நானொரு தேனீ - 3
கவிதை என்பது யாது? இதற்கான கேள்விகளும் வரையறைகளும் காலங்காலமாக தோன்றியபடியே உள்ளன. "கவிதை இது அல்ல, இது அல்ல என்பதை மிக எளிதாக கூறிவிடலாம். ஆனால் இதுதான் கவிதை என்று வரையறுத்தல் எளிதல்ல" என்கிறார் ஜான்சன் என்ற அறிஞர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, சிந்து.... ஆகிய பா வகைகளால் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்களில் இருந்து வசனகவிதை, புதுக்கவிதை என்றும், இதன் உடன்பிறப்புகளான ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்யு, ஹைபுன் என்றும் கவிதை தன் வடிவத்தை காலந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. குறுந்தொகை, ஐங்குறுநூறு, திருக்குறள் இவற்றின் சிறப்பே அதன் சொற்கட்டும், வடிவமும் தான்.
இன்று புதுக்கவிதையின் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் மகாகவி பாரதி தான் நமக்கு புதுக்கவிதையின் முன்னோடி. வால்ட் விட்மனின் (Leaves of grass) 'புல்லின் இதழ்கள் 'என்ற கவிதைத் தொகுப்பு தன்னை வசனகவிதை எழுதத் தூண்டியதாகக் கூறுகிறார் பாரதி.
" சுவை புதிது, சொல் புதிது வளம் புதிது, சோதிமிக்க நவகவிதை" என்று புதுக்கவிதையை ஆராதிக்கிறார்.
கவிஞன், வாசகனின் அறிவுடன் பேசினால் வசனம். உணர்வுடன் பேசினால் கவிதை. தீ சுடும் என்பது அறிவுநிலை. "தீ இனிது" என்பது உணர்வுநிலை. ஒரு புலனால் அறிந்ததை மற்றொரு புலனால் உணர்வதே இங்கு கவிதையாகிறது. யாப்பிலக்கண விதியிலிருந்து விலகி நடக்கும் குழந்தையே புதுக்கவிதை. வல்லிக்கண்ணன் எழுதிய "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூல் புதுக்கவிதையைப் பற்றி அறிய வேண்டிய மிகச்சிறந்த பொக்கிஷம்.
கவிதை அன்றிலிருந்து இன்றுவரையிலும் இயற்கை அழகு, அன்றாட வாழ்வு, சமூகச் சீர்கேடு ஆகியவற்றையே பாடுபொருளாகக் கொண்டுள்ளது. வடிவம்தான் மாறியுள்ளது. இந்த வடிவ அமைப்பிலான கவிதைகள் வாசகனுக்கு அவனுள் புத்துணர்வை, அழகுணர்ச்சியைக் கிளர்த்துகின்றன.சான்றாக, திருக்குறளில் அடக்கமுடைமையில் சொல்லப்படுகின்ற "நிலையின் திரியாது அடங்குதலும், ஒருமையுள் ஆமை போலிருத்தலும், எல்லார்க்கும் நன்றாம் பணிதலும்".... இன்னும் சொல்லப்படுகின்ற அறநெறிகளை
"அடக்க மாகும் வரை
அடக்கமாக இரு"
வாலி
என்று ஒரு கவிஞன் நம்முன் வைக்கும்போது மனதுக்குள் மத்தாப்புச் சிதறல் ஒன்று நிகழ்கிறதல்லவா? அதுதான் இன்றைய கவிதைகள் நமக்களிக்கும் கொடை.
"இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி"
இவை எதுவுமில்லாத கருத்துகள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட மக்களாட்சி முறையே புதுக்கவிதை என்று கூறும் மு.மேத்தாவின் கருத்துக்கள் இங்கு நினைவுகூரத் தக்கன.
இக்கால நவயுகக் காதலை,
" உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலி சைவப்
பிள்ளைமார் வகுப்பும் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைநெஞ்சந்தாங்கலந்தனவே"
என்று குத்தலாகச் சமூகத்தைச் சாடும் கவிஞர் மீராவின் கவிதையும்,
" ஒருத்தி
சிரிக்கக் கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்.
ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் இராமாயணம்"
என்று தொன்மத்தை விளக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும்,
" எரியவில்லை
அடுப்பு சேரியில்
போராடினோம்
எரிந்தது அடுப்பல்ல
சேரி"
----------=--------------
"மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில் விழும்
குடிசையில் இருந்து
துப்பினால்
மாடியே விழும்."
என்று பாடும் காசி ஆனந்தனின் வெடிகுண்டு ரக புதுக்கவிதையும் நான் சுவைத்த தேன்துளிகளில் சில.
ஹைக்கூ (துளிப்பா)
ஜென் தத்துவ ஜப்பானிய இலக்கிய கவிதை வடிவமே ஹைக்கூ கவிதைகள். செறிவான இக்கவிதையில் பெரிதும் கையாளப்படுவது படிம உத்திகளும், குறியீடுகளுமே. வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதும், சிரிக்க வைப்பதும், சுவைத்திறனை வளர்ப்பதும் ஹைக்கூ( துளிப்பா) வின் சிறப்பு.
"அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்"
- கழனியூரன்
" இதென்ன
இந்த விழிக்குளம்
மீனையும் காட்டுகிறது
தூண்டிலையும் நீட்டுகிறது"
- மு. மேத்தா
"உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும் புளிக்காத பால்
தந்தை தந்த தாய்ப்பால்
முப்பால்"
-அறிவுமதி
சென்ரியு (நகைத் துளிப்பா)
அங்கதம், வேடிக்கை, விடுகதை கலந்து எழுதப்படுவது சென்ரியு கவிதைகள். ஈரோடு தமிழன்பனின் "ஒரு வண்டி சென்ரியு" சுவைக்கத்தக்க ஒரு கவிதைத் தொகுப்பு.
" கணக்குக் கேட்கத்
தொடங்கினார் கடவுள்
காலியாகக் கிடந்தது
உண்டியல்"
"சாகும்வரை உண்ணாவிரதம்
என்றார் தலைவர்.
யார் சாகும்வரை"
" பாலாபிஷேகம்
வருந்தினார் கடவுள்
அதிகமாய் தண்ணீர்"
"நதியின் பாடல்
கேட்டபடி வளரும்
நாணற் புதர்கள்"
லிமரைக்யு ( இயைபுத் துளிப்பா)
'லிமரிக்' என்பது ஆங்கிலக் கவிதை வடிவம். லிமரிக்கும் ஹைக்கூவும் இணைந்து, அங்கதச் சுவையோடு, மூன்று அடிகளில் முதலடியின் ஈற்றுச் சீரும் இறுதி அடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடையாக அமைவது லிமரைக்யு
"பாடுவது அருட்பா பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன்நண்டு வகைகளே அதிகம்"
" எதற்கப்பா எதுகைமோனை
மின்னலைப் பிடித்து
வைக்கவா சட்டி பானை? "
"மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான் காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி"
இப்படியாகச் சில தேன் துளிகள் சுவைத்தற்குரியன.
'ஹைபுன்' என்பது சிலப்பதிகாரத்தின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்றது. அவ்வளவாக இன்னும் கவிதைகள் வெளிவரவில்லை
நான் சுவைத்தவற்றில் சில துளிகளை மட்டுமே உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

No comments:
Post a Comment