Tuesday, 21 April 2026

வெண்முரசு விருதாளர் 2026 பேட்டி

 https://www.jeyamohan.in/231653/



வி.சங்கர் பேட்டி.

விஷ்ணுபுரம் புதுவை வட்ட நண்பர்கள் இந்த ஆண்டு முதல் வெண்முரசு வாசகர் வட்டம் விருது அறிமுகப்படுத்தியுள்ளனர். முதல் விருதை கவிஞர் வி. சங்கர் தன் “சூது பவளம் கண்டேன் அல்லேன்” கவிதைத் தொகுப்பிற்காக பெறுகிறார். விருது விழா 24 ஏப்ரல் 2026 அன்று மாலை 5:30 மணிக்கு புதுச்சேரியிலுள்ள ஶ்ரீநாராயணபுரம் 27, வெள்ளாளர் வீதி “ஜெயகாந்தன்” அரங்கில் நிகழவிருக்கிறது. அதனை ஒட்டி கவிஞர் வி. சங்கரிடம் மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் செய்த நேர்காணல் இது.

வி.சங்கர்

விருதுவிழா அழைப்பிதழ்

 கேள்வி: சங்கர், பொதுவாக முதல் தொகுப்பு எல்லோருக்கும் விஷேசமானது. அதனாலேயே அதற்கான திட்டமிடல்கள், தயாரிப்புகள், நிறைய எழுதி அதிலிருந்து கவிதைகளைத் தொக்குத்து வெளியிடுவது என இருக்கும். ஆனால் உங்கள் முதல் தொகுப்பு நீங்கள் சமீபத்தில் ஒரே மனநிலையில் எழுதி உடனே வெளிவந்தவை. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: நவீன், இங்கே ஒரு திருத்தம். என் கவிதை தொகுப்பான “வானும் நானும் தூங்காத இரவுகள்” நா. முத்துகுமாரின் சிறு முன்னுரையுடன் என் கல்லூரியின் முதலாம் ஆண்டில் வெளிவந்தது. தீவிர இலக்கிய பரிச்சயமில்லாமல் வானம்பாடித் தன்மையுடன் (அதிகமும் வைரமுத்து, அப்துல் ரகுமான் செல்வாக்கில்) எழுதப்பட்ட அத்தொகுப்பை  என் முதல் நூலாக முன்வைக்க நான் விரும்பவில்லை. கவிதை வடிவத்தை இளவயதிலேயே முயன்று, ஒரு தொகுதிக்கு பின் அம்முயற்சியை நீண்டகாலம் கைவிட்டிருக்கிறேன் என்பதை பகிரவே இதை கூறுகிறேன். கல்பற்றா நாராயணன் தன் முதல் கவிதையை 35 வயதில் தான் இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிவைக்கிறார். அப்படியும் சில கவிஞர்கள் உண்டு.

கேள்வி: உங்களுக்கு தீவிர இலக்கிய அறிமுகம் எவ்வாறு நேர்ந்தது? அதன் பாதிப்பு பற்றி விளக்க முடியுமா?

பதில்: கல்லூரி படிப்பிற்காக நான் கிராமத்தை விட்டு ஈரோடு வந்து, முதன்முறையாக அங்கே புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அக்காலகட்டத்தில் என்னுள் தீவிரமான தாக்கம் செலுத்திய அறம் தொகுப்பை யானை டாக்டரின் இலவச பிரதியுடன் வம்சியில் வாங்கினேன். (கல்பற்றாவின் சொற்களில் – கிரகஸ்தனுடைய எழுத்து அல்ல அது வீட்டை விட்டு வெளியேறியவனின் எழுத்து என்ற அம்சமே அன்று ஜெயமோகனின் எழுத்தில் என்னை அதிகமும் கவர்ந்திருக்கலாம்). தொடர்ந்து ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் என்னை கொண்டுவந்தது. அங்கிருந்து தொடங்கி கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், ஐசக் பாஷ்வில் சிங்கர், ஆண்டாள் , பாரதி என என் ஆதர்ச எழுத்தாளர்களை மெல்ல கண்டு கொண்டேன் எனலாம். 

கேள்வி: உங்கள் ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்’ தொகுப்பு வெகு சில நாட்களில் ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டது. அது பற்றி.

பதில்: முதலில் இதை ஒரு தொகுதி என அழைக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. ஏனெனில் சரியாக வராத சில கவிதைகளை நீக்கியது தவிர்த்து இதில் தொகுக்கும் பணி என எதுவும் நடைபெறவேயில்லை. தொகுக்கப்படாமல் எழுதிய வரிசைப்படியே அமைந்த கவிதைகள் கொண்டது என இந்நூலின் ஆசிரியர் குறிப்பிலும் எழுதியிருக்கிறேன்.

4 பகுதிகள் கொண்டதாக அமைந்த இந்நூலின் முன்னுரையில் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அதை நெடிய மாலைகள் போன்ற நாலு கவிதைகள் என்கிறார். நாலு பகுதிகளையும் வரிசை மாறாமல் படித்தால் வாசிப்பனுபவம் மேலும் சிறப்பாக இருப்பதாக பலர் (கவிஞர் மாதர் உட்பட) என்னிடம் பகிர்ந்தனர். ஆக துணிந்து இந்நூலை ஒரே ஒரு கவிதை கொண்டது எனவும் கூற முடியும். அப்படி பார்த்தால் நான் ஒரு கவிதையைத்தான் 50 நாள் எழுதியிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இவை ஒரே மனநிலை கொண்டவை என்பதனால் தான் ஒரு மூச்சில் எழுத முடிந்தது என நினைக்கிறேன். அதே நேரத்தில் இவை எந்த நவீன கவிதை தொகுப்பை போலவும் தனிக் கவிதைகளாக வாசிக்க உகந்தவையும் கூட.

கேள்வி: உங்கள் தொகுப்பின் முதல் கவிதை,

“காட்டில்

அறத்தோன் இல்லை

தனித்த ஒரு மீன்கொத்தியின்

பாடல் மட்டுமே உள்ளது”

இதில் அறத்தோன் என்ற சொல்லை வாசித்தவுடன் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசே வாசகனுக்கு நினைவுட்டும். அது பற்றி?

பதில்: முன்னுரையில், லட்சுமி மணிவண்ணன், என் கவிதைகளின் விசேஷமான மொழி மண்டலத்தின் நவீன அம்சம் வெண்முரசிலிருந்து பெறப்பட்டதாக இருக்கிறது என்கிறார். க. மோகனரங்கன், நூல் அறிமுக விழாவில் இக்கவிதைகளின் மொழியில் அப்படியொரு நேரடியான தாக்கம் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்கிறார். ஒருவகையில் இரண்டுமே சரியாக இருக்கலாம். 

என் பார்வையை சொல்லி விடுகிறேன். டி.எஸ்.எலியட் தன் ‘What is a Classic?’ என்ற கட்டுரையில், ஒரு செவ்வியல் படைப்பு உருவாகும் போது தான் எந்த மொழியில் உருவாகிறதோ அந்த மொழியை (அதன் இலக்கிய பயன்பாடு சார்ந்து) தீர்ந்துபோக (depletion) செய்கிறது என்கிறார்.

இதையே ஒரு அளவு வரை வெண்முரசு போன்ற ஒரு காவியத்திற்கும் (epic) கூறலாம். அதன் பெரும்பரப்பு காரணமாக, உரைநடை மொழியின் உயர்ந்த சாத்தியங்களை, கவித்துவத்தின் பெரும்பான்மையான கூறுகளை அனைத்து வழிகளிலும் பயன்படுத்தியே தன்னை வெளிப்படுத்தியிருக்கும். கிட்டத்தட்ட அனைத்து வடிவங்களையும் கூறுமுறைகளையும் கையாண்டிருக்கும்.  இது தனக்கு பிறகான சமகால எழுத்து வெளிப்பாட்டிற்கு ஒரு காவியம் அளிக்கும் நெருக்கடி அல்லது சவால். நெருக்கடி என நேர்மறை அர்த்தத்தில் தான் சொல்கிறேன். 

வெண்முரசிலிருந்து மொழி பயன்பாட்டை கவித்துவ கூறுமுறைகளை மேற்கொண்டு தன் வழியில் எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு காவியத்திற்கு பின் உடனடியாக எழுதவரும் சமகால கவிஞனுக்கு உருவாகிறது. இந்நூல் வெண்முரசு உருவாக்கிய அந்த நெருக்கடியை எதிர்கொண்டதாகவே நினைக்கிறேன். அம்முயற்சியில் அது கொண்ட வெற்றி/தோல்வியை பற்றி இத்தனை விரைவாக பேசுவது (குறிப்பாக அந்நூலின் ஆசிரியனாக நான் பேசுவது) சரியல்ல என தோன்றுகிறது. தன் காலத்திலேயே நிகழ்ந்த ஒரு காவியம் தன் உச்சபட்ச கவித்துவ சாதனையால் ஏற்படுத்திய தாக்கத்தை நேர்மறையாக எதிர்கொண்டதை பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

கேள்வி: கவிதையில் அடிப்படையாக இருப்பது மொழி, அதன் பாடுப்பொருள் இரண்டும். இவை படகில் துடுப்பும், நீரும் போல். அதை தாண்டி அந்தந்த கவிஞனின் தனிப்பட்ட ஒரு முத்திரை இருக்கும். உங்கள் கவிதைகள் நவீன கவிதையின் வீச்சை தொடும் அதே வேளையில் அதன் மொழி நவீன தமிழ் கவிதைக்கு அன்னியமானதாக இருக்கிறது. சங்கப்பாடல்களின் மொழி போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

பதில்: மதார், நீங்கள் அப்படி சொன்னவுடன் நேர்காணலை வாசிப்பவர்கள் மரபார்ந்த செய்யுள் நடையை நான் பயன்படுத்தியதாக கருதக்கூடும். உங்களுக்கு தெரியும் தமிழில் கிடைப்பதிலேயே நவீன மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் என்னுடையவை. உரைநடைக்கும் நெருக்கமானது. இன்றைக்கு ஒரு வாசகன் என் தொகுப்பை சரளமாக வாசிக்க இயலும். செய்யுளில் உள்ள யாப்போ, Rhetoric தன்மையோ இதில் இல்லை. இக்கவிதைகள் நவீன தமிழ் நடையிலேயே உள்ளது.

இதில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். நவீன என நாம் உத்தேசிக்கும் போது அது ஒற்றைப்படையானது அல்ல. அது ஒரு சமூகத்திலேயே கூட சூழல் சார்ந்தது தான். ஆனால் கவிதையின் பேசுபொருள் எப்போதும் ஒரு சூழலுடன் ஒட்டியும், விலகியுமே வெளிப்படும். பெரும்பாலும் விலகி நிற்கும் தன்மையே கவிதையின் இயல்பு.

கேள்வி: உங்கள் கவிதையில் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. அதே போல் கவிஞனின் குரல் ஒலிக்கக் கூடியதும் அதிகம் காணப்படுகின்றன. இரண்டும் இணைந்து செல்லும் போக்கு கொண்ட கவிதைகளும் உண்டு. உங்களுக்கு கவிதைக்குள் காவிய வடிவம் ஒன்றை முயற்சிக்கும் எண்ணமும் உள்ளதாக படுகிறது. 

பதில்: என் இயல்பிலேயே கோர்வையாக ஒரு மாலை போல் சொல்லும் கூறுமுறை என்னில் காணப்படுகிறது. என் தனித்த கவிதன்னிலை அதுவாக இருக்கலாம். ஒவ்வொரு கவிதையாக கோர்த்து செல்லும் தன்மை. 

நான் தற்போது எழுதி என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் “குழந்தையாக நாம் பிறந்த பொழுது” என்ற தொகுப்பு உரைநடைக்கவிதை வடிவில் ஒரு குறுநாவலுக்கு நெருக்கமானதாக உள்ளது. “மாசில் மணிவண்ணம்” 44 பாடல்கள் கொண்ட தொகுப்பு அதுவும் ஒரு மாலையின் வடிவில் தன் இருமுனைகளும் தெளிவாக முடிசிடப்பட்டு ஒரு நவீன அந்தாதி போலவே உள்ளது. . 

தற்போது பழைய காவியம் போல் ஒன்று எழுதப்படவேண்டுமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. குறைந்த பட்சம் நான் அதை முயற்சிக்க மாட்டேன். ஆனால் என்னுடைய அவதானிப்பு என்னவெனில் ஒரு மின்னல் தெறிப்பு போல் கூறப்படும் தனி கவிதைகளின் சாத்தியங்கள் அனைத்தும் தமிழில் முயற்சி செய்தாகிவிட்டது. இப்போது நாம் அதன் எல்லையில் இருக்கிறோம். இனி அதை தாண்டி கூறுமுறையில் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உதாரணமாக, நீள்கவிதையை போல் தனிக் குறுங்கவிதைகளை ஒரு சரடில் கோர்த்து ஒரே தொகுப்பாக சொல்லும் முயற்சியை செய்யலாம். வெறும் வடிவ சோதனைகளாக அல்லாமல் கவிதையின் உள்ளார்ந்த ஆத்ம தேவையாக அவை இருக்க வேண்டும்.

கேள்வி: கவிஞன் எப்போதும் ஒரு பாடுபொருளின் குழந்தை எனச் சொல்லலாம். இயற்கை, ஒரு பொருள், அன்றாடம், காதல், துயரம் என ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த பாடுபொருள் என உண்டு. அது அவர்களின் முதல் தொகுப்பிலேயே காணக்கிடைக்கிறது. அப்படி உங்களுக்கு எதுவும் உணர்வுநிலை உண்டா?

பதில்: அப்படி எனக்கு சொல்லத் தெரியவில்லை. இந்த தொகுப்பிலேயே கூட பல குரல் தன்மை இருப்பதாக, இக்கவிதைக்குளுக்குப் பின்னால் உள்ள ஆளுமை ஒரு குறிப்பிட்ட உணர்வுநிலையில் மட்டும் ஆர்வம் கொண்டதாக இல்லை எனவும் சொன்னார்கள். ஒரு தொகுப்பு வழியாக ஒரு ஆளுமையை சென்றடைவது முக்கியம் எனச் சொல்வார்கள். ஆனால், ஒரு வாசகனாக என் கவிதைகளை வாசிக்கும் போது கூட அப்படி ஒன்றை உருவாக்கிக் கொள்ள எனக்கு கடினமாகவே உள்ளது. என் கவிதைகளிலும் அப்படி ஒரு ஆளுமை இருக்கக் கூடும், ஆனால் அது நீரில் தெரிவது போல சற்று கலங்கியிருக்கலாம். 

என் கவிதைகள் எல்லா நிலைகளில் இருந்தும் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட உணர்வுத்தளம் கொண்ட கவியாளுமை உருவாக்கத்தில் எனக்கு ஒரு சந்தேகமும் உண்டு. கவிதை வாசிப்புக்கு அது உதவலாம். ஆண்டாள் எழுதிய கவிதைகளை வாசித்து பின் அவரை அப்படி வரையறுத்துக் கொள்ள வாசகன் ஆத்மீகமாக முனைவான். ஆனால் ஒருவன் எழுதும் போது அது எந்த அளவிற்கு உதவும் எனச் சொல்லத் தெரியவில்லை. 


எனக்கு கவிஞன் என்ற தனி ஆளுமை மேல் பெரிய ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. கவித்துவம் என்ற செயல்பாட்டின் மீதே ஆர்வமுள்ளது. ஆனால் இன்றிருக்கும் சூழலில் இது தலைகீழாகவே உள்ளது.

கேள்வி: தினவு இதழில் நீங்கள் ஒரு தொடர் எழுத போவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். அதுவும் கவிதைக்கும், கவிஞனுக்குமான தொடர்பு பற்றியது. கவிஞன் கட்டுரை தொடர் எழுத எத்தனிக்கும் நோக்கம் என்ன?

பதில்: தமிழ் சூழலில் கவிதை வாசிப்பு குறைவாகவே நிகழ்கிறது. காரணம், ஒரு கவிதை எழுதப்படுகிறது, அது கவிஞர்களுள் பகிரப்படுகிறது அல்லது முகநூலில். அதை தாண்டி அந்த கவிதைப் பற்றிய விவாதம் குறைவாக நிகழ்கிறது. குறிப்பாக நிறைய கவிஞர்களும் கவிதையை தாண்டி எழுத முனைவதில்லை. கவிதை பற்றிய பேச்சு ஒரு சூழலில் தீவிரமாக நிகழ்ந்தால் நல்ல கவிதைகள் தானாக மேலெழுந்து வரும். ஒரு மத்தை பல திசைகளிலிருந்தும் சுழட்ட வெண்ணெய் திரண்டு வருவது போல. அப்படி நிகழாதிருக்கும் வேளையில், நம் சூழலில் கவிதை எப்போதுமில்லாமல் இப்போது அதிகம் பிரசுரமாகிறது. இவ்விரண்டு நிலைகளும் ஒன்றாக இணைந்து கொள்கையில் அவை கவிதை வாசிப்பிற்கு எதிரானதாகிறது. போன நூற்றாண்டு வரை இந்த பிரச்சனை இல்லை. ஏனென்றால் சிற்றிதழ் சூழல் ஒரு சிறு வட்டத்திலேயே நிகழ்ந்தது. அதற்கு வெளியே தான் வெகுஜன கவிதைகள் எழுதப்பட்டன. இன்று அந்த இடைவெளி மங்கி முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. எனவே இது சார்ந்து ஒரு பேச்சை உருவாக்க முடியுமா என கட்டுரைகளால் முயற்சி செய்யப் பார்க்கிறேன்.

தமிழ் சூழலுக்கு வெளியே யோசித்துப் பாருங்கள். மலையாளத்தில் கல்பற்றா நாராயணன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் (உரைகளையும் சேர்த்து கிட்டதட்ட 18 கட்டுரை தொகுதிகள் எழுதியிருக்கிறார்). கவிதை பற்றி மட்டுமல்ல அவரது வாழ்வனுபவங்களையும் கவி தருணங்களாக மாற்ற முயற்சிக்கிறார். (ஒரு சொல்லின் பல்வேறு கவித்துவ அர்த்தங்களை பயன்பாட்டு வாய்ப்புகளை அளிக்கும் காவிய நிகண்டு பற்றி கூட பேசுகிறார்)  டி.எஸ். எலியட், எமர்சன் என எல்லா நல்ல கவிஞர்களும் நல்ல கட்டுரையாளர்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கு கவிதையை தாண்டி ஒரு ஈடுபாட்டு தளமும் உண்டு. எமர்சன் கவிஞர் அளவுக்கே தத்துவவாதியும் கூட. அப்படி தமிழ் சூழலிலும் இருக்க வேண்டும். அதன் ஒரு முயற்சியாகவே நான் எழுதும் தொடரைப் பார்க்கிறேன்.

கல்பற்றா ‘கழுதையும் குதிரையும்’ என ஒரு கவிதை எழுதியுள்ளார். அதை மேலும் கவித்துவமாக ஒரு கட்டுரையில் மேலும் விரித்து எடுக்கிறார். அந்த கட்டுரையில் அக்கவிதை வேறொன்றாக மாறி வந்துள்ளது. அதன் தாக்கத்தில் அதைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுத முயற்சித்தேன். 700 வார்த்தைகள் கொண்டது. அது சரியாக வரவில்லை எனத் தோன்றியது. சில நாள் கழித்து அதை ஒட்டி ஒரு கவிதை எழுதினேன். கவிதை எழுதி முடித்ததும் கட்டுரைக்கான சரியான வரைவு கிடைத்துவிட்டது. கட்டுரையையும் எழுதி முடித்தேன். இதுவே கவிதைக்கு பிற வடிவங்கள் அளிக்கும் சாத்தியங்கள்.

கேள்வி: செய்யுளிலிருந்து நவீன கவிதைக்கு வரும் போது நவீன வாழ்வை பேச உத்தேசித்த காரணத்தாலே அதன் மொழியை மாற்ற உத்தேசித்தார்கள். புதுமைப்பித்தனின் கவிதைகள் அதற்கு சிறந்த உதாரணம். மொழியை உரைநடையில் சொல்வது நவீன யதார்த்தத்தைச் சொல்ல சாத்தியம் என்ற கருத்து உண்டு. உங்கள் கவிதை இதற்கு எதிரான ஒன்றாக நான் பார்க்கிறேன். ஆனால் பாடுபொருள் நவீனமாக இருக்கிறது. இது உங்கள் மொழி தனித்துவமாகவே நான் பார்க்கிறேன். அதாவது மரபார்ந்த மொழிக்கு நவீனத்துவத்திற்குமான பாலமாக இதைச் சொல்லலாம்.

பதில்: மரபார்ந்த பாடுபொருள்களை நாம் கடந்து நூறாண்டுகள் ஆகிறது. ஒரு வீரயுக காவியமோ, போர் பற்றிய மிகை கற்பனையோ, தனி மனித துதிப்பாடலோ இன்றில்லை. மொழியும் அப்படி தான். செய்யுள் வடிவத்தை இன்று எழுத முடியாது. ஆனால் சில வார்த்தைகள் வாசகனுக்கு அப்படியொரு மயக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கவிதை வாசகனுக்கு ஆண்டாள் பாடலாக, சைவ பாசுரமாக, சன்னத மந்திரமாக பொருள்படலாம் அவை வார்த்தையின் மயக்கு. 

ஆனால் நவீனம் என நாம் சொல்வதனைத்துமே மேற்சொன்னவற்றை கடந்து பிறகுதான் என வரையறுக்கிறோம். எனக்கு அப்படியல்ல.   நவீன வாழ்க்கையை அது சார்ந்த பேசுபொருளை மட்டும் கொண்டே உருவாக்கவேண்டும் என்பதில்லை. மேலும் நவீனம் என்பது ஒரு உறைந்த நிலை அல்ல. அது வரப்போகும் விருந்தாளிக்காக தன் கதவுகளையும் வீட்டையும் திறந்தே வைத்திருக்கிறது. 

பல்வேறு காலகட்டங்களில் மேற்கில் ஒரு நவீன நகரம் செழித்து ஓங்கும் போது அதிலிருந்து விலகி இடையனின் வாழ்வுக்கு திரும்புதல் என்னும் போக்கு இருந்திருக்கிறது. அதிநவீன நகரத்திலிருந்து விலகி சென்று வாழ்ந்த எமர்சன், தோரோவை சொல்லலாம். இப்போது எழுதப்படும் கவிதைக்கு நவீனத்தை தாண்டிய அந்த பிரிமிட்டிவ் (பழங்குடி) தன்மை இருக்கும் என்றே நினைக்கிறேன். 

கவிதைக்கு வரலாற்றில் எப்போதும் அந்த பிரிமிட்டிவ் தன்மை உண்டு. 

நன்றி.

***

சூது பவளம் கண்டேன் அல்லேன் வாங்க





No comments:

Post a Comment

புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.

  புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு. இனிய ஜெயம் கவிஞர் வி . சங்கர் அவர்களுக்கான இந்த வருட வெண்முரசு வாசகர் வட்ட விருது விழா இனிதே நிகழ்ந்து...