நானொரு தேனீ - 9
இலக்கியம் ஒரு கலை வடிவம்; காலத்தைக் காட்டும் கண்ணாடி.
ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் தாய் இலக்கியமே! இலக்கியம் காட்டும் காட்சிகளே ஓவியமாக, சிற்பமாக, நாடகமாக, நாட்டியமாக, இசையாக மிளிர்கிறது. சங்க இலக்கியக் கவிதைகளை ஓவியத் தன்மையில், நாடகத் தன்மையில் கண்டு, உணர்ந்து ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.
கவி நான்கு வகைப்படும். ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பன.
ஆசுகவி என்பது ஒரு சொல்லோ, பொருளோ கொடுக்கப்பட்டவுடன் அடுத்த நொடியில் பாடப்படுவது.
இக்கவி புனைவதில் கவி
காளமேகப் புலவர் வல்லவர். 'ஆசுகவிப் புகழ் காளமேகமே'
என்று சிறப்பிக்கப்படுபவர்.
மதுரகவி என்பது சொல் நயம், பொருள் நயம், அணிநயம், தொடைநயம் அமையப் பாடப்படுவது. மதுரகவியாழ்வார் என்ற ஆழ்வார் இக்கவியால் பெயர் பெற்றவர் போலும்.
வித்தாரக் கவி என்பது விரிவாகப் பாடப் படுவது. விஸ்தாரமாக, வித்தாரமாகப் பேசுதல்,
என்பது பேச்சு வழக்கு.
வக்கணையாக பேசுதல்.
தொடர்நிலைச் செய்யுள்கள்
எல்லாம் வித்தாரக் கவியின் பாற்படும்.
ஓவியம், அலங்காரம், அழகு, அதிசயம் ஆகிய தன்மைகளைக் கொண்டது சித்திரக் கவி.
இது சொற்சித்திரம், வடிவச் சித்திரம் என இருவகைப்படும். திருஞானசம்பந்தர் இயற்றிய 'திருவெழுக்கூற்றிருக்கை'
தமிழின் முதல் சித்திரக்
கவியாகும். சித்திரக் கவியை இயற்றுவதற்கு துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் தேவைப்படுகிறது. யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம், முத்துவீரியம், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களில் இக்கவி பாடப்பட வேண்டிய முறைகள் கூறப்பட்டுள்ளன. தகர வர்க்கம்,
ககர வர்க்கம், வினாவிடை முதலான வகைகளில் அமைந்தவை சொற்சித்திர வகைப் பாடல்கள். வடிவச் சித்திரத்தில் செய்யுள்களைப் பொருத்த ஒவ்வொரு வகையான விதிமுறைகள் உள்ளன. ரதம், பாம்பு, மயில், சேவல் வேல், லிங்கம் போன்ற ஓவியங்களில் செய்யுள்களை அமைத்துப் பாடுவர். சித்திரக்கவி வகைகள் நூற்றுக் கணக்கானவை. அவற்றில் சில மட்டும் உங்கள் முன்.
1) மாலை மாற்று
"வாயா யா நீகாவா யாதாமா தாமாதா
யாகாவா நீயாயா வா"
வாயா யா- எமக்கு கிடைக்காதன எவை?
நீ காவாய் - நீ எனக்கு காத்தருள்வாய்
யாதாம் - (இல்லையேல்) யாதாகும்?
மாது ஆம் மா தா- இம் மாது பெரிதாக
வருந்துவாள்
யா ஆகா - (நீ நினைத்தால்) எவை முடியாதன?
ஆயா நீ வா - யான் கூறியவற்றை ஆராய்ந்து நீ வருக
(தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு உணர்த்தியது)
"ஆயர் தம் மாயா நீ வா
ஆயா மாயா வா "
இது கவிஞர் வைரமுத்து எழுதிய விஸ்வரூபம் படப்பாடல். இவ்வரிகளை எங்கிருந்து எடுத்தார் எனத் தெரிகிறதா? எவரென்று புரிகிறதா?
அடுத்தப் பாடல்,
"பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ"
"பூவாளை நாறும் நீ - இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து
புலால் நாற்றம் வீசும் நீ
பூ மேக லோகமே - பூவையும் பொன்னையும் மழையாகச்
சொரியும் மேகமே!
பூ நீறு நாளை வா- பூவும் திருநீறும் தரித்து நாளையதினம் வருவாயாக
பூ - இவள் இப்போது பூப்பினவளாய் இருக்கிறாள்." என்பது
இப்பாடலின் பொருள்.
(பரத்தையர் சேரி மீண்ட தலைவனுக்கு தோழி கூறியது)
2) நாக பந்தம்
இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தலைகளை உயர்த்தி நிற்பது போன்று சித்திரம்
எழுதி ஒரு பாம்பின் தலையிலிருந்து
வால்வரை நேரிசை வெண்பாவும்,
மற்றொரு பாம்பில் இன்னிசை வெண்பாவும் வருமாறு அமைப்பது நாகபந்தம். இதில் பாம்பு உடல்கள் சந்திப்பில் வரும் எழுத்துகள் இரண்டு வெண்பாவுக்கும் பொதுவானவை.
1. நேரிசை வெண்பா
அருளின் றிருவுருவே
அம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீர் -பொருவிலா
வொன்றே யுமையா ளுடனே
யுறுதிதரு
குன்றே தெருள வருள்
"அறத்தின் அழகிய மேனியாய்!
திருச்சிற்றம்பலம் உடையாய்!
தேவர்கள் அறிவிற்கும் எட்டாத புகழ்ச்சியுடையாய்! ஏகரூபத்தினை யுடையாய்! உமையவளுடன் கூடி எமக்கு சிவபதம் அளிக்கும் மலை போல்வாய்! நாங்கள் தெளிவுபெற அறிவினை அருள்வாயாக!
2. இன்னிசை வெண்பா
மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருஞ் சோதி
-திருநிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை ஒழி.
"நின்னை அடைந்தவருள்ளத்தில் நிலைபெற்ற ஒளியாய் உள்ளவனே!
நீலகண்டத்தினுடைய பெருஞ்சோதி
வடிவானவனே! அழகிய மதியை யுடைய வானம் சிறிதாகுமாறு பெருகிய ஒளித் திருமேனியனே!
என் சித்தம் உன் திருவடிகளை மறவாதிருக்க அருள்வாயாக!"
3) சக்கர பந்தம்
சக்கர வடிவத்தில் ஏதேனும் ஒரு சுழற்சி முறையில் பாடலை அமைப்பது.
"மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே'
இது நான்கு ஆரைச்
சக்கர பந்தம்.
இப்பாடலை அமைக்க முப்பத்தியிரண்டு எழுத்துகள் பதினேழாகச் சுருங்கும். நடுவில் உள்ள 'மே' என்ற
எழுத்து எட்டுமுறை
வாசிக்கப்பட்டு எட்டெழுத்தாகும். ஆரக்காலில் நின்ற எட்டெழுத்துகளும் இருமுறை வாசிக்கப்பட்டு பதினாறு எழுத்துக்களாகும். சுற்றுப்பாதையில்
உள்ள எழுத்துக்கள் எட்டு. ஆக எழுத்துக்கள் முப்பத்தியிரண்டும் பதினாறாக அடங்கும்.
"மேரு மலையை வில்லாக கொள்பவனும், ஆலகால நஞ்சை உணவாக உண்டவனும், பரிவாரமாகிய மேன்மை வாய்ந்த பூதகணங்ளை பரிவாரமாகக்
கொண்டவனுமாகிய சிவனின்
பாதம் பற்றுவீராக! "இது
ஆறாரைச் சக்கரபந்தம், எட்டாரைச் சக்கரபந்தம் என்ற வகையிலும் பாடப்படும்.
4) சுழிகுளம்
குளத்தில் எறியப்படும் கல் சுழிசுழியாய் அலைகளை உண்டாக்குவதைப்போல எழுத்துக்களை சுழி அமைப்பில் பொருத்திப் பாடுவது சுழிகுளம். ஒவ்வொரு அடியிலும் எட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுள் மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும்
முடியும்படி பாடப்படுவது.
"கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா"
"செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே விலை மதித்தற்கரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாம். முயற்சி செய்து நன்கு கற்றவர் பாடும் பாடல்கள் அழியாத செல்வமாகும்" என்பது இப்பாடலின் பொருள்.
5) இரத பந்தம்
"இருள் பொருதா வம்பலச்சித்
தென்னு முருகா நீ
டிருவிண்ணோர் தேடுமருந் தேமாண்
-பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்தீநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்"
இப்பாடல் பாம்பன் சுவாமிகள் அருளிய சக்தி வாய்ந்த மந்திர பந்தங்களில் ஒன்றாகும்.
இப்பாடல் குறிப்பாக வாகன விபத்துகளைத் தடுக்கவும், பாராயணம் செய்து
பாடினால் பயணங்களின்
போது பாதுகாப்பாக இருக்கவும் உதவுகிறது. இப்படிப்
பாடலை அமைப்பதற்கு
அபரிதமான இசைஞானமும், இலக்கணப் புலமையும் தேவை. திருஞானசம்பந்தரின் 'திருவெழுக்கூற்றிருக்கை' ரத பந்தப் பாடல் வகையது. அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் இப்பாடல் பாடுவதில் வல்லவர்கள்.
6) விருச்சிக பந்தம்
தேளின் உருவம் போன்ற ஓவியத்தில்
முன்புறத்திலுள்ள இடுக்கி ஒவ்வொன்றிலும் நந்நான்கெழுத்தும்
தலையில் ஒன்றும் முதுகில் ஐந்தெழுத்துகளும், ஒருபக்கத்திற்கு
நான்கு கால்களும் இரு பக்கங்களில்
எட்டு எழுத்துக்கள் மணியொன்றிற்கு
ஓரெழுத்தாக கொடுக்கிலுள்ள
ஆறுமணிகளிலும் ஆறெழுத்துகளும்
அமைய, வலப்பக்க இடுக்கியில் ஏறியிறங்குமாறு எழுத்துகள் மாலைமாற்றாகப் பொருந்தப் பாடுவது விருச்சிக பந்தம் ஆகும்.
"திங்கண்முக மானேதேனே
மாகச் செங்கமல
மங்கைதிற நின்வாய் மலர்"
என்ற பாடல் தேளின் ஓவியத்தில் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
இறுதியாக, சித்திரக்கவிகளை எழுதுவதும், அவற்றை சித்திரத்தில் பொருத்துவதும் சவாலாயிருந்த காரணத்தாலும், இன்ன இன்ன வகைகளில் எழுதவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்ததாலும் இவ்வகைக் கவிகள் எழுதுவதில் பலரும் ஆர்வம் இழந்தனர். இவைகள் மூளைக்குச் சவாலாக இருந்தனவேயன்றி இதில் இலக்கிய நயங்களோ, சிறப்புகளோ இல்லை எனப் புலவர்கள் கருதியதால் நாளடைவில் மெல்ல மெல்லச் செல்வாக்கை இழந்தன.
உசாத்துணை :
1. சித்திரக் கவி விளக்கம்
2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
சித்திரக் கவிகளின் சித்திரங்களை கீழே கண்டு இன்புறுங்கள்!
![]() |







No comments:
Post a Comment