அனைவருக்கும் வணக்கம்.
நிகழ் காவியமான வெண்முரசு வரிசையில் சக்தியை, பெண்ணை பெரிதும் போற்றி விவாதித்த பன்னிரு படைக்கள நாவலை, பாரதி எழுதிய மஹா காளியின் புகழ் கொண்டு துவங்க விழைகிறேன்.
“காலமாம் வனத்தில் அண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு – ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு – தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு – மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் – இந்த
விந்தையெல்லாம் ஆங்கதுசெய் கள்ளம் – பழ
வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் – ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்”
வெண்முரசு கதைகளிலே மிகவும் ஸ்வாரஸ்யமான, எளிதில் உள்வாங்க முடியாத கதைகளில் ரம்பகரம்பனின் கதையும் ஒன்று என்றே கூறலாம். "Multiple Personality Disorder" கொண்ட ஒரே நபர் ரம்பகரம்பன் என்ற எண்ணம் ரம்பகரம்பனை புரிந்து கொள்ள உதவியது.
அவர்களின் தவத்தில் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது, நீருக்குள் இருக்கும் நெருப்பின் தன்மை, நெருப்பில் இருக்கும் நீரின் தன்மை, அந்த புரிதல் பெரும் திறப்பாக இருந்தது என்றே கூற வேண்டும்.
"கரம்பன் குளிர்ந்து குளிர்ந்து அமிழ்ந்தான். ரம்பன் எரிந்து எரிந்து எழுந்தான். இன்மை என கரம்பன் சென்றான். இனி இனி என ரம்பன் விம்மினான். ஒவ்வொன்றும் எடைகொண்டன கரம்பனுக்கு. ஒவ்வொன்றும் ஆவியென்றாயின ரம்பனுக்கு. பின்பொரு மாயகணத்தில் ரம்பன் நீரின் தண்மையை நெருப்பில் அறிந்தான். அக்கணமே கரம்பன் நெருப்பென நீருள் எரிந்தான்"
குரு தில்லை செந்தில் பிரபு சத்சங்க உரையில் உயிரின் நான்கு அனுபவங்கள் எப்படி நிகழும் என்பதை ஒரு காணொளியில் விளக்கியிருந்தார்.
உயிரின் நான்கு அனுபவ நிலைகள்:
விழிப்பு நிலை - அறிதல் மற்றும் செயல் கருவிகளோடு மொத்த 34 கருவிகளும் செயலாற்றி புருஷனோடு( Pure Consciousness ) உலகை அனுபவிக்கும் நிலை
கனவு நிலை - அறிதல் மற்றும் செயல் கருவிகள் தவிர்த்து மற்ற 25 கருவிகளும் செயலாற்றி உலகை அனுபவிக்கும் நிலை
உறக்க நிலை - பிராண வாயு, சித்தம் மட்டும் செயல்படும் நிலை
துரியப்பெருநிலை- சித்தமற்று இருப்பது. பிராணன் புருஷனோடு இருக்கும் பேரனுபவ நிலை.
கீழ்கண்ட பத்தியை உள்வாங்க அந்த சத்சங்க உரை பெரிதும் உதவியது.
"தனித்திருப்பதன் பெருவலியை அவர்கள் அடைந்துவிட்டனர். அதை வெல்லும்பொருட்டு முழுமூச்சாக முயல்கிறார்கள். விழிப்புள்ளத்தைப் பழக்கி எடுக்க முயன்று வென்றுவிட்டார்கள். ஆனால் விழிப்புள்ளம் வலுப்பெறும்தோறும் அதன் பேரெடையால் கனவுள்ளம் அழுத்திச் சுருக்கப்படுகிறது. அது நுண்ணுள்ளத்தை அடைந்து அங்கு ஒரு அணுவென மாறி புதைந்திருக்கிறது. ஆலமரம் குடிகொள்ளும் விதை கடுகளவே"
"உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு நுனியைப் பொருத்தி, துரியப்பெருவிரிவுக்கு அப்பால் நின்றிருக்கும் நுண்மையில் மறுநுனியைப் பொருத்தி நின்றிருக்கும் அலகிலி"
தனித்திருப்பதுதான் எத்தனை பெருவலி. அந்த தனிமைக்கு உள்ளத்தை பழக்கி சரி ஆக்கிவிடலாம் என்று நினைப்பது எத்தனை பெரிய பேதைமை. என்றாவது துரியபெருநிலையில் மூல ப்ரக்ருதியுடன் இணைவைக்கவே உள்ளமென்ற ஒன்று உள்ளது என்பது போல் தோன்றியது.
"தவம் என்பது இழப்பதினூடாக அடைவதே", என்ற வரியை கடக்கவே முடியவில்லை.
பெரும் இன்பம் என்பது கற்றலின் இன்பம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எதை கற்கிறோம், தவறாக கற்றவற்றை தொலைத்து புதியதை நிரப்பி க்கொள்வதால் வரும் இன்பம் அது. அதுவே கற்றலில் தவம். கல்வி அறிவாகவும், ஒழுக்கமாகவும், அன்பாகவும் மாறும் தவம். கற்றல் என்பது முன்னிருந்த எதோ ஒன்றை இழப்பது, புதிதாக ஒன்றை அடைவது. ஆதலால் அது இன்பம். பேரின்பம்.
"நூறு யுகங்களுக்கு முன்பொரு நிலத்து யானையை நீர்முதலை கவ்வியது. ஆழம் இருப்புடன் போரிட்டது. அப்போர் முடிவதற்குள் ஆழியுடன் இறைவன் எழுந்தான். இன்று நான் ஆழமென வந்து முழுமையாக உன்னை வென்றுள்ளேன்"
இதை வாசித்தபோது இந்திரன் என்றாலே ஆகாயத்தில் மிதந்து சண்டையிடுபவன் என்ற எண்ணம் உடைந்து ஆழமென வந்தும் வெல்பவன் என்ற புதிய நோக்கு உருவானது.
ஒரு குழந்தை என்பது இயற்கையிலேயே தாயின் வழி கொண்டிருப்பதை கீழ்கண்ட வரி மிகவும் நன்றாக உணர்த்தியது என்றே கூற வேண்டும்
"விறகிலெழும் தழல் அதனுள் தளிரிலேயே குடிகொண்டது”
அடுத்த தலைமுறை என்பது, முழுமையாக, ஆழமாக பெண்ணின் முடிவுகளில் உள்ளதை மனித சமூகம் புரிந்துகொண்டதா என்று தெரியவில்லை.
இதை இயற்கையில் பல விலங்குகளில், பறவைகளில், பூச்சிகளில் காணமுடிகிறது.
உதாரணமாக எறும்பை எடுத்துக்கொள்ளலாம், ஆண் எறும்பு (Drone-Winged Male Ants ) இளவரசி எறும்போடு கூடி அதை முட்டையிட செய்கிறது. பின் இளவரசி எறும்பு முட்டையிட்டு ஒரு காலனியை உருவாக்கி ராணியாக மாறுகிறது. இந்த காலனியை தன் பெரிய தாடைகளைக் கொண்டு காப்பதற்கு சிப்பாய் எறும்புகள் உள்ளன. அத்தனையும் பெண்கள். முட்டைகளை காப்பதற்கும், இள எறும்புகளை பேணுவதற்கும், உணவு தேடி கொண்டு வருவதற்கும் "தொழிலாளி எறும்புகள்" உள்ளன. அத்தனையும் பெண்கள். வெண்முரசு மொழியில் எறும்புகளின் செவிலி அன்னையர்கள் என்றே கூறலாம்.
எலி, பாம்பு போன்ற உயிரினங்கள் கருவுற்ற பின் வேறு ஒரு திடமான ஆண், குழுவை தலைமை ஏற்றால், முன் உள்ள கரு பிழைக்காது என்று உணர்ந்து கருவை தாமாகவே களைத்து விட்டு புதிதாக வந்த ஆணின் கருவிற்கு தயாராகுகின்றன.
பறவைகளில் பல இப்படியே. தான் எப்போது, யாருடன், எத்தனை முறை கருவுற வேண்டும் என்ற முடிவை பெரும்பாலான உயிரினங்கள் பெண்களிடமே ஒப்படைத்து வைத்திருக்கின்றன. அதுவே அந்த இனம் பிழைத்து செழிக்க உதவியாக இருக்கிறது.
ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஒரு உரையில் "ஆண்மை என்பது அழகு சார்ந்தது, பெண்மை என்பது வீரம் சார்ந்தது" என்று சொன்ன சொல் ஒரு புதிய கோணத்துடன் புரிய ஆரம்பித்தது.
ரம்பன் அந்த கருவுறும் தேர்வை மகிஷி என்னும் அன்னைக்கு தராததுதான் பெரும்பிழையாக இருந்திருக்கக்கூடும்.
“ஒவ்வொரு மலர்மொக்கையும் முலைக்கண் என மயங்கி இதழ்குவித்து முகம்நீட்டினான் மகிஷன். ஒவ்வொரு இலைத் தொடுகையையும் அன்னையின் கை என எண்ணி சினந்து சீறி பல்காட்டி எழுந்தான் ரக்தபீஜன். ஒவ்வொரு ஒலியையும் அன்னைமூச்சென்று எண்ணி நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டான் ரம்பாசுரன்”
இந்த வரிகளை வாசிக்கையில், பெரும் வீரமும், பெருங்கருணையும் பொருத்திய தாய்மையின் மீது இருக்கும் கோபம் தான் ஆசுரமோ என்று எண்ணிக்கொண்டேன்.
மொழியைக் காக்காவிட்டால் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலாக தோன்றியவை கீழ்கண்ட வரிகள்.
"சொற்கள் பொருளிழந்து ஒலிகளே என்றானபோது தானவத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் பெயரை இழந்தது. பெயரிழந்தவை பொருளையும் இழந்தன. பொருளிழந்த பொருட்கள் வெற்றிருப்பாயின. வெற்றிருப்புகள் அவர்கள் மேல் முட்டின. அவர்களை வீழ்த்தின. அவர்களைச் சூழ்ந்து உளம்பதைக்கச்செய்யும் அமைதியுடன் அமர்ந்திருந்தன"
போரில் வெல்வது எது? நன்மையா ? தீமையா? இந்த கேள்வி எழாதவர் இல்லை. நன்மை என்றே பெரும்பாலும் பதிலளித்துக் கொள்வோம்.
நாற்களத்தில் இருவரும் உங்கள் அச்சத்தையும் ஆண்மையையும் வீரத்தையும் வெறுமையையும் காய்களாக்கி ஆடுவது இப்போர். வெல்லும் விழைவே வெல்லும் என்றறிக!” இந்த வரிகள் கூரிய வாலென வீசி சென்றது என்றே கூற வேண்டும்.
போரில் இந்திரனுக்கு இந்த விழைவும், அச்சமும் மாறி மாறி வருவதை எத்தனை நுணுக்கமாக படம்பிடிக்கப் பட்டிருக்கிறது என்பதை எண்ணி மெய் சிலிர்த்துக்கொண்டேன்.
“தன் உள்ளத்தை தானே நோக்கிக்கொண்டிருந்தபோது எங்கோ ஒரு மெல்லிய விழைவு முளைப்பதை அவன் கண்டான். ஒரு துளி குருதி நிலம்தொடுமென்றால் என்ன நிகழும்? அது என் அச்சம் மட்டும்தானா? அவ்வெண்ணம் எழுந்ததுமே அது எத்தனை வல்லமைகொண்டது என உணர்ந்து அவன் திடுக்கிட்டான். அதன்மேல் தன் உளச்சொற்கள் அனைத்தையும் அள்ளிப்போட்டு மூடினான். அவற்றை உண்டு பெருத்து அது எழுந்தது.
என்ன நிகழும்? அது தன் எளிய அச்சமென்றால் வென்றாலும் இழிவுசூடியவன் ஆவேனல்லவா? அச்சமறுக்க உறுதிகொண்டவன் இவ்வச்சத்தை மட்டும் ஏன் அகத்தே பேணிக்கொள்கிறேன்? ஒருதுளி குருதி. அசுரனின் சொற்கொடையின் கதை உண்மை என்றால்கூட எழுபவன் பிறிதொருவன் மட்டுமே அல்லவா? அவன் உள்ளத்தில் எழுந்த ஆயிரம் நூல்வலர் மறுக்கமுடியாமையை சமைத்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு முன் அவன் விரும்பித் தோற்றான். மிகமெல்லியவை எத்தனை வல்லமைகொண்டவை! மறைந்து நின்று மன்றாடுபவை போல் வெல்லமுடியாதவை உண்டா என்ன?
தொடங்கிய எவராலும் இதை நிறுத்த இயலாது. தொடங்காமலிருக்கவே எவராலும் இயலாது. தெய்வங்களாலும்!”
பின் இந்திரன் தோற்று அன்னையிடம் சரண் புகுவதை படிக்கும் பொழுது,
அச்சமும் துயரும் என்றே - இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,
துச்சமிங் கிவர்படைகள் - பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
பெருநகர் உடலெனும் பெயரினதாம்,
என்ற இந்த பாரதியின் வரிகளை நினைவு கூர்ந்து கொண்டேன்.
இத்தனைக்கும் அப்பால் நெஞ்சை ஊடுருவும், நெகிழவைக்கும் அன்னையின் காட்சி, அன்னையின் ஆடல். என்றுமே நினைவிலிருந்து நீங்காத வர்ணனைகள். அன்னையை இத்தனை ஆழமாக வர்ணிக்க சிவத்தாலும் இயலுமோ என்று சந்தேகிக்கும்படியான சொற்கள்.
“கரியவழிவாக விரிந்திருந்தது கூந்தல். நடுவே சூரியவட்டமென அவள் முகம். கனிந்து பாதிமலர்ந்து குனிந்த விழிகள். வெண்பல்நிரை மின்ன புன்னகைத்தன இதழ்கள். கன்னத்தில் குறுநிரை ஆடியது. காதில் தழைந்த மணிக்குழை கண்ணொளிக்கு நிகர்நின்றது. மூக்கில் தொங்கிய புல்லாக்கு பல்நிரைக்கு எதிர்நின்றது. அவன் மண்ணில் விழும் எடைபோல அவளை நோக்கி சென்றுகொண்டே இருந்தான். விழிகளிலும் உள்ளத்திலும் அவளன்றி வேறின்றி இருந்தான்.
அவள் காலடியில் நின்றிருந்தது செம்பிடரி எழுந்த சிம்மம். அதன் சிப்பிவிழிகள் அவனை நோக்கி சொல்லின் ஒளிகொண்டன. வாய் திறந்து நாக்கு வளைந்து அச்சொல் வடிவு கொண்டது. அவ்விழிகளை அவன் அறிந்திருந்தான். அவ்வுகிர்களை முன்பும் பலமுறை கண்டிருந்தான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அமிழ எதிரே பொன்மலை என எழுந்தது அன்னையின் உருவம்.அவளைச்சூழ்ந்த சுடர்முகில்கள் திரிதாழ்த்தி அணையத்தொடங்கின.”
"காதில் தழைந்த மணிக்குழை கண்ணொளிக்கு நிகர்நின்றது. மூக்கில் தொங்கிய புல்லாக்கு பல்நிரைக்கு எதிர்நின்றது." அழகுக்கு அழகு சேர்த்த சொற்கள்.
அன்னைக்கும் ரக்தபீஜனுக்கும் போர் துவங்கியது.
அப்போது "ஏழாம் வானில் நின்றிருந்த இருவர் அதை அன்னை முலையருந்த முட்டும் சிறுமைந்தன் என உணர்ந்து புன்னகை செய்தனர்", என்ற வரிகளை வாசிக்கும் பொழுது உயர உயர எத்தனை பெரிய போரும் வெறும் ஆடலாக, புன்னகைக்கும் பொருளாக மாறி போவதன் தத்துவம் பெரும் திறப்பாக அமைந்தது.
"தேவி தன்னை மாயையால் பல்லாயிரங்களின் பல்லாயிரம் மடங்கென பெருக்கினாள். கைகளின் கிளைக்காடு. கால்களின் வேர்க்காடு. செவிகளின் இலைக்காடு. விழிகளின் மலர்க்காடு. அக்காட்டை எதிர்கொண்டது ரக்தபீஜர்களின் முள்பெருத்த பாலைக்காடு." கிளையை காடென்றது, வேர்களை காடென்றது, இலைகளை காடென்றது, மலர்களை காடென்றது, இறுதியாக பாலையை காடு என்று உருவகம் செய்தது பிரமிப்பாக இருந்தது.
தவறே செய்தாலும் தன் குழந்தையை கண்டித்து அடிப்பது எந்த சாதாரண அன்னைக்கு துன்பம் அளிக்கும் நிகழ்வே. அப்படி இருக்க உலகையே தன் மகவு என்று நினைப்பவளுக்கு தொடர்ந்து பெருகும் ஒரு மகவை அழிப்பது என்பது அத்தனை எளிதாக இருக்க வாய்ப்பில்லை.
"அக்கணம் அன்னையின் வலத்தோளில் ஆடிய குழையில் எழுந்த சிவம் “நீ வென்றாகவேண்டியது என்றும் உன்னையே தோழி” என்றது. “உன் கன்னியை துணைவி வென்றாள். துணைவியை அன்னை வென்றாள். அன்னையை இன்று அறம்சூடிய பேரன்னை வென்றாக வேண்டும்!” "
பிரபஞ்சத்தின் பெரும் அன்னை இக்கட்டில் கோரிய துணை, தோழி என தன்னை உணரும் ஆண்மையே. அவளுள் என்றென்றைக்கும் இருந்த பேரன்னையை சிவத்தை அன்றி வேறு யார் வெளி கொணர இயலும்.
"சாம்பாரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி"- என்ற பாரதியின் வரியில் தழலாகி நின்றவளை அன்பு செய்ய முடிந்தவன் அவனே அல்லவா என்ற எண்ணம் புளங்காகிதம் அடையச் செய்தது.
மனதின் ஆசுரத்தைக் கொன்று தெவீகம் கொணருவது பேரன்னையின் கடமையென நினைத்து மஹாபாரதப் போரை கவனித்தால், அதில் உள்ள வன்முறைகள் மறைந்து, அதில் பொதிந்த அன்னையின் பெருங்கருணை ஒவ்வொருவருக்கும் புலப்பட்டே தீர வேண்டும்.
நன்றி.




No comments:
Post a Comment