அதிகாரத்தின் ஆடுகளம்: ஒரு பார்வை
(வெண்முரசு - பன்னிரு படைக்களம் நாவலை முன்வைத்து)
உரைச் சுருக்கம் :
வெடிபடு மண்டபத் திடிபல தாளம் போட - வெறும் வெளியில் இரத்தக் களிப்பொடு பூதம் பாட - எங்கும் ஒளிபடு மின்திரு நட்டங்கள் ஆடல் காண - மகா சக்தி! அன்னை! ஓம்சக்தி! ஓம்சக்தி! — மகாகவி பாரதியார்(ஊழிக்கூத்து)
எந்த மகாசக்தி பழைய மண்டபங்களை இடித்துப் புதிய உலகைப் படைக்கிறதோ, அந்தச் சக்தியின் மானுட வடிவமே ஜராசந்தன். அதிகாரத்தின் பழைய அரியணைகளைச் சிதறடித்த அந்த அசுர நாயகனின் கதையைத் தொடங்குவோம்
இவ்வுரை, மகாபாரதத்தின் மிகவும் வியக்கத்தக்க கதாபாத்திரமான ஜராசந்தனின் எழுச்சியை ஓர் அரசியல் தத்துவமாக அணுகுகிறது. காட்டின் இருளில் பிறந்து, அதிகாரத்தின் உச்சத்திற்கு அவன் சென்ற பயணம், வெறும் தனிமனித வெற்றியல்ல; அது ஒரு யுக மாற்றத்தின் அடையாளம். இங்கு என் மூதாதை சிங்காரம் அவர்களையும், எந்தை இராமலிங்கத்தையும் நினைவு கூர்கிறேன்.
● அடையாள விழிப்பு: பிளவுபட்ட உடல்களை இணைத்து உருவான ஜராசந்தன், சிதைந்த அடையாளத்தை எப்படி மாபெரும் சக்தியாக மாற்றினான்?
● மக்களின் நாயகன்: அரண்மனையை விட 'சந்தையை' நம்பிய அவனது மக்கள் அரசியல் மற்றும் உளவியல் தந்திரங்கள்.
● விசுவாசத்தின் போராட்டம்: வீழும் மரபைக் காக்க அமைச்சர் பத்மர் எடுத்த உணர்ச்சிகரமான முயற்சிகளும், அகங்காரத்தால் வீழ்ந்த இளவரசர்களும்.
● கொடூரத்தின் காட்சி: 'கழுவேற்றல்' எனும் தண்டனை மூலம் பழைய தர்மத்தை வன்முறையால் முறியடித்த அசுர அரசியல்.
● புராண ஒப்பீடு: நரசிம்ம அவதாரம் முதல் புரோமிதியஸ் வரை ஜராசந்தன் பிரதிபலிக்கும் உலகளாவிய கலகக் குறியீடுகள்.
மையக் கேள்வி: அதிகாரம் தர்மத்தை உருவாக்குகிறதா? அல்லது தர்மம் அதிகாரத்தை ஆளவேண்டுமா? இந்த வினாவிற்கான விடையைத் தேடி ஜெயமோகனின் 'வெண்முரசு' எனும் மாபெரும் காவியக் கடலுக்குள் பயணிப்பதே இவ்வுரையின் நோக்கம்.
அதிகாரத்தின் ஆடுகளம்: ஜராசந்தன் காட்டும் அரசியல் தத்துவம்
குகையிலிருந்து எழும் ஒரு அடையாளம்
நண்பர்களுக்கு வணக்கம்.
மகாபாரதம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த ஒரு போர் மட்டுமல்ல; அது இன்றும் நம் வாழ்வில், அரசியலில், அதிகாரப் போட்டிகளில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு மகா காவியம். ஜெயமோகனின் 'வெண்முரசு' நாவல் வரிசையில், பன்னிரு படைக்களம் பகுதி 9 முதல் 17 வரையிலான, பகுதிகளைப் பற்றிய என் புரிதலுடன் கூடிய உரை.
ஜராசந்தன் எனும் கதாபாத்திரத்தின் எழுச்சியை மையப்படுத்தி, அதிகாரம் ஒரு மனிதனை எப்படி வடிவமைக்கிறது என்பதைப் பற்றி இன்று நாம் பேசவிருக்கிறோம்..
ஜராசந்தன் - இந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு மர்மம் தோன்றும். அவன் பிறப்பிலேயே உடலும் மனமும்(விளக்கம்) என இரண்டு துண்டுகளாகப் பிறந்தவன். ஜரை எனும் அன்னையால் அந்த இரண்டு உடல் துண்டுகளும் இணைக்கப்பட்டதால் அவன் 'ஜரா-சந்தன்' ஆனான். ரத்தம் குடித்து, காட்டில் வளர்ந்த அந்த இளைஞன்,குகை யொன்றுக்குள் தனிமையில் இருக்கும்போது ஒரு மாபெரும் உண்மையைக் கண்டடைகிறான். "நான் சாதாரணமானவன் அல்ல; சிதைந்த இரண்டை ஒன்றாக இணைத்த முழுமையானவன்" என்ற தன்னுணர்வு அவன் ஆழ் மனதுக்குள் ஒரு பிரம்மாண்டமான அடையாளத்தை உருவாக்குகிறது. பிறக்கும்போதே எட்டுக்கால் காளை ஒன்றை கொன்று மேலெழுந்தவன். அச்சமென்பதை அறியாதவனை படைக்கலங்களால் வெல்ல இயலாதென்பதை அறிந்தவன் அவன். ஒரு பக்கம் தெய்வத்தன்மையும் மறுபக்கம் மானுடத் தன்மையும் கொண்டவன் அவன். மக்களின் அச்சத்தால் வளர்ந்தவன் அவன். நகர் நுழைவதற்கு முன்பே சூதர்களின் சொற்களில் மணிமுடி சூடியவன் அவன். நீர்ச் சுழி போல, வெளியிலிருந்து உள் நோக்கி குவியும் நீர் போல, அவன் நுழைவதற்கு முன்பே அவன் வல்லமைகள் ஊரூராய் அலைந்து தலை நகரில் நுழைந்தது, அந்த சொற்கள் அவனுக்கு உதவுவதற்காக.
விண்ணறியாத மண்ணை நோக்கி வாழ்ந்த குடிகளிடையே இருந்து வந்த, அவன் காட்டிலிருந்து நகரத்திற்கு வரும்போது ஒரு சாதாரண காட்டாளனாக வரவில்லை; ஒரு முதிர்ந்து தேர்ந்த அரசியல்வாதியாக வருகிறான், வரமாதாவின் சொற்களுடன். அவன் நேராக அரண்மனைக்குச் சென்று "நான்தான் இளவரசன், நானே மன்னனின் மூத்த புதல்வன்" என்று உரிமை கோரவில்லை. ஏன்? உண்மையான அதிகாரம் அல்லது அரியணையமர்தல் என்பது அரண்மனைச் சுவர்களுக்குள் இல்லை, அது பாமர மக்கள் கூடும் ‘சந்தை'யில்தான் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அவனின் முதல் அறிவிப்பு, சந்தயில் நிகழ்த்தினான். உடன், மக்களால், இளவரசுப் பட்டம் பெற்றான். ஜராசந்தன் என்ற பெயர் மக்களால் சூட்டப்பட்ட பெயர். காலங்காலமாய் நீடிக்கும் ஒரு பண்பாடு, கிராமங்களிலிருந்து நகரத்திற்கு அதன் பயன் அலாதியானது.
அனல் சான்று பெற்றவன், சுடர் ஒப்புதல் பெற்றதும் மக்களும் ஏற்றுக்கொண்டனர்.
சந்தையில் அவன் நிகழ்த்திய அனைத்து வித மோதல்களும் நிகழ்வுகளும் மற்றும் அவனது கட்டற்ற காட்டாளனுக்குறிய தோற்றம், அரசணிக்கோலத்துக்குறிய நகைகள், அனைத்தும் மக்களிடையே, அவர்கள் கற்பனையில் மட்டுமே அறிந்திருந்த சற்றேரக்குறைய விருத்திராசுரனை ஒப்ப 'புராண நாயக' பிம்பத்தை அவர்கள் மனதில் உருவாக்கியது .சிறுத்தையின் பல்பட்ட அவன் உடல் சிறுத்தை போன்றே பாயக்கூடிய மனதையும் உருவாக்கியிருந்தது. தாயின் கனவை நனவாக்கவே வந்தவன் போலிருந்தான். அவன் பட்டத்து யானையில் அரசணிக்கோலத்தில் வரவில்லை. அதற்கு மேலானதொரு மக்கள் கூட்டத்தில் வலம் வந்தான்.
மக்கள் மனமும் அதிகாரத்தின் குரூரமும் ஜராசந்தன் மக்களைத் தன்வயப்படுத்திய விதம் ஒரு மிகச்சிறந்த உளவியல் பாடம்.
1. மக்கள் எனும் மகாசக்தி:
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.(பாரதி)
ஜராசந்தன் சந்தையில் காட்டிய வீரம் மக்களை அவன் பக்கம் ஈர்த்தது. அவன் அரண்மனைக்குச் செல்லாமல் மக்கள் நடுவே தங்கியது ஒரு நுட்பமான நகர்வு. "நான் உங்களுள் ஒருவன், ஆனால் உங்களை ஆள வந்தவன்" என்ற செய்தியை அவன் மக்களிடம் கொண்டு சேர்த்தான். ஜராசந்தன் சந்தையைத் தேர்ந்தெடுத்தது என்பது ஒரு நவீன அரசியல் யுக்தி. இதை நாம் புதுமைப்பித்தன்(சாப விமோசனம்) அல்லது ஜெயமோகனின்(படுகை) கதைகளில் வரும் ஆளுமைகளிடம் காண்கிறோம். தன்னை ஒரு சாமானியனாகக் காட்டிக்கொண்டு, மக்களின் ஆழ்கனவில் இருக்கும் அதிகார வேட்கையைத் தட்டி எழுப்புவதே ஒரு தலைவனின் முதல் வெற்றி.
(பாரதி) திமிர்ந்த ஞானச் செருக்குடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறியுடன் ஒரு புதிய யுகத்தை ஜராசந்தன் தொடங்கினான்
2. பத்மரின் விசுவாசப் போராட்டம்:
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒருவர் அமைச்சர் பத்மர்.அந்த ராஜவம்சத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டவர். ஜராசந்தன் எனும் புயல் நகரத்திற்குள் நுழைந்தபோதே, அதன் தீவிரத்தைப் பத்மர் உணர்ந்துவிட்டார். வெகு வருடங்கள் கழித்து பிறந்த தன் குழந்தையை, தகப்பனொருவர் எப்படிக் காக்கத் துடிப்பாரோ, அப்படி அந்த அரச மரபைக் காக்க அவர் போராடினார். மக்கள் ஜராசந்தனைத் தெய்வமாகப் பார்க்கத் தொடங்கியபோது, பத்மர் பதறவில்லை; மாறாக மிகவும் நிதானமாக காய்களை நகர்த்தினார். ஜராசந்தன் மக்கள் மத்தியில் தங்குவது அரசனுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அறுக்கும் என்று தெரிந்தே, அவர் பல தூதுகளை அனுப்பினார்.
விசுவாசம் என்பது அறிவை விட வலிமையானது. ஜராசந்தனை எதிர்கொள்ள அவர் கிருதியிடம் எவ்வளவோ கெஞ்சினார். "உணர்ச்சிவசப்பட்டுப் போருக்குச் செல்லாதீர்கள், இது காலத்தின் மாற்றம், காலத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்" என்று அவர் மன்றாடினார்.
ராஜகிருஹத்தின் நூற்றெட்டு வைதிகர்களை ஒன்று திரட்டி, அவர்கள் மூலம் ஜராசந்தனுக்கு எதிராக ஒரு ஆன்மீகத் தடையை உருவாக்க முயன்றார். ஒரு விசுவாசமிக்க தொண்டன், தன் தலைவனைக் காப்பாற்ற எப்படியெல்லாம் சிந்திப்பானோ, அந்த விசுவாசத்தின் உச்சமாகப் பத்மர் இருந்தார். ஆனால், காலம் வேறொரு முடிவை வைத்திருந்தது.
இறுதித் தருணத்தில் ஜராசந்தனின் அசுரப்படைகள் அரண்மனையைச் சூழ்ந்தபோது, பத்மர் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் தலைவனை ஒரு சுரங்கப்பாதை வழியாகத் தப்ப வைப்பதில்தான் அவரது முழுக் கவனமும் இருந்தது. "அரசன் அழிந்தால் மரபு அழியும்" என்ற ஒற்றை விசுவாசத்தோடு அவர் கடைசி வரை செயல்பட்டார். ஆனால், அவர் யாருக்காகப் போராடினாரோ, அந்த இளவரசர்கள் குலப்பெருமை எனும் போதையில் பத்மரின் ஆலோசனைகளைத் தள்ளிவிட்டனர். அறிஞனின/அமைச்சனின் எச்சரிக்கையை விட அகங்காரத்தின் குரல் மேலோங்கியது அந்தப் பேரரசின் வீழ்ச்சிக்குத் தொடக்கமானது.
3. கழுவேற்றல்: அதிகாரத்தின் அதிர்ச்சி வைத்தியம்:
ஜராசந்தன் போரில் வென்றதோடு நிறுத்தவில்லை. அவன் அதிகாரத்தை நிலைநாட்டப் பயன்படுத்திய முறைதான் நடுக்கத்தை உருவாக்குவது. அரண்மனை முற்றத்தில் கூர்மையான கழுமரங்களை நட்டு, பிடிபட்ட இளவரசர்களை அங்கே கொண்டு வருகிறான். அங்கே அவன் வன்முறையை ஒரு பாடமாக நடத்துகிறான்.
அமைச்சர் பத்மரிடம் ஒவ்வொரு துறையிலும் (அரசியல், காவியம், மெய்யியல்) கேள்வி கேட்கிறான். பதில் சொல்ல முடியாத ஒவ்வொரு தருணத்திலும் ஒரு இளவரசனைத் தவிக்கத் தவிக்கக் கழுவிலேற்றுகிறான்.
இது வெறும் தண்டனையல்ல; "உங்கள் பழைய அறிவும் தர்மமும் எனது புதிய வலிமையின் முன்னே செல்லுபடியாகாது" என்று பத்மர் போன்ற அறிஞர்களுக்கு காட்டிய ஒரு கோரமான காட்சி."தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்" என்று பத்மரின் மனதில் தோன்றியிருக்கலாம். ” அந்த வலியையும் அதிகாரத்தின் குரூரத்தையும் மக்கள் ஒரு 'திருவிழாவைப் போல'ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் ஜராசந்தன் நிகழ்த்திய மிகப்பெரிய உளவியல் வெற்றி.
4. புராணத் தொடர்பு: நரசிம்ம அவதாரத்தின் பிளவு:
இந்த ஜராசந்தன் கதையை நாம் நரசிம்ம அவதாரத்தோடு ஒப்பிடலாம். இரணியன் என்ற அரக்கன் 'மனிதனாலும், விலங்காலும், உள்ளேயும், வெளியேயும்' மரணம் நிகழக்கூடாது என்ற சட்டச் சிக்கலை உருவாக்கினான். அவனை அழிக்க எப்படித் தூணிலிருந்து ஒரு புதிய வடிவமாக நரசிம்மம் வந்ததோ, அதைப்போலவே பழைய ராஜவம்சம் எனும் தூணைப் பிளந்துகொண்டு ஜராசந்தன் எனும் அசுர சக்தி உருவானது. நரசிம்மம் தர்மத்தைக் காக்க வன்முறையைக் கையாண்டது; ஜராசந்தன் தன் அதிகாரத்தை நிலைநாட்ட அதையே செய்கிறான்.
உரையின் சுருக்கம் -
இறுதியாக(இரண்டு பகுதி) ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான அந்த ஒப்பீட்டை நாம் கவனிக்க வேண்டும். ஜராசந்தன் அரியணையில் அமர்ந்தான்; கிருஷ்ணன் அரியணையை இயக்குபவராக இருந்தார். ஜராசந்தன் என்பவன் வெறும் ஒரு தனிமனிதன் அல்ல; அவன் காலந்தோறும் எழும் ஒரு 'கலகத்தின் குறியீடு'. அவன் கிரேக்கப் புராணத்தின் புரோமிதியஸைப்போலப் பழைய மரபுகளைத் தகர்க்கிறான். உலக வரலாற்றின் நெப்போலியனைப் போலத் 'திறமையே தர்மம்' என்கிறான். ஆனால், இந்தக் கலகக்காரனை ஒடுக்க ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறார்.ஏனெனில், ஜராசந்தன் 'அதிகாரத்தை' மட்டுமே நம்பினான்; கிருஷ்ணன் 'அதிகாரத்தின் நோக்கத்தை' நம்பினார்.
இவ்வுரை நமக்கு விட்டுச் செல்வது:
● மக்கள் வெற்றியைப் பின்பற்றுகிறார்கள்: ஒரு ஆட்சியாளன் எவ்வளவு கொடுங்கோலனாக இருந்தாலும், அவன் வெற்றி பெறும்போது மக்கள் அதை ஒரு வீரக்கதையாக மாற்றிக் கொள்கிறார்கள்.
● விசுவாசம் அறிவை விடப் பெரியது: பத்மர் போன்றவர்களின் விசுவாசம் போற்றத்தக்கது, ஆனால் சில நேரங்களில் காலத்தின் மாற்றத்தைத் தடுக்க விசுவாசத்தினால் முடிவதில்லை.
ஜராசந்தன் வென்றான் - அந்தத் தருணத்தில். கிருதி தோற்றான் - அந்தக் களத்தில். ஆனால் மகாபாரதம் எப்போதுமே ஒரு கேள்விய விட்டுச் செல்கிறது:
"வெற்றியே தர்மத்தைத் தீர்மானிக்கிறதா? அல்லது தர்மமே வெற்றியைத் தீர்மானிக்க வேண்டுமா?"
—------------------------------------------------------------------------------------
இன்று நான் சொன்னது இந்தக் கடலின் ஒரு துளி மட்டுமே. 'வெண்முரசு' நாவலில் இந்த ஒவ்வொரு அத்தியாயமும் (குறிப்பாக பன்னிரு படைக்களம் - 9 முதல் 17 வரை) நீங்கள் இதுவரை கேட்டிராத பல அரசியல் ரகசியங்களையும், மனித மனத்தின் ஆழங்களையும் பேசுகிறது. அதிகாரத்தின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த நாவலைத் தேடிப் படிக்க வேண்டும்.
நன்றி.
ஆம் இறுதியாக ஒன்று, ஜராசந்தனின் எழுச்சியை ஒப்பிட வேண்டுமென்றால், வேறு எந்த மஹாபாரத காலத்து அல்லது பிறகு உலகப் புராண கதா பாத்திரத்துடன் ஒப்பிட இயலும், ஏன் ?
1. மகாபாரதத்தின் கம்சன்: 'அச்சத்தின் அரசியல்'
மகாபாரதத்திலேயே ஜராசந்தனுக்கு மிக நெருக்கமான ஒரு கதாபாத்திரம் கம்சன்.
● ஏன் ஒப்பிட வேண்டும்? கம்சனும் ஜராசந்தனைப் போலவே வன்முறை மற்றும் அச்சத்தின் மூலம் அதிகாரத்தை நிலைநாட்டியவன். இருவரும் தங்கள் தந்தைமார்களைச் சிறைவைத்து அல்லது அதிகாரத்தை அப்புறப்படுத்திவிட்டு அரியணையைப் பிடித்தவர்கள்.
● ஒற்றுமை: கம்சன் எப்படித் தன் தங்கையின் குழந்தைகளுக்கு நேரும் மரண அச்சத்தால் ஒரு நகரைச் சிறைச்சாலையாக மாற்றினானோ, அதேபோல ஜராசந்தன் தன் எதிரிகளை மரண அச்சத்தால் (கழுவேற்றல்) கட்டுப்படுத்தினான்.
● முரண்: கம்சன் அச்சத்தால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டான்; ஆனால் ஜராசந்தன் அந்த அச்சத்தை ஒரு 'மக்கள் கொண்டாட்டமாக' மாற்றி, மக்களைத் தன் பக்கமே இழுத்துக் கொண்டான். இதுதான் ஜராசந்தனை கம்சனை விடப் பெரிய அரசியல்வாதியாகக் காட்டுகிறது.
2. கிரேக்கப் புராணத்தின் 'புரோமிதியஸ்' (Prometheus): 'புரட்சியின் வடிவம்'
https://youtu.be/PfF8SUw393g?si=5-W2BzTzFOMVyNQ1
உலகப் புராணங்களில் ஜராசந்தனை நாம் புரோமிதியஸ் உடன் ஒப்பிடலாம். புரோமிதியஸ் தெய்வங்களிடமிருந்து 'தீயைத்' திருடி வந்து மனிதர்களுக்குக் கொடுத்ததற்காகத் தண்டிக்கப்பட்டவன்.
● ஏன் ஒப்பிட வேண்டும்? புரோமிதியஸ் எப்படி அன்றைய 'தேவலோக மரபுக்கு' எதிராகப் புரட்சி செய்தானோ, ஜராசந்தன் அன்றைய 'ஷத்ரிய மரபுக்கு' எதிராகப் புரட்சி செய்தான்.
● ஒற்றுமை: தெய்வங்களின் அதிகாரத்தை உடைக்கப் புரோமிதியஸ் முயன்றான்; இங்கே வேதங்களின் மற்றும் ஷத்ரியர்களின் அதிகாரத்தை உடைக்க ஜராசந்தன் முயல்கிறான்.
● தத்துவப் பார்வை: புரோமிதியஸ் மனிதர்களுக்காகத் தீயைத் திருடினான். ஜராசந்தன் எளிய மக்களுக்காக அதிகாரத்தை (குருதி வழியே) திருடினான். இருவரும் பழைய அதிகார வர்க்கத்தால் 'பாவிகள்' அல்லது 'அசுரர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஆனால், புதிய யுகத்தை உருவாக்குபவர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டவர்கள்.
1. புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'
ஜராசந்தன் எப்படி மக்களின் ஆழ்கனவில் இருக்கும் நம்பிக்கையைத் தன் அதிகாரத்திற்குப் பயன்படுத்தினானோ, அதேபோல் புதுமைப்பித்தன் அகலிகையின் கதையை மறுவியாக்கியானம் செய்திருப்பார்.
● ஒப்புமை: ஜராசந்தன் தன்னை ஒரு 'புராண வடிவமாக' மாற்றிக்கொண்டு மக்களின் உணர்வுகளைக் கையாள்வது போல, அதிகார வர்க்கமும் மத மரபுகளும் எப்படி எளிய மனிதர்களின் நம்பிக்கையைத் தங்கள் வசதிக்கேற்ப வளைக்கின்றன என்பதை இந்தப் புனைவு பேசும்.
2. ஜெயமோகனின் 'படுகை' (அறம் சிறுகதைத் தொகுப்பு)
இந்தக் கதையில் வரும் ஒரு, எப்படித் தன்னை மக்களின் ஒரு பகுதியாகக் காட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்துகிறார் என்பது ஜராசந்தனின் நகர்வுக்கு மிக நெருக்கமானது.
● ஒப்புமை: "நான் உங்களுள் ஒருவன்" என்று காட்டிக்கொள்வதன் மூலம் கிடைக்கும் அந்த மாபெரும் மக்கள் ஆதரவு, பின்னாளில் ஒரு மாபெரும் அதிகாரமாக (Power) எப்படி மாறுகிறது என்பதை இக்கதை உணர்த்தும். ஜராசந்தன் சந்தையைத் தேர்ந்தெடுத்தது போல, இக்கதையில் வரும் நாயகனும் எளிய களங்களையே தன் அதிகாரத்தின் அடித்தளமாக மாற்றுவார்.
3. கி. ராஜநாராயணனின் 'நாற்காலி'
அதிகாரம் என்பது எப்படி ஒரு சாதாரணப் பொருளில் இருந்து அல்லது ஒரு சாதாரண மனிதனிடமிருந்து மெல்ல மெல்ல உருமாறி ஒரு 'சிம்மாசனமாக' மாறுகிறது என்பதை அங்கதச் சுவையுடன் இக்கதை பேசும்.
● ஒப்புமை: ஜராசந்தன் நேரடியாக அரியணையில் அமராமல், மக்களின் நடுவே தங்கித் தன் அதிகாரத்தை மெல்லக் கட்டமைப்பது, இக்கதையில் வரும் அந்த நாற்காலி எப்படி ஒரு ஊரின் கௌரவமாகவும், அதிகாரப் போட்டியின் மையமாகவும் மாறுகிறது என்பதற்கு இணையானது.
உலக இலக்கியத்தில் ஒரு ஒப்புமை:
லியோ டால்ஸ்டாயின் 'மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?' (How Much Land Does a Man Need?) இக்கதையில் வரும் பாஹோம் (Pahom) எனும் சாதாரண மனிதன், நிலத்தின் மீது கொண்ட ஆசையினால் எப்படித் தன்னை ஒரு நிலச்சுவான்தாரராக மாற்ற முயல்கிறான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அங்கிருக்கும் பழங்குடி மக்கள் (Bashkirs) ஜராசந்தனின் அசுர குணத்திற்கு இணையான ஒரு குரூரமான 'விளையாட்டை' அவனிடம் விளையாடுவார்கள்.
● ஒப்புமை: ஜராசந்தன் கழுவேற்றலை ஒரு காட்சியாக்கி விளையாடியது போல, அதிகாரம் கொண்டவர்கள் எளியவர்களின் பேராசையோடு விளையாடுவதை இக்கதை சித்தரிக்கும்.
3. உலக வரலாற்றின் 'மாவீரன் நெப்போலியன்' (Napoleon Bonaparte): 'திறமை vs பரம்பரை'
புராணங்களைத் தாண்டி ஜராசந்தனின் எழுச்சிக்கு மிக நெருக்கமான ஒரு வரலாற்று நாயகன் நெப்போலியன்.
● ஏன் ஒப்பிட வேண்டும்? பிரெஞ்சு புரட்சியின் குழப்பமான சூழலில் இருந்து எழுந்து வந்தவன் நெப்போலியன். ஜராசந்தன் மகதத்தின் குழப்பமான சூழலில் இருந்து எழுந்து வந்தான்.
● ஒற்றுமை: நெப்போலியன் எப்படிப் பாரம்பரியமாக ஐரோப்பாவை ஆண்ட அரச வம்சங்களுக்கு (Monarchy) ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தானோ, ஜராசந்தன் பாரதத்தின் தொன்மையான ஷத்ரிய வம்சங்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தான். "உங்களுக்குப் பரம்பரை இருக்கிறது, எனக்குத் திறமை இருக்கிறது" என்பதே இருவரின் முழக்கமாகவும் இருந்தது.
P.B. Shelley எழுதிய "Prometheus Unbound"
கிரேக்கப் புராணக் கதைகள் - கி. வா. ஜகந்நாதன்
---------------------
திரட்டி ஒருங்கிணைத்து எழுதியது - சிவக்குமரன் ராமலிங்கம்






No comments:
Post a Comment