நானொரு தேனீ- 8
தனிப்பாடல் திரட்டில் இருந்து நான் சுவைத்த பாடல்களைத் திரட்டி உங்கள் முன் வைக்கிறேன். இந்த தனிப்பாடல்கள் பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. புலவர்கள் தம் வறுமையை, வாழ்க்கைப்பாட்டை, சரி செய்துகொள்ள மன்னர்களை, வள்ளல்களை நாடிச் செல்லும்போது ஏற்படுகிற இடர்ப்பாடுகளை மனம் வருந்தியும், கேலியாகவும், பல சமயங்களில் நிந்தித்தும் பாடல்களாகப் பாடியுள்ளனர். அது மட்டுமே தான் தனிப்பாடல்களில் உள்ளனவா எனில் இல்லை, சமூக அவலங்களைச் சாடுதல், அரசர்களுக்கு அறமுரைத்தல் சார்ந்த பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 90க்கும் மேற்பட்ட புலவர்களின் பாடல்கள் இத்திரட்டில் உள்ளன. அவைகளில் நான் ரசித்து மகிழ்ந்த பாடல்களில் இருந்து சில.
1) "வீரஞ் சொரிகின்ற பிள்ளாய்!
உன்றனக்குப் பெண் வேண்டு
மென்றால் ஆருங் கொடார்; உங்களப்பன் கபாலி
அம்மான் திருடன்; ஊருஞ் செங்காடு;
நின்றன் முகம் யானை; உனக்கிளையோன் பேருங் கடம்பன்;
நின்தாய் நீலி
நிற்கும் பெருவயிறே!
"வீர தீரச் செயல் புரிகின்ற பிள்ளையாரே! உனக்கு திருமணஞ் செய்ய யாரும் பெண் கொடுக்க மாட்டேன்கிறார்கள். ஏன் தெரியுமா?உன் தந்தையோ மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருக்கும் கபாலி;
அவன் குடியிருக்கும் இடமோ சுடுகாடு; உன் மாமன் வீடு வீடாகச் சென்று வெண்ணெய்
திருடித் தின்பவன்; உன் தம்பி கடம்பன்(முரடன்); உன் தாயோ நீலி (கருப்பி); உனக்கோ யானை முகம், பானை வயிறு இப்படிப்பட்ட உனக்கு யார் பெண் தருவார்கள்?"
கண்ணுக்கு லட்சணமாக இருக்கிற, சம்பாதிக்கிற ஆண்பிள்ளைகளுக்கே திருமணம் நிகழ்வது அவ்வளவு எளிதில்லை. அதிலும் இவர் அரசமரத்தடி பிள்ளையார். குளித்துக் கரையேறுகிற பெண்களை சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர். குடும்பமும் இப்படியாகப்பட்டது. எப்படி திருமணம் ஆகும்? இதனைக் கவி வீரராகவர் இகழ்வது போலப் பழிப்பது என்ற வஞ்சப் புகழ்ச்சியணியால் பாடியிருக்கிறார். வடமொழியில் இதனை நிந்தாஸ்துதி என்பர்.
2) சோழனது அரசவை.
கம்பர், ஔவையார், ஒட்டக்கூத்தர் முதலான புலவர்கள் இருக்கிறார்கள். (ஔவையார் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இவர் கம்பர் காலத்தவர். சங்ககால ஔவை ஒருவர் இருக்கிறார்).அப்போது கம்பர் ஔவையிடம் சிலேடையாகவும், அவரை சீண்டும் விதமாகவும் (அப்பவே eve teasing)
"ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி அது என்ன?" எனக் கேட்டாராம். ஒரு கால் அடி= ஒரு கால் இருக்குமடி; நாலிலைப் பந்தலடி = நான்கு இலைகளை உடைய பந்தல் போல் இருக்குமடி. இதில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையை மதிப்பு குறைவாக விளிக்கும் வகையில் இருந்ததைக் கவனித்த ஔவை பாட்டு வடிவில், சிலேடையில் பதிலளித்திருக்கிறார்.
"எட்டே கால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!
முட்டக் கூரையில்லா வீடே! குல ராமன் தூதுவனே!
ஆரையடா, சொன்னா யடா?"
8, என்பதன் தமிழ் எண்ணுரு 'அ'.
கால் என்பதன் எண்ணுரு 'வ'
எட்டேகால் லட்சணமே-அவலட்சணமே
என்று ஒரு பொருளும், கால்களை எட்டிப்போட்டு நடக்கும் காலழகா என்றும் பொருள்படும்.
எமனேறும் பரியே- எமன் ஏறும் வாகனமாகிய எருமைக்கடாவே என்றும், எம்முடைய வளரும் செல்வமே என்றும் பொருள்படும்.
மட்டில் பெரியம்மை தேவியே- சீதேவிக்கு மூத்தவளான மூதேவியே.
முட்ட மேல் கூரையில்லா வீடே- குட்டிச்சுவரே என்று ஒரு பொருளும்
தேவலோகத்தோனே என்றும் பொருள்படும்.
குலராமன் தூதுவனே-குரங்கே என்றும், ராமதூதனே என்றும் பொருள்படும்.
ஆரையடா-நீ சொன்னது ஆரைக் கீரை யடா என்று ஒரு பொருளும்,
நீ யாரையடா, சொன்னாயடா யாரைப் பார்த்துக் கேட்டாயடா என்றும் பொருள்பட்டது.
எப்படி இருக்கிறது இந்த சண்டை? 'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே? நமக்கு சிலேடையான பாடல் கிடைத்தது.
"அவலட்சணமே! எருமைமாடே!
மூதேவியே! குட்டிச்சுவரே!
குரங்கே! யாரைப் பார்த்தடா,
சொன்னாய் அது?"
கம்பரை நினைத்துப் பாருங்கள்!
இன்னொரு பாடல் இதுவும் ஔவையுடையதே. ஒருமுறை இவரிடம் உலகில் மிகப் பெரியது எது? எனக் கேட்டார்களாம். அதற்கான விடையாக இப்பாடல்
"பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது, பெரிது, புவனம் பெரிது!
புவனமோ, நான்முகன் படைப்பு!
நான்முகன் கரியமால்
உந்தியில் வந்தோன்!
கரியமாலோ அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி
கலசத்துள் அடக்கம்!
கலசமோ புவியிற் சிறுமண்!
புவியோ அரவினுக்கு
ஒருதலைப் பாரம்!
அரவோ உமையாள்
ஒருசிறு மோதிரம்!
உமையோ இறைவர்
பாகத்து ஒடுக்கம்!
ஈசனோ தொண்டர்தம்
உள்ளத்து ஒடுக்கம்!
தொண்டர் தம் பெருமை
சொல்லவும் பெரிதே?"
இப்பாடலின் சிறப்பை என்னவென்று
சொல்வது? இப்பாடலில் அந்தாதித் தொடை பயின்று வந்துள்ளது.
பணம் படைத்தவனும், அதிகாரம் கையில் வைத்திருப்பவனும் பெரியவன் அல்ல.தொண்டர்கள் தான் உலகில் மிக மிகப் பெரியவர்கள்! நல்ல தொண்டனாக இல்லாமல் ஒருவன் நல்ல தலைவனாக முடியாது. இதைப் படித்தவுடன் சுவாமி விவேகானந்தர் 'நீ எஜமானாவதற்கு சிறந்த வழி நல்ல வேலைக்காரனாக இருப்பதே. அப்பொழுது தலைமைப் பதவி உன்னைத் தேடி வரும்' என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தலைவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல தொண்டர்களாக இருந்தார்களா?
3) ஆவீன, மழை பொழிய,
இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய் நேவ,
மாவீரம் போகுதென்று
விதை கொண்டோட,
வழியிலே கடன்காரன்
மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன்
எதிரே வர,
தள்ளவொண்ணா
விருந்து வரச்,
சர்ப்பந் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட
கடமை கேட்க,
குருக்களோ தட்சணைக்கு
குறுக்கே நிற்க,
பாவாணர் கவி பாடிப்
பரிசு கேட்கப்,
பாவிமகன் படுந்துயரம் பார்க்க ஒண்ணாதே!"
- விவேக சிந்தாமணி
"பசு கன்று ஈன, மழை விடாது பொழிய, அதனால் வீடு இடிந்து விழ, பிரசவ வலி வந்து மனைவி வேதனைப்பட
வேலையாள் இறந்து விட, ஈரங் காய்ந்து விடுமென்று வயலில் விதைக்க விதை எடுத்துக் கொண்டு ஓட, வழியிலே கடன்காரர் மறிக்க, உறவினர் இறந்ததற்காய் ஒருவர் சாவோலை கொண்டுவர, அன்று பார்த்து தவிர்க்கவொண்ணா விருந்தினர் வர அந்தச் சமயத்தில் அரசனின் தண்டல்காரன் வந்து தீர்வைக் கேட்க, எதிர்ப்பட்ட குருக்கள் தட்சணை கேட்க, இந்தப் பாவிமகன் படும்பாடு சகிக்க இயலாதே "
என்பது பாடலின் பொருள். 'கஷ்டகாலத்தில் ஒட்டகத்தின் மேலேறினாலும் நாய் கடிக்கும்' என்பது பழமொழி. வாழ்க்கையில் ஒரே சமயத்தில் அடுக்கடுக்கான துன்பங்கள் நமக்குவரிசை கட்டி நிற்பதை எதிர்கொண்டிருப்போம். இராமச்சந்திரக் கவிராயருக்கும் இதே போன்ற சூழலில் எழுந்தது தான் இப்பாடல் போலும்.
4) இதுவும் கவி வீரராகவருடையப் பாடல்தான்
"இம்பர்வான் எல்லை
இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணாநீ?
என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன்
பூசு மென்றாள்
மாதங்கம் என்றேன்
யாம் வாழ்ந்தோ மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன்
தின்னு மென்றாள்
பகடென்றேன் உழும்
என்றாள் பழனந் தன்னை
கம்பமா என்றேன்
நற்களியாம் என்றாள்
கைம்மா வென்றேன்
சும்மா கலங்கினாளே"
பாணன் ஒருவன் இராமன் என்ற சிற்றரசனிடம் சென்று, பாடி,பொருள் பெற்று வீடு வருகிறான். பாணனின் மனைவி பாணி, 'ராமன் என்ன கொடுத்தான்?' எனக் கேட்க, இவன் பதில் சொல்வதாக அமைந்த பாடல் இது. அரசன் யானையைக் கொடுத்து விட்டான். இதை எப்படி அவளிடம் சொல்வது? யானை என்று நேரடியாகச் சொன்னால் திடுக்கிடுவாள் என்றெண்ணி யானை எனப் பொருள்படும் வேறு வேறு சொற்களை அவிழ்த்து விடுகிறான். இவன், வம்பதாம் களபம் (வம்பு பண்ணுகிற யானை),
அவள், ஆகா (சந்தனம்) என நினைத்து 'பூசுங்கள்' என்றாள். இவன் மாதங்கம், (மதம் பிடிக்கும் யானை)அவள் மா தங்கம் என நினைத்து (பெரிய தங்கம்) நாம் இனிமேல் நன்றாக வாழ்வோம் என்றாள்.
இவன் பம்பு சீர் வேழம், (பெரிய தும்பிக்கை உடைய யானை) என அவள், (தோகை நீண்ட இனிய கரும்பு) தின்போம் என்றாள். இவன் பகடு என (ஆண் யானை)
அவள் ( எருமை) என நினைத்து 'உழுவோம், என்றாள். இவன், கம்ப மா (கம்பத்தில் கட்டுகிற யானை)என்று சொல்ல அவள் (கம்பு மாவு) என நினைத்துக் களி கிண்டலாம் என்றாள். இவன் இதற்கு மேல் தாங்காது என்று 'கைம்மா' என்று சொல்லி வாசலுக்கு இழுத்துக் கொண்டு வந்து காட்டினான். அவள், 'ஐயோ! நான் என்ன செய்வேன்'? எனக் கலங்கி வீழ்ந்தாளாம். புலவன் யானைக்கு வழங்கும் பல பெயர்களை சிலேடையாக அமைத்த இப்பாடலின் சிறப்பு தான் என்ன ஒரு அருமை!
5) " வஞ்சகர்பால் நடந்தலைந்த
காலில் புண்ணும்,
வாசல்தொறும் முட்டுண்ட
தலையில் புண்ணும்,
செஞ்சொல்லை நினைந்துருகும்
நெஞ்சில் புண்ணும்,
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேனப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின்
புண்ணும், வேடன்
கொடுங் காலால் உதைத்த
புண்ணும், கோபமாக
பஞ்சவரில் ஒருவன்
வில்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டி நின்றான்
பரமன் தானே"
"வஞ்சனை உள்ளம் உள்ளவரிடத்து சென்று நடந்து நடந்து அலைந்ததால் காலில் உண்டான புண்ணையும்,
ஒவ்வொரு வீட்டின் வாசலில் சென்று முட்டிக்கொண்டதால் தலையில் அடிபட்ட புண்ணையும், 'நம்முடைய நல்ல பாடல்களைக் கேட்டு ரசிப்பார் இல்லையே' என்ற ஏக்கத்தால் நெஞ்சில் உண்டான புண்ணையும் போக்குவீராக" என்று வேண்டிக் கொள்ள சிவபெருமானிடம் வந்தேன்.
ஆனால் அப்பெருமானோ, "பாண்டியன் பிரம்பால் அடித்ததால்
ஏற்பட்ட புண்ணையும், வேடனான கண்ணப்பன் தன் செருப்பணிந்த காலினால் மிதித்த போது உண்டான புண்ணையும், மிகுந்த சினத்துடன் பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வில்லால் அடித்த புண்ணையும் பார்!இவை உன்னுடைய புண்களை விட பெரியது" என்று காட்டினானாம்.
'கொடுமை கொடுமை என்று ஒருவன் கோயிலுக்கு போனானாம். அங்கொரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்' என்று ஒரு பழமொழி உண்டு. புலவர் நகைச்சுவையாகப் பாடினாலும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுறுதி வேண்டும் என்பது இப் பாடலின் உட்பொருள். இப்பாடலை பாடியவர் இராமச்சந்திர கவிராயர்.
தமிழிலக்கிய வரலாற்றில் தனிப்பாடல்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இப் பாடல்களின் எளிமையும், அணிநயங்களும் படித்து ரசிக்கத் தக்கன.அனைவரும் சுவைப்போம்

No comments:
Post a Comment