நானொரு தேனீ - 4
' கூடுவிட்டு கூடு பாய்தல்' என்பதை விக்ரமாதித்தன் கதைகளில் படித்திருக்கிறோம். அது ஓர் அரிய வித்தை. அவ்வித்தையை கைவரப் பெற்றவர்கள் புலவர்கள், கவிஞர்கள். புலவர் ஆணாய் இருக்கலாம். அவர் பெண்ணொருத்தியின் உள்ளத்தை காலத்தால் அழியாத பாடலாக வடித்துத் தருகிறார் ; புலவர் பெண்ணாய் இருக்கலாம். வீரன் ஒருவனின் உள்ள எழுச்சியை உள்ளவாறு உணர்ந்து காட்ட வல்லராய் இருக்கிறார். சங்க இலக்கியங்களில் புலவன் தன் பாடல்களைத் தலைவன் கூற்றாக, தலைவி கூற்றாக, பாங்கன் கூற்றாக, பாங்கி கூற்றாக இதயம் மாறிப்புக்கு அவர்தம் உணர்வுநிலைகளை நமக்கு கடத்துகிறானல்லவா? அங்கு தான் கவிதை சாகாவரம் பெறுகிறது
குடும்ப வாழ்க்கைக்கு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணம் வகுத்தவர்கள் நாம். அகத்தலைமை பெண்ணிற்கே உரியது. புறத்தலைமை ஆணுக்குரியது. அகத்துறை துணை மாந்தர்களான அன்னை, செவிலி, தோழி, தோழன் எல்லோரும் தலைமை நோக்கியே இயங்குவதை சங்கப் பாடல்களில் காண்கிறோம்.
இங்கே தலைவன் கூற்றாக குறுந்தொகையில் ஒரு பாடல். தலைவன் தலைவியை அடைய நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பர்களில் இருவகை உண்டு. நகுதல் நண்பன் (ஓகே டா மாப்ள). இடித்தல் நண்பன்( வேண்டாம் டா மாப்ள) . இவன் இடித்துரைக்கும் நண்பன். அவனுக்கு பதில் சொல்லும் விதமாக தலைவன் கூற்றாக அமைந்த பாடல். பாடியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.
"இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையிலூ மையன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே"
என்ற பாடலின் தலைவன் தலைவியின்பால் ஆராக் காதலுடன் இருக்கிறான். செய்யவேண்டிய செயல்களை, கடமைகளை மறந்து அவள் நினைவாகவே இருக்கிறான். "இந்த காதல்நோய் உணர்ந்தார், உணராதார் என்றெல்லாம் பாராது எல்லாரையும் பற்றும் தன்மையுடைத்து. இந்நோயைப் பொறுத்துக் கொண்டு கடமையைச் செய்வாயாக" என்று இடித்து உரைக்கிறான் நண்பன். அதற்கு அவன் "நண்பா, என் காதல் நோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் நன்றுதான். சூரியனின் வெப்பத்தால் தகிக்கும் கற்பாறையின் மேல் வைக்கப்பட்ட வெண்ணெயை கையில்லாத, ஊமையன் ஒருவன் எவ்வாறு பாதுகாக்க இயலாதோ அப்படி இருக்கிறது என் நிலைமை! பொறுக்க முடியவில்லையே! நான் என்ன செய்வேன்?
இதுதான் புலவனின் மொழிப்
புலமை.' காதற் போயின் சாதல்' என்று பிதற்றுகின்ற நிலையில் நண்பன் ஒரு பற்றுக்கோடு! 'பகிர்ந்த துன்பம் பாதியாகிறது, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது' என்கிற நிலையில் உசாத்துணைவனாக அமைபவன் நண்பனே. மேலும் அவன், " சின்னஞ்சிறு பாம்புக்குட்டி காட்டு யானையை வருத்தியது போலும் அவள் மெல்லுறுப்புகள் என்னைத் தாக்கின."
(குறுந்-119) என்று நண்பனிடம் கூறுகிறான். இந்த உள்ளஎழுச்சியே 'வெண்ணெய் உணங்கல் போல' என்ற உவமையால் சுட்டப்பெறுகிறது. கற்பாறை மேல் பரவிய வெண்ணெய் போல அவனுள் காதல் நோய் பரந்தது என்ற உவமையை கற்பனை செய்து பாருங்கள்! பெண்பாற் புலவர் ஒருவர் ஆணின் உணர்வை நமக்குக் கடத்திய பாடல்.
மற்றொன்று தோழி கூற்றுப் பாடல். காதல் வெள்ளத்தில் மூழ்கிய தலைவன் இரவில் தனிமையில் தலைவியை சந்திக்க விழைகிறான். இதற்கு நண்பன் துணையை நாட முடியாது. தலைவியின் தோழியைப் பிடித்தால் தவிர அவளை நெருங்க முடியாது. தோழியும் இவளும் ஈருடல் ஓருயிராய், ஆடிப்பாவையைப் போன்றிருக்கின்றனர்.
"தலைப்புணை கொளினே தலைப்புணை கொள்ளும்
கடைப்புணை கொளினே கடைப்புணை கொள்ளும்
புணை கைவிட்டு புணையோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும்"
இது கபிலர் காட்டும் தோழியின் ஓவியம். ' தலைவி தெப்பத்தின் தலைப்பாகத்தைப் பிடித்தால் இவளும் பிடிக்கிறாள். அவள் கடைப்பகுதியைப் பிடித்தால் இவளும் பிடிக்கிறாள். பிடித்திருக்கும்
பிடி நழுவி நீருள் மூழ்கினால் இவளும் மூழ்குவாள் போலும்". இவள்தான் தலைவியை நெருங்கத் தோதானவள் என நினைக்கிறான்
தலைவன். அவள் உதவியைப் பெற்று தலைவியைச் சந்திக்க இரவுக்குறியிடம் வருகிறான்.வரும் வழி யானையும், பாம்பும், புலியும் நடமாடுவது. வழித்தடம் வழுக்கலும், குறுக்கலும் உடையது.நேரமோ நள்ளிரவு! இதனை எண்ணிக் கலங்குகிறாள் தலைவி. இவளின் நிலைமையோ இன்னும் மோசம்! தந்தை வீட்டில் இருக்கவும் காற்சிலம்பை ஓசையிடாதபடிக் கட்டிக் கொண்டு ஏணிமேல் ஏறி தோட்டத்தில் இறங்கி மழை பெய்யும் நள்ளிரவில் இரவுக்குறியிடம் வருகிறாள். இச்சூழலை கவிஞன் பாடுகிற விதம் சினிமாக் காட்சியை விஞ்சும் தன்மையது! ஊர் துஞ்சாமை, ஊர் துஞ்சினாலும் தாய் துஞ்சாமை, தாய் துஞ்சினாலும் காவலர் துஞ்சாமை, காவலர் துஞ்சினும் நாய் துஞ்சாமை, நாய் துஞ்சினும் நிலவு மேகத்துகில் நீக்கி பால் போல் நின்றொளிர்தல், நிலவு மறைந்தாலும் கூகை குழறுதல், கூகை குழறா தொழியினும் பொந்தில் வாழும் சேவல் குரலெழுப்பிக் கூவுதல், இவ்வளவு வருந்தொழிற்கு அரிதான முட்டுப்பாடுகளக்" (அகம்- 122) கடந்தே இவர்களின் காதல் வளர்கிறது. இப்படியே போனால் சரிவராது என்று உணர்கிறாள் தோழி. இக் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக மாற அறத்தொடு நிற்கிறாள்.
"கருங்கட் தாக்கலை பெரும்பிறி
துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல்நாட! நடுநாள் வாரல் வருந்துதும் நாமே!
- கடுந்தோட் கரவீரனார்
என்ற ஆண்பாற் புலவர் பாடிய இப்பாடல் பெண்ணின் இதயம் புக்கு மலர்ந்த பாடலன்றோ? "கரிய கண்களை உடைய ஆண்குரங்கு இறந்ததால் கைம்மைத் துயரைத் தாங்க வியலா பெண்குரங்கு, தன்னுடைய தொழிலில் பயிற்சியடையாத இளம்குட்டியைத் தன் சுற்றத்திடம் சேர்த்து விட்டு உயர்ந்த மலையில் ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலை உடைய நாட்டின் தலைவனே! வருந்தொழிற் கரிதானவற்றைக் கடந்து நள்ளிரவில் வராதே! அதனால் தீங்கு நேரும் என்றெண்ணி நாங்கள் கலங்குகிறோம்". என்பது இப்பாடலின் பொருள். "உனக்கு தீங்கு நேர்ந்தால் இவள் உயிர் வாழ மாட்டாள் அஃறிணை உயிராகிய குரங்கினமே இப் பிரிவாற்றாமைக்கு உயிர் விடத் துணியும் போது இவள் மட்டும் எப்படி உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வாள்? அதனால் இவளை விரைந்து மணம் செய்துகொள்வாயாக" என்ற குறிப்புப் பொருள் இதில் உள்ளுறை உவமமாக, இறைச்சிப் பொருளாக அமைந்துள்ளது. இறுதியாக,
"பாமர ஜாதியில் நான் தனி மனிதன்
படைப்பதனால் என் பேர் இறைவன்
.............................
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற கவியரசரின் பாடல் வரிகள் உலகில் உள்ள அனைத்து
புலவர்களின், கவிஞர்களின் குரலாக ஒலிக்கிறதல்லவா!

No comments:
Post a Comment