Sunday, 24 August 2025

நானொரு தேனீ - 5. இராச.மணிமேகலை

 நானொரு தேனீ - 5



     இலக்கணம் இனிமையுடைத்து! 'இலக்கியம் கண்டதற்கோர் இலக்கணம் ' என்பதே வழக்கு.  பள்ளியில் தமிழாசிரியர்கள் இலக்கணப் பாடங்களை இலக்கியச் சான்றுகளுடன் கற்பித்தால், மாணவர்களுக்கு இலக்கணம் இனிமையாகும். இளங்கலை, முதுகலை வகுப்புகளில் நன்னூல், தொல்காப்பியம் போன்ற  இலக்கண நூல்களைப் பயிலும் ஆசிரியர்கள் இலக்கண விதிகளை இலக்கியத்தோடு பொருத்தி, உள்வாங்கிக் கற்றிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுத் தர முடியும்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! சாதாரண சொற்கள் என நாம் நினைப்பவை எவ்வளவு நுண்மையுடைன எனக் காண்போமே!


சொற்களின் நுட்பமான வேறுபாடுகள்:


'ஈ', 'தா', 'கொடு'  போன்ற சொற்கள் ஒரே பொருள் தருவன போல் தோன்றினாலும், நுட்பமான பொருள் வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியம் இதனை,


' ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே

தாவென் கிளவி ஒப்போன் கூற்றே 

கொடு வென்  கிளவி 

உயர்ந்தோன் கூற்றே ' என்று கூறுகிறது.


' ஈ, தா, கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை'  என்கிறது நன்னூல்.


       ஈ  - தாழ்ந்தநிலையில் உள்ளவன் 

உயர்ந்த நிலையில் உள்ளவரிடம்    ஒரு  பொருளை வேண்டிப்  பெறுதல்.


      தா - சரி சமமானவர்களிடம், ஒத்த நிலையில் இருப்பவர்களிடம் ஒன்றைக்   கேட்டுப் பெறுதல்.


      கொடு - உயர்ந்த நிலையில் உள்ள   ஒருவர் தன்னிலும்  தாழ்ந்த  நிலையில் உள்ளவரிடம்  

உரிமையுடன் கேட்டுப் பெறுதல். 


1)  ஈ யென் கிளவி இழிந்தோன்     கூற்றே 


      சோழ அரசன் செங்கணானுக்கும் சேர அரசன் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் அடுத்துள்ள திருப்போர்ப்புறத்தில் போர் நடந்தது.  இரும்பொறை போரில் தோற்க செங்கணான் குடவாயிற் கோட்டத்தில் சேரனைச் சிறை வைத்தான்.  தாகத்தால் நா வறண்டு,  சேரன் தண்ணீர்க் கேட்க, சிறைக்காவலன் அரசனைச் சிறுமை செய்தான். காலந்தாழ்த்தி, பணிவின்றி  காவலன் நடந்து கொண்டதை எண்ணி செய்யுளைப் பாடிவிட்டு உளங்கலங்கி வீழ்ந்தான். அவன் எழுதிய புறநானூற்றுப் பாடல்.


"குழவி இறப்பினும் ஊன்தடி இறப்பினும்

'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்

......................................................... 

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் வுலகத்தானே?" 


'      "போர்க்களம் புகுந்து போரிட்டு வாள் வடுப் பெற்றவரே வானுலகம் சென்று சுவர்க்கம் புகுவர். இறந்து பிறந்த குழந்தையும், சதைப்பிண்டமாக (ஊன்தடி) பிறந்ததும் அவ்வாறு வாள் வடுப்பெறுதலும்,  வானுலகம் பெறுதலும் இல்லை. அதனால் அதனை தருப்பைப்புல் மீது கிடத்தி 'வெற்றி பெற்ற வீரர் சென்ற வழி வானுலகம் செல்கவென' வாளால் வெட்டிப் புதைப்பர். அத்தகைய அரசகுடியில் பிறந்த நான் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்படும் நாய்களைப் போல் சிறையகத்தே வாழ்கிறேன். அவர் அளிக்கும் உணவை 'உண்ணேன்' என மறுத்து உயிர் விடுவதற்கு மாறாக ஈயென இரந்து அவர் இகழ்ந்தளித்த நீரை உண்ணும் இழிவுடையேன் ஆனேனே!"  என்பது அப்பாடலின் பொருள். இப்பாடலுக்கு,

 

"ஈ' யென இரத்தல் இழிந்தன்று - அதனெதிர் 'ஈ' யேனென்றல் அதனினும் இழிந்ததன்று" (புறம்-204)


 (இழிந்தது=இழிந்தது+அன்று. அன்று  என்பது அசைச்சொல்.)

            என்ற பாடல் இன்னும் அரண் சேர்க்கிறது அல்லவா? 'ஈ' என்று இரந்த அரசன் நிலையும், அதனெதிர் 'ஈ' யேன் என்ற காவலன் இழிநிலையும் சங்கச் சித்திரம் அன்றோ?

                 ' ஈ'  என்ற சொல்லுக்கு கம்பராமாயணத்தில் இருந்து ஒரு பாடல். கோசலைக்கு மகன் பிறந்திருக்கிறான். பெயர் சூட்ட வசிஷ்டர் வருகிறார். 


"கரா மலைய தளிர் கைக்கரி எய்த்தே

'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்

விராவி அளித்தரும்  மெய்ப் பொருளுக்கே

'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே "

             இராமன் திருமால் அவதாரம். இல்லாதவனுக்கு கொடுப்பது ஈதல். 'பெயர் ஈந்தனன்'  என்ற சொல்லை கம்பன் ஏன் வைத்தான்? பரம்பொருளுக்கு என்ன இல்லை? பெயரிட்டான், பெயர் வைத்தான் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் 'ஈந்தான்' என்றான் கம்பன்?என்பதற்கு உரைகாரர்கள் அருமையான ஒரு விளக்கம் தருகிறார்கள். " ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டேமோ" என்ற மாணிக்கவாசகரின் பாடலை சான்று காட்டுகிறார்கள். வசிஷ்டர் பெயர் பெற்ற மகாமுனி. கடவுளுக்குப் பெயர் இல்லை. அடையாளப்படுத்த ஒரு நாமம் வேண்டும். அப்படி பெயர் இல்லாதவனுக்கு ஒரு பெயரை வசிஷ்டன் போன்ற மாமுனி 'ஈந்தான்' என்பது தானே சரியாக இருக்கும்?அதனாலே தான் கம்பன் அச்சொல்லை அங்கே வைத்தான். பெயர் பெற்றவன், பெயர் இல்லாதவனுக்கு கொடுத்ததால் 'ஈந்தான்'  என்றான் கம்பன். கவிச்சக்ரவர்த்தி அல்லவா?


2) தா வென் கிளவி ஒப்போன் கூற்றே


        ஒருவர்க்கொருவர் ஒத்த அன்புடையராதல், சரிநிகர் சமானமாய் உள்ளோர் கொள்வதும், கொடுப்பதுமான நிலையில் கூறப்படுவது. எனக்கு இந்தப் புத்தகம் தா என்பதும்,  உன்னிடத்தில் என்னைத் தந்துவிட்டேன்  என்பதும் 'தா'  எனும் சொல். 


3)  கொடு வென் கிளவி உயர்ந்தோன் கூற்று


         கொடு என்ற சொல் அடியாகப் பிறந்ததே 'கொடை'  என்ற சொல். தனக்கென ஒன்றுமிலாது உடல், உயிர் அனைத்தையும் கொடுப்பது. அதனாலேயே உயர்ந்தோன் ஆகிறான் போலும். புறநானுற்றுப் பாடலொன்று. புலவர் பெருந்தலைச்சாத்தனார் தன் வறுமை நிலை நீங்க முதிரமலை நாட்டின் அரசன் குமண வள்ளலைக் கண்டு பாடிப் பரிசில் பெறச் செல்கிறார். அரண்மனையில் குமணன் இல்லை. இளங்குமணன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். என்ன நடந்திருக்கும் என ஊகித்துவிட்டார் . பங்காளிச் சண்டை. குமணன் நாடு விட்டு காடேகியதும், இளங்குமணன் தன் அண்ணன் தலையைக் கொண்டுவந்து தருவார்க்கு கோடிப்பொன் பரிசு என்று முரசறைந்ததும் புலவர் அறியவில்லை. அங்கே இங்கே என அலைந்து காட்டில் குமணனைக் கண்டார் புலவர். பாடிப் பரிசில் பெறவே வந்திருக்கிறார் என்றுணர்ந்து " புலவரே! இந்தாரும் என் வாள். என் தலையைக் கொய்து என் தம்பியிடம் கொடுத்தால் பரிசு தருவான். உன் வறுமை நீக்குக" என்றானாம் அக்கொடை வள்ளல்!


"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் 

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

..............................................................

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என

நாடு இழந்த தெனினும் நனி இன்னாதென

வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத் தன்னின் சிறந்தது பிறிதொன்று இன்மையின்"              ( புறம்-165)


         ' இதைப் பெற்றுக்கொள்' என்று ஒருவனுக்கு கொடுப்பது உயர்ந்த செயல். அவ்வாறு கொடுப்பதை 'எனக்கு வேண்டாம்' என்று ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பது கொடுப்பதைக் காட்டிலும் மேலான செயல். அந்தச் செயலைத்தான் செய்தார் புலவர். அரசன் கொடுத்த வாளை வாங்கிக் கொண்டு இளங்குமணனிடம் சென்று அவனுக்கு அறிவுரை கூறி உடன்பிறந்தாரைச் சேர்த்து  வைத்தார் புலவர்.


"கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"       

                                    ( புறம் - 204) 

        கொடை என்ற சொல்லின் பொருள் கர்ணன். " தர்மாத்மா என்று தர்மரைப் புகழ்கிறார்கள். யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிறார். நாங்களும் கொடுக்கிறோம்.  ஆனால் உலகத்தோர் கர்ணனை கொடைவள்ளல் என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி?" என்று கிருஷ்ணனிடம் பாண்டவர்கள் கேட்டார்கள். அதற்கு அவன் எல்லாரும் தான் தருகிறார்கள். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான் என்று காட்டுகிறேன் பாருங்கள்" என்றார் கிருஷ்ணர். இமயமலையைவிட உயரமான பொன்மலையை பாண்டவர்களுக்கும், கர்ணனுக்கும் கொடுத்தார். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனத்திற்குள்ளாக இம்மலையை  தானம் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை. 

          மாலை நெருங்கியது. முதலில் பாண்டவர்களிடம் சென்றான் கிருஷ்ணன். நிறையபேர் மலையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஏழை எளியோர்க்கு பாண்டவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கால்வாசிதான் அவர்களால் முடிந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு கர்ணனிடம் வந்தார் கிருஷ்ணன். 'என்ன கர்ணா? கெடு முடிந்து விட்டது. மலை அப்படியே இருக்கிறதே!' எனக் கேட்க அதற்கு கர்ணன்' நீங்கள் மலையைக் கொடுத்துச் சென்ற உடனே ஏழை ஒருவன் வந்தான். உடனே கொடுத்து விட்டேன்" என்றான். கிருஷ்ணன் 'இதுவல்லவோ கொடை!'  என்று கூற பாண்டவர்கள்' நாங்கள் எவ்வளவு பேருக்கு கொடுத்தோம்? இவன் ஒருவனுக்கே கொடுத்து விட்டு கொடை என்றால் எப்படி ஏற்பது?' என்று கேட்டனர். அதற்கு கர்ணன், 'வந்தவன் என் தேசம் முழுக்க வறுமை தாண்டவமாடுகிறது என்றான். அதனால் இதை வைத்து உன் தேசத்தின் வறுமையைப் போக்கு' என்று கொடுத்து விட்டேன் எனக் கூறினான். இதுவே வள்ளண்மை' என்றான் கிருஷ்ணன். 

          தர்மம் என்பது அறம். வாழ்க்கை நெறி. அதனாலே  தான் தர்மசீலன் என்ற சொல் வந்தது போலும். கொடை என்பது செயல். இன்னார், இனியார், உயர்திணை, அஃறிணை என்றெல்லாம் பார்க்காது. கொடுப்பது என வந்து விட்டால் உயிர், உடல், உடைமை எதுவாக இருந்தாலும் அப்படியே தருவதே கொடை. அப்படிக் கொடுப்பவனே வள்ளல். மற்றவர்கள் செய்வதெல்லாம் உதவி தான். 

        மயிலுக்கு போர்வை தந்தவனும், முல்லைக்குத் தேர் தந்தவனும் அஃறிணை என்றா பார்த்தார்கள்? 'அறிமடமும் சான்றோர்க்கணி' தானே!

            உலக வழக்கில் பயன்படும் எளிய சொற்கள் தானே என்று நாம் நினைப்பன எவ்வளவு நுட்பமுடையனவாய் உள்ளன! தமிழர் தம் வாழ்வின் இரு கண்களாக விளங்கும்  இலக்கியமும் இலக்கணமும் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன!

No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...