லை பல்
கேள்வி மேவலால்"
கோசல நாட்டின் வளத்தைப் பாட வந்த கம்பன், அந்நாட்டில் கொடைத்தன்மை இல்லை, உடல்வலிமை இல்லை, உண்மை இல்லை, அறியாமை இல்லை என அடுக்கிச் செல்லச் செல்ல நமக்குள் திகைப்பு ஏற்படுகிறது. என்ன இது, ஒரு நாடு இப்படியா இருப்பது? என ஒரு திடுக்கிடல்! வறுமை இன்மையால், பகைவர் இன்மையால், பொய்மை இன்மையால், கேள்வி மேவலால் என
ஒவ்வொரு வரியிலும் அதன் சிடுக்கை அவிழ்க்கிறான் புலவன். இது ஓர் இலக்கிய உத்தி.
"உன் காதல் சொல்ல
நேரமில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
உன் கையில் சேர
ஆசையில்லை
நீ போன பின்பு
சோகமில்லை
என்று பொய் சொல்லத்
தெரியாதடி"
என்று பாடிய கவிஞர்
நா. முத்துக்குமாருக்கு
இக்கம்பராமாயணப் பாடல்தானே உந்துதலாக இருக்கமுடியும்? 'இல்லை, இல்லை' என்று முன்னதை விலக்கி முத்தாய்ப்பாக 'பொய் சொல்லத் தெரியாதடி' என்று குறிப்பால் ஒன்றை மேன்மையுறச் செய்த வரிகளால் இப்பாடல் சிறக்கிறது அன்றோ!
2) தற்குறிப்பேற்றணி
தன்+குறிப்பு+ஏற்றம், புலவன் தன் உள்ளக் கருத்தை இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏற்றிச் சொல்வது.
எனக்குத் தெரிந்து நான் படித்த காலத்தில் இருந்து இன்று வரை.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட"
என்ற சிலப்பதிகாரப் பாடல்தான் எடுத்துக்காட்டுப் பாடலாக இருக்கிறது. மதுரைக் கோட்டையில் மேல் பறந்த கொடி கோவலனையும் கண்ணகியையும் 'இங்கே வராதே' என்று எச்சரிக்கை செய்ததாம். திரையிசைப் பாடல்களில் தற்குறிப்பேற்ற அணிக்கா பஞ்சம்?
"மூடித் திறந்த விழியிரண்டும்
பார் பார் என்றது
முந்தானைக் காற்றில் ஆடி
வா வா என்றது
அன்னக்கொடி நடை முன்னும்
பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக்கொடி யிடை
கண்ணில் விழுந்து
மெய்யோ பொய்யோ என்றது"
முந்தானைக் காற்றில் ஆடுவதும், கொடியிடை மெய்யோ பொய்யோ என்றிருப்பதும் இயல்புதானே?
'பொய்யோ வெனும் இடையாள்' என்ற கம்பனின் வரி கவிஞரை இப்படிப் பாட வைத்ததாம். பாடலைப் படித்தால் இலக்கணம் புரிய
வைத்து விடுகிற வித்தையைக் கற்றவன் கவிஞன். இதனை தற்குறிப்பேற்றமாக கவிஞன் கண்ணதாசன் பாட்டிலே வைத்தான். மேலும் அவன்,
"சாகாது கம்பனவன் பாட்டு -அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு"
என்று பாடி 'என்னுள்ளில் இருப்பது அவனுடைய பாட்டல்லவா?' என்கிறான்
"ஒற்றைக்காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி
மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவோ"
என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடலில் பூக்கள் பூப்பதும், மழைத்துளி மண்ணில் வீழ்வதும் இயல்பான நிகழ்வுதானே?
அவள் தலையில் சூடவும், முத்தாடவுமா?
3) இல்பொருள்உவமையணி
(அபூதவுவமையணி)
இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. எப்போதும் எடுத்துக் காட்டாக கூறப்படும் குறள்,
"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந் தளிர்த்தற்று"
பாலைவனத்தில் பட்டமரம் எவ்வாறு தளிர்க்காதோ அதைப்போல அன்பில்லா இல்வாழ்க்கை சிறக்காது. 'பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தல்' என இல்லாத பொருள் இங்கே உவமையானது.
திரையிசையில்,
"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ "
என்ற கவிஞர் புலமைப்பித்தன் பாடலும்,
"கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ"
என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடலும் இல்பொருள் உவமையே!
4) உயர்வு நவிற்சியணி
(அதிசயவணி)
ஒரு பொருளின் அழகை, சிறப்பை அனைவரும் வியக்குமாறு உயர்த்திக்
கூறுவது.
"எகிறி குதித்தேன்
வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும்
பறவையானது
விரல்களின் காம்பில்
பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி
மீசையானது"
"குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நிறம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே எனக்குத் தானே
இரு பாடல்களுமே கவிஞர் வைரமுத்துவின் வியப்பின் உச்சத்திற்கான பாடல்கள்தாம். அது மட்டுமன்று, ' குழல் வளர்ந்து ' பாடலில் உவமையணியும் உண்டு, உருவகஅணியும் உண்டு!
5) முரண் அணி (விரோதவணி)
முரண்பட தொடுப்பது. மாறுபட்ட சொற்களாலும், பொருளாலும் மாறுபட்ட தன்மை தோன்றச் சொல்லுவது.
'ஊடலில் தோற்றவர் வென்றார்
அதுமன்னும்
கூடலில் காணப் படும்'
இக்குறளில் தோற்றவர் - வென்றவர், ஊடல் - கூடல் என்ற சொற்கள் முரண்பட அமைந்து வந்துள்ளது.
"கனாக் கண்டேனடி தோழி
.............................................
ஒருகண்ணில் அமுதம் கண்டேன்
மறுகண்ணில் அமிலம் கண்டேன்"
என்ற யுகபாரதியின் பாடலும்,
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை"
என்ற நா. முத்துக்குமார் பாடலும் முரணணியே!
"இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்"
சொற்களையும் பொருளையும் முரண்பட அமைத்த டி. ராஜேந்தரின் இப்பாடலுக்கு ஈடு இணையுண்டா?
"உன் சமையலறையில்
நான் உப்பா? சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா? புத்தகமா?
.............................................
நீ மொழிகள் என்றால்
நான் தமிழா? ஓசைகளா?
நீ புதுமை என்றால்
நான் பாரதியா? பாரதிதாசனா?
...............................
தூரத்து மேகம் தூறல்கள் சிந்த
தீர்த்த மழையில் தீக்குளிப்போம்"
பாடலாசிரியர் கபிலனின் இப்பாடல் சொல் முரண் அமைந்தது. "தீர்த்த மழையில் தீக்குளித்தல்"! எப்படிப்பட்ட வரிகள்!
6) சிலேடையணி
இருபொருள் தருவது. செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். ஏராளமான திரைப்பாடல்கள் உள்ளன.
"எந்த வேர்வைக்கும்
வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில்
ஊர் வைக்குமே"
வேர்வை, என சேர்த்துப் பார்த்தால் ஒரு பொருளும், வேர்+வை என பிரித்துப் பார்த்தால் வேறு பொருளும் வருமாறு எழுதினார் 'வாலிப வாலி'
7) சங்கீரண அணி
'மொழியப்பட்ட அணி பல தம்முள்
தழுவவுரைப்பது சங்கீரணமே'
ஒரே செய்யுளில் பல அணிகள் கலந்து வருவது சங்கீரண வணியாம்.
"அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
வசந்த காலத்தில்
மழைதரும் மேகம்
மழை நீரருந்த
மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்
ஒரு பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி "
கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் பின்னிய கூந்தல் கருநிற நாகம், முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி என்பதால்- உவமையணி, ராகம் என்ற சொல்லும் பொருளும் திரும்பத் திரும்ப வந்து ஒரே பொருளைத் தருதலால்- சொற்பொருள் பின்வரு நிலையணி, இசையெனும் அமுது என்றதால்-சுவையணி, 'பைரவி' என்ற சொல் பலவிடத்தும் சென்று பொருளை விளக்குதலின் தீவக அணி, இந்திரலோகத்து சக்கரவாகம் என்பது தற்குறிப்பேற்றம். -(சக்கரவாகம் தேவலோகப் பறவை) இவ்வாறாக ஒரே பாடலில் பல அணிகள் கலந்து வருவதால் சங்கீரணவணியாம்.
ஏன் புலவர்கள் எழுதிய பாடல்கள் மட்டும் இலக்கணத்திற்கு
எடுத்துக்காட்டாக தரப்படுகின்றன? என்றால் புலவன் வேறு, கவிஞன் வேறு. புலவன் சுதந்திரமானவன், சமரசங்களுக்கு ஆட்படாதவன். அதனாலேயே அவன் இலக்கியங்களில் மட்டுமே வாழ்கிறான்.
ஒரு கவிஞன் , திரைப்படப் பாடலாசிரியனாக இருப்பது மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளும் பாடலாசிரியர்கள்
பாராட்டுக்களுக்கு உரியவர்கள். கவிஞனுக்கு கிடைக்கும் சுதந்திரம் பாடலாசிரியனுக்கு இல்லை. பல சமரசங்கள் செய்ய வேண்டும். இப்போது கவிக்கோ சொன்னதை நினைத்துப் பாருங்கள்! இவ்வாறு கொத்தப்பட்ட சிற்ப வேலைப்பாடுடைய அம்மிகள் தான் இன்று சாகாவரம் பெற்று மிளிர்கின்றன.

No comments:
Post a Comment