Tuesday, 26 August 2025

நானொரு தேனீ - 6 . இராச. மணிமேகலை

 நானொரு  தேனீ - 6

     


"அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா  அரண்" 

 "அறிவு நமக்கு துன்பம் வராமல் காக்கும் கருவி (tool) யாகப் பயன்படுகிறது. மேலும் எதிரியால் கூட நம்மை அழிக்கமுடியாத அரணாகவும் இருந்து பாதுகாக்கிறது" என்பது இக்குறளின் பொருள்.

         அறிவு என்பது யாது? கல்வியறிவா?  மொழியறிவா?பகுத்தறிவா?  பட்டறிவா? அல்லது இவையெல்லாம் சேர்ந்த அறிவா?அதை எப்படி வரையறை செய்வது? என்ற கேள்வி இருந்தாலும், அது 

துன்பத்திலிருந்து, அழிவிலிருந்து

நம்மைக் காக்கும் ஆயுதமாகப் பயன்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

           என் ஆசிரியப் பணியில் எனக்கு நேர்ந்த அனுபவம் இது.  என் மொழியறிவு எனக்கு எவ்வாறு அற்றம் காக்கும் கருவியாக, அரணாகப் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். மேல்நிலை வகுப்புகளில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு  வாரத்துக்குத் தலா நான்கு பாடவேளைகள் மட்டுமே. மற்றப் பாடங்களுக்கு ஏழு பாடவேளைகள்.  PET,  VE பாடவேளைகளுக்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் போட்டி போடுவது வழக்கம். முக்கியப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தங்களின் சிலபஸ் முடிக்க வேண்டி இப்பாட வேளைகளை தனக்கானதாக தலைமையாசிரியரிடம் கேட்டுப் பெறுவர். ஆங்கில ஆசிரியர்களுக்குப் பிரச்சனை இல்லை. 35 மதிப்பெண்கள் தான் அவர்கள் இலக்கு. தமிழ்ப்பாடம் அப்படியல்ல. அது வாழ்க்கைப் பாடம். அதில் அறிவியல் வரும், சமூக அறிவியல் வரும்.கணிதம் வரும். எல்லாம் வரும். நான் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து இருந்ததால்  தலைமையாசிரியரிடம் VE பாடவேளையைக் கேட்டுப் பெற்றேன். இதே பாடவேளையை மறதியாக கணித ஆசிரியர்க்கும் கொடுத்து விட்டார் அவர். எங்கள் இருவருக்கும்  சிறு சச்சரவு. உடனே அவர் ' தமிழ் தானே? ரொம்ப முக்கியமோ? அவர்கள் படித்துக் கொள்ளமாட்டார்களா?  நீங்கள் விட்டுக் கொடுத்தால் என்ன அவர்களாகவே படித்துக் கொள்வார்கள்' என்றார். நான் 'சார், உங்க பாடம் உங்களுக்கு முக்கியம். என் பாடம் எனக்கு முக்கியம். உங்களுக்கு பேசவேண்டியிருந்தால் தலைமையாசிரியரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என்றேன்.  தமிழ்மொழிப் பாடத்திற்கும், தமிழசிரியர்களுக்கும்  அவ்வளவாக சிறப்பில்லாத நிலை தான் இன்றுவரையிலும் இருக்கிறது. ஆனால் 'தமிழ் தானே' என்ற சொல் என்னுள் சீற்றத்தை உண்டாக்கியது. வகுப்பு முடியும் தறுவாயில் போர்டில்  'தமிழ் தான், முடிந்தால் படித்துப் பொருள் புரிந்து கொள்'  என்று இப்பாடலை எழுதினேன்.


"காக்கைகா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்கு

காக்கைக்குக் கைக்கைக்கா கா"


        மதிய உணவு இடைவேளை முடித்து முதல் பாடவேளை கணிதம். அவர் வந்து இந்தப் பாடலை படித்து விட்டு 'என்னது இது? யார் எழுதினது?

என்றாராம். பிள்ளைகள் என்னைச் சொல்ல இப்போதான் க, கா,கி, கீ சொல்லித் தராங்களா?  என்று கிண்டலாக  கேட்டிருக்கிறார்.  

பிள்ளைகள் இதற்கான விளக்கத்தைக் கேட்க நான் பிறகு சொல்கிறேன் என்று விளக்கம் சொல்லாமல் மௌனம் காத்தேன். இதற்கிடையில் மாணவர்களிடமும், சக ஆசிரியர் ஒருவரிடமும் 'அது என்னவாயிருக்கும்'  என்று 

வடிவேலு பாணியில் கேட்டுக் கொண்டிருந்தாராம். ஒருவாரம் கழித்தே மாணவர்களுக்கு பாடலை விளக்கினேன்.


1) "காக்கைக்கு ஆகா கூகை-                      

காகம் கூகையை  (ஆந்தை)                   

இரவில்  வெல்லமுடியாது.

2) கூகைக்கு ஆகா காக்கை-   

     கூகை காக்கையை பகலில் 

     வெல்ல முடியாது.

3) கோக்குக்கூ  காக்கைக்கு-                       

அரசனுக்கு அவன் நாட்டை                    

பகைவரிடமிருந்து காப்பாற்ற

 4)  கொக்கு ஒக்க-                                            

கொக்கைப்  போலத் தக்க சமயம்           

வரும்வரை  காத்திருக்க                        

 வேண்டும்.  இல்லையெனில்

 5) கைக் கைக்கு - 

      பகையை எதிர்த்து

 6) காக் கைக்கு - 

      காப்பாற்றுவதற்கு

 7) கைக்கு ஐக்கு ஆகா -

      திறமையான அரசனுக்கும்

      இயலாததாகும்.  

     

 'தமிழ் தானே' என்ற இளக்காரமும், புறக்கணிப்பும் பரவலாக எல்லாரிடத்தும் இருக்கிறது. ஒரு தமிழாசிரியராக நான் மொழியறிவு எனும் ஆயுதத்தால்  தாக்குவேன் தான். இந்தப் பாடலுக்கே இப்படி என்றால் கீழ்க்கண்டப் பாடலை எழுதியிருந்தால்? இந்த மனிதர் 

'ததிங்கிணத்தோம்' ஆடியிருப்பாரோ?


"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதூதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?"


நம் முன்னோடிகள் கொஞ்ச நஞ்ச அறிவையா நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்? அரணாகக் காத்த  கவி காளமேகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல !

(இப்பாடலின் தேனைத் தேடிச் சுவைப்பீராக!)


    மதுராந்தகம் மகளிர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றிய சமயம் அது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா அம்மையார் உடல் நிலை குன்றி மருத்துவமனையில் இருந்தார். அவரின் இந்த நிலைமைக்கான காரணங்கள் பற்றிய செய்திகள் யூகங்களாகவும், மர்மங்களாகவும் ஊடகங்களில் விரைவுச் செய்திகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வெளிவந்து கொண்டிருந்தன. மூன்று, நான்கு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்து உயிர் நீத்தார் அவர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமலிருக்க பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை  அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த அன்று மறைந்த முதல்வருக்கு எல்லாப் பள்ளிகளிலும் இரங்கல் கூட்டம் நடத்த ஆணையிடப்பட்டது. அந்நிகழ்வில் ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் கட்சி சார்பாக வந்தவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தமிழாசிரியரான எனக்கு  அவரைப் பற்றி  இரங்கற்பா பாடவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. இதற்கு முன் மறைந்த  குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு இப்பாடலைப் பாடியிருக்கிறேன். 


 "ஜென்மம் நிறைந்தது        

சென்றவர்  வாழ்க!

சிந்தை கலங்கிட 

சென்றவர் வாழ்க!

நீரில் மிதந்திடும்

கண்களும் வாழ்க!

நிம்மதி நிம்மதி 

இவ்விடம் சேர்க!


மரணமும் பூமியில் 

புதியது இல்லை!

ஜனனமும் பூமியில்

 பழையது இல்லை!

 இரண்டும் இல்லாவிடில்

 இயற்கையும் இல்லை!

 இயற்கையின் ஆணை தான்  ஞானத்தின் எல்லை!


பாசம் அளாவிய 

கண்களும் எங்கே!

பாய்ந்து துழாவிய 

கைகளும் எங்கே!

தேசம் அளாவிய 

கால்களும் எங்கே!

தீயுண்ட தென்றதுன்   

சாம்பலும்  எங்கே!

  

காற்றில் கலந்தது 

காற்றுடன் போக மண்ணில்பிறந்தது                                  

மண்ணுடன்  சேர்க!

எலும்புசதை கொண்ட 

உருவங்கள் போக!எச்சங்களால்உந்தன்                               

இன்னுயிர் வாழ்க!


பிறப்பு இல்லாமலே 

நாளொன்றும் இல்லை!

இறப்பு இல்லாமலே

பொழுதொன்றும் இல்லை!

நேசத்தினால் வரும்

 நினைவுகள்தொல்லை!

 மறதியைப்போல் ஒரு 

 மா மருந்தில்லை!


கடல்தொடும் ஆறுகள்

கலங்குவதில்லை!

நதிதொடும் தாரைகள்

அழுவது இல்லை!

நதிமழை போன்றது 

விதியென்று கண்டும் 

மதிகொண்ட மானுடர் 

மயங்குவ தென்ன!


மரணத்தினால் சில 

சாபங்கள் போகும்!

மரணத்தினால் சில   

காயங்கள் போகும்!

வேதம் சொல்லாததை

மரணங்கள் கூறும்!

விதையொன்று வீழ்ந்திடில்                    

செடி வந்து சேரும்!


பூமிக்கு நாமொரு 

யாத்திரை வந்தோம்!

யாத்திரை முடிந்ததும் 

நித்திரைகொண்டோம்!

நித்திரை போவது 

நியதி என்றாலும்

யாத்திரை என்பது 

தொடர்கதை ஆகும்!


தென்றலின் பூங்கரம் 

தீண்டிடும் போதும்!

சூரியக் கீற்றொளி 

தோன்றிடும் போதும்!

மழலையர் தேன்மொழி 

செவியுறும் போதும்!

மாண்டவர் நம்முடன் 

வாழ்ந்திடக் கூடும்!


மாண்டவர் சுவாசங்கள் 

காற்றுடன்போக!

தூயவர் கண்ணொளி 

சூரியன்  சேர்க!

பூதங்கள் ஐந்திலும் 

பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் 

எம்முடன் சேர்க!"


  எங்கள் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் மொத்தமாக 4000 பேர். வெளியில் இருந்து வந்தவர்கள், கட்சிக்காரர்கள், தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் என மதுராந்தகம் மகளிர் மேனிலைப் பள்ளியின் வளாகமே பரபரவென்று 

உணர்ச்சிக் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. எப்போதுமே, எல்லாப் பள்ளிகளிலுமே பள்ளியின் அனைத்து விழாச் செயல்பாடு களிலும் தமிழாசிரியர்கள் தலைதான் உருளும். ஒரு பேச்சோ, பாட்டோ எப்போதும் ஆயத்தமாக இருக்க கடமைப்பட்டவர்கள்  நாங்கள் தான். தமிழை இளங்கலையில், முதுகலையில், ஆய்வுநிலையில் இருபது வருடங்களாக படிப்பவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின் எதிர்பார்ப்பு சரிதானே? 

        கவிஞர் வைரமுத்துவின் இப்பாடல் எந்த ஒரு மனிதருக்கும் பொருந்தக்கூடியது. இழப்பின் வலியில் இருப்பவரை ஆற்றுப்படுத்தக் கூடியது. ஜெயலலிதா அம்மையாரின் நெஞ்சுறுதி, 'எத்தனை முறை வீழ்ந்தேன் என்பதல்ல, எத்தனை முறை எழுந்தேன்' என்ற அவருடைய நிமிர்வு, 'ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் பெண்ணாதிக்கம் பாரீர்' என அறைகூவல் விட்ட கர்வம், பல பெண்களின் முன்மாதிரி.... கடைசியில் மர்மம் நிறைந்த அவரது இறப்பு  ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும்  அசைத்துப் பார்த்து விட்டது. 

    எப்போதோ, யாருடைய இறப்பிலோ கேசட்டில் ஒலித்த இப்பாடலை என் மனம் உள்வாங்கியிருந்தது. அப்பாடலை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இப்படிப்பட்ட சூழலில் தான் நான் பாடினேன். ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தம். 

ஒவ்வொருவரும் தத்தம்  கண்ணீரில், விசும்பல்களில்,கேவல்களில், தொலைந்து கரைந்து போனார்கள். இதனை ஊடகங்கள் பதிவு செய்தன. 


ஒரு கவிஞனின் மொழியறிவை என் மொழியறிவால் தக்க சமயத்தில் ஆயிரக்கணக்கானவர்க்கு கடத்திய  தருணம் மொழியின் உச்சம்!

இது என் பெருமை அன்று. மொழியின் பெருமை.  புலவனின், கவிஞனின் பெருமை. வகுப்பில் விரல் வழியே, மேடையில் குரல் வழியே  அவ்வளவே! நாட்படு தேறலைச் சுவைத்துச் சுவைத்து என் மொழியறிவு சமயம் பார்த்து காத்திருக்கிறது.  சுவாதீனமாக அற்றம் காக்கும் கருவியாக,  மற்வர்களிடம் இருந்து காக்கும் அரணாக வெளிப்படுத்துகிறது!

No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...