Saturday, 2 August 2025

நானொரு தேனீ. 2. - இராச. மணிமேகலை






 நானொரு தேனீ- 2


கையறு நிலை. கை அற்ற, செயலற்ற சூழ்நிலையில் நெருங்கிய ஒருவரின் பிரிவிலோ, பிறப்பிலோ, இறப்பிலோ பாடப்படும் பாடல். இறப்பில் பாடப்படும் ஒப்பாரியும் கையறுநிலையே. 'உன்னுடன் ஒப்பு நோக்கத்தக்கவர் யார்? ' என்பதே ஒப்பாரி. படைப்பாளியின் மொழித்திறன் வாசிப்பவனின் உணர்வுநிலையாக மாற்றம் பெறுவதே கவிதையின் அழகியல். 

இங்கே ஒரு புறநானூற்றுப் பாடல். குறுநில மன்னன் நம்பி நெடுஞ்செழியனுடைய உயிர் நண்பர் பேரெயின் முறுவலார். அரசனின் சாவுச் சடங்கு. அவனைப் புதைப்பதா, எரிப்பதா என்ற குழப்பம். "தொடியுடை தோள் மணந்தனன் "(புறம். 239) என்று தொடங்கி அவனுடைய 18 பண்புநலன்களையும் கூறியபின் இப்படி முடிகிறது அப்பாடல்.

    " இடுக வொன்றோ சுடுக வொன்றோ;

படுவழிப் படுக, இப்புகழ்  வெய்யோன் தலையே."

 செய்யவேண்டிய அனைத்து அறன்களையும் செய்து 

முடித்து விட்டான். போடா போ இனி சுட்டால் சுடு, புதைத்தால் புதை என்று ஆற்றாமையோடும் கழிவிரக்கத்தோடும் முடிகிறது இப்பாடல். இப்பாடல் தோன்றிய காலத்தில்  அரசனோ, வீரர்களோ விழுப்புண் பெற்று வீரமரணம் அடைந்தால் துறக்கம் புகுவர் என்றும், அல்லாமல் நோயினாலோ, மூப்பினாலோ இறப்பின் தலையை வாளால் போழ்ந்து 'வீரமறவர் சென்றவழி செல்க 'எனப் புதைத்தால் மட்டுமே அவ்வுயிர் துறக்கமடையும் என்றும் நம்பிக்கை. இவன் இயற்கை மரணம் அடைந்தவன். தன் நிலையழிந்து புலவர் இருந்த நிலையில் எழுந்தது இப்பாடல்.

      காலம் வேறு. உணர்வுத் தருணம் ஒன்றே! முத்தமிழறிஞர் கலைஞர் இறந்தார். சட்டப்  போராட்டம்,  நடந்தது மெரினாவில் புதைக்க. இந்தியாவின்,தமிழகத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அன்று அண்ணாவின் அருகில் துயில 'ஆறடி மண்' ணுக்காக தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தருணம். உடைந்து அழுத உறவுகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், கண்கலங்கிய தமிழக மக்களுக்கும் "ஆங்குச் செய்பனவெல்லாம் செய்தனன் ஆதலின் ", சுட்டால் சுடு, புதைத்தால் புதை ; போடா போ என்ற மனநிலைதானே இருந்திருக்கும்?


      சீவகசிந்தாமணியில் இருந்து  ஒரு

பாடல். சீவகன் அரசகுமாரன். அரண்மனையில் பிறக்க வேண்டியவன். நிறைமாத கர்ப்பிணியான விசையை அமைச்சனின் சதியால் நாட்டை விட்டு ஓடுகிறாள். சுடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள்.


"வெவ்வாய் ஓரி முழவாக

      விளிந்தார் ஈமம் விளக்காக

ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின்

       நிழல் போல் நுடங்கிப் பேயாட

எவ்வாய் மருங்கும் இருந்திரங்கி

      கூகைக் குழறிப் பாராட்ட

இவ்வாறாகிப் பிறப்பதுவோ

      இதுவோ மன்னர்க்கியல் வேந்தே


நரியின் குரல் முழவு; ஈமத்தீ விளக்கு; சுடுகாடு அரங்கு; மரங்களின் நிழலாட்டம் நடனம்; ஆந்தைகளின் அலறல் பாராட்டு; இப்படியாக பிறப்பதுவா மன்னனின் பிறப்பு? வாழ்ந்து கெட்டவர்களின் சரிவு வார்த்தைகளால் சொல்லுந் தரமன்று!இதுவும் கையறுநிலையே!


    கம்பராமாயணத்தின் பாடல் ஒன்று. இராமன் காட்டுக்கு செல்வதைப்பற்றிக் கேட்டவர்களின் துன்பநிலை. எங்கும் அழுகையொலி. அதைக் கம்பன் வர்ணிக்கும் விதத்தில் நமக்கும் கண்ணில் நீர் நிறையும்.


    "கிள்ளை யொடு  பூ வை 

         அழுத;கிளர்மாடத்து

   உள்ளு றையும்   பூ சை 

         அழுத;  உருவு  அறியாப்

   .......,.................................

    ' வள்ளல் வனம்புகுவான் 

         என்றுரைத்த மாற்றத்தால்'.


     ஆவும்அழுத; அதன்கன்று

           அழுத; அன்றலர்ந்த 

      பூவம் அழுத;  புனல்புள்

          அழுத;கள்ளொழுகும்

     காவும் அழுத;  களிறு

         அழுத;கால் வயப்போர்

    மாவும் அழுத; அம்

        மன்னவனை மானவே"


என்ற பாடலில் பெரியோர்களும், கருவில் இருக்கும் வடிவு காணாத குழந்தைகளும்,அஃறிணைப்பொருள்களும் அழுதனவாம். அதாவது ஓரறிவுயர் முதல் ஆறறிவுயிர் வரை.


         மறைந்த பிரதமர் நேருவுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல்

     "சாவே உனக்கொரு நாள் 

            சாவு வந்து சேராதோ

      சஞ்சலமே நீயும் ஒரு

            சஞ்சலத்தைக் காணாயோ

      தீயே உனக்கொரு நாள்

            தீ மூட்டிப் பாராமோ

யாரிடத்துப் போயுரைப்போம்

யார்மொழியில் அமைதி கொள்வோம்

யார் துணையில் வாழ்ந்திருப்போம்

யார் நிழலில் குடியிருப்போம்"

        படைப்பாளன் தன் மொழித்திறனால் மனிதர்களின் உணர்வுநிலைகளைக் கிளர்த்தும், இப்பாடல்கள் காலத்தால் சாகாவரம் பெற்றவை.


No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...